பெங்களூரும் சிலிக்கன் பள்ளத்தாக்கும்

ஆக்கம்: பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
இந்தியாவினுடைய மென்பொருள் ஏற்றுமதி வருமானம் பெரும்பாலும் மூன்று தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ் நாடு ஆகியவற்றிலிருந்து கிட்டுகின்றது. வடமாநிலங்களான குஜராத்தும் மஹாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன. 1990 களில் இந்தியப் பொருளாதாரம் அடைந்த பெருவளர்ச்சிக்கு அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பிரதான காரணம். 2009 ஆம் ஆண்டளவில் இத்துறையினூடாக இந்தியா 5,000 கோடி டொலர்களை வருமானமாகப் பெறும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இத்துறையின் பங்களிப்பு 68% மாக உயரும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட பெங்களூர், கர்நாடக மாநிலத்தின் தலைநகரம், இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்ற பட்டம் அந்நகருக்கு உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் இத்தொழில் பரந்து காணப்படும் கலிபோனியா மாநிலத்தின் சாந்தா கிளாரா (santa clara valley) பள்ளத்தாக்கானது சிலிக்கன் பள்ளத்தாக்கு என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த அந்தஸ்தை இன்று பெங்களூரும் பெற்றுள்ளது. உண்மையில் பெங்களூர் புவியியல் ரீதியாக ஒரு பீடபூமியே அன்றி பள்ளத்தாக்கு அல்ல. எவ்வாறாயினும் இந்நகரம் மென்பொருள் தயாரிப்பு மற்றும் இலத்திரனியல் தொழில்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதன் காரணமாக 1990களில் இப் பெயர் அதற்கு வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் 1976 இல் ஏற்படுத்தப்பட்ட இலத்திரனியல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பாலிகா என்பவர் பெங்களூரை இலத்திரனியல் நகரமாக்கும் செயற்றிட்டத்தை முன் வைத்தார். 335 ஏக்கர் நிலத்தில் ஒரு கைத் தொழில் பூங்கா அமைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் U.S.AID நிறுவனம் பெங்களூர் நகரம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு ஈடான உயர் தொழிநுட்ப நகரமாக வளர்ச்சியடைவதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளதா? என பல ஆய்வுகளைச் செய்தது. இவ்விடயம் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அவர்களின் கருத்துப்படி இந்தியாவிலேயே பெங்களூர் நகரம் மட்டுமே சிலிக்கன் பள்ளத்தாக்காக மாறும் தகுதியுடையதென்றும் அதற்கான உள்ளீடுகள் அனைத்தும் பெங்களூரில் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலைநாட்டு ஊடகங்களும் பெங்களூர் ஒரு நாளைக்கு சிலிக்கன் பள்ளத்தாக்கின் இடத்தைப் பெறும் என தெரிவித்தனர். 2006ல் நியூயோர்க் "ரைம்ஸ்' பத்திரிகை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்கு பெங்களூரில் வேரூன்றுகின்றதா? என்ற கட்டுரையை வெளியிட்டது.

எவ்வாறாயினும் இன்று பெங்களூர் சிலிக்கன் பள்ளத்தாக்கோடு ஒப்பிடத்தக்கதன்று என்றும் இப்பெயர் பெங்களூரிற்கு பொருத்தமற்றதென்றும் பல கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

முதலில் கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்குப் பற்றி நோக்குவோம். இன்று சிலிக்கன் பள்ளத்தாக்கில் ஏறத்தாழ 2000 இலத்திரன் மற்றும் தகவல் தொழினுட்ப கம்பனிகள் காணப்படுகின்றன. இவற்றோடு வேறு சேவைகளோடு விநியோகப் பணிகளைச் செய்யும் கம்பனிகளும் அங்கு காணப்படுகின்றன. கணினிகள், றோபோரிக்ஸ், இலத்திரன் நுகர்வுப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் , லேசர் , செமிகண்டக்ரர் போன்ற துறைகளில் தலைவர்களாக விளங்கும் கம்பனிகள் இப்பள்ளத்தாக்கில் உண்டு. உலகில் இத்தொழில் சார்ந்த கம்பனிகள் செறிவாக காணப்படுவது சிலிக்கன் பள்ளத்தாக்கில் தான்.

வீடியோ விளையாட்டுகள் , தனியாள் கணினி, வீடியோ ரெக்கோடர் போன்ற பொருட்கள் இங்குதான் முதலில் உற்பத்தி செய்யப்பட்டன. சிலிக்கன் பள்ளத்தாக்கில் காணப்படும் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்கள்:

Adope system , Apple Computer , Hewlett- packard, Intel, Netscape, Seagate Technology, Yahoo, Verifone, Symantec. இவையாவும் தொழினுட்ப கம்பனிகள் என அழைக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் அவர்களுடைய பிரதான மூலவளம் அவர்கள் உருவாக்கி சொந்தம் கொண்டாடும் தொழினுட்பங்களாகும். அக்கம்பனிகளுக்குரிய நிலமோ, கட்டிடமோ அல்லது சாதனங்களோ பெரிய வளங்கள் அல்ல. இந்தப் பள்ளத்தாக்கில் பெரிய வளங்கள் அல்ல. இந்தப் பள்ளத்தாக்கில் பணிபுரிவோர் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர். 1990 களில் இப்பள்ளத்தாக்கில் 27,617 உரிமங்கள் ( Patents) பதிவு செய்யப்பட்டிருந்தன. சிலிக்கன் பள்ளத்தாக்கு பல அபாயங்களை ( Risk)எதிர்நோக்கும் தொழில்களைக் கொண்டது.

அத் தொழில் சூதாட்டம் போன்றதென்றும் கூறப்படுகின்றது. அதாவது ஆற்றல், சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் என்பவற்றின் மீது பந்தயம் கட்டுவதே இப்பள்ளத்தாக்கில் காணப்படும் தொழிலின் அடிப்படைத் தன்மையாகும்.

மற்றொரு கருத்தின்படி அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு தனிநாடாக இருந்தால் அதன் பொருளாதாரம் உலகில் பத்தாவது இடத்தைப் பெற்றிருக்கும்.

பெங்களூரில் இடம்பெறும் தொழில் வித்தியாசமானது. E வர்த்தகம், வங்கி, தொலைத் தொடர்பு போன்ற துறைசார்ந்த துறைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவது. இவ்வாறான துறைகளில் மென்பொருள் குறியீடுகளை தயாரித்து வழங்கும் பணியையே பெங்களூர் கம்பனிகள் செய்கின்றன. அங்கு பணிபுரியும் பொறியியலாளர்கள் பல்வேறு நிகழ்ச்சித் திட்ட மொழிகளை அறிந்தவர்கள். தொழினுட்பத்தை அன்றி பல்வேறு கணினி மொழிகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இப் பொறியியலாளர்கள் விளங்குகின்றனர்.

அவர்கள் இச்சேவைகளை வழங்குபவர்களன்றி தொழினுட்பங்களை உருவாக்குபவர்கள் அன்று.

அவர்களுடைய பிரதான வளம் ஏராளமான, மலிவான ஊழியர்கள். அவர்களிடம் கண்டுபிடிப்புகளையும் அதற்கான உரிமங்களையும் பற்றிக் கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. பெங்களூரில் உள்ள கம்பனிகள் எதுவித தொழில் அபாயத்தையும் எதிர்நோக்குவதில்லை. தமது கண்டுபிடிப்புகள், சொந்த சிந்தனைகள் என்பவற்றை முன்வைத்து போட்டியிடுவதுமில்லை. சில ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்தே இயங்குகின்றன; இக்கம்பனிகளின் பொறியியலாளர்கள் எந்தத் தொழில்நுட்பத்திலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்; அவருடைய உடலே இயங்குகின்றது; மூளைக்கு அதிக வேலையில்லை என்று பல கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன. டாட்டா, விப்ரோ, இன்போசிஸ் போன்ற பிரபல கம்பனிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் சேவையையே வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஒப்பீடு

அமெரிக்கன் சிலிக்கன் பள்ளத்தாக்குக் கம்பனிகள் தொழில்நுட்பத்தையும் சந்தையையும் நன்கு அறிந்தவை (" Know What') எத்தகைய உற்பத்திகளினால் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அக்கம்பனிகள் நன்கு அறியும்.

பெங்களூர் கம்பனிகள் பிற கம்பனிகளுக்கான மென்பொருட்களைத் தயாரிக்கத் தெரிந்தவை ("Know How)'. அமெரிக்கக் கம்பனிகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக (R&D) ஏராளமான பணத்தை முதலீடு செய்பவை; புதியனவற்றைக் கண்டுபிடிப்பவை; எப்போதும் புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருப்பவை; பெங்களூர் கம்பனிகள் புதியனவற்றைக் கண்டுபிடிப்பதில்லை ஆராய்ச்சிக்காக எதனையும் செலவழிப்பதுமில்லை.

அமெரிக்கன் சிலிக்கன் கம்பனிப் பொறியியலாளர் வாழ்நாள் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டவர் அதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். ஆனால், பெங்களூர் பொறியியலாளர் பல மொழிகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அவர் தான் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. தனக்குத் தெரிந்த மொழிகளில் மென்பொருள் தயாரிப்பதே அவரது தொழில்.

அமெரிக்க சிலிக்கன் கம்பனிப் பொறியியலாளரின் கல்வியும் அனுபவமும் முழு தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை. வெவ்வேறு கம்பனிகளுக்கு வேலை மாறிச் சென்றாலும் அவர் ஒரே தொழில்நுட்பத்தைத்தான் கையாளுவார். பெங்களூர் பொறியியலாளர்களின் வேலை அனுபவம் அவர்களுக்கு எந்தத் தொழில்நுட்பத்தையும் கற்பிப்பதில்லை. வங்கி மென்பொருள், உல்லாசப் பயணத்துறை மென்பொருள் என மாறி மாறித் தயாரித்துக் கொண்டிருப்பவர்கள்.

அமெரிக்கக் கம்பனிகள் புதிதாக எதனையேனும் படைத்துக் கொண்டிருப்பவை. பல கம்பனிகள் சாதாரணமாக, கார்நிறுத்தும், திருத்தியமைக்கும் "கராஜ்' களில் இயங்கிவை; சாதாரண நிலையிலிருந்து முன்னேறியவை; பெங்களூர் கம்பனிகளுக்கும் படைப்பாற்றலுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை. வேறு கம்பனிகளிலிருந்து விலகிச் சென்று புதிய கம்பனிகளை ஆரம்பிப்பபவர்கள் அதிகம். தாய்க்கம்பனிகளின் ஒப்பந்தங்களைக் கவர்ந்து தொழில் செய்தவர்களும் உண்டு.

அமெரிக்கக் கம்பனிகள் தொழில்நுட்பத்தை முகாமை செய்ய பெங்களூர் கம்பனிகள் ஊழியர்களை முகாமை செய்கின்றன. இவ்வாறான வேறுபாடுகளின் அடிப்படையில் பெங்களூரில் இடம்பெற்றுப் பெருகிவரும் தகவல் தொழில்நுட்பத் தொழிலானது அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

மேலும், பெங்களூர் கம்பனிகள் அம்மாநகரில் அமைக்கப்பட்டுள்ள முறைக்கும் அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கில் கம்பனிகள் அமைக்கப்பட்டுள்ள முறைக்குமிடையில் உள்ள வேறுபாடுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வகையிலும் பெங்களூர் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படத் தகுதியற்றது என பல இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

பெங்களூர் நகரத்தின் மோசமான நிலைக்கு அரசாங்கம் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் தகவல் தொழில்நுட்ப கம்பனிகளும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பது அவர்கள் கருத்து.

உருவாக்கப்படும் ஒவ்வொரு தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பும் 7 அல்லது 8 தொழில்வாய்ப்புகள் வேறு இடங்களில் ஏற்பட வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு உண்டு. ஆனால், பெங்களூரின் தவறான நிர்வாக முறைகளினால் 3 அல்லது 4 வேறு தொழில்வாய்ப்புகளே உருவாக்கப்படுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நகரில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி சற்றும் சிந்திக்காத முறையில் தகவல்தொழில்நுட்பக் கம்பனிகள் கட்டி எழுப்பப்படுவதாகவும் எதுவித விழிப்புணர்வுமற்ற முறையில் அக்கம்பனிகள் சுற்றாடலை அசுத்தம் செய்கின்றன என்ற முறைப்பாடும் உண்டு.

அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கின் முன்னோடிகள் இவ்வாறு செயற்படவில்லை. பிரதான வீதியிலிருந்து 400 அடிகளுக்கு அப்பால் கட்டிடங்களை எழுப்பினர்.

இவ்வாறான கவனமான நடவடிக்கையால், எதிர்காலத்தில் விரிவுபடுத்தப் போதிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.ஆனால், பெங்களூரில் இவ்வாறான சிந்தனைகள் எதுவுமின்றி பிரதான வீதிக்கு மிக அருகில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அத்துடன், நெருக்கடி நிறைந்த நகர்ப்புறங்களில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன.

ஐக்கிய அமெரிக்காவில் சான்பிரான் சிஸ்கோ நகரில் இத்தொழில்கள் அமைக்கப்படாது பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள சிலிக்கன் பள்ளத்தாக்கில் அவை அமைக்கப்பட்டன. இதனால், அப்பெருநகரம் நெருக்கடியிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இந்தியாவில் கைத்தொழில்கள் பெருநகரங்களில், பிரதான வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டன. வசதிமிக்கவர்கள் பெரும்பாலும் அங்கேயே வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இப்படிப்பட்டவர்கள் இப்பெருநகரங்களைத் தவிர்த்து "கிராமங்களில்', அதாவது புறநகரப்பகுதிகளில் (Suburbs) வாழ்கின்றனர். இந்தியாவில் வறியவர்களே கிராமங்களில் வாழ்கின்றனர். இவ்வாறு வேறுபட்ட முறையில் பெங்களூர் நகரமும் அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கும் வளர்ச்சியடைந்தமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்.

மேலைநாட்டுக் கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் அனைத்தும் (பாடசாலைகள், மருத்துவ வசதிகள், அகலப்பாதைகள்) கிட்டுகின்றன. இந்தியாவில் கிராமப்புற உயர் வகுப்பினர்களுக்கும் இவ்வசதிகள் கிட்டுவதில்லை. இவ்வசதிகள் இல்லாமையால் தொழில்துறையினர் கிராமங்களை நாடுவதில்லை.

இந்தியக் கம்பனிகளின் செல்வம் ஏராளம்; கிராம மக்கள் வறியவர்கள் இந்தியத் தகவல்தொழில்நுட்பக் கம்பனிகள் செல்வந்தர் வறியவர் இடைவெளியை மேலும் தீவிரப்படுத்துகின்றன என்ற முறைப்பாடும் உண்டு. நகர்ப்புறங்களுக்குள்ளும் இவ்விடைவெளி அதிகரிக்க இக்கம்பனிகள் காரணமாக உள்ளன. இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு தொழில் நிலையங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செய்வதுதான் என்றும் கூறப்படுகின்றது. இத்தொழில் நிலையங்களே இந்தியக் கிராமங்களை நவீனமயப்படுத்த முடியும் என்ற கருத்தும் உண்டு.

இது ஒன்றும் நடக்கமுடியாததொன்றல்ல. இந்தியாவில் இருந்த சக்ச்சி ( Sakschi) என்ற கிராமமே காலப்போக்கில் உருக்குத் தொழிலில் பிரசித்திபெற்ற ஜாம்ஷெட்பூர் நகரமாக வளர்ச்சி பெற்றது. அரசாங்கம் இவ்வாறான ஒரு நகரைக் கட்டியெழுப்பி இருக்க முடியாது. ஒரு பெரிய தொழில் அதிபரே இந்நகரை வடிவமைத்தார். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழிலுக்கு பெங்களூர் அல்லது ஜாம்ஷெட்பூரே முன்னோடியாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் உண்டு.

Please Click here to login / register to post your comments.