படையினரின் களமுனை வெற்றிகளும் புலிகளின் இராஜதந்திர வெற்றிகளும்

ஆக்கம்: குரு
நாம் வாழ்கின்ற உலகம் தோற்றம் பெற்றநாள் முதல் இன்றுவரை எத்தனையோ வகையான போர்களை அது கண்டுவந்திருக்கின்றது. போர்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது வரலாற்றுக் கதைகளில் காவியமாகச் சொல்லப்படும் பாரதப்போர். மத்திய காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடைபெற்ற சிலுவைப்போர் மற்றும் கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ஈருடகப் போர்களும், அதனைத் தொடர்ந்து நடந்த அரபு - இஸ்ரவேல் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர்களும் வளைகுடாவில் நடந்த ஈரான் - ஈராக் போர்களும், தற்போது உலகாளும் அமெரிக்காவின் ஏற்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களே, இவையே சர்வதேச அளவில் பேசப்படும் போர்களாகக் கருதப்படுகின்றன.

புராதன காலம்தொட்டு இன்றுவரை நடைபெற்ற போர்களின் போது காலத்திற்கும், தொழிநுட்ப வளர்ச்சிக்குமேற்றவாறு போர் அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நெறிப்படுத்தப்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தற்காலத்தில் நாடுகளிடையேயாயினும் சரி உள்நாட்டுப் போர்களாயினும், ஆயுதக்குழுக்கள் நடத்துகின்ற தாக்குதல்களானாலும் ஒவ்வொரு தரப்பும் தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு நேரடியான போர் நடவடிக்கைகளை மட்டும் ஒரு தகைமையாகக் கருதுவதில்லை. இக்கட்டுரையாளனின் பார்வையில் போரொன்றை வெற்றி கொள்வதற்குப் பின்வரும் காரணிகள் தீர்மானிக்கும் சக்திகளாகக் காணப்படுகின்றன.

1. நவீன தொழில்நுட்பமும் கடினமான பயிற்சி நடவடிக்கைகளும்.

2. இராஜதந்திர ரீதியிலான சர்வதேச அணுகுமுறைகள்.

3. இலத்திரனியல் ஊடகங்களின் செயல்பாடும் நகர்வும்.

சர்வதேச சமூகம் தீர்வு காணக்கூடிய ஓர் பிரச்சினையாக இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையும் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையின் கீழ் படையினர் சில வெற்றிகளைப் பெற்றிருக்கின்றனர் என்பதனை எவரும் மறுப்பதில்லை. மாவிலாறு முதல் குடும்பிமலை, சிலாவத்துறை வரையிலான தாக்குதல்களை அரசபடையினர் பெரு வெற்றியாகக் கருதுகின்றன. இங்கு குறிப்பிட்ட இடங்களைக் கைப்பற்றுவதற்கு அரசபடைகள் நகர்வுகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டபோது புலிகள் பாரியளவிலான தாக்குதல்களை மேற்கொள்ளாது பின்வாங்கியிருக்கின்றனர் என்பதே யுத்த ஆய்வாளர்களின் கருத்தாகக் காணப்படுகின்றது.

குடும்பி மலையைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை அரசபடைகள் ஆரம்பித்த போது அங்கு மூவாயிரத்திற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பட்டினிங் எதிர்நோக்கி இருப்பதாகவும் சரணாகதி அடைவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த மார்க்கங்களும் கிடையாது என இனவாத சிங்கள நாளேடுகள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.

ஆனால் அரசபடைகள் குடும்பிமலைப் பிரதேசத்தைத் தங்களது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் போது அப்படி குறிப்பிட எண்ணிக்கையானோர் சரணாகதியடையவோ அல்லது கைது செய்யப்படவேயில்லை. அப்படியானால் இந்த மூவாயிரம் பேரும் எப்படித் தப்பிக்கொண்டார்கள் என்பது தான் கேள்வி? இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக படையினரால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற செய்தியைக் கொட்டையெழுத்துகளில் பிரசுரிப்பதற்கு சில நாளேடுகள் காத்திருந்தன. ஆனால் அப்படி ஏதும் நிகழாமல் அரச படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்குச் சமனான இழப்புக்களுடன் விடுதலைப் புலிகள் குடும்பிமலைப் பிரதேசங்களிலிருந்து பின் வாங்கிவிட்டனர் என்பது தான் உண்மை. மேலும் அங்கிருந்து மீட்கப்படுவதாக தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ஆயுதக் குவியல்களும் ஏனையவையும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க வெறும் காட்டைத்தான் அரசு கைப்பற்றியிருக்கின்றதுீீ எனச் சொல்லிய கூற்றுக்குப் பதிலாகவே அந்த ஆயத மீட்பு நாடகங்கள் கருதப்படுகின்றன.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலைக்கு முன்னர் விடுதலைப் புலிகளிடம் 25 க்கும் குறைவான ரீப்பிட்டர் துப்பாக்கிகளும் அதற்குச் சமனான ரபில்களும் (5) ஐந்திற்கு மேற்படாத ரிவோல்வர் துப்பாக்கிகள் மட்டுமே அவர்கள் தமது ஆயுதங்களாகக் கொண்டிருந்தனர். இராணுவப் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் மூன்றுக்கும் குறைவாகவே இருந்தது. 1983 கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழ் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் பயிற்சிமுகாம்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து விடுதலைப் போரில் இணைந்து கொண்டனர்.

இன்று அரச படைகள் கொண்டிருப்பதைப் போன்று இராணுவப்படை,கடற்படை,விமானப்படை என்று மட்டுமல்லாது கரும்புலிகள், தற்கொலைப் படையணி என்ற விஷேட படைப் பிரிவுகளையும் இவர்கள் உருவாக்கி உலகிற்கே புதியவகையான போரியல் நாகரீகங்களைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். படைப்பலத்தைப் பொறுத்தவரை அரசபடைகளுக்குச் சமனான மென்ரக, கனரக ஆயதங்களையும் இவர்கள் வைத்திருப்பது இரகசியமல்ல.

மனவலிமைமிக்க விடுதலைப் புலிகள் அவர்கள் தனியரசு நடத்துகின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு மீது அரசு படைநகர்வுகளை மேற்கொள்ளுமானால் இலங்கை வரலாற்றில் இரத்த ஆறு ஓடுகின்ற ஒரு யுத்தமாகவே அது அமையும். மேலும் அரசபடைகள் கிழக்குப் போர்முனையில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை அடைந்த போதிலும் அதற்கெதிராக குறைந்த பட்சம் தென்னிலங்கையில் ஏதாவது பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு அழிவுகளைப் புலிகளால் செய்திருக்க முடியும். அவ்வாறு நிகழமல் போனமைக்குப் பாதுகாப்புப் படைகளின் விளிப்பான செயல்பாடுகள் தான் காரணம் என அவர்கள் தரப்பில் சொல்லப்படுகின்றது. ஆனால் யதார்த்தம் அதுவாக இருக்க முடியாது.

மஹிந்த ராஜபக்‌ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையுடனான இந்திய மற்றும் சர்வதேச உறவுகள் மிகுந்த நம்பிக்கையுடயவையாகும். புலிகளுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையிலேயே அமைந்திருந்தது. அன்று சர்வதேச ரீதியில் பலயீனமான நிலையிலேயே புலிகள் இருந்து வந்தனர் சர்வதேச அளவில் புலிகளின் செயற்பாடுகள் விமர்சனம் செய்யப்பட்டும் கண்டிக்கப்பட்டும் வந்தன.

இன்று ஜே.வி.பி.ஹெல உறுமய ஆகியவற்றின் அழுத்தங்களும் மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள மக்களைத் திருப்திபடுத்தும் செயல்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்டுவரும் படை நகர்வுகளும் ஆட்கடத்தல், கப்பம்பெறல்,ஊடகத்துறையினர் மீதான அடக்குமுறைகள் -கொலைகள் போன்றைவையும் சர்வதேச ரீதியில் அரசு தொடர்பான அதிருப்தியையும், புலிகளுக்கு சாதகமான பின்னணியைத் தோற்றுவித்து வருகின்றது. எனவே தான் அரச படைகள் வலிந்து தாக்குதல்களை மேற்கொள்கின்ற சூழ்நிலைகளிலும் புலிகள் மௌனம்காத்து இக்காலகட்டத்தில் இராஜதந்திர ரீதியிலான போரொன்றில் ஈடுபட்டு அரசபடைகள் போர் முனையில் பெரும் வெற்றிகளை விடவும் பாரியளவிலான இராஜதந்திர முன்னேற்றங்களை அவர்கள் அடைந்து வருகின்றனர். தற்போது தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் மீண்டும் புலிகளுக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதுடன் சோனியாகாந்தி கூட ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக தற்போதைய சூழ்நிலையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலை இந்தியாவில் நிலவுகின்றது.

சமதானத் தரகராக செயல்பட்டு வந்த நோர்வேயை புலிகளின் நண்பனாகப் பிரசுரம் செய்த அரச முக்கியஸ்தர்களும் ஏனையோரும் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகள் இலங்கை அரசு தொடர்பான வெறுப்புணர்வுகளை மேற்கிந்திய நாடுகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. சுவீடன் உத்தியோக பூர்வமாக இலங்கைக்கு உதவி வழங்குவதை நிறுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை நிறுத்திவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜேர்மன், பிரித்தானியா,ஜப்பான், கனடா, தாய்லாந்து போன்ற நாடுகளும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையில்லா நிலைமையை உணர்ந்து செயலாற்றி வருகின்றன.

மேற்குறிப்பிட்ட பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில் அரசுபடைகளுடன் மோதுவதையோ அல்லது தென்பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு அழிவுகளை ஏற்படுத்தும் தனது அணுகுமுறையைத் தவிர்த்து இராஜதந்திர ரீதியிலான போரொன்றை இப்போது அரசாங்கத்திற்கெதிராப் பாரியளவில் மேற்கொண்டுவருகின்றனர்.

தென்னிலங்கை அரசியல் சூழ்நிலைகளும் தற்போது புலிகளுக்குச் சாதகமாக நிலவிவருகின்றது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ரணில் விக்கரமசிஙகவின் அரசுக்கெதிரான நடவடிக்கைகள், மங்கள-ஸ்ரீபதி ஆகியோரின் அரசின் ஊழி தொடர்பான பிரசாரங்கள், ஜே.வி.பி. ஆளும் தரப்பு முறுகல் நிலை, மிக்விமானக் கொள்வனவில் ராஜபக்ஷ குடும்பம் எதிர்நோக்கும் சவால்கள், வரவு செலவுத்திட்டத்தை சரிசெய்வதிலுள்ள நெருக்கடிகள் என்பவற்றிற்கு மத்தியில் புலிகளுக்கெதிரான அரசபடை நகர்வுகள் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாவுக்கு ஆயுதக் கொள்வனவு முயற்சிகள், மேற்குலகின் அரசு தொடர்பான நம்பகத்தன்மையற்ற செற்பாடுகள் போன்றவற்றைப் புலிகள் சாதமாக பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டார்கள்.

கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் - புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாகவும் பின்பு விடுதலை செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்படவில்லை என்றும் ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் கூட சர்வதேச ரீதியிலான இலங்கைக்கெதிரான ஓர் அணுகுமுறையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலத்திரனியல் ஊடகங்களினூடே மேற்கொள்ளப்படும் பிரசாரப் போரை சர்வதேச ரீதியில் புலிகள் மிகவெற்றிகரமாகவே இக்காலப்பகுதியில் முன்னெடுத்து வருகின்றனர். அரச தரப்பு இலத்திரனியல் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்ற ஒழுங்கும் அவற்றின் நம்பகத்தன்மையில்லாத நிலைமைகளும் புலிகளுக்கு மேலும் சாதமாக அமைந்து காணப்படுகின்றன. இந்திய அரசுடன் கூட்டு உடன்பாடொன்றைத் தாம் எட்டி இருப்பதாகச் சொல்லிய அதே ஊடகங்கள் எமது அச்செய்தி தவறான ஒரு தகவலாகும் இதற்காக நாம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மன்னிப்புக் கோருகின்றோம் என கூட்டுத் தொடர்பாக செய்தி வழங்கிய அதே ஊடகங்கள் தனது நிலைப்பாட்டை மாற்றி சில மணித்தியாலங்களுக்குள் அறிக்கை வெளியிட்டு மன்னிப்புக் கோருவது ஒரு அரசுக்கு கௌரவமான இலத்திரனியல் அணுகு முறையாக இருக்கமாட்டாது. இவ்வாறான செய்திகள் மூலம் தமது இமேஜ் கெடுவதை இந்நாட்டு அரசாங்கங்கள் எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை.

இராஜதந்திர ரீதியில் நடைபெறுகின்ற போரில் சாதமான முன்னேற்றங்களையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொண்டு சர்வதேச சமூகத்தின் அனுதாபங்களைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட பின்னரே புலிகள்- அரசு படைகளுக்கெதிரான தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்.

ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகியவற்றின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் புலிகள் மீது அனுதாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகுக்கும். இவர்களின் உணர்வுகளுக்கேற்ப அரசு மௌனம் காத்து நிற்பதும் அரசுதான் இவர்களை மறைமுகம ாகத் தூண்டி காய்களை நகர்த்தி வருகின்றது என்பதனை சர்வதேச சமூகம் சந்தேகம் கொள்ளும் நிலைமைகளும்,இனப்பிரச்சினை தொடர்பாக அமைச்சு திஸ்ஸவித்தாரண தலையைில் அமைக்கப்பட்ட சர்வ கட்சிகளின் செயல்பாடுகளும் தீர்மானங்களும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் பேரின நடவடிக்கைகள் என தற்போது உணரப்பட்டுள்ளதையும் அரசு புரிந்து கொண்டு இனப்பிரச்சினை தொடர்பான ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே இப்போரில் அரசு உண்மையான வெற்றியை அடைய முடியும்.

அரசு கைப்பற்றிய பிரதேசங்களில் தமிழ் - முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது பேரின வாத குடியேற்றங்களை நிறுவுவதிலும் அங்கு தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் சூட்டோடு சூடாக புத்தர் சிலைகளை எழுப்புவதும் எவ்வாறு நம்பகத்தன்மையை உருவாக்கப் போகின்றது. போர்க்களத்தில் நிற்கின்ற புலிகள் எப்படிப்போனாலும் அரசு தரப்பிலுள்ள உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா முஸ்லிம் பிரதேசங்களில் நிலவும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அணிதிரள வேண்டும் என கோஷம் எழுப்பிவருவது சர்வதேச சமூகத்திற்கு எதைத் சொல்கின்றது என்பது அவர்களுக்கு விளங்கி இருக்கும்.

சமாதானம் தொடர்பான சிறுபான்மையினர் திருப்தி கொள்ளக்கூடிய தீர்வொன்றை யதார்த்தமாக முன்வைத்து அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்பே சர்வதேச சமூகத்தின் முன் அரசு நியாயங்களைப் பேசமுடியும்.

Please Click here to login / register to post your comments.