சிறிய தாக்குதல் பெரிய தாக்கம்

ஆக்கம்: விதுரன்
கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறிவருகையில் புலிகள் தெற்கில் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதுவொரு சிறிய தாக்குதலாயுள்ள போதும் இதன் எதிரொலி தெற்கை பெரிதும் அதிரவைத்துள்ளது.

தெற்கில் மேலும் பலதாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தால் அங்கு மேலதிக படையினரை அனுப்பி வரும் அரசு வடக்கிலும் பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெற்கில் இடம்பெற்ற தாக்குதலானது இராணுவ ரீதியில் அரசுக்கு மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ள போதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

கிழக்கின் வெற்றியும் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போரும் இனப்பிரச்சினைக்கு அரசு இராணுவத்தீர்வை நாடுவதை தெளிவாக்கியுள்ளது. இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வை முழுமையாக முடக்கிவிட்டன. போர் நிறுத்த உடன்பாடு இனிச் செல்லாக் காசாகிவிட்டது. இதனால் முழு அளவிலான போரே இனி அனைத்தையும் தீர்மானிக்கப்போகிறது.

வடக்கு - கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பினூடாக அரசியல் ரீதியாகப் பிரித்த அரசு இராணுவ ரீதியில் கிழக்கை கைப்பற்றியதன் மூலம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படமாட்டாதெனத் தெளிவுபடுத்தியது. அதனாலேயே, வடக்கையும் கைப்பற்றி விட்டால் இந்தப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டு விட முடியுமென நம்புகிறது.

இதன் விளைவே புலிகள் தற்போது தெற்கில் தொடங்கியுள்ள தாக்குதலாகும். இது மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதால் தென்பகுதியில் பெரும் பதற்றமேற்பட்டுள்ளது.

அதேநேரம் யால சரணாலயத்தில் இராணுவ நிலையொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது உல்லாசப் பயணத்துறையை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதுடன் இதன் மூலம் பொருளாதார இலக்குகள் மீது புலிகளின் கவனம் திரும்பியுள்ளதாகவே கருதப்படுகிறது.

யால சரணாலயம் நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவருமிடம். வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இந்தக் காலப் பகுதியில் இங்கு பெருமளவில் வருவர். இதற்கு வசதியாக சரணாலயத்தில் சுமார் இரு வாரங்கள் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றதால் சரணாலயம் இரு வாரங்கள் மூடப்பட்டிருந்தது.

புனரமைப்புப் பணிகள் யாவும் முடிவடைந்து கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவிருந்த நிலையிலேயே திங்கட்கிழமை மாலை இங்குள்ள இராணுவ மினி முகாமொன்று புலிகளின் அதிரடித் தாக்குதலுக்கிலக்கானது. இதில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டதுடன் சிலர் காணாமல் போயுள்ளனர்.

தாக்குதல் நடத்திய புலிகள் முகாமை முற்றாக அழித்துவிட்டு சுமார் மூன்று மணிநேரம் அங்கிருந்துவிட்டு ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டனர். மறுநாள் காலையே அங்கு மீட்புப் படையணிகள் போய்ச் சேர்ந்தன, தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தாக்குதல் இடம்பெற்ற தல்கஸ்மங்கடவிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கதிர்காமம் இராணுவ முகாமுக்கு தகவல் கிடைத்த போதும் இரவு நேரத்தில் அப் பகுதிக்கு மீட்புப் படையினர் செல்லவில்லை.

தல்கஸ்மங்கடவில் தாக்குதல் நடத்த வந்த புலிகளின் எண்ணிக்கை குறித்து தெரியாததாலும் இரவு நேரத்தில் அங்கு செல்லும் மீட்புப் படையணி எவ்வேளையிலும் தாக்குதலுக்கிலக்காகலாமென்ற அச்சத்திலும் காலையே அங்கு மீட்புப் படையணி சென்றது. அப்படையணி கூட அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த அமுக்க வெடியில் சிக்கியதால் தாக்குதல் நடத்த வந்தவர்கள் குறித்த அச்சம் மேலும் அதிகரித்தது.

இந்த சரணாலயத்திற்கு பெருமளவில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளே வருகை தருவர். எனினும் புலிகள் தாக்குதல் நடத்திய அன்றைய தினம் சரணாலயம் மூடப்பட்டிருந்ததால் உல்லாசப் பயணிகள் எவரும் ஆபத்தில் சிக்கவில்லை. ஆனாலும் இந்தத் தாக்குதலானது இந்த சரணாலயத்தின் பாதுகாப்புக் குறித்து உல்லாசப் பயணிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதேநேரம் இந்தத்தாக்குதலில் உல்லாசப் பயணிகள் எவரும் பாதிக்கப்படக்கூடாதென்பதில் புலிகள் கவனம் செலுத்தியதுடன் உல்லாசப் பயணத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்திலேயே, சரணாலயம் மீண்டும் திறக்கப்படுவதற்கு முதல் நாள் அங்கு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வடக்கு - கிழக்கில் எந்தவொரு படை நடவடிக்கையின் போதும் படையினர் மக்கள் நலன்களை கருத்தில் ெகாண்டது கிடையாது. மக்கள் குடியிருப்புகளை நோக்கி கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதலை நடத்துவது, மக்கள் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக கடும் விமானத் தாக்குதலை நடத்துவது, இவ்வாறான தாக்குதல்களில் மக்கள் கொல்லப்படும் போது அதனை நியாயப்படுத்துவதென்பது அவர்களது வழமையான செயல்.

ஆனால், கடந்த வருடம், மீண்டும் போர் ஆரம்பமான பின்னர் புலிகள் மக்கள் இலக்குகளை தாக்குதவதை முடிந்தவரை தவிர்த்தே வந்துள்ளனர். இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தேர்ந்தெடுத்தே தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனொரு கட்டமாகவே கடந்த திங்கட்கிழமை யால சரணாலயம் பொது மக்களின் வருகைக்காக மூடப்பட்டிருந்த போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சரணாலயம் இருவாரங்களாக மூடப்பட்டிருந்த போது ஆரம்பத்திலேயே அங்கு தாக்குதலை நடத்தியிருந்தால், தாக்குதலைத் தொடர்ந்து தேடுதல்களையெல்லாம் நடத்திவிட்டு திட்டமிட்டபடி இரு வாரத்தின் பின் ஆறுதலாக சரணாலயம் திறக்கப்பட்டிருக்கும்.

ஆனால், தங்கள் தாக்குதலால் உல்லாசப் பயணிகளோ, உள்ளூர் மக்களோ பாதிக்கப்படக் கூடாதென்பதுடன் இந்தத் தாக்குதல் மூலம் அச்சம் காரணமாக சரணாலயம் மூடப்பட வேண்டுமென்பதும், புலிகளின் தாக்குதலால் சரணாலயம் மூடப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகும் போது, அதனால் உல்லாசப் பயணத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பேற்பட வேண்டுமென்பதே புலிகளின் நோக்கமாகும்.

முன்னார் புலிகளின் விமானங்கள் கொழும்புக்கு வந்த போது சர்வதேச விமானங்கள் கொழும்புக்கு வரவில்லை. அச்சம் காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையம் இரவு நேரங்களில் முழுமையாக மூடப்பட்டதால் பகல் நேரங்களில் கூட ஒரு சில சர்வதேச விமானங்களே கட்டுநாயக்காவுக்கு வந்தன. பின்னர் புலிகளின் விமானங்கள் கொழும்புக்கு வராததால் சர்வதேச விமானங்கள் கொழும்புக்கு வரத் தொடங்கின. இது நாட்டின் உல்லாசப் பயணத்துறையையும் பொருளாதாரத்தையும் மிக மோசமாகப் பாதித்தது.

இது போன்றதொரு சூழ்நிலையே தற்போதும் உருவாகும் நிலையேற்பட்டுள்ளது. கொழும்பில் புலிகளின் விமானத் தாக்குதலால் ஏற்பட்ட அச்சுறுத்தல் போல் யால தாக்குதல் இல்லாவிடினும் இந்தத் தாக்குதலானது உல்லாசப் பயணத்துறையையும் பொருளாதாரத்தையும் இலக்கு வைத்ததொரு தாக்குதலாகக் கருதப்படுவதால் வெளிநாடுகளில் இந்தத் தாக்குதல் கடுமையாக எதிரொலிக்கிறது. அமெரிக்கா தனது பிரஜைகளை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது.

அதேநேரம், கிழக்கை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டுவிட்டதாக அரசு பெரும் பிரசாரம் செய்து வருகையில் தெற்கில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலானது தென்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமத்தை அண்டிய பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

வழமையாக தினமும் கதிர்காமம் முருகனைத் தரிசிக்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்வர். ஆனால், இந்தத் தாக்குதல் நடைபெற்ற மறுநாள் அங்கு ஒரு ஈ, காக்கை கூடச் செல்லவில்லையென்றால் இந்தத் தாக்குதல் தென்பகுதி மக்கள் மத்தியில் எந்தளவிற்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதென்பதை உணரமுடிவதுடன் தென் பகுதிக்குள் புலிகள் ஊடுருவி விட்டதாகவும் பெரும் தாக்குதல்களை நடத்தப்போகிறார்களென்றும் வதந்திகள் பரவின.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் குறிப்பிட்ட சில கிலோமீற்றர் தூரத்தில் மேலும் மூன்று இராணுவ மினி முகாம்கள் இருந்துள்ளன. ஒன்றுக்கொன்று பாதுகாப்பாகவும் இந்த நான்கு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தபோதும் ஏனைய முகாம்களிலிருந்த படையினரதோ அல்லது கிராமவாசிகளதோ கண்களில் படாது வந்த புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் இங்கு அனுப்பப்பட்டு தீவிர தேடுதல்கள் நடத்தப்பட்டபோதும் புலிகள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள், தாக்குதலின் பின் அங்கிருந்து எப்படிச் சென்றார்களென்பதை அறிய முடியாது படையினர் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர். படையினரின் இந்தக் குழப்பம் தென் பகுதியில் மேலும் தாக்குதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.

கிழக்கிலிருந்து அம்பாறை எல்லையூடாக மொனறாகலை காட்டுக்குள் வந்து அங்கிருந்து அம்பாந்தோட்டையின் யால சரணாலயத்திற்குள் புலிகள் நுழைந்திருக்கலாமெனக் கருதும் படைத்தரப்பு, புலிகள் பயணம் செய்யக் கூடிய பாதைகள் எனக் கருதப்படும் இடங்களிலெல்லாம் தற்போது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் யால சரணாலயத்தை எந்தளவுக்கு விரைவில் திறக்க முடியுமோ அந்தளவுக்கு விரைவில் திறந்து விடவேண்டுமென்பதில் அக்கறை காட்டுகின்றனர்.

அதேநேரம், தல்கஸ்மங்கட முகாம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் எண்ணிக்கை எவ்வளவெனத் தெரியாது படையினர் தடுமாறுகின்றனர். இந்த முகாமில் 25 படையினர்வரை இருந்துள்ளதாகவும் இரு தரப்புக்குமிடையே சுமார் ஒரு மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. சிறிய ரக ஆயுதங்களுடன் வந்தே புலிகள் தாக்குதல் நடத்தியதாலும் 25 வரையான படையினர் ஒரு மணிநேரம் மோதியும் தாக்குதல் நடத்தியவர்களைச் சமாளிக்க முடியவில்லையென்றால் 25க்கு மேற்பட்ட புலிகள் வந்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அம்பாறை எல்லையிலிருந்து மொனறாகலையை கடந்து அம்பாந்தோட்டைக்குள் இந்தளவு எண்ணிக்கையானோர் நுழைந்ததை படைத்தரப்பால் ஏன் அறிய முடியாது போனதென்ற கேள்வி எழுப்பப்படுவதுடன், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற புலிகளைக் கூட இன்றுவரை ஏன் கண்டுபிடிக்க முடியாது போனதென்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் அம்பாறைக்குத் திரும்பிச் செல்லாது அந்தக் காட்டுப் பகுதியில்தான் நிற்கிறார்களா என்ற கேள்வியும் எழுப்பப்படும் அதேநேரம், அங்குதான் எங்காவது நிற்கின்றார்களென்றால் அவர்களது தாக்குதல்கள் அங்கு மேலும் தொடரப்போகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

வட பகுதி யுத்த முனையில் ஒரு தாக்குதலில் 500 படையினர் கொல்லப்பட்டாலும் ஏற்படாத அதிர்ச்சியும் அச்சமும் தென்பகுதியில் 5 படையினர் கொல்லப்பட்டவுடன் ஏற்படுகிறது. இந்த அச்சம் மேலும் பரவும் வகையில் புலிகள் தெற்கில் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீதும் உல்லாசப் பயணத்துறை மீதும் தாக்குதல்களை நடத்தலாமென கருதப்படுகிறது.

வடக்கில் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைய தெற்கில் புலிகளின் தாக்குதல்களும் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்கள் மீதான தாக்குதல்களாயிராதென்பது நிச்சயம், அதேநேரம் அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் விதத்தில் வேறு பகுதிகளிலும் புலிகளின் தாக்குதல்கள் தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கில் கடும் மழைபெய்து வருவதால் அங்கு பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத படையினர் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக தினமும் வன்னியிலும் யாழ்.குடாவிலும் புலிகளின் பகுதிகளை நோக்கி கடும் தாக்குதலை நடத்திவருகின்றனர். முன்னரங்க காவல் நிலைகளில் புலிகளுடன் தினமும் மோதியும் வருகின்றனர்.

புலிகள் ஏதாவதொரு இடத்தில் பாரிய தாக்குதலை நடத்திவிடலாமெனச் சந்தேகமெழுந்தால் அந்தப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளின் தாக்குதல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். இதனால் வடபகுதி யுத்த முனை தினமும் அதிர்ந்துகொண்டிருக்கிறது.

அத்துடன் அடுத்த மாதம் புலிகளின் மாவீரர் வாரம் வருவதால் அதில் தங்களது கொள்கை உரையை புலிகளின் தலைவர் ஆற்றும்போது சிலமுக்கிய முடிவுகளை அவர் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உரைக்கு முன்னர் அவர்கள் சில பாரிய தாக்குதல்களை நடத்தி தங்கள் பலத்தை நிரூபித்துக்கொண்டு தங்கள் முடிவுகளை புலிகள் அறிவிப்பரென அரசு கருதுவதால் அடுத்து எங்கு என்ன நடக்கப்போகின்றது என்பதறியாது அரசு தடுமாறிப்போயுள்ளது.

Please Click here to login / register to post your comments.