திருமலையில் கண் வைத்து காய் நகர்த்தும் இந்தியா!

ஆக்கம்: கலைஞன்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதுடில்லி வருகையும் இந்திய அரசின் இலங்கைக்கான ஆயுத உதவியும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆயுத உதவிக்கு பிரதியீடாக திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி வழங்கி நன்றிக்கடன் தீர்த்துள்ளது இலங்கையரசு.

`இந்துஸ்தான் டைம்ஸ்' நடத்திய மாநாட்டில் பங்கேற்கவே இந்தியாவுக்கு வருகை தந்ததாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிக் கொண்டாலும் அவரின் திரைமறைவு நிகழ்ச்சி நிரல்கள் இராணுவ உதவிகள், தமிழர் மீதான யுத்தத்திற்கான ஆதரவு போன்றவற்றையே மையப்படுத்தி இந்திய விஜயம் அமைந்திருந்தது.

டில்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட முக்கிய பிரமுகர்களையெல்லாம் சந்தித்த இலங்கை ஜனாதிபதி "எமக்கு இராணுவ உதவி தேவையில்லை இந்தியாவின் தார்மீக ஆதரவே தேவை"யென வீராப்பாக கூறிய போதும் அடுத்து நடந்த நிகழ்வுகள் இலங்கை ஜனாதிபதியின் டில்லி விஜய நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் தார்மீக ஆதரவை இலங்கை ஜனாதிபதி கோரிய போதிலும் பூட்டிய கதவுகளுக்கு பின்னால் அவர் இந்தியாவிடம் கேட்ட இராணுவ தளபாட ஆயுத உதவிக் கோரிக்கைகளுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இதனை `டைம்ஸ் ஒப் இந்தியா' நாளேடும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தளபாடங்களையும் ராடர்களையும் வழங்கிய இந்திய அரசு இம்முறை விடுதலைப் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தக் கூடிய சுடுகலன்களையும் ஆட்டிலறி பீரங்கிகளையும் லேசர் கருவிகளில் இயங்கும் ஆயுதங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் 40எம்.எம்.- எல்.70 (40mml- 70 Close Range anti-aircraft guns) ரக விமான எதிர்ப்பு சுடுகலன்களையும் அதற்குரிய மேலதிக இராணுவ தளபாடங்களையும் இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரங்களையும் 40 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியினையும் இந்தியாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான த-ஓற்ட்னன்ஸ் உற்பத்தி நிலையம் (The Ordnance Factory Bord) இலங்கையிடமிருந்து பெற்றுள்ளது.

இதுதவிர, இந்தியாவிடமிருந்து மேலும் பல விமான எதிர்ப்பு ஆயுதங்கள், ராடர்கள், ஆட்டிலறிகள், உலவு விமானங்கள் மற்றும் லேசர் கருவிகளில் இயங்கும் பி.ஜி.எம். எஸ்கள் (Precision - Guided munitions) போன்ற ஆயுதங்களையும் இலங்கை கோரியுள்ளது. இதற்கும் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில்களே இலங்கையரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலையீடுகளை தவிர்ப்பதற்காகவே இலங்கையரசுக்கு இந்தியா உதவிகளை வழங்க வேண்டியுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்திருந்தார். அவரின் கவலைக்கு மருந்தாக திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்துவதற்கு இலங்கையரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலையென விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இறுதி திருகோணமலையை தயாராகி வருவதையறிந்தே யுத்தமொன்றுக்கு புலிகள் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கையரசு இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடே திருகோணமலையில் இந்திய எண்ணெய்க்குதங்கள், இந்திய அனல்மின் நிலையம், திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி போன்ற தந்திரோபாயங்களாகும்.

இதேவேளை, மத்திய அரசின் இலங்கையரசு சார்புப் போக்கிற்கெதிராக தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப கட்டமாகவே ஈழத்தமிழருக்கு ஆதரவான பழ.நெடுமாறனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், புதிய தமிழகம் கட்சியின் ஈழத்தமிழருக்கு ஆதரவான கோட்டை நோக்கிய பேரணி, ஈழத்தமிழருக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு போன்றன இடம்பெற்றன.

இதற்கிடையில் ஈழத் தமிழர்களுக்கென தமிழகத்தில் வீடுவீடான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் பெரும் பிரசாரங்களுடன் களத்திலிறங்கிய பா.ஜ.க.வின் நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதும் அது தற்போது கிணற்றில் விழுந்த கல்லாகப் போனமை தமிழக அரசுக்கு மட்டுமன்றி மத்திய அரசுக்கும் பெரும் `நிம்மதியைக்' கொடுத்துள்ளது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவியை கடுமையாக கண்டித்துள்ளதுடன் அது தொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மத்திய அரசு ஈழத் தமிழர்களை கொன்றொழிப்பதற்காகவே ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோன்றே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழக சட்ட சபையில் விவாதமொன்றை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஈழத் தமிழர்கள் தொடர்பில் குரலெழுப்பி வந்த பலர் தற்போது மௌனம் சாதித்து வருவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி டில்லியில் பாராளுமன்றம் முன்பாகவும் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லம் முன்பாகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென வலியுறுத்தியும் முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாகவும் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளதுடன் சகல கட்சிகளுக்கும் இதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் தி.மு.க. அரசின் கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் ராமதாஸும் அண்மையில் டில்லி சென்று இந்திய வெளியுறவு இணை அமைச்சருடன் ஈழத்தமிழருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து விளங்கப்படுத்தியதுடன் இப்பொருட்களை அனுப்பும் விடயத்தில் மத்திய அரசின் இழுத்தடிக்கும் போக்கையும் கண்டித்திருந்தார்.

ஆனால், தற்போது குழம்பிய குட்டையாகிப் போயுள்ள தமிழக அரசியல் நிலைவரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழக அரசியல் வாதிகள் தெளிவாகவிருந்தால் மத்திய அரசால் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாது. ஆனால், தற்போதைய நிலையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க இந்தியப் படையை அனுப்பினால் கூட அதனை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ பலமான அரசியல் சக்தி தமிழகத்தில் இல்லை.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணி அரசுக்கும் பா.ம.க.வுக்குமிடையே நாத்திக- ஆத்திக யுத்தமும் கருணாநிதி- ஜெயலலிதாவிடையே குருஷேத்திரப் போரும் நடந்து கொண்டிருக்கும் போதும் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஆதிக்க வெறியும் அரசியல் இலாபம்தேடும் மனமும் இருக்கும் வரைக்கும் மத்திய அரசுக்கு ஈழத்தமிழர் தொடர்பாக எந்தவித அழுத்தங்களும் ஏற்படப்போவதில்லை.

இதை நன்குணர்ந்து கொண்ட நிலையிலேயே மத்திய அரசு இலங்கையரசு கேட்கும் அத்தனை உதவிகளையும் வழங்குவதற்கு தயக்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, ஈழத்தமிழர் விடயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் தமிழக அரசியல் தலைவர்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமானது.

இலங்கையில் இறுதிப் போருக்கு இராணுவமும் விடுதலைப் புலிகளும் தயாராகி விட்ட நிலையில் தமிழக அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மத்திய அரசின் இலங்கையரசு சார்புப் போக்கும் ஈழத்தமிழர்களின் எதிர்கால இருப்பைக் கேள்விக்குறியாக்கி விடப் போகிறது.

Please Click here to login / register to post your comments.