வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை: தி.இறைவன்

வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் தெரிவித்துள்ளார்.

பூநகரி முழங்காவிலில் கடந்த வெள்ளிக்கிழமை (24.08.07) நடைபெற்ற புலிகளின் குரல் வானொலியின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியதாவது:

நம்மை சிங்கள அரசாங்கம் இராணுவ ரீதியாக ஒடுக்கிக்கொண்டிருந்த அதே காலத்தில் கருத்துக்கள் ரீதியாகவும் நம்மை ஒடுக்கிக்கொண்டிருந்தது.

அவர்களுடைய வானொலிகள், தொலைக்காட்சிகள் அவர்களுடைய செய்தி ஊடகங்கள் அனைத்தின் மூலமும் நம்மை சிங்கள தேசம் அடிமைப்படுத்தி வந்திருக்கின்றது.

அவர்களுடைய பொய்களையும் எங்களுடைய இனத்தின் விடுதலைக்கெதிரான கருத்துக்களையும் எங்களுடைய மக்கள் மீது திணித்து எங்களைக் கருத்து ரீதியாகவும் எதிரிகள் அடிமைப்படுத்தி வந்திருக்கின்றனர்.

எங்களுடைய மண்ணில் நாங்கள் முழுமையான விடுதலை பெற்று உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய தலைமையிலே இந்த விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்து இன்று மிகவும் ஒரு உச்சகட்ட நிலைமையிலே வந்து நின்றிருக்கின்றது.

பௌதீக ரீதியாக எங்களுடைய நிலங்களை எங்களுடைய மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் உரிமையுடன் வாழ்வதற்குமான ஓர் மீட்பு நடவடிக்கையாக எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களுடைய தலைமையிலான இந்த விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளை கருத்து ரீதியாக எதிரிகள் எங்களை ஆக்கிரமித்திருந்த நிலைமையில் கருத்து ரீதியாகவும் எங்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய தேசியத் தலைவர் அவர்கள் எங்களுடைய மக்களுக்காக எங்களுடைய தமிழ் மொழிக்காக எங்களுடைய உரிமை மீட்புக்காக எங்களுடைய மண்ணுக்காக ஊடகங்களை உருவாக்கினார்.

1984 இல் விடுதலைப் புலிகள் ஏடு தொடங்கியது முதல் கடைசியாக இப்பொழுது செய்கோள் வழியாகவும் தரை வழியாகவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சி ஊடகம் வரைக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் எவ்வளவுக்கு எவ்வளவு நவீனத்துவமாக ஊடகங்களை உருவாக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நவீனத்துவமாக ஊடகங்களை உருவாக்கி எங்களுடைய தாய் மண்ணில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கும் புலம்பெயர்ந்து உலகம் முழுமையிலும் வாழ்ந்து வருகின்ற எங்களுடைய உறவுகளுக்கும் வேற்று நாடுகளில் வாழ்ந்து வருகின்ற எங்களுடைய தாய்மண் அல்லாதவர்களான தமிழ் மக்களுக்கும் எங்களுடைய விடுதலைக் கருத்தை எங்களுடைய தேசியக் கருத்தைச் சொல்வதற்கான ஊடகங்கள் நிறையவே எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையிலே எங்களுடைய மக்களிடம் எங்களுடைய மக்கள் மத்தியில் அன்றாடம் உறவாடிக் கொண்டிருக்கின்ற ஊடகமாகப் புலிகளின் குரல் ஊடகம் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் தொடங்கி இன்று வரை தொடர்ச்சியாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.

தொடக்கத்தில் யாழ். குடாநாட்டிலே இயங்கி வந்த அதாவது ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் எங்களுடைய ஊடகம் இன்று எங்களுடைய தாயகத்தின் அரைவாசிப் பகுதிக்கு மேல் சென்றடையக் கூடியதாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகளவில் வாழ்கின்ற தமிழ் மக்களைச் சென்றடைவதற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்திருக்கின்றது.

அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக எங்களுடைய வானொலியும் மக்களும் இணைய வேண்டும் என்பதற்காக எங்களுடைய வானொலியில் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்பதற்காக பங்குபற்ற வேண்டும் என்பதற்காக எங்களுடைய வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவில் 2,000 ஆம் ஆண்டில் நாங்கள் வன்னிப்பகுதியில் அதாவது எங்களுடைய நிர்வாகப் பகுதியில் வானொலி மன்றங்களை ஊக்குவித்து ஊரூராக அமைத்திருந்தோம்.

அன்றைய தொடக்ககால வானொலி மன்றங்களின் உருவாக்கத்தின் போது முழங்காவில் பகுதி உள்ளடக்கப்படவில்லை. அப்பொழுது இருந்த எங்களுடைய சக்திக்கேற்ப எங்களுடைய வலுவுக்கேற்ப எங்களுடைய வானொலிமன்றங்கள் அமைந்திருந்தன.

கடைசியாக வன்னி மேற்குப் பரப்பளவில் வன்னி கிழக்கு, வன்னி மேற்கு என்று அன்று ஜெயசிக்குறு சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் வன்னி துண்டாடப்படக்கூடிய ஒரு ஆபத்தான சூழ்நிலை இருந்த போது வன்னியின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் வானொலி மன்றங்கள் இயங்கின.

வன்னியின் மேற்குப் பகுதியில் மல்லாவியிலும் அக்கராயனிலும் வானொலி மன்றங்கள் இயங்கின. அந்த அக்கராயன் வானொலி மன்றத்தின் நீட்சியாக அந்த அக்கராயன் வானொலி மன்ற நிர்வாகத்துக்கு உள்ளடங்கலாக முழங்காவில் பகுதியிலிருந்து வானொலி மன்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.

அதே போல் பூநகரிப் பகுதியிலும் வானொலி மன்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. இப்பொழுது முழங்காவில் பகுதி மன்னார் மாவட்டத்துடன் உள்ளடக்கப்பட்டு ஓர் வானொலி மன்றம் உருவாக்கப்பட்டு இந்த மக்களுடைய வேண்டுகைக்கு ஏற்ப அவர்களுடைய ஆவலை நிறைவு செய்கின்ற வகையில் இந்த வானொலி மன்றம் உருவாக்கப்பட்டு இந்த வானொலி மன்றத்தின் முத்தமிழ்க் கலையரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதேவேளை இந்த முத்தமிழ்க் கலையரங்கம் என்பது நாங்கள் ஓர் செவிப்புல ஊடகம் அதாவது கேட்பதற்குரிய ஊடகம்.

அதற்குக் காட்சி கிடையாது. செவிகளால் தான் நாங்கள் வானொலியைக் கேட்டு எங்களுடைய மனத்திரைகளில் காட்சிகளை உருவகித்துக் கற்பனை செய்து கொண்டு நாங்கள் அதற்குள் வாழ வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த நிலைமையில் வானொலியில் பங்கு பற்றுகின்ற மக்களுக்கு இந்த வானொலி மன்றங்கள் ஊடாகப் பங்கு பற்றுகின்ற மக்களுக்கு ஓர் அரங்க வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஒரு கட்புல வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் முத்தமிழ்க் கலையரங்க நிகழ்ச்சிகள் மாதா, மாதம் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றன.

முதல் ஆண்டில் இந்த முத்தமிழ் கலையரங்கம் எங்களுடைய புலிகளின் குரல் மையமிருந்த முள்ளியவளையிலே வித்தியானந்தாக் கல்லூரி மண்டபத்திலே நடைபெற்றது.

அடுத்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் வானொலி மன்றங்கள் எங்கெங்கு இருந்தனவோ அந்த மன்றங்களினுடைய தீர்மானத்தின் அடிப்படையில் அந்தந்த இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே முழங்காவில் பகுதியிலே இந்த முத்தமிழ்க் கலையரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய ஊடகங்கள் ஊடாக நாங்கள் எங்களுடைய விடுதலைக் கருத்தை வலுப்படுத்திச் சொல்ல வேண்டும். எதிரியின் ஆக்கிரமிப்பை உடைப்பதற்கு நாங்கள் எங்களுடைய ஊடகத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊடகத்தினூடாக எங்களுடைய பங்களிப்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஊரெங்கும் ஒலிவெள்ளம் என்கின்ற எங்களுடைய நடமாடுகின்ற சிறப்பு ஒலிபரப்புக்கள் மூலம் எங்களுடைய மக்களுடைய விடுதலைக் கருத்துகள் விடுதலையை வலுப்படுத்துகின்ற எண்ணக்கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மூன்று நாட்களாக இந்த ஊரெங்கும் ஒலிவெள்ளமாக முழங்காவில் வாழ் மக்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தங்களுடைய ஒலிவழித் திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த முத்தமிழ்க் கலையரங்கம் எங்களுடைய ஊடகச் செயற்பாட்டில் ஓர் கட்புல ஊடகமாக எங்கள் மக்களினுடைய திறன்களை வெளிப்படுத்தும் முகமாக இன்று இங்கு அரங்காற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாங்கள் இப்பொழுது எங்களுடைய மண்ணை விடுவித்து அதாவது முழுமையாக விடுவித்து எங்களுக்கென்றொரு தனியரசை உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஓர் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய மண் திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகள் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனை வைத்துக்கொண்டு எவ்வாறு நாங்கள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற கேள்வி உங்களிடம் இருக்கலாம்.

உண்மையில் உலகளவிலே விடுதலைப் போராட்டங்கள் அனேகமானவை கடைசி முழுமையான வெற்றியின் போது மிகச் சிறிய நிலப்பரப்புக்களே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் நாங்கள் எங்களுடைய தாய் மண்ணில் மூன்றில் இரண்டு பகுதியை எங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து நிர்வகித்துக் கொண்டிருக்கிறோம்.

மூன்றில் ஒரு பகுதி மட்டும் எதிரியின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது. குறிப்பாக எங்களுடைய முழுமையான நிர்வாகப் பகுதி எங்களுடைய படை வலுப்பகுதி எங்களுடைய மூன்றில் ஒரு பகுதி பரப்பளவைக் கொண்ட இந்த வன்னிப் பகுதியில் இருந்து கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்று சிங்களப் படைகள் கொக்கரித்தாலும் கூட அந்தப் பகுதிகளில் மிக அதிகளவான நிலப்பரப்புகளில் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அந்த நிலப்பரப்புகளில் எங்களுடைய நிர்வாக நடைமுறை இல்லாதிருக்கலாம். ஆனால் அந்த மாவட்டங்களில் மிகப் பெரும் நிலப்பரப்புகள் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

அவை எவற்றிலும் சிங்கள இராணுவத்தினுடைய ஆதிக்கமோ ஆக்கிரமிப்போ இல்லை. அந்த வகையில் எங்களுடைய தாயக நிலப்பரப்பின் மூன்றில் இரண்டு பகுதியை நாங்கள் இன்றும் எங்கடைய பிடியில் வைத்திருக்கின்றோம். மூன்றில் ஒரு பகுதியில் மிகவும் வலுவாக இருக்கின்ற எதிரியை விரட்டியடிப்பதன் மூலம் நாங்கள் எங்களுடைய விடுதலையை உறுதிப்படுத்திக் கொண்டு எங்களுடைய தனியரசை அமைப்பதற்கான முழுமையான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருக்கின்றோம்.

எங்களுடைய படைபலம் விரிவடைந்திருக்கின்றது. எங்களுடைய ஆயுத பலம் விரிவடைந்திருக்கின்றது. எங்களுடைய மக்கள் வீட்டிற்கு ஒருவர் என்ற ரீதியில் எங்களுடைய படை பலத்தை அதிகரித்துள்ளனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எதிரி எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து ஆக்கிரமித்திருக்கின்றான்.

இந்த ஆக்கிரமிப்பின் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டதாகக் கணக்குப் போட்டிருக்கின்றான்.

விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களுக்கு வருவதற்காக ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக வடக்குப் பகுதி மீதான படை நடவடிக்கையை தாங்கள் இப்போது நடத்துவதில்லை என்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்திருக்கின்றது.

ஆனால் உண்மை அதுவல்ல.

தொப்பிக்கல என்று அவர்கள் சொல்லிக் கொள்கின்ற குடும்பிமலையைத் தாங்கள் கைப்பற்றி விட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்தாக அவர்கள் தங்களுடைய ஊடகங்களுடாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கொக்கரிப்பை மேற்கொள்கிறார்கள்.

அனைத்துலகத் தரப்புக்கு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

அவர்கள் வெற்றிபெறவில்லை. அவர்கள் எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.

அந்த நிலங்கள் கடந்த காலங்களில் எங்களுடைய கட்டுப்பாட்டிலும் இருந்திருக்கின்றன. அவர்களுடைய ஆக்கிரமிப்பிலும் இருந்திருக்கின்றன.

மாறி, மாறி அந்த நிலங்கள் அதாவது இப்பொழுது ஆக்கிரமித்திருக்கின்ற நிலங்கள் விடுதலைப் புலிகளுடைய கைகளிலும் இராணுவத்தினுடைய ஆக்கிரமிப்பிலும் மாறி, மாறி இருந்திருக்கின்றன.

இப்பொழுது அந்த நிலம் அவர்களிடம் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

1993, 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் இந்த நிலங்களை ஆக்கிரமித்துப் பின்னர் யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்திருப்பதற்காகவும் வன்னியில் ஜெயசிக்குறு, ரணகோச இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் அந்த நிலங்களை அவர்கள் கைவிட்டனர்.

இப்பொழுது வன்னிப் பகுதியில் அந்த நிலங்கள் எங்களுடைய அதாவது ஆக்கிரமிப்புக்குட்பட்ட நிலங்கள் எங்களால் மீட்கப்பட்டிருக்கின்றன.

ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கை மூலம் எதிரி வன்னிப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த பெருநிலப்பரப்பு எங்களால் மீட்கப்பட்டிருக்கின்றது.

எவராலும் வீழ்த்தப்பட முடியாது என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்த ஆனையிறவுப் பெரும் படைத்தளம் எங்களால் மீட்கப்பட்டிருக்கின்றது.

யாழ். குடாநாட்டில் சிங்களப் படைகளுடைய ஆதிக்கம் தள்ளப்பட்டு முகமாலைக்கு அவர்கள் பின்தள்ளப்பட்டனர். இப்பொழுது யாழ். குடாநாட்டிலும் குறுகிய நிலப்பரப்பில் 36,000 சிங்களப் படைகள் ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கம் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இன்று மகிந்த ராஜபக்சவும் அவர்களுடைய கூட்டமும் எங்களை வெற்றி கொள்வோம் என்று எதிரிகள் அதாவது சிங்கள மக்களிடமும் எங்கள் மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.

அவர்களால் ஒரு படை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அவர்களுக்கு மிக மோசமான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இன்று 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

அவர்களால் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலைக்குச் சென்று விட்டார்கள். அவர்கள் நாள்தோறும் எங்களுடைய தாயகப் பகுதியின் எல்லைப் பகுதிகளில் வீசுகின்ற எறிகணைகள் மூலம் மிக அதிகளவிலான நிதியை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய பாதுகாப்பிற்கான வரவு - செலவுத் திட்டத்தினை மீறி அவர்களுடைய எறிகணைகள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாள்தோறும் மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாணக் களமுனைகளில் அவர்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எறிகணைகள் வீணடிக்கப்படுகின்றன.

உண்மையில் ஓர் இராணுவ நடவடிக்கை என்கின்ற போது ஓர் இராணுவ நடவடிக்கையின் ஓர் கட்டமாக அவர்களுடைய எறிகணைத் தாக்குதல்கள், வானூர்தித் தாக்குதல் எல்லாமே வரும்.

ஒரு வானூர்தித் தாக்குதல் நிறுத்தப்படுகின்றதென்றால் அதனால் அந்தத் தாக்குதல் நடத்தப்படுகின்ற போது இவ்வளவு அழிவு ஏற்பட வேண்டும். எதிரிகளுடைய இவ்வளவு பலம் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற கணிப்பீடு இருக்கின்றது.

எறிகணைகள் பயன்படுத்தப்படுகின்றது என்றால் அந்த எறிகணைகள் பயன்படுத்தப்படுவதால் எதிரிகளுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட வேண்டும் அந்த இழப்புகள் ஏற்படுகின்ற போது தான் அந்த எறிகணைத் தாக்குதலுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் எறிகணைத் தாக்குதல் பெறுமதி வரையப்படும்.

ஆனால் இன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கிலே வீசப்படுகின்ற எறிகணைகளுக்கு கணக்கே இல்லை. அந்த எறிகணைகளுக்கான லாபம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை.

வானூர்தித் தாக்குதல்கள் மூலம் அரசாங்கத்துக்கு லாபம் எதுவுமில்லை. இந்த வகையில் சிறிலங்கா படைத்துறை ஆய்வாளர்களே சொல்கின்றார்கள். கிழக்கில் இராணுவத்தினர் மிக அதிகளவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி விட்டனர். இதன் காரணத்தால் புதிதாக மேலதிகமாக வெடிபொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் மேலதிகமாக எறிகணைகளைக் குறிப்பாக எறிகணைகள் மற்றும் பல்கணை எறிகணைகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தினருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையில் 13,000 கோடியாக இருக்கின்ற இந்த ஆண்டுக்கான பாதுகாப்புக்கான வரவு - செலவுத் திட்டத்தின் தொகை 20,000 கோடியை எட்டியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடைய வான்படை சிங்கள தேசத்தின் மையத்தில் சென்று தாக்குதல் நடத்தியிருப்பதன் காரணத்தால் சுற்றுலாப் பயணத்துறை மீதான வருமானம் இழக்கப்பட்டிருக்கின்றது.

இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையம் 24 மணிநேரமும் திறக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் அந்த வானூர்தி நிலையத்துக்கு வானூர்திகளின் வரவு குறைவாக இருக்கின்றது.

ஏனெனில் அந்த வானூர்திகளில் வருகின்றவர்கள் சுற்றுலாப்பயணிகள். சுற்றுலாப்பயணிகள் வராத காரணத்தால் வானூர்திகள் அதிகம் வெற்றாகவே வருகின்ற காரணத்தால் பெரும்பாலான வானூர்திகள் இப்போது சிறிலங்காவுக்கு வருவதில்லை.

சிறிலங்காவினுடைய ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப சொல்லியிருக்கின்றார்: அடுத்த கட்டம் வடக்கில் போரைத் தொடங்குவதாக இருந்தால் அதற்கு சிறிலங்காவினுடைய பொருளாதார உறுதிப்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும். பொருளாதார உறுதிப்பாடு எட்டப்பட்டால் வடக்கில் போரைத் தொடங்கலாம் என்று அனுர பிரிய தர்சன யாப்ப தெரிவித்துள்ளார்.

அதே அமைச்சர் இன்னொன்றையும் சொல்லியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளை சமாதான நடவடிக்கைகளுக்கு வருவதற்கான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக தாங்கள் உடனடியாக வடக்கில் தாக்குதலைத் தொடங்கத் தயாரில்லை என்று.

ஆனால் உண்மை அதுவல்ல.

ஒன்று பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்களால் ஒரு போரை உடனடியாகத் தொடங்க முடியாத நிலைமை இருக்கின்றது.

அடுத்தது வடக்கில் வன்னியிலோ யாழ்ப்பாணத்திலோ இருந்து ஒரு பெரும் போரை நடத்துவதாக இருந்தால் அது அவர்களுக்கு வெற்றியளிக்காது என்பது நிச்சயமான ஒன்று.

கிட்டத்தட்ட 15 முறைகளுக்கு மேல் மடுவை ஆக்கிரமிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு விட்டன.

அவர்கள் தங்களுடைய பழைய நிலைகளிலேயே நின்று கொண்டிருக்கின்றனர். புதிதாக மடுவை ஆக்கிரமிப்பதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட படையணி மிக அதிகளவில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதங்களைச் சந்தித்திருக்கின்றது.

அடுத்த கட்டம் ஒரு மிகப்பெரும் போர் தொடங்க இருக்கின்றது என்பது தெளிவான ஒன்று.

சிறிலங்கா அரசாங்கமே சொல்லிக் கொள்கின்றது எதிர்வரும் மழை காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு பெருந் தாக்குதலை நடத்துவார்கள் என்று. ஆனால் விடுதலைப் புலிகள் மழை காலங்களில் நடத்துவார்களோ இல்லையோ சிறிலங்கா அரசாங்கம் இந்த மழை காலத்தில் விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்று அஞ்சி எறிகணைகளைத் தங்களுடைய தளங்களிலே குவித்து வைத்திருக்கின்றது.

முன்னரண் பகுதிகள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகள் ஓர் நகர்வை மேற்கொள்ள முடியாது என்று அதற்காக அவர்கள் எறிகணைகள் யாழ் குடாநாட்டிலும் வன்னி அதாவது வவுனியா, மன்னார், மணலாறுப் பகுதியிலும் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எறிகணைகளால் தங்களுடைய நிலங்களைக் காப்பாற்ற அதாவது தங்களுடைய ஆக்கிரமிப்பில் இருக்கின்ற நிலங்களைத் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் முயல்கின்றார்கள்.

ஓயாத அலைகள் - 03 படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது சிங்கள இராணுவம் வன்னிப் பகுதியின் அரைவாசிப் பகுதிக்கு மேல் நிலங்களை ஆக்கிரமித்திருந்தது. இது, பூநகரி மன்னார் வீதியில் சிங்கள இராணுவம் இருந்தது.

பள்ளமடுவிலிருந்து ஓர் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்த முழங்காவில் ஊடாகப் பூநகரிக்குச் சென்று பூநகரி ஊடாக யாழ். குடாநாட்டுச் சிங்களப் படைகளுக்கு ஒரு தரை வழிப் பாதையை அமைப்பதற்கான முயற்சியில் சிங்களப் படைகள் ஈடுபட்டிருந்தன.

ஏ-9 சாலை ஊடாக யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை அமைக்க முடியாது என்கின்ற நிலைமையில் தான் அவர்கள் இந்த முழங்காவில் ஊடான பூநகரிப் பாதையை யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையாக மாற்ற முனைந்திருந்தனர்.

வன்னியின் கிழக்குப் பகுதியிலே ஒட்டுசுட்டான், அம்பகாமம் வரையில் சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு விரிந்திருந்தது. மன்னார்ப் பகுதில் பள்ளமடு வரை விரிந்திருந்தது. ஆனால் இவ்வளவு மிகப் பெரிய நிலப்பரப்புகள் அன்று எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களுடைய திட்டமிடலின் மூலம் துல்லியமான தாக்குதல்களின் மூலம் சிங்களப் படைகள் ஓட, ஓட விரட்டியடிக்கப்பட்டன.

ஆனையிறவுப் பெருந்தளத்திலிருந்து சிங்களப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன.

2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் செம்மணி வெளியிலே விடுதலைப் புலிகள் தங்களுடைய நிலைகளை அமைத்த போது யாழ். குடாநாட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் உடனடியாகப் பின்வாங்குவதற்காக அப்போதைய அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கா இந்தியாவிடம் கப்பல் உதவியைக் கேட்டிருந்தார்.

72 மணி நேரப் போர் நிறுத்தத்தைக் கோரியிருந்தார். தங்களுடைய படைகள் யாழ். குடாநாட்டை விட்டுப் பின்வாங்கிச் செல்வதற்கு. அதே சிங்களப் படைகள் தான் இன்றும் யாழ். குடாநாட்டில் இருக்கின்றன.

அதே பொறிக்குள் தான் யாழ். குடாநாட்டின் சிங்களப் படைகள் இருக்கின்றன. அதே போன்று எங்களுடைய தென்பகுதியில் மன்னார், வவுனியா, மணலாறுப் பகுதியிலும் மிகப் பெரும் பொறிக்குள் தான் சிங்களப் படைகள் சிக்கியிருக்கின்றன.

இந்த நிலங்களை நாங்கள் மீட்டெடுப்பதன் மூலம் சிங்களப் படைகள் இப்போது தாங்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறிக் கொள்கின்ற எங்களுடைய திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை என்கின்ற தொடர் நிலப்பரப்புகளை எங்களால் மீட்க முடியும்.

இன்று மகிந்த அரசு எங்களுடைய தாயகத்தை வடக்கு - கிழக்கு என்று நிர்வாக ரீதியாகத் துண்டாடியிருக்கிறது.

வடக்கு - கிழக்கு என்ன எங்களுடைய நிலப் பரப்பில் அவர்களுடைய நிர்வாகம் இருக்கின்ற 8 மாவட்டங்களையும் தனித்தனியாகத் துண்டாடி நிர்வாகிக்கலாம். ஆனால் நாங்கள் எங்களுடைய நிலப் பரப்பை முழுமையாக மீட்டெடுத்து நாங்கள் ஓர் தனியரசை மீட்டுக் கொள்வோம்.

உலகத்தில் எங்களைப் போன்று அதாவது எங்களுயை விடுதலைப் போராட்டத்தைப் போன்று பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றன. வெற்றி பெற்றிருக்கின்றன.

1993 ஆம் ஆண்டு எரித்திரியா என்கின்ற தனிநாடு முழுமையான இராணுவ பலம் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

இன்று எங்களிடம் எங்களுடைய தாய் மண்ணின் மூன்றில் ஒரு பகுதி முழுமையான நிர்வாகப் பகுதியாக இருக்கின்றது. ஆனால் எரித்திரிய விடுதலைப் போராளிகள் தங்களுடைய நிலத்தை அதாவது முழுமையாக மீட்பதற்கான அந்தக் கடைசித் தாக்குதலை மேற்கொண்ட போது மிகச் சிறிய நிலப்பரப்புத் தான் அவர்களுடைய கைவசம் இருந்தது.

அந்த மிகச் சிறிய நிலப்பரப்பிலிருந்து தங்களுடைய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருடைய பலத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய தாய் மண் முழுமையையும் மீட்டனர். தங்களுடைய தாய் மண்ணை ஆக்கிரமித்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் எதிரிப் படைகளைச் சிறைப் பிடித்தனர்.

அவர்களுடைய பல நூற்றுக்கணக்கான டாங்கிகள் ஆட்டிலறிகள் மிகப் பெரும் போர்க் கலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இது 93 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.

எந்த ஒரு நாட்டினுடைய உதவியும் இல்லாமல் தங்களினுடைய மக்களினதும் தங்களுடைய புலம் பெயர்ந்த மக்களினதும் நிதியுதவியுடன் தான் அவர்கள் அந்த விடுதலையை வென்றெடுத்தார்கள்.

நாங்களும் எங்களுடைய மக்களில் எந்த ஒரு நாட்டிலும் தங்கியிராமல் எங்களுடைய மக்களின் பலத்தில் தங்கியிருக்கிற மக்கள் விடுதலைப் போராட்டம் எங்களுடைய தேசியத் தலைவர் எந்த ஒரு நாட்டையும் நம்பாமல் எங்களுடைய மக்கள், தாயகத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களையும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களையும் ஒன்றிணைத்து இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஜெயசிக்குறு, ரணகோச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலம் எங்களுடைய நிலப்பரப்புகள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டனவோ அந்த நிலப்பரப்புகள் எவ்வாறு எங்கள் தேசியத் தலைவர் அவர்களால் அவர்களுடைய திட்டமிடலால் ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கை மூலம் மீட்டகப்பட்டனவோ

அதே போன்று

ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற எங்களுடைய நிலப்பரப்புகள் மீட்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. நாங்கள் மிக விரைவில் எங்களுடைய தாயகத்தில் தனியரசை அமைப்போம்.

நாங்கள் எங்களுடைய மண்ணை முழுமையாக மீட்டெடுத்து எங்களுடைய தனியரசை அமைக்கின்ற போது உலகத்திற்கு இருக்கின்ற ஒரே ஒரு தெரிவு எங்களைத் தனிநாடாக அங்கீகரிப்பதா இல்லையா என்பது.

எரித்திரியா 93 ஆம் ஆண்டு தங்களுடைய நிலப்பரப்பு முழுமையையும் மீட்டு தாங்கள் ஓர் தனியரசு என்று அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

அப்போது ஐ.நா.வில் ஒரு பிரச்சினை எழுந்தது. இதனை அங்கீகரிப்பதா இல்லையா என்று. அப்போது எரித்திய மக்கள் அனைவரிடமும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எரித்தியா தனிநாடாகப் போக வேண்டுமா இல்லையா என்பது. நீங்களே தீர்மானியுங்கள் என்று.

எரித்திய மக்கள் நாங்கள் தனிநாடாகத் தான் இருக்க விரும்புகின்றோம் என்று வாக்களித்தார்கள்.

எரித்தியா என்கின்ற தனிநாடு உருவானது.

2,000 ஆம் ஆண்டில் அதாவது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நாவினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் கிழக்கு திமோர் மக்கள் நாங்கள் தனி நாடாகப் போகின்றோம். இந்தோனேசியாவுடன் சேர்ந்து வாழத் தயாராகவில்லை என்று வாக்களித்தார்கள்.

அவர்கள் தனிநாடாகப் போனார்கள்.

ஐரோப்பாவிலே மொண்டரிகோ என்ற நாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்து. அவர்கள் இராணுவ வெற்றிள் மூலம் தனிநாடாகப் போகவில்லை. அனைத்துலக ரீதியான அரசியல் லாபங்களுக்காகத் தனிநாடாகப் போனார்கள்.

ஆனால் எரித்தியா முழுமையான இராணுவ வெற்றி மூலம் தனிநாடாகப் பிரிந்து உருவானது. எதிரிகள் தாங்கள் வெற்றி பெறுகின்ற போது வெளிநாடுகள் எங்களை அடக்கும் என்று எவரும் கருதி விடக்கூடாது.

எவரும் எதுவும் செய்து விட மாட்டார்கள். செய்து விட முடியாது. இன்றைய உலக ஒழுங்கு இவ்வாறு இருக்கின்றது.

ஆக, நாங்கள் வெற்றி பெறுகின்ற போது ஒன்று திரண்டு எங்களுடைய நிலங்களை மீட்டு எங்களுடைய தனியரசைப் பிரகடனப்படுத்துகின்ற போது இந்தப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்கின்ற ஒரு வாக்கெடுப்புத் தான் உலகளவில் நடக்கும்.

அதற்குரிய வகையிலே நாங்கள் எங்களுடைய நிலப்பரப்புகளை முழுமையாக மீட்டெடுத்து அங்கு எங்களுடைய அரசை உருவாக்க வேண்டும்.

எங்களுடைய தேசியத் தலைவர் அவர்களுடைய தலைமையில் இந்த விடுதலைப் போராட்டம் அதை விரைவில் செய்து முடிக்கும். அதற்கான முழுமையான பங்களிப்பு எங்களுடைய மக்களால் வழங்கப்படும்.

அந்தப் பலத்துடன் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அதற்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த முத்தமிழ்க் கலையரங்கமும் அந்தச் சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. அந்த வகையிலே நாங்கள் ஒன்று திரண்டு இப்போது இருக்கின்ற பலத்தை இன்னமும் வலுப்படுத்தி எங்களுடைய விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டும்.

விடுதலை என்பது உலக நாடெங்கினும் இரத்தம் சிந்தாமல் உயிர்கள் இழக்கப்படாமல் பெறப்பட்டதல்ல.

இன்று யூதர்கள் இஸ்ரேல் என்கின்ற நாட்டை உருவாக்குவதற்கு 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட வேண்டியிருந்தது. அல்லது 60 லட்சம் யூதர்கள் இறந்து கொல்லப்பட்ட நிலையில் தான் யூதர்கள் தங்களுக்கு என்ற தனிநாட்டை அமைக்கக் கூடியதாக இருந்தது.

எரித்தியாவில் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

வியட்நாமில் 60 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள். வட வியட்நாம், தென் வியட்நாம் என்று அவர்கள் மூன்று காலத்தில் ஜப்பானியருடைய ஆக்கிரமிப்பு, பிரெஞ்சுப் படையினருடைய ஆக்கிரமிப்பு ,அமெரிக்கப் படையினருடைய ஆக்கிரமிப்பு என்று பல எதிரிகளிடம் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் போராடிய காரணத்தால் மிக அதிகளவிலான இழப்புகளைச் சந்தித்தார்கள்.

அந்த வகையில் நாங்கள் இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். இழப்புகளைச் சந்தித்திருக்கின்றோம். ஆனால் இழப்புகள் எங்களுடைய விடுதலைக்கு உரமூட்டுபவையாக இருக்கும்.

எங்களுடைய மாவீரர்களுடைய ஈகங்கள் எங்களுடைய விடுதலைக்கு உரமாக இருக்கும்.

எங்களுடைய மனங்களை வலுப்படுத்தும்.

எங்களுடைய விடுதலைக் கருத்தைப் பலப்படுத்தும்.

நாம் ஒன்று திரண்டு எங்களுடைய விடுதலையைப் பொறுவதற்கான உணர்வுடனும் கருத்துடனும் வீரத்துடனும் போராடுவோம் என்றார் இறைவன்.

Please Click here to login / register to post your comments.