கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது எப்படி?

ஆக்கம்: விதுரன்
தெற்கே காலிதுறைமுகத்துக்கு அப்பால் தெய்வேந்திரமுனை கடற் பரப்பில் விடுதலைப் புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்கள் கடந்த திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் தகர்த்தழிக்கப்பட்டதாகவும் கடற்படையினரின் வரலாற்றில் இது மிகப்பெரும் வெற்றியெனவும் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன் அடுத்து வரும் போர்களில் தோல்வியைத் தழுவப் போகிறார்களென்றெல்லாம் அரசும் படைத் தரப்பும் கூறி வருகின்றன.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அவற்றை இலங்கைக்குள் கொண்டு வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. 1990 களுக்குப் பின்னர் இன்று வரை புலிகளின் எத்தனையோ ஆயுதக் கப்பல்கள் இலங்கைக்குள் வந்துள்ளன. இவற்றில் சில தாக்குதல்களுக்கும் இலக்காகியுள்ளன. எனினும் அவர்களுக்கான ஆயுதங்களின் வருகையை இலங்கை அரசாலோ அல்லது படையினராலோ இன்று வரை தடுத்து விட முடியவில்லை.

முப்படைகளுக்கும் அரசு பலநூறு கோடி ரூபா செலவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது. விரைவில் 500 கோடி ரூபாவுக்கு முப்படையினருக்கும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. விமானப் படைக்கு மட்டும் 300 கோடி ரூபா செலவில் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

விமானப்படைக்கான `மிக்' விமானக் கொள்வனவில் பல கோடி ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக பத்திரிகைகளும் எதிர்கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன. காலாகாலமாக இந்தப் போரை வைத்து பிழைப்பை நடத்தியவர்கள் எத்தனையோ பேர்.

ஆரம்பம் முதல் இன்றுவரை இலங்கையில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பலநூறு கோடி ரூபாக்களைத் தாண்டிவிட்டன. அந்த ஊழல் மோசடிகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

தற்போதைய ஆட்சியிலும் இந்த ஊழல் மோசடி கோடிக் கணக்கில் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. `மிக்' போர் விமானக் கொள்வனவில், ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ பெருமளவு ஊழலை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. பத்திரிகைகள் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளன.

இது தொடர்பான ஊழல்களை உலகுக்கு படம்பிடித்துக் காட்டி உண்மையை வெளியுலகுக்கு தெரிய வைத்த ஊடகவியலாளர்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அரசு மறுத்து வருகிறது. பாராளுமன்றிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

ஆயுதக் கொள்வனவில் ஊழல்கள் குறித்த செய்திகள் வரும் போதெல்லாம் அதற்கு மாற்றாகவும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதத்திலும் புதிய புதிய செய்திகள் வெளியாகும். வடக்கு - கிழக்கில் பாரிய படை நடவடிக்கையும் இடம்பெற்று புலிகளின் இழப்புகள் குறித்து நம்ப முடியாதளவுக்கு புள்ளி விபரங்கள் வெளியிடப்படும்.

தற்போது `மிக்' விமானக் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்ற பல கோடி ரூபா ஊழல்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கையில், ஒரே நேரத்தில் புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான பரபரப்பான செய்திகள் வெளியாகின.

தெற்கில் தெய்வேந்திரமுனைக்கு அப்பால் 1200 கிலோ மீற்றர் தூரத்தில் கடந்த திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்கள் 24 மணி நேர இடைவெளியில் கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கப்பல் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவிலும் அடுத்த கப்பல் அதேதினம் மாலை 5.30 மணியளவிலும் மூன்றாவது கப்பல் மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவிலும் கடற்படையினரின் கரையோர ரோந்துக் கப்பல்களால் தாக்கி அழிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் திருகோணமலை கடற்படைத் தளங்களிலிருந்து சென்ற சயுர, சமுத்திரா, சுரநிமல, நந்தமித்ரா, சக்தி மற்றும் ஜெயசாகர ரோந்துக் கலங்களே புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்களையும் வெற்றிகரமாகத் தகர்த்தழித்ததாக கடற்படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இதுவரை காலமும் எங்கிருந்து, எப்படி ஆயுதக் கப்பல்களை இலங்கைக்குள் கொண்டு வந்து ஆயுதங்களைத் தரையிறக்கினார் களென்பதை நன்கு கூர்ந்து கவனித்து அதற்கமைய திட்டங்களை தயாரித்தே புலிகளின் இந்த மூன்று ஆயுதக் கப்பல்களும் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர்.

கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் கிழக்கே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் வருவது நின்றுவிட்டதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும், கிழக்கில் விடுதலைப் புலிகள் மிகவும் பலம் பொருந்திய நிலையில் இருந்த போதுகூட அவர்களது ஆயுதக் கப்பல்கள் கிழக்கே வந்தது கிடையாது.

பல்வேறு காரணங்கள் மற்றும் தரையிறக்கப்படும் ஆயுதங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதில் பல்வேறு சிக்கல்களுமிருந்ததால் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பொதுவாக கிழக்கே வந்தது கிடையாது.

வடக்கில் பெரும்பாலான கடல்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால், புலிகள் கிழக்கில் வலுவாக இருந்த காலத்திலும் பெரும்பாலான கரையோரப் பகுதி படையினர் வசமேயிருந்தது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகள் முற்று முழுதாக படையினர் வசமிருந்தது.

திருகோணமலையில் சம்பூர் முதல் மட்டக்களப்பில் வாகரை வரையான கடற்கரைப் பகுதியே புலிகள் வசமிருந்தது. அதேநேரம் கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகம் திருகோணமலையிலிருந்ததால் இந்தப் பகுதியில் ஆயுதக் கப்பல்களை கொண்டு வந்து ஆயுதங்களை தரையிறக்குவதென்பதும், பின்னர் அவற்றை வன்னிக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள் இருந்ததாலும் புலிகளது ஆயுதக் கப்பல்கள் கிழக்கே வருவதில்லை.

ஆரம்ப காலத்தில் ஆயுதக் கப்பல்களை முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் கொண்டு வந்து நிறுத்திவைத்து இரவோடிரவாக புலிகள் ஆயுதங்களை தரையிறக்குவர். இதனைத் தெரிந்து கொண்ட கடற்படையினர் தங்கள் ரோந்து நடவடிக்கைகளை இப்பகுதிகளில் தீவிரப்படுத்தியதையடுத்து புலிகளின் ஆயுதக் கப்பல்கள் முல்லைத்தீவு கடற்பரப்புக்கு வருவதைத் தவிர்த்து அதற்கப்பால் சர்வதேச கடற்பரப்பை அண்டி நங்கூரமிட, புலிகள் ரோலர்கள் மற்றும் சிறிய படகுகளில் சென்று ஆயுதங்களை அவற்றினுள் இறக்கி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின் கடற்படையினரின் ரோந்துப் படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன், புலிகளது ஆயுதக் கப்பல்களின் வருகை குறித்து இந்தியாவும் , தகவல்களை வழங்கி இலங்கைக்கு உதவத் தொடங்கியது. தென்கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகளை அதிகரித்து அவற்றிடமிருந்தும் புலிகளது ஆயுதக் கப்பல்கள் தொடர்பான இரகசியங்களைப் பெற்று அதற்கேற்ப செயற்படத் தொடங்கியது.

கடந்த வாரம் தாக்கி அழிக்கப்பட்டதாகக் கடற்படையினர் கூறும் மூன்று ஆயுதக் கப்பல்களும் எங்கிருந்து புறப்பட்டு வந்தன என்பது இலங்கை கடற்படையினருக்கு தெரியவில்லை. புலிகளது முந்தைய ஆயுதக் கப்பல்களது வருகை மற்றும் அந்தக் கப்பல்கள் திரும்பிச் சென்ற பாதைகள் மற்றும் இடங்களை மிகத் தீவிரமாக அவதானித்தும் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுமே இந்த ஆயுதக் கப்பல்களின் வருகையைக் கண்டுபிடித்ததாக கடற் படையினர் கூறுகின்றனர்.

தங்களது ஆயுதக் கப்பல்களின் நடமாட்டங்கள் பற்றி எவருமே அறிந்துவிடக்கூடாதென்பதற்காக புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எந்தவொரு துறைமுகத்திற்கும் சென்று ஆயுதங்களை ஏற்றுவதுமில்லை, அதேபோல் ஆயுதங்களை கொண்டு வந்து எந்தத் துறைமுகத்திலும் இறக்குவதுமில்லை என்பது அண்மைக் காலங்களில் அவர்களது ஆயுதக் கப்பல்களது நடமாட்டங்களிலிருந்து உணரக் கூடியதாயிருந்ததாக புலனாய்வுப் பிரிவுகள் கூறுகின்றன.

குறிப்பிட்டதொரு கடற்பரப்பில் இந்தக் கப்பல் போய் வந்து கொண்டேயிருக்கும். திடீரென ஏதாவதொரு கடற்பரப்பில் நங்கூரமிட, அங்கு ரோலர்கள் மற்றும் படகுகளில் எடுத்து வரப்படும் ஆயுதங்கள் புலிகளின் கப்பல்களுக்குள் நிரப்பப்படும்.

இது போன்றே எரிபொருளை நிரப்பவும் இந்தக் கப்பல்கள் எந்தத் துறைமுகத்திற்கும் செல்வதில்லை. எரிபொருளும் படகுகள் மற்றும் ரோலர்களில் எடுத்து வரப்பட்டு ஆயுதக் கப்பலுக்கு நிரப்பப்படும்.

இலங்கை கடற்படையினரின் கூற்றுப்படி, ஏற்கனவே ஆயதங்களை ஏதாவதொரு வசதியான கடற்பரப்பில் வைத்து படகுகள் மற்றும் ரோலர்களில் இறக்கி அவை போய்ச் சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பி விட்டு மீண்டும் நடுக்கடலில் வைத்து ஆயுதங்களை நிரப்பிக் கொண்டு இந்தக் கப்பல்கள் ஆயுதங்களை வசதியாகத் தரையிறக்குவதற்காக நீண்ட நாட்களாகத் தருணம் பார்த்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சாதாரணமாக ஒரு கப்பலில் கொண்டு வரும் ஆயுதங்களையே தரையிறக்குவதில் பலத்த சிரமங்களிருக்கையில், மிகவும் ஆபத்தான நிலையில் மூன்று கப்பல்களில் ஒரே நேரத்தில் கனரக ஆயுதங்களை கொண்டு வந்து தரையிறக்குவது சாத்தியமற்றதொன்று. இதனால், புலிகள் ஒரே நேரத்தில் மூன்று ஆயுதக் கப்பல்களையும் கொண்டு வந்தார்களா என்பது மிகப்பெரும் கேள்வியாகும்.

தெய்வேந்திரமுனைக் கடற்பரப்புக்கு அப்பால் வைத்து அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மூன்று ஆயுதக் கப்பல்களும் முதலில் அரேபியக் கடலில் தரித்து நின்றதாகவும் பின்னர் இவை இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் இலங்கையின் கடற்பரப்பல்ல. அதற்கப்பால் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கும் வெளியே சர்வதேச கடல் எல்லையில் கப்பல்கள் நின்றபோதே கண்டுபிடிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடற்படையினர் கூறுவது போல் இந்தக் கப்பல்கள் ஆயுதங்களைத் தரையிறக்குவதற்குத் தயாராகியிருந்தனவா அல்லது ஆயுதங்களைத் தரையிறக்கிவிட்டு சென்று கொண்டிருந்தனவா என்பதை சுயாதீன தகவல்கள் உறுதிப்படுத்தவில்லை.

கடற்படையினர் தாக்கியபோது இந்தக் கப்பல்களினுள் பல தடவைகள் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் அவை ஆயுதங்களுடன் வந்திருப்பதாகவே கடற்படையினர் கூறுகின்றனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலேயே ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இலங்கைக்குள் கொண்டு வருவதாக கடற்படையினர் கூறுகின்றனர். அப்படியாயின் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அங்கிருந்து முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லைக்கு இலகுவாக வந்துவிடலாம். அதைவிடுத்து ஏன் இந்தக் கப்பல்கள் முல்லைத்தீவிலிருந்து மிக நீண்ட தூரத்தில் தென்பகுதியின் தெய்வேந்திர முனைக்குச் செல்ல வேண்டுமென்ற கேள்வியெழுகிறது.

மேலும், இந்தக் கப்பலில் என்னென்ன ஆயுதங்கள் எடுத்துவரப்பட்டன என்றும் கடற்படையினர் துல்லியமாகக் கூறுகின்றனர். இந்த ஆயுதக் கப்பல்கள் நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்து விட்டே கடந்த வாரம் இங்கு வந்ததாகக் கூறும் கடற்படையினருக்கு கப்பல் அழிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்த ஆயுதங்கள் இவைதானென எப்படிக்கூற முடிந்தது.

மூன்று இலகு ரக விமானங்கள், புலிகளின் தலைவருக்கு குண்டு துளைக்காத காரெல்லாம் எடுத்துவரப்பட்டதாகக் கூறுவது மிகவும் ஆச்சரியமானது. அத்துடன் ஒவ்வொரு முறையும் புலிகளின் கப்பல்கள் தாக்கப்படும்போது, தாங்கள் எச்சரிக்கை வேட்டுக்ளைத் தீர்க்கும்போது புலிகளின் கப்பல்கள் அதனைக் கணக்கிலெடுக்காது. பதில் தாக்குதல்களை நடத்துவதாகவும் தாங்கள் திருப்பித் தாக்கி அவற்றை அழித்துவிடுவதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர்.

பல கப்பல்களால் புலிகளின் ஆயுதக் கப்பல் அல்லது கப்பல் சூழப்படும்போது அவற்றைத் தாக்கி அழிக்காது ஏன் ஒரு தடவைகூட அவற்றை முழுமையாகக் கைப்பற்ற முடியாது போனது.

ஒருமுறை கூட புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை வெடிக்க வைத்து அழித்ததாகச் செய்திகள் வெளியாகவில்லை. தாங்களே புலிகளின் கப்பல்களைத் தாக்கி அழித்ததாக கடற்படையினர் கூறுவர். இதனால் புலிகளின் ஆயுதக் கப்பல்களை ஏன் இவர்களால் முழுமையாக மடக்கிப் பிடிக்க முடியாமல் போகிறது.

தப்பிக்க வழியில்லையென்று தெரிந்துவிட்டால் புலிகள் தங்களது ஆயுதக்கப்பலை தாங்களே தகர்த்து விடுவரென்பதால் அவற்றை அழிக்காது பிடிக்க முற்பட்டால் தங்களுக்கும் பாரிய சேதங்களேற்படலாமெனக் கடற்படையினர் கூறக்கூடும். எனினும், இதுவரை அவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றதாக சரித்திரமில்லை.

இந்த நிலையில் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூன்று அழிக்கப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமையே அறிவிக்கப்பட்டது. முதல் நாள் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஒரு கப்பலும் அன்று மாலை 5.30 மணிக்கு மற்றொரு கப்பலும் அழிக்கப்பட்டதாக கடற்படையினர் கூறினாலும் அதுபற்றிய செய்தி மறுநாள் காலையிலேயே தெரிய வந்தது.

முதல் கப்பல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலை 10 மணிக்கும் 2 ஆவது கப்பல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாலை 5.30 மணிக்குமிடையில் ஏழரை மணிநேர இடைவெளியிருந்துள்ளது. அதேபோல் 2 ஆவது கப்பல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாலை 5.30 மணிக்கும் 3 ஆவது கப்பல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் மறுநாள் அதிகாலை 3 மணிக்குமிடையில் ஒன்பதரை மணி நேர இடைவெளியிருந்துள்ளது.

ஒரு ஆயுதக் கப்பல் பற்றிய தகவல் கிடைத்தே சென்றபோது பின்னர் மேலும் இரு ஆயுதக் கப்பல்கள் அகப்பட்டதென்றால் முதல் கப்பல் அழிக்கப்பட்ட திங்கட்கிழமையே இது பற்றிய செய்தி வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், மூன்று கப்பலையும் அழித்த பின்னரே இது குறித்த செய்தி வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கை முழுமையாகவும் மன்னார் சிலாவத்துறை பகுதியையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிவிட்டதால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் இரு வழிகள் அடைக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது முல்லைத்தீவு மட்டுமே அவர்களுக்கு ஒரே வழியென்பதால் அதனைத் தீவிர கண்காணிப்புக்குட்படுத்தி இனிமேல் அவர்களுக்கு ஆயுதங்கள் வருவதை முழுமையாகத் தடுத்துவிடமுடியுமெனவும் கடற்படையினர் கூறுகின்றனர்.

இனிமேல் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் சாத்தியங்களில்லையெனவும் இருப்பதுகூட போதியளவில் இல்லையென்பதால் அவர்களை விரைவில் போரில் தோற்கடித்துவிடமுடியுமெனவும் படையினர் கூறுகின்றனர். எனினும் இவை குறித்தெல்லாம் மௌனம் சாதிக்கும் புலிகள் என்ன சொல்லப் போகிறார்களென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

Please Click here to login / register to post your comments.