படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள்

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது.

யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.

பூநகரி கல்முனை பகுதியை கைப்பற்றுவதும், அதனை மன்னாருடன் இணைத்து ஒரு தரைப்பாதையை திறப்பதுமே அரசின் கையில் உள்ள தற்போதைய படைத்துறை உத்தி. அதற்காக கல்முனையை சுற்றியுள்ள கடற்பகுதியில் தமது ஆளுமையை அதிகரிப்பதற்கும், விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கும் படையினர் முயன்று வருகின்றனர். இதற்கு துணையாக மண்டைதீவு, கிளாலி படைத்தளங்களில் உள்ள சிறிய கடற்படை தளங்களின் உதவியுடன் கடற்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டு வருவதுடன், அடிக்கடி சிறு சிறு மோதல்கள் இடம்பெற்று வருவதும் வழமையானது.

இதேபோன்று கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலையும் குருநகர் கடற்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டவாறு விடுதலைப் புலிகளின் கடற்பகுதிகளை இராணுவத்தினர் அவதானிக்க முற்பட்டிருந்தனர். உட்கரையோர ரோந்து படகுகள் (ஐளொழசந Pயவசழட ஏநளளநட) மூன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை பூநகரி பகுதியில் இருந்து வந்த கடற்புலி படகுகள் படையினரின் படகுகள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஒரு படகு மூழ்கியதுடன், ஏனைய படகுகள் இரண்டும் சேதங்களுடன் தப்பிவிட்டன.

இத்தகைய கடற்சண்டைகளில் படைத்தரப்பு தற்போது புதிய உத்தி ஒன்றை பயன்படுத்தி வருகிறது. அதாவது கடற்சமர் நடைபெறும் போது அதற்கு அண்மையில் உள்ள கரையோர படைத்தளங்களில் இருந்து கடற்பகுதிகளை நோக்கி செறிவான பீரங்கி தாக்குதல்களை மேற்கொள்வதே படைத்தரப்பின் புதிய உத்தியாகும்.

புல்மோட்டை கடற்பகுதியில் அண்மையில் நடைபெற்ற கடற்சமர்களின் போதெல்லாம் மணலாற்றில் உள்ள கடற்கரையை அண்டிய தளங்களில் இருந்து கடுமையான எறிகணை வீச்சுக்கள் கடற்பகுதியை நோக்கி நடத்தப்பட்டிருந்தன.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த சமரின் போதும் படையினர் குருநகர், மண்டைதீவு தளங்களில் இருந்து கடற்பகுதியை நோக்கி செறிவான பீரங்கி தாக்குதலை நடத்தியிருந்தனர். எனினும் மூழ்கிய படகில் இருந்து பெருமளவான ஆயுதங்களையும், படையினரின் 3 சடலங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

கடலோ அல்லது தரையோ வடபோர் முனையில் எதுவும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை என்பதை இந்த தாக்குதல் மிகவும் தெளிவாக காட்டியுள்ளது. இதற்கு ஆதாரமாக ஓமந்தைக்கு மேற்காக நடைபெற்றுவரும் சமர்களும், நாகர்கோவில், கிளாலி முன்னரங்க மோதல்களும் கூறப்பட்டாலும், தற்போது பூநகரி கடல் நீரேரியும் அதனுடன் இணைந்துள்ளது.

படைத்துறையினதும், படைத்துறை அவதானிகளினதும் கவனங்கள் வடபோர்முனை நோக்கி குவிந்துள்ள இந்த நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத தருணத்தில் மற்றுமொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தல்கஸ்மங்கட பகுதியில் அமைந்திருந்த படையினரின் சிறிய முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் குமண பகுதியில் இருந்து வடக்காக 50 மைல்கள் தொலைவிலும் கதிர்காமத்தில் இருந்து கிழக்காக 40 மைல்கள் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால வன சரணாலயத்தின் பாதுகாப்புக்கு என அமைக்கப்பட்ட இந்த இராணுவ முகாம் தொகுதிகளில் மாணிக்க கங்கைக்கு அருகாக நான்கு படைமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் கடல் எல்லையில் கடற்படைத் தளம் ஒன்றும் உள்ளது.

இலங்கையின் தலைநகரத்தையும், அதனைச் சூழவுள்ள முக்கிய பகுதிகள் மீது நடைபெற்று வந்த தாக்குதல்கள் தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளுக்கு வியாபித்து வருவது படைத்துறைக்கு சாதகமானதல்ல.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையின் பயிற்சிப் பாசறை பணிப்பாளரும் சிரேஷ்ட காவல்துறை சுப்பிரிண்டனுமான உபுல் செனிவரட்ன உயிரிழந்திருந்தார். பின்னர் ஹபரணையில் நடைபெற்ற தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் பலியாகியதுடன், வில்பத்து சரணாலயப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் அனுராதபுர மாவட்ட கட்டளைத்தளபதி லெப். கேணல் ஜெயந்த சுரவீர, இரண்டாம் நிலை தளபதி மேஜர் எப்.ஏ.ஜயரட்ன உட்பட 8 பேர் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தலைநகரத்தில் மட்டுமல்லாது இலங்கை ழுழுவதற்கும் போர் பரவி வருவதற்கான சில உதாரணங்களே இவையாகும்.

எனினும் அடிக்கடி நடைபெற்ற தாக்குதல்களை தொடர்ந்து வில்பத்து சரணாலயம் மூடப்பட்ட நிலையில் யால சரணாலயத்தின் முக்கியத்துவம் அதிகரித்திருந்தது.

கற்பிட்டியில் இருந்து ஹிக்கடுவை வரையிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் தென்னிலங்கையின் ஆழமான பகுதிகள் பாதுகாப்பானவை என கருதப்பட்டன. இலங்கை அரசும் தென்னிலங்கையின் உட்பகுதிகளை நோக்கி உல்லாசப்பயணிகளை கவர்ந்திழுப்பதன் மூலம் சீரழிந்து போகும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயன்று வந்தது.

கிழக்கு மாகாணமும், கற்பிட்டிக்கு வடக்கே உள்ள சிலாவத்துறையும் கைப்பற்றப்பட்ட பின்னர் யால சரணாலயம் மிகவும் பாதுகாப்பானது என அரசு கருதியிருக்கலாம். எனவே தான் முன்பு யால சரணாலயத்தின் மேற்குப் பகுதிக்கு உல்லாசப்பயணிகளை அனுமதித்த அரசு தற்போது அதன் வடகிழக்கு பகுதிக்கும் அனுமதிக்க முயற்சி எடுத்திருந்தது. எதிர்வரும் காலத்தில் உல்லாசப்பயணிகள் இலங்கைக்கு வருவது அதிகம் என்பதனால் அரசு இந்த நடவடிக்கையை அவசரமாக மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த நம்பிக்கையின் மீது வீழ்ந்த அடி போலாகிவிட்டது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல். ஒருபுறம் போர் தீவிரமடைந்த போது மறுபுறம் பொருளாதாரம் சீரழிவை சந்தித்தது. இருந்த போதும் இந்த வருடம் 7.0 சதவீத பொருளாதார வளர்ச்சியை காண்போம் என அரசு தொடர்ச்சியாக கூறிவந்தது.

ஆனால் 6.0 சதவீத வளர்ச்சியையே காணமுடியும் என அது பின்னர் ஒப்புக்கொண்டிருந்தது. போரே பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. ஆனால் போர் எத்தகைய பாதிப்புக்களை எந்த வேளைகளில் ஏற்படுத்தும் என்பதை யாரும் கணிக்க முடியாது என அண்மைய தாக்குதல் இலகுவாக எடுத்தியம்பியுள்ளது.

வெளிப்படையாக பார்த்தால் ஒரு சிறிய படை முகாம் தாக்கப்பட்டதாகவே தோன்றும். ஆனால் அதன் தாக்கம் பொருளாதார ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் அதன் தொடர்ச்சியாக அரசியலிலும் கணிசமானவை.

பொருளாதாரத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே படுத்துவிட்ட உல்லாசப்பயணத்துறைக்கு இது மேலும் ஒரு பின்னடைவாகும். உல்லாசப்பயணத்துறையின் பாதிப்பு என்பது சங்கிலி தொடர் போன்றது. அதாவது அதனை சார்ந்து நிற்கும் எல்லா தொழில்துறையிலும் அது தாக்கத்தை உண்டுபண்ணும்.

மேலும் முதலீட்டாளர்களுக்கும் இது அதிர்ச்சியான விடயமே. இலங்கையில் பாதுகாப்பு இல்லை என முதலீட்டாளர்கள் கருதும் சந்தர்ப்பங்களில் அவர்கள் இலங்கையை விட்டு விலகி ஓடவே எத்தனிப்பார்கள்.

தெற்காசியாவை பொறுத்த வரையில் முதலீடுகளை செய்வதற்கு அவர்களுக்கு பல நாடுகளின் கதவுகள் திறந்தே உள்ளன. எனவே அதிக பிரசாரங்களின் மூலம் அரசு அவர்களைக் கவரலாம். இல்லையேல் அவர்களாக வந்து முதலீடுகளை செய்யப்போவதில்லை. ஆபத்தான பகுதிகளில் தமது நிதியை முடக்குவதற்கு யாரும் விரும்பப்போவதுமில்லை. அதேபோன்ற ஒரு நிலைமையே கடன் கொடுக்கும் நிறுவனங்களும் எதிர்நோக்கியுள்ளன. சரிந்து போகும் பொருளாதாரம், உக்கிரமடைந்து வரும் மோதல்கள் என்பவற்றிற்கு நடுவே கடனை கொடுப்பதற்கு யாரும் விரும்பப்போவதில்லை.

எனவேதான் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெறுவதற்காக அரசு பலத்த பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாகவும், அவர்களின் விநியோக கப்பல்கள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் அரசு கூறிவருவதும் அதற்காகவே. இலங்கை பாதுகாப்பானது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் கடன் கொடையாளிகளையும், முதலீட்டாளர்களையும் திருப்திப்படுத்த அரசு முயன்று வருகின்றது.

ஆனால் வடக்கே யாழ். மாவட்டத்தின் குருநகர் கடல் நீரேரியில் இருந்து தெற்கே அம்பாந்தோட்டை வரை நடைபெற்ற சம்பவங்கள் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தியையே கொடுத்திருக்கும்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள வீரவில விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதாவது இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அடுத்தநிலையில் மிகவும் பொருளாதார கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக அம்பாந்தோட்டை மெல்ல மெல்ல மாறிவருவது நோக்கத்தக்கது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிங்கப்பூரின் துறைமுகத்திற்கு இணையாக தரமுயர்த்துவதற்காக சீனாவிடம் இருந்து 307 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு கடனாக கோரி வருவதுடன், 1,400 மில்லியன் ரூபா செலவில் வீரவில விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும் அரசு திட்டமிட்டு வருகின்றது.

ஆனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு நிகராக வீரவில விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலையை இந்த தாக்குதல் அரசிற்கு ஏற்படுத்தி இருக்கும் என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.

படைத்துறையை பொறுத்த வரைக்கும் இந்த தாக்குதல் படை வட்டாரங்களுக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் பிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போரில் படையினர் சமச்சீரற்ற போர் உத்திகளையே அதிகம் பின்பற்றி வருகின்றனர். அதாவது

விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்குள் ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளையும், சிறப்புப் படையணிகள் மற்றும் கொமோண்டோ படையணிகளின் தாக்குதல்களையுமே அவர்கள் முதன்மைப்படுத்தி வருகின்றனர்.

இது விடுதலைப் புலிகளை ஒரு நெருக்கடிக்குள் தள்ளும் மற்றும் அவர்களின் வளங்களை விரயமாக்கும் உத்திகள். ஆனால் விடுதலைப் புலிகள் ஆழ ஊடுருவி நடத்திவரும் தாக்குதல்கள் அதே நெருக்கடிகளை படையினருக்கும் அரசிற்கும் ஏற்படுத்தி வரும் என்பதும் வெளிப்படையானது.

அதாவது தென்னிலங்கையின் ஒவ்வொரு காடுகளையும், பற்றைகளையும் பாதுகாப்பதா? தலைநகரத்தை பாதுகாப்பதா? அல்லது களத்தில் கவனத்தை குவிப்பதா? என்பவை தான் படையினருக்கு முன்னுள்ள தற்போதைய பிரச்சினைகள்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் உட்பகுதி வரை புகுந்துள்ள புலிகளின் பயிற்சிகள் அவர்களின் தரம் என்ன என்பது தொடர்பாக படைத்தரப்பில் கடும் குழப்பங்களை தோன்றியிருக்கலாம். மேற்குலகத்தின் சிறப்புப் படையணிகளின் தரத்திற்கு ஈடாக சிறந்த பயிற்சிகளை உடையவர்கள் எனக்கூறப்படும் விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகள் காட்டுக்குள் வாழ்பவர்களாக அடர்ந்த காட்டுடன் ஒன்றிப்போயுள்ளவர்களாக மாறியுள்ளனர் என்பதே இந்த தாக்குதல் உணர்த்தும் செய்தி.

மேலும் தல்கஸ்மங்கடவில் மாலை 5.15 மணியளவிலேயே தாக்குதல் நடந்த போதும், அது நிகழ்ந்து ஒரு சில மணிநேரத்திற்குள் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரின் விபரம், கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களின் விபரம் என்பன உலகை எட்டியது ஆச்சரியமானது.

தாக்குதல் ஒருங்கிணைப்புக்களிலும், தகவல் பரிமாற்றத்திலும் விடுதலைப் புலிகளுக்கு உள்ள வலிமையை இது மீண்டும் நிரூபித்துள்ளது. அதாவது தாக்குதல் முடிந்ததும் துல்லியமான தகவல்களை கொடுத்து விட்டு புலிகள் அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.

இதனிடையே குடோயா மற்றும் பனாம (kudaoya and Panama) காடுகளில் இராணுவம் தனது ஆழ ஊடுருவும் படையினருக்கும், துணை இராணுவக் குழுவினருக்கும் பயிற்சிகளை அளித்து வருகின்றது என்ற தகவல் கசிந்துள்ள நிலையில் அதற்கு அண்மைய காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி புகுந்துள்ளதும் படைத்தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

மன்னார் மாவட்டத்தில் உக்கிரமடைந்து வரும் அரசின் சமச்சீரற்ற போர் உத்திகளை விடுதலைப் புலிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் தாக்குதலானது தனியே இராணுவ பரிமாணங்களை கடந்து பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களையும் ஏற்படுத்த வல்லவை என்பது நோக்கத்தக்கது.

அதாவது ஒரு போரை பொறுத்தவரை அதற்காக வகுக்கப்படும் வியூகம் முக்கியமானது. எனினும் அந்த போரில் நடைபெறும் சமர்களின் உத்திகள் (Strategy) போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.

ஒரு சமரை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது அதன் உத்திகளில் தங்கியுள்ளது. ஆனால் ஒரு போரை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது வகுக்கப்படும் வியூகங்களில் தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளால் தெரிந்தெடுத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய தாக்குதல்கள் போரின் வியூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

Please Click here to login / register to post your comments.