தமிழர் தலைவிதியை நிர்ணயிக்கும் சர்வதேச அணுகுமுறை

ஆக்கம்: டாக்டர் சி. ஜமுனா நந்தா
ஈழத்தமிழர் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், இட வன்பறிப்புகள் என்பவற்றிற்கு இலங்கை அரசு சமாதானத்திற்கான யுத்தம், மனிதநேய மீட்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என உலகையும் தன்னையும் திருப்திப்படுத்துகின்றது. ஆனால், தமிழினம் இலங்கையில் அழிந்து கொண்டேயுள்ளது.

இலங்கை சிறுபான்மையினத்தினை அடக்கும் இராணுவ நாடாக மாறிவிட்டது. தமிழ்ச் சனத்தொகையின் 10% கொண்ட சிங்கள இராணுவக் கட்டமைப்பு தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது. அதாவது, 10 தமிழனுக்கு எதிராக ஒரு சிங்கள இராணுவம் இலங்கை அரசால் துப்பாக்கி கொடுக்கப்பட்டு கடமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இனரீதியான இராணுவ அமைப்பே இன்று இலங்கையின் பிரதான தொழில்வாய்ப்பாக சிங்களவர்களுக்கு உள்ளது. இலங்கை அரச இயந்திரம் முற்றுமுழுதாக சிங்களவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இயக்கப்படுகின்றது. சட்ட நிர்வாகமும் சிங்களப் பெரும்பான்மையினால் உருவாக்கப்பட்டதே. இவற்றில் தமிழருக்கு சனநாயக ரீதியிலான எந்தச் சலுகைகளும் இல்லை. இதனாலேயே தமிழர்கள் சமஷ்டி ஆட்சியினை வலியுறுத்தினர். ஆனால், அது முயற்கொம்பாகவே உள்ளது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் 1977 இல் உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை உடைய இலங்கை தற்போது 2007 இல் உடைந்த பொருளாதாரக் கொள்கை உடைய நாடாக (Broken economy) மாறிவிட்டது. இதற்கு சர்வதேசம் வழங்கிய நிதி உதவிகளே காரணம்.

இன்று உலகின் எதிர் முனைகளாக இணைத்தலைமை நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் கூட்டும், ரஷ்சியா, சீனா கூட்டும் விளங்குகின்றன. சீனா, ரஷ்யா தமது சோஷலிசம், கம்யூனிசம் என்பவற்றிற்கு அப்பால் பொருளாதாரத்தை நிலைக்கச்செய்ய உலகில் பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சீனா நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் கைத்தொழில் பொருட்களை சந்தைப்படுத்தல் தேவைகளுக்கு அப்பால் உற்பத்தி செய்து வருகின்றது. இதனால், அவற்றை அன்பளிப்பாகவும் கடனாகவும் இலங்கைக்கு கொடுத்து வருகின்றது. அண்மையில் இலங்கைக்கு வழங்கப்பட புகையிரதப் பெட்டிகள் இலங்கை கடந்த 15 வருடங்களாக உற்பத்தி செய்த புகையிரதப் பெட்டிகளை விட பெறுமதி அதிகம். இதனால், இலங்கை அரசுக்கு தனது நாட்டில் உற்பத்தி அல்லது அபிவிருத்தியினை மேற்கொள்ளாது ஒரு கணத்திலேயே பல மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களை சந்தையில் இடவசதி உள்ளது. அதேபோல் பேரூந்துகளும் பல ஒரு கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், சீன அரசின் கீழ் உள்ள சர்வதேச வங்கியிடம் இருந்த பல பில்லியன் ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுத தளபாடங்களும் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் பௌத்த நல்லுறவும் உள்ளது. இவை தமிழர் நலனுக்கு பாதகமானவையே. இலங்கை, சீன உறவு இலங்கை, இந்திய உறவிற்கு சமமானதே. ஆனால், பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் சீனா இலங்கைக்கு அதிக உதவிகளைச் செய்கின்றது.

அதேவேளை, இலங்கைப் பிரச்சினையில் இணைத்தலைமைகள் எனும் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் எனும் நேச அணிகள் ரஷ்யா, சீனா அணியின் வியூகத்தினை உலகில் உடைப்பதில் கங்கணம்கட்டி நிற்கின்றன. அவை இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியுடனும் இந்திய அரசின் உதவியுடனும் ரஷ்யா, சீனா வியூகத்தினை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உடைப்பதில் ஈடுபட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே போர்நிறுத்த ஒப்பந்தமும் அதன் பின்பான பேச்சுகளும் இடம்பெற்றன. இந்நாடுகளும் தமது தொழில்நுட்ப விருத்தியின் அபரிமித உற்பத்தியினை அன்பளிப்பாகவும் கடனாகவும் இலங்கைக்கு வழங்கி வருகின்றன. கோதுமை மா, அரிசி என்பன கப்பல்களில் இறக்கப்படுகின்றன. இதனால், உள்ளூர் உற்பத்திக்கான சந்தைப்பெறுமதி குறைவடைந்தன. இலங்கைக்கு ரஷ்யா, சீனா வியூகம் தீவிரமாகப் புகுந்தமையால் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு முறிவடைந்துள்ளது. சிங்களவருக்கு ஊதியம் தரும் தொழிலாக படைத்துறையே உள்ளது. இதுவே, கீழ்மட்டச் சிங்களவருக்கு வருமானத்தை தரும் தொழிலாக உள்ளது. மேலும் மேல் மட்டச் சிங்களவரது ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதாரம் தரும் தொழிலாகவும் உள்ளது.

எனவே, நாட்டின் உடைந்த பொருளாதாரம் யுத்தத்தை நோக்கியதாகவே உள்ளது. இதற்கு காரணம் இலங்கைக்கு போட்டி போட்டுக்கொண்டு சமாந்தரமாக நிதி அளிக்கும் உலகின் வல்லரசுகளின் சேர்க்கைகளின் போட்டியே காரணமாகும். இவ்வுதவி நிர்வாணத்திற்கு அலங்காரம் செய்வதைப் போன்றது. அந்நாடுகள் தங்களின் நிகழ்ச்சி நிரலை இலங்கை அரசின் ஊடாகச் செயற்படுத்துகின்றன. இலங்கை அரசும் இதனைச் சாதகமாக பயன்படுத்தி தமிழின அழிப்பினை மேற்கொள்கின்றது. இதற்கு அண்மைய உதாரணமாக 13.09.2007 காலை 8.30 மணியளவில் இலங்கை மக்களுக்கு கடல்கோள் எச்சரிக்கையை விட்டவாறு முல்லைத்தீவில் கிபீர் குண்டுகளால் தமிழரை அழிக்க முற்பட்டமையைக் கூறலாம். அவர்களிடம் மனிதநேயம் இருக்கின்றதா என்பதை இது போன்ற சம்பவங்கள் வெளியுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், மனிதப்படுகொலைகள், திட்டமிட்ட பட்டினி, இடவன் பறிப்பு என்பவற்றிற்கு உலக நாடுகளிடம் இருந்தோ ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தோ காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதற்கு உலக வல்லரசுகளில் புதிய அணிகளின் சமாந்தரப் போட்டியே காரணம். அன்றேல், இலங்கை அரசைக் கண்டித்து இருக்கலாம். இராணுவ உதவிகளாக, ஆலோசனை, ஆயுத விநியோகம், தொழில்நுட்ப உதவி என்பவற்றை இந்தியா உட்பட நிறுத்தி இருக்கலாம்.

ஒரு நாட்டின் சுய அபிவிருத்தியை பாதித்து அந்நாட்டின் எந்தக் கட்சியினரையும் பணத்தினால் வாங்கக்கூடிய பொருளாதார உதவிகளை நிறுத்தி இருக்கலாம். இந்தப் பணத்திற்காகவே முஸ்லிம் கட்சிகளும், மலையகக் கட்சிகளும், எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் தாவும் மனிதர்கள் உருவாகி உள்ளனர். இதனால், சனநாயகம் பெரும்பான்மை இனத்தினரிடையே இன்றி அராஜகம் தலைதூக்கி உள்ளது. நாட்டின் அபிவிருத்தி என்பது வெற்றிடத்தில் கட்டப்பட்ட மாளிகைபோல் உள்ளது.

அடுத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளே இராஜதந்திரிகளாக உள்ளனர். பலர் வெளிநாட்டுத் தூதுவர்களாக உள்ளனர். இவர்களுடன் சர்வதேசம் இராஜதந்திரத் தொடர்புகளை எவ்வாறு வைத்திருக்க முடியும் என தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

மனித உரிமை மீறல்களை கண்டிக்காமை, தண்டிக்காமை, அத்தகையவர்களுடன் இராஜதந்திரத் தொடர்புகளை வைத்திருத்தல் அவர்கள் மேன்மேலும் அத்தகைய செயல்களைச் செய்ய ஊக்குவிக்கின்றது. உலகின் எதிர்முனைகளான வல்லரசு அணிகள் இலங்கை மீதான சமாந்தர அணுகுமுறை இலங்கைத் தமிழர்களுக்கு அந்தமில்லா அல்லலைத் தருகின்றது. இதனை இலங்கை அரசு மனிதநேய மீட்பு, மீள்குடியேற்றம், மீளக்கட்டுமானம் என பெயர்களில் தமிழின அழிப்பில் சிங்களக்குடியேற்ற வாதத்திற்கு தூபமிடுகின்றது. இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலங்களில் நன்கு திட்டமிட்டு நடைபெறுகிறது. "அகதி வாழ்வும் அடையாள அட்டையும்" என்பது தமிழரின் நிரந்தர முத்திரையாகிவிட்டது.

ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை தமிழகத் தமிழர்கள் அறிதல் அவசியம். இந்திய ஊடகங்களும் மத்திய மாநில அரசுகள், ஈழத்தமிழருக்கு விரோதமான நிலையையே கடைப்பிடிக்கின்றன.

தமிழரின் நிலத்தை வன்பறிப்புச் செய்த சிங்களத்திடம் அணுமின் நிலையம் அமைக்க இந்தியாவும் அதில் தார் ஊற்றி வீதியமைக்க ஜப்பானும் பொருளாதார உதவிகளை சீனாவும் செய்ய ஈழத்தமிழ்த் தாய் ஒரு தாசி அல்ல என்பதை காலம் தான் அவர்களுக்கு உணர்த்தும்.

தமிழக அரசுத் தலைவர்கள் தமிழையே தமது கலாசாரத்தில் கொல்கின்றனர். ஈழத்தமிழருக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ள, சன் தொலைக்காட்சியில் "குப்பி" திரைப்படத்தை காட்டி தமிழ் மக்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எழும் உணர்வை தமிழகம் மழுங்கடித்து பின் பயணம் மேற்கொண்டவர்களையும் கைது செய்த தமிழகம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பானின் சீனா, ரஷ்யா அச்சிற்கு எதிரான நிகழ்ச்சி நிரலில் இலங்கைக்கு உதவும் திட்டங்களை இந்தியாவும் செய்கின்றது. ராடர் உதவி, ஆயுத உதவி, போர்க்கப்பல் உதவி எனப் பட்டியல் இடலாம். பிரதேச ஒருமைப்பாடு என்று கூறிக்கொண்டு ஒரு பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழும் மக்களை அகதிகளாக துணைபோகலாமா? என ஈழத்தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர்.

புரட்டாதி 21 ஆம் நாள் உலக சமாதான நாள். அன்று ஈழத்தமிழர் சார்பில் உலகிற்கும் இந்தியாவிற்கும், விடுக்கும் வேண்டுகோள் யாதெனில், தமிழருக்கு நிம்மதியை அளிப்பதற்கு இதுவரை காலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக பாரபட்சமற்ற நீதி விசாரணையினை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும். இதனாலேயே, இனிமேலும் தமிழர் அழிவதைத் தடுக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையில் இது குறித்துத் தீர்மானம் எடுப்பதை உலகில் இன்று எதிர்முனையில் உள்ள வல்லரசுகளும் இந்தியாவும் எதிர்க்கும். இதனை மாற்றுவதிலேயே இலங்கைத் தமிழரின் சமாதானம் தங்கியுள்ளது.தங்கியுள்ளது.

Please Click here to login / register to post your comments.