பாரம்பரிய நிலங்களை காப்பாற்றுவதைவிட தமிழ் முஸ்லிம் தலைமைகளுக்கு முக்கியமான பணி எதுவும் இல்லை

ஆக்கம்: வ.திருநாவுக்கரசு
கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான நில அபகரிப்பு செயற்பாடுகள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. டி.எஸ். சேனநாயக்காவினால் கல்லோயா (பட்டிப்பளை)யில் ஆரம்பிக்கப்பட்டு மாறி மாறி பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களாலும் தொடர்கதையாகவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தி சிங்கள மற்றும் முஸ்லிம் சனத்தொகையை ஒன்று சேர்த்து தமிழர் கிழக்கில் சிறுபான்மையினர் எனும் சித்திரத்தினையே சிங்கள பேரினவாதிகள் வரைந்து காட்டுவதுண்டு. அத்தகைய சக்திகள் தமிழ், முஸ்லிம் நிலங்களை அபகரிப்பதற்குத் தலைப்பட்டதை முறியடிக்குமுகமாக தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஐக்கியப்பட்டு, திடசங்கற்பம்பூண்டு செயற்பட்டது அரிது எனலாம்.

சம்பந்தன் நிகழ்த்திய நினைவுப் பேருரை

மறைந்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 7 ஆவது வருட நினைவுப் பேருரையை சென்ற 16 ஆம் திகதி நிகழ்த்தியபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் , தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணையத்தவறினால் கிழக்கை இழக்க நேரிடும் என்ற அபாய அறிவிப்பினை விடுத்துள்ளார். இந்த பாரதூரமான அபாயமானது ஏற்கனவே தெரியாததொன்றல்ல. இதே கருத்தினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தபால் தொலைத்தொடர்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில மாதங்களுக்கு முன் `சன்டே லீடர்' வார இதழுக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடி ஒன்றினைந்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனவும் ஹக்கீம் தெரிவித்தார். மேலும் சென்ற மே மாதம் சாய்ந்தமருதுவில் வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் உப உணவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமாகிய எம்.ரி.ஹசன் அலி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரதி அமைச்சராகிய பைசல் காசிம் இருவரும் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மயமாக்கல் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் காணிகள் பேரினவாதிகளினால் அபகரிக்கப்படுவதால் அதற்கெதிராகப் போராடத் தயாராயிருத்தல் வேண்டுமென அறைகூவல் விடுத்தனர்.

மயோன் முஸ்தபாவின் குமுறல்

அடுத்து உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அண்மையில் மருதமுனையில் ஆற்றிய உரையொன்றில் அம்பாறை மாவட்டத்தில் 70% பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு 30% நிலமும் 30% சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு 70% நிலமும் காணப்படுவதாகவும் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் இடம்பெற்று வருவதால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு முன்வரவேண்டுமென கோரியுள்ளார். நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுவதால் கிழக்கு மாகாணத்தின் நிலைமை மோசமடைந்து செல்லும் நிலையில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட்டு கபளீகரம் செய்யப்பட்டு வருவதாகவும் மயோன் முஸ்தபா கவலை தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறெல்லாம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியது முதற்தடவையல்ல.

வடக்கு, கிழக்கு நிலைமை தொடர்பாக 5-9-2007 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கவனஈர்ப்பு விவாதத்தின்போதும் அதேபோல் 16-09-2007 ஆம் திகதி நிகழ்த்திய மர்ஹும் அஷ்ரப் நினைவுப் பேருரையிலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கிழக்கு நிலைமைகளை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தியம்பியுள்ளார். நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கு இரா.சம்பந்தன் அழைக்கப்பட்டது பெரிதும் வரவேற்கப்படவேண்டியதாகும். மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் முன்பு கூறிவைத்தவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமையோடு உடனடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்து, கனகாத்திரமானதொரு திட்டத்தை தீட்டிச் செயற்படத் தலைப்படவேண்டும். தமிழ், முஸ்லிம் தலைமைகளுக்கு இதைவிட பாரதூரமானதும் இதைவிட அவசியமும் அவசரமானதுமான பணி வேறு ஒன்றுமேயில்லை. காலங்காலமாக கதைத்து கதைத்துக் கவலைப்பட்டுவந்தது போதும்.

இன்று அரசாங்கத்தில் 17 முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களின் ஆதரவு அரசாங்கத்தின் இருப்புக்கு இன்றியமையாததாகும். அதேநேரத்தில் இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் நிலங்கள்தான் பறிக்கப்படுகின்றன. இதனை எவ்வாறு யாரும் ஏற்றுக் கொள்ள முடியும்? சிங்கள முதலாளித்துவ தலைவர் யாவரும் விதிவிலக்கின்றி பேரினவாதத்தின் பிடியில் உள்ளவர்கள். தமது சுயநலத்துக்காக பதவிகளை வழங்குவார்கள்,பரிந்து பேசுவார்கள். பின்பு ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற கதையாகிவிடும். முஸ்லிம் மக்களின் நலன்கள் பெரிதா? அவர்களின் பாரம்பரிய நிலபுலங்கள் பெரிதா? அல்லது பட்டம், பதவிகள் பெரிதா? என்பதே அவர்கள் முன்னால் உள்ள கேள்விகளாகும். 1950 கள் முதல் எத்தனை அரசாங்கங்களில் எத்தனை,எத்தனை தமிழ், முஸ்லிம் பெருந்தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை யாரும் அறிவர். அதன் ஒட்டுமொத்தமான பலாபலன்கள் எவ்வளவு, ஏமாற்றங்கள் எவ்வளவு என்பதும் வரலாறு.

இன்றைய தமிழ்,முஸ்லிம் தலைமைகளின் கடப்பாடு தொடர்பாக நான் முன்னர் எழுதிய சில கட்டுரைகளில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் கைகோர்த்து ஒரே குரலில் பேசினால் மாத்திரமே பேரினவாதிகளின் கண்கள் திறக்கும். மற்றும் தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடுவதே அவசரத் தேவை என்றெல்லாம் எடுத்துக் கூறியிருந்தேன். இன்னும் சொன்னால், எனவே திருகோணமலை (அம்பாறையும்கூட) சிங்கள மயமாக்கப்படுகிறது என காலங்காலமாக வெறுமனே தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதை விடுத்து தமிழ், முஸ்லிம் தலைமைகள் உடனடியாக மக்களை அணிதிரட்டி போராட்டத்தில் குதிப்பது தட்டிக்கழிக்கக்கூடியதல்ல. `செய் அல்லது செத்து மடி' எனும் நிலை நிச்சயமாக வந்து விட்டது என எடுத்துக் கூறியிருந்தேன்.

`கிழக்கு உதயம்' - சூழ்ச்சிநிறைந்தது

`கிழக்கு உதயம்' என்பது மிக சூழ்ச்சிகரமான திட்டம் என்பதை மறந்துவிடமுடியாது. அது பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரல். திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையில் தனியானதொரு சிங்கள மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறியதை அமைச்சர் கருஜயசூரிய அடங்கலாக அரச தரப்பினர் மறுதலித்துள்ளதானது ஒரு ஏமாற்றுவித்தையல்ல என்றெண்ண முடியாது. அது ஒரு வகையான யுகதி எனலாம். முன்பு `மிஸ்டர் கிளீன்' (ட்ணூ ஞிடூஞுச்ண) எனக் கருதப்பட்டவராகிய கரு ஜயசூரிய அடைந்துள்ள மாற்றங்களை இன்று யாரும் அறிவர்.

இன்னொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுதலித்ததோடு மக்காவும் தஃபாவும் பௌத்தர்களுக்கே சொந்தம் என ஜாதிக ஹெலஉறுமய (ஜே.எச்.யூ) பிரமுகரும் சூழல் சுற்றாடல் துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியதாக செய்திகள் கூறுகின்றன. இதுவும் ஜே.எச்.யூ.வின் அசிங்கமான குணாம்சங்களின் ஒரு வெளிப்பாடே ஒழிய வேறொன்றல்ல. இவர்கள் `மகாவம்சம்' ஈர்ந்த மைந்தர்கள் `மகாவம்சம்' கடுமையான மதக்கலப்பில் ஊறிக்கிடக்கிறது. அதில் அதிசயங்களும் கட்டுக்கதைகளும் பொதிந்துள்ளன இவ்வாறு வேறுயாருமல்ல பிரபல சிங்கள வரலாற்றாசிரியர் பேராசிரியர் கே.எம்.டி.சில்வா குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, சம்பிக்க ரணவக்க முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுத்துள்ளதையிட்டு கிஞ்சித்தும் பொருட்படுத்த வேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் 9 ஆசனங்களை மட்டும் தம்மகத்தே வைத்துக் கொண்டுள்ளபோதும் அதன் பெரும்பான்மை தமிழிக்கே பேசுகிறது. இத்தகைய கண்மூடித்தனமான ஆரோக்கியமற்ற போக்குகள் காரணமாகவே நாடு இன்றைய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.

இராணுவரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிக்காமல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியாது என்று கூறுகிறார் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ. அரசியல் தீர்வுதான் பயங்கரவாத்திற்கு பரிகாரமாக அமையும். ஆனால், அரசாங்கத்திடம் அரசியல் தீர்வு கிடையாது. எனவே, நாடு எக்கேடு கெட்டாலும் யுத்தம் நடத்தியாக வேண்டும். அதன் போர்வையில் கிழக்கை சிங்கள மயமாக்கிவிடலாம் என்பதுதான் அரசாங்கத்தின் எண்ணம்போல் தெரிகிறது.

தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை வழங்குவதுதான் பிரச்சினைக்குத் தீர்வாகுமேயொழிய தொடர்ந்து யுத்தம் செய்வது பயனற்றது என முன்னாள் விமானப்படைத் தளபதிகள், இராணுவ தளபதிகள் இடித்துரைத்துள்ளனர் என்பது முன்பு சுட்டிக் காட்டப்பட்டது. எனவே, மேலும் நாட்டைச் சிதைக்கும் பாதையில் பயணிப்பதிலும், மேலும் இரத்த ஆறுகள் ஓடுவதை அனுமதிப்பதிலும் கவனம் செலுத்துவதை விடுத்து அரசியல் தீர்வை விரைந்து காண்பதற்கு உறுதியாகவும் இதய சுத்தியாகவும் உழைப்பதே அரசாங்கத்தின் கடப்பாடாகும். நாட்டின் அபிவிருத்தியில் அனைவரையும் பங்குதாரர்களாக்குவதே அரசாங்கத்தின் பிரயத்தனமாயிருக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டைப் பிரித்துவிடும் என எண்ணினால் அது மடைமை. ஏற்கனவே பிளவுபடுத்தப்பட்டுள்ள நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கே சமஷ்டி முறைமை இன்று அவசியமாகிறது.

Please Click here to login / register to post your comments.