பலாலி மீதான தாக்குதலுக்கு தகவல் எவ்வாறு கிடைத்தது?

ஆக்கம்: விதுரன்
வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பாரிய படைநகர்வுகளென்பதை விட தினமும் சகல களமுனைகளிலும் சிறுசிறு மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்தச் சிறு மோதல்கள் உடனடியாக பாரிய படைநகர்வுகளாகும் சாத்தியங்கள் குறைவென்பதால் வன்னிக் களமுனையில் இவ்வாறான மோதல்கள் நீண்ட நாட்களுக்கு தொடரப்போகிறது.

விடுதலைப்புலிகள் வசமிருந்து கிழக்கை விடுவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நாள் முதல் வடக்கில் பாரிய தாக்குதல்கள் ஆரம்பமாகின. இந்தத் தாக்குதல்கள் ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியடையப்போகிறது. ஆனால், வன்னியிலோ அல்லது யாழ். குடாநாட்டிலோ குறிப்பிடத்தக்களவுக்கு படைத்தரப்பால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை.

குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் படையினரால் வன்னிக் களமுனையில் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து சில நூறு மீற்றர் தூரமே முன்னேற முடிந்துள்ளது. ஆயிரக்கணக்கில் படைகள் குவிக்கப்பட்டு தினமும் கனரக ஆயுதங்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டும் வன்னியிலோ அல்லது யாழ்.குடாநாட்டிலோ படையினரால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லையென்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தற்போதைய நிலையில் வடபோர் முனையில் புலிகளுடன் பலத்த சமர்களில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் உளவியல் போரிலும் ஈடுபட்டுள்ளனர். வன்னிக்குள் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கிளேமோர் தாக்குதல்கள் மூலம் மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளியும் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை தாங்கள் நெருங்கிவிட்டது போன்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது.

வவுனியா மற்றும் மன்னார் களமுனைகளில் முன்னரங்க பகுதிகளில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய சில தாக்குதல்களில் புலிகளின் ஓரிரு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதுடன் கிளிநொச்சியில் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை படையினரின் இந்த உளவியல் போருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

வன்னியில் இடம்பெறும் விமானத் தாக்குதல்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்துவிட்டதாகவும் புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டு வருவதாகவும் படையினர் தினமும் கூறுவதுடன் வன்னியில் புலிகளின் முக்கியஸ்தர்களே தங்களுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதாகவும் அந்தத் தகவல்கள் மூலமே தாங்கள் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் படைத்தரப்பு கூறி வருகின்றது.

புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்கள் மிக மிக இரகசியமானவை என்பது அனைவரும் அறிந்தவை. அப்படியானவர்களின் நடமாட்டங்கள் குறித்த தகவல்கள் படைத்தரப்புக்கு கிடைக்கின்றன என்றால் அது புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளூடாகவே கிடைக்க வேண்டும். சாதாரண தலைவர்கள மற்றும் போராளிகளுக்கு இவ்வாறான இரகசியத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனால், தங்களுக்கு புலிகளின் உயர் மட்டத்திலிருந்து தகவல்கள் தரப்படுவதுபோன்றும் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளை அழிக்க புலிகளின் தலைமைப்பீடத்திலிருப்போர் முனைவது போன்றும் புலிகள் அமைப்புக்குள் தலைமைப் போட்டி பெருமளவில் நிலவுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே படைத்தரப்பு இவ்வாறான தகவல்களை வெளியிட்டு தமிழ் மக்களை குழப்ப முனைகிறது.

ஒவ்வொரு தடவையும் வன்னியில் இடம்பெறும் கடும் விமானத் தாக்குதலின் போதும் புலிகளின் ஒவ்வொரு தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் படைத்தரப்பு கூறுவதுடன் அங்கிருந்து கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலமே இலக்குகள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும் கூறுவர். ஆனால், அங்கு இடம்பெற்ற தாக்குதல்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளே அழிக்கப்பட்டதாக பின்னர் தெரியவரும்.

இதன்மூலம், புலிகளின் முக்கியஸ்தர்கள் தங்களுக்கு சரியான தகவல்களைத் தருவது போன்றும் தாங்களும் புலிகளின் சரியான இலக்குகளையே தாக்கியது போன்றும் தங்களின் இவ்வாறான தாக்குதல்களில் புலிகளின் முக்கியஸ்தர்களே கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் இதன்மூலம் மக்களை குழப்பி உளவியல் ரீதியில் அவர்களை பாதிப்படையச் செய்வதுமே படையினரின் தந்திரமாகும்.

இவ்வாறானதொரு நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை காலை பலாலி இராணுவத் தலைமையகம் மீது விடுதலைப்புலிகள் பலத்த ஷெல் தாக்குதலை நடத்தி அரசுக்கும் படைத் தலைமைக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஏயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட படை அதிகாரிகள் பலாலி விமானப் படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே இந்தச் ஷெல்கள் விமானப் படைத்தளத்தை தாக்கியுள்ளன.

உடனடியாகத் தகவல்கள் பறக்கவே பலாலி விமானப் படைத்தளத்தில் தரையிறங்காது, இவர்களுடன் வந்த விமானம் அவசர அவசரமாகக் கொழும்பு திரும்பியது. 34 ஷெல்கள் சுமார் அரை மணிநேரத்தில் அந்தப் பிரதேசத்தை தாக்கியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துமுள்ளனர். வாகனமொன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. மிக மிக முக்கிய பிரமுர்கள் தரையிறங்கவிருந்த நேரத்தில் அங்கு இடம்பெற்ற தாக்குதலானது படைத்தரப்பை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த முக்கிய பிரமுகர்களின் பலாலி விஜயம் குறித்து ஓரிரு சிரேஷ்ட தளபதிகளுக்கு மட்டுமே தெரிந்த விடயம், புலிகளுக்கு எவ்வாறு தெரிந்ததென்பது படைத் தலைமைப் பீடத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்தத் தகவலை புலிகளுக்குத் தெரிவித்தனர். ஏதேச்சையானதொரு தாக்குதலென்றால், மிக முக்கிய பிரமுகர்கள் பலாலியில் சரியாகத் தரையிறங்கவிருந்த நேரத்தில் எப்படி நடைபெற்றதென்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

வன்னியில் நடைபெறும் ஒவ்வொரு தாக்குதலின்போதும், புலிகள் வழங்கிய உளவுத்தகவலின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக படைத்தரப்பு கூறிவந்தபோது அதிஉயர் பாதுகாப்பு அணியின் பலாலி வருகை குறித்து இராணுவ சிரேஷ்ட மட்டத்திலிருந்தே புலிகளுக்கு தகவல் சென்றதா என்ற கேள்வி பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளதுடன் பாதுகாப்பில் பெரும் ஓட்டை ஏற்பட்டுள்ளதையும் தெளிவாக்கியுள்ளது.

பூநகரி - கல்முனைப் பகுதியிலிருந்து புலிகள் பலாலி நோக்கி இந்தச் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். ட்ராக்ரர் அல்லது கனரக வாகன மொன்றில் ஆட்லறியை கொண்டு வந்தே கல்முனையில் வைத்து பலாலி நோக்கித் தாக்குதலை நடத்திவிட்டு உடனடியாக அந்த ஆட்லறியை புலிகள் அங்கிருந்து அகற்றியுள்ளனர். பலாலி படைத்தளம் மீதான புலிகளின் இந்தச் ஷெல் தாக்குதல் படைத்தரப்புக்கு தொடர்ந்தும் பெரும் அச்சுறுத்தலாயுள்ளது. இதனைத் தடுத்துநிறுத்த பல தடவைகள் முயன்றும் அது முடியாது போய்விட்டது.

கல்முனைக்கு அருகில், குடாநாட்டில் மண்டைதீவில் நிரந்தர ஆட்லறித் தளத்தை அமைத்தால் பலாலி மீதான புலிகளின் ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலை உடனடியாகத் தடுக்க முடியுமென இராணுவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். புலிகள் வசமிருப்பது 133 மில்லிமீற்றர் ரக ஆட்லறி, இது சுமார் 27 கிலோமீற்றர் தூரமே செல்லக்கூடியது. ஆனால், 30 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பலாலி விமானப் படைத்தளம் மீது கல்முனைப் பகுதியில் வைத்தே தாக்குதல் நடத்த முடியும்.

மிகவும் குறுகலான இடத்திலிருந்தும் படையினரின் ஆட்லறி மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் எல்லைக்குள்ளிருந்தும் பலாலி படைத்தளம் மீது கல்முனையிலிருந்து அவசர அவசரமாகத் தாக்கிவிட்டு புலிகள் தங்கள் ஆட்லறியை அங்கிருந்து உடனடியாக அகற்றிவிடுகின்றனர். படைத்தரப்பும் இதனை நன்கறியும். எனினும், கல்முனை நோக்கி பதில் தாக்குதல் தொடுப்பதற்குள் புலிகள் அங்கிருந்து தங்கள் ஆட்லறியை பாதுகாப்பாக அகற்றி விடுவதால், அவர்கள் தங்கள் ஆட்லறியை அங்கிருந்து அகற்றுவதற்கிடையில் எப்படி அதனைத் தாக்கி அழிப்பதென்பது குறித்து படையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

புலிகள், எந்த நாள், எந்த நேரம் இந்தத் தாக்குதலை நடத்துவார்களென்பது தெரியாததால் படையினர் தங்கள் ஆட்லறியை எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க முடியாது. அதேநேரம், இனிமேல் குடாநாட்டுக்கு சிரேஷ்ட படைத் தளபதிகளும் மிக முக்கிய பிரமுகர்களும் வரும் போது படையினர் தங்கள் ஆட்லறிகளை கல்முனை நோக்கி தயாராக வைத்திருப்பார்களெனக் கருதப்படுகிறது. மிக முக்கிய பிரமுகர்களின் வருகை பற்றித் தெரிந்து புலிகள் தாக்குதல் நடத்த கல்முனைக்கு ஆட்லறியுடன் வந்து தாக்குதலை ஆரம்பித்தால் அடுத்த நிமிடமே கல்முனை நோக்கி ஷெல்களைப் பொழியவும் பல்குழல் ரொக்கட்டுகளை சரமாரியாக ஏவவும் முயலலாம்.

இதேநேரம், மண்டைதீவு கடற்படைத் தளத்திலிருந்து 10 முதல் 15 கிலோமீற்றர் தூரத்திலேயே கல்முனை உள்ளது. இதனால், இங்கு நிரந்தரமாக ஆட்லறித் தளத்தை அமைத்து கல்முனைப் பகுதியை வெகுசுலபமாக இலக்கு வைக்கலாமென இராணுவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இது குறித்து படைத்தரப்பும் தீவிரமாக ஆலோசிக்கின்றது. ஏனெனில், மண்டைதீவு பூநகரிக்கு சமீபமாகவேயுள்ளது. இங்கு நிரந்தரமாக ஆட்லறித் தளத்தை அமைக்கலாம். ஆனால் அந்தப் பகுதியை புலிகள் தாக்கிவிட்டால் என்ன செய்வதென்ற கேள்வியும் எழுகிறது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டில் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்த அன்றைய தினம் புலிகள் மண்டைதீவு கடற்படை முகாமைத் தாக்கி அழித்ததுடன் மண்டைதீவு பகுதியையும் கைப்பற்றி நீண்டநேரம் தக்கவைத்திருந்தனர். 1995 ஆம் ஆண்டு முற்பகுதியில், யாழ்.குடாநாடு புலிகள் வசமிருந்த போது புலிகள் மண்டைதீவு படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றி நீண்டநேரம் தம்வசம் வைத்திருந்தனர்.

இதனால், மண்டைதீவில் நிரந்தர ஆட்லறித் தளத்தை அமைத்து, கல்முனையிலிருந்து புலிகள் எப்போதாவது ஒரு தடவை பலாலி மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கலாம். ஆனால், புலிகள் மண்டைதீவு மீது தாக்குதல் நடத்தி ஆட்லறி தளத்தை கைப்பற்றிவிட்டால், ஆட்லறியை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ அந்த ஆட்லறியை பயன்படுத்தி அங்கிருந்து பலாலி, காங்கேசன்துறை மற்றும் கேந்திர இராணுவ முகாம்கள் மீது பாரிய ஷெல் தாக்குதலைத் தொடுத்து விடலாமென்ற அச்சமும் படைத்தரப்புக்குள்ளது.

தற்போதைய நிலையில் வன்னிக்குள் விமானப்படையினரின் கடும் விமானத் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது போல் யாழ். குடாநாட்டில் பலாலி மீது புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர்ந்தும் புலிகளால் குடாநாட்டுக்கு அச்சுறுத்தலேற்படுமென்பதுடன் சிரேஷ்ட படைத்தளபதிகளின் குடாநாட்டு வருகைக்கும் ஆபத்தேற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குடாநாட்டில் சிரேஷ்ட படைத்தளபதிகளை புலிகள் ஆட்லறிகள் மூலம் இலக்கு வைப்பது முதல் தடவையல்ல. யாழ். மாவட்ட தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி முகமாலையில் முன்னரங்க காவல்நிலைப் பகுதிக்குவந்தபோது புலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்தியிருந்தனர். அத்தாக்குதலிலிருந்து அவர் மயிரிழையில் தப்பினார். அதேபோன்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பலாலிக்குச் சென்ற போது புலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்தவே அவர் பலாலியில் தரையிறங்காது சென்றார்.

அதேபோல் கடந்த வருட முற்பகுதியில் கொடிகாமத்தில் கவசத் தாக்குதல் படையணியின் அலுவலகம் திறக்கப்பட்ட போது அந்த அலுவலகம் புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதலுக்கிலக்கானது. சிரேஷ்ட படை அதிகாரியொருவர் கொல்லப்பட்டதுடன் இரு சிரேஷ் படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இதுபோன்று மேலும் சில தாக்குதல்களை புலிகள் குடாநாட்டில் நடத்தியிருப்பது படைத்தலைமைப்பீடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம் புலிகளுக்கு எவ்வாறு தெரிகிறதென்பது புரியாத புதிராகவேயுள்ளது. இரத்மலானையிலிருந்து புறப்படும் விமானம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு வந்தே, அங்கு ஹெலிகொப்டர் மூலம் வரும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பலாலிக்குச் செல்வதால் இரத்மலானையிலிருந்து அல்லது கட்டுநாயக்காவிலிருந்து புலிகளுக்கு தகவல்கள் கிடைப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர்.

குடாநாட்டுக்கு சிரேஷ்ட படைத் தளபதிகள் விஜயம் செய்யும் போது பல மணிநேரங்களுக்கு முன்பே கையடக்கத் தொலைபேசிகள் அனைத்தினதும் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அத்துடன், குடாநாட்டுக்கு சிரேஷ்ட படைத்தளபதிகள் விஜயம் செய்வது ஓரிரு உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்குமென்பதால் குடாநாட்டிற்குள்ளிருந்து சிரேஷ்ட படை அதிகாரிகளின் பலாலி விஜயம் குறித்த தகவல்கள் புலிகளுக்கு செல்வதற்கு சாத்தியங்கள் குறைவென்றே படைத்தரப்பு கருதுகிறது.

இதுபோன்று கொழும்பிலும் சிரேஷ்ட படை அதிகாரிகள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களது நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் புலிகளுக்கு கிடைக்கலாமென படைத்தரப்பு கருதுகின்றது. இராணுவத் தலைமையகத்தினுள் இராணுவத் தளபதி மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் கொழும்பு பித்தளைச் சந்தி பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் புலிகளின் புலனாய்வுத் தகவல்களுக்கப்பால் படைத்தரப்பிலிருந்து அவர்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கலாமென்றே பாதுகாப்புத் தரப்பினர் கருதுகின்றனர்.

வடக்கே மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த வருட இறுதிக்குள் விடுதலைப்புலிகளை முற்று முழுதாக அழித்து விடுவோமென அரசும்படைத்தரப்பும் சூளுரைத்து வருகின்றன. வன்னியில் தினமும் கடும் விமானத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றி விடுவதற்கான சகல நடவடிக்கைகளிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன.

புலிகளும் இதனை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளதுடன் வன்னியிலும் குடாநாட்டிலும் தங்கள் பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இரு தரப்பும் எதிரெதிர் தரப்பு தலைமைப் பீடங்களை குறிவைத்து வருகையில் வன்னியில் தினமும் கடும் சமர் நடைபெறுகிறது. புலிகளின் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் படையினர் பலத்த தீவிரம் காட்டுகின்றபோதும், அது எந்தளவுக்கு சாத்தியப்படுமெனத் தெரியவில்லை.

Please Click here to login / register to post your comments.