வடபோர்முனை தாக்குதல் குழப்பத்தில் படைத்தரப்பு

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)

அரசுக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வருகையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் நம்பிக்கை தருவனவாக இல்லை. அனைத்துலகத்தில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையின் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாக்களாக அல்லது 3,000 பில்லியன் ரூபாக்களாக உயர்ந்துள்ள அதேசமயம், ஆசியாவிலேயே அதிகரித்த வட்டிவீதமுள்ள நாடும் இலங்கைதான் என வெளிவரும் தகவல்கள் ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக இல்லை.

நாட்டின் இந்த நிலைக்கான பிரதான காரணம் போரே என்பது பொருளியல், அரசியல், படைத்துறை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. போர் என்பது இன்றோ அல்லது நாளையோ முடிந்துவிட்டால் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தலாம் என்பது எல்லாம் கானல் நீரான கதையாகும். மேலும் போரும் பொருளாதாரமும் ஒரே காலத்தில் முன்னேற்றம் காண்பதும் முயற்கொம்பான விடயம்.

உலகின் தற்போதைய பொருளாதார போட்டிகளும், ஏற்றத் தாழ்வுகளும் இலங்கைக்கு சாதகமாக இல்லை. போரை நியாயப்படுத்தி பொருளாதாரத்தை தேடிக்கொள்வதற்கான அரசியல் பலமும் அரசிடம் இல்லை. கிழக்கின் படை நடவடிக்கையும் அரசியலில் மாற்றம் ஏற்படும் அளவிற்கு முக்கியத்துவத்தை பெறவில்லை. அரசின் இந்த நெருக்கடிகள், ஏற்படப்போகும் காலநிலை மாற்றங்கள் என்பனவும் வடபோர் முனையில் படை நடவடிக்கைகளை மந்தமாக்கியுள்ள போதும் படையினரின் பற்றாக்குறை, விடுதலைப் புலிகளின் போரியல் உத்திகள் என்பனவே அதற்கான பிரதான காரணம் ஆகும்.

சுமார் 20,000 படையினரை நிறுத்தினால் கிழக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது படையினரின் திட்டம். ஆனால் அதன் பூகோள அமைவின் பிரகாரம் கிழக்கை தக்கவைக்க 40,000 படையினர் தேவை என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து.

எனினும் அரசினால் வடபோர்முனையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள பெரும் மோதல்களுக்காக தம்மை தயார்படுத்தி வரும் படையினர் கிழக்கு மாகாணத்திற்கு நகர்த்தப்பட்ட சிறப்பு படையணிகளையும் வன்னிக் களமுனைகளை நோக்கி நகர்த்தியுள்ளனர். தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த சிறப்பு படையணிகளுக்கான ஒர் ஓய்வாகவும் இந்த அசாதாரணமான அமைதியை படைத்தரப்பு பயன்படுத்தி வருகின்றது.

படையினரின் தற்போதைய அவசர உத்திகள் இரண்டு தான். ஒன்று பருவ மழையுடன் தமக்கு பாதகமாகப் போகும் கள நிலைமையில் இருந்து தம்மை தக்கவைப்பதற்கு தற்காப்பு நடைவடிக்கைகளை பற்றிப் பிடித்தல் அல்லது விடுதலைப் புலிகளை ஓய்வின்றி வைத்திருக்கும் பொருட்டு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பன ஆகும்.

ஆனால் படையினரின் இந்த உத்திகளை எல்லாம் மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்ததாக விடுதலைப் புலிகளின் பீரங்கிப்படை அணி வளர்ச்சி கண்டு வருவதும், அண்மைய தாக்குதல்களில் அது நிரூபணமாகி வருவதும் படையினருக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி, ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர், ஓயாத அலைகள் - 3, ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதல், யாழ். குடா முற்றுகை என்பவற்றில் கணிசமான பங்கை முன்னர் ஆற்றியிருந்தது.

அதன் பின்னர் தற்போதைய மோதல்களில் வடபோர் முனையின் மிகப்பெரும் தளமான பலாலி கூட்டுப்படை தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும், தேவை ஏற்படும் போதெல்லாம் முடக்க முடியும் என்பதையும் அது நிரூபித்து வருகின்றது. 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் நடைபெற்ற மோதல்களின் போது பலாலி கூட்டுப்படைத்தளம் விடுதலைப் புலிகளின் 130 மி.மீ எறிகணைகளால் முடக்கப்பட்டிருந்தது. அதற்கான வான் போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன் படையினருக்கான வழங்கல்களும் அன்று பெரும் பாதிப்பை சந்தித்திருந்தது. அதன் பின்னர் விடுதலைப் புலிகள் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது துல்லியமான பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வந்திருந்தனர்.

அதற்கான சில உதாரணங்களாக இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கொடிகாமத்தில் நடைபெற்ற இராணுவத்தின் சிறப்பு படையணியான 53 ஆவது படைப்பிரிவின் தாக்குதல் வலுவை அதிகரிக்கவென உருவாக்கப்பட்ட கவசத்தாக்கு தல் படையணியின் உத்தியோகபூர்வ தொடக்க விழா மீதான பீரங்கித் தாக்குதல், விளாத்திக்குளம் மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் நடைபெற்ற சமரின் போது பம்பைமடு பீரங்கித் தளம் மீதான தாக்குதல்கள் என்பவற்றை குறிப்பிடலாம்.

எனினும் கடந்த 21 ஆம் நாள் மீண்டும் பலாலி கூட்டுப் படைத்தளம், மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய பகுதிகளை குறிவைத்து 130 மி.மீ பீரங்கி தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஏறத்தாழ ஒரு டசின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்த போதும் படைத்தரப்பு தமது சேதங்கள் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இலங்கையிலேயே மிகவும் பலம் வாய்ந்த பிரதேசமும், வடபோர் முனையின் மிகப்பெரும் தளமுமான இந்த தளத்தினுள் இருந்து சுயாதீன செய்திகளை பெறுவது கடினமானது என்பதுடன் உடனடியாக குடாநாட்டுக்கான செல்லிட தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டதும் தகவல்களை முற்றாக தடுத்துள்ளது.

கடந்த வாரம் பாதுகாப்பு முன்னணி அரங்குகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை இலக்குவைத்து பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அவர் மயிரிழையில் தப்பியதாகவும் படை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையின் ஆற்றல்கள் தொடர்பாக படைத்தரப்பில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதுடன், நவீன சாதனங்களின் துணையுடன் விடுதலைப் புலிகளின் பீரங்கிப்படை பலத்தை முறியடித்து விடவும் அரசு பல வழிகளில் முயன்று வருகின்றது. பீரங்கிகளை பொறுத்தவரை மரபு வழியான களமுனைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஆபத்தான ஆயுதம். அவற்றை செயல்திறன் மிக்க வழியில் பயன்படுத்தினால் அது களத்தின் போக்கில் பல அனுகூலமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது. இவை டாங்கிகளை அழித்தல், துருப்புக்களின் முன்னேற்றத்தை தடுத்தல், படை கட்டுமானங்களை சிதைத்தல், அதிர்ச்சிகரமான தாக்குதல்களை நடத்துதல் போன்ற படை நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட கூடியவை.

இந்த செயல்திறன்களை தன்னகத்தே கொண்ட விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணி மிக முக்கிய இலக்குகளை அண்மைக்காலமாக குறிவைத்து வருவது படையினர் மத்தியில் இருவகையான அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக கருதப்படுகின்றது. அதாவது அவர்களின் துல்லியமான எறிகணை வீச்சுக்கள் மேம்பட்டு வருவதுடன், உயர் இலக்குகள் தொடர்பான தகவல்களும் மிகவும் நேர்த்தியாக பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் எதிர்கால படை நடைவடிக்கையிலும் சரி விடுதலைப் புலிகளின் தாக்குதலிலும் சரி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. ஏனெனில் பீரங்கிகளை அதிகளவில் கொள்வனவு செய்வதை விட, அதன் சூட்டு வலுவையும், துல்லியமான தாக்குதல்களையும் அதிகரிப்பதே முக்கியமானது.

உதாரணமாக 1991 ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படையினருக்கு ஏற்பட்ட அனுபவம் இதற்கான தெளிவான செய்தியாக இருந்தது. அதாவது ஈராக்கிய படையினர் அதிகளவான நீண்டதூர பீரங்கிகளை கொண்டிருந்த போதும் அவற்றை இலக்குகள் இன்றி பயன்படுத்தியதுடன், இலக்குகளை கண்டறியும் தொழில் நுட்பமும் அவர்களிடம் போதியளவில் இருக்கவில்லை.

உயர்வேகம் கொண்ட சுடுவலுக் கட்டுப்பாட்டு தொகுதி, விரைவான தகவல் வழங்கும் தொழில்நுட்பம், உயர் வலுக்கொண்ட இலக்குகளை கண்டறியும் தொகுதி என்பனவும், தரை, வான், மற்றும் பீரங்கிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் கூட்டுப்படைகளின் தாக்குதலை இலகுவாக்கியதுடன், ஈராக்கின் பீரங்கிகளின் எண்ணிக்கையை விரைவாக குறைத்தும் விட்டன.

இந்த கால கட்டத்தில் தான் ஜி.பி.எஸ் (Global Position ing System - GPS) என்னும் இலக்கை கண்டறியும் தொழில்நுட்பமும் அமெரிக்க இராணுவத்தினால் முதலில் பயன்படுத்தப்பட்டது. படைத்துறையை பொறுத்தவரை இலக்கின் நிலையையும் அதன் அமைவிடத்தையும் அறிவது மிகவும் முக்கியமானது. அதாவது எல்லா நிலையிலும் படைத்தளபதிகளால் கேட்கப்படும் முக்கிய கேள்வியும் ஒன்றுதான். அது என்னவெனில் நாம் எங்கு இருக்கிறோம்? எதிரி எங்கு இருக்கின்றான்? என்பது தான்.

இந்த கேள்விக்கான விடையை காண்பதற்கு படைத்தளபதிகள் நீண்ட நேரத்தையும், அதிக வளங்களையும் செலவிட வேண்டியிருக்கும். முன்னைய கேள்வியின் விடையிலிருக்கும் தாக்குதலுக்கான சரியான நேரமும், துல்லியமான தாக்குதலும் தான் ஒரு சமரின் வெற்றி தோல்விக்கு இடையில் உள்ள வேறுபாடாகும்.

இந்த கேள்வியின் விடைக்கான தகவல்களை பெறுவதற்கு பெரும்பாலான தளபதிகள் தமது படைவீரர்களையும், உளவுத் தகவல்களையும் பயன்படுத்துவதுண்டு. எனினும் அவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து துல்லியமான தாக்குதலை வலுப்படுத்த நவீன தொழில்நுட்பங்களும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது விடுதலைப் புலிகளால் துல்லியமாகவும், குறித்த நேரத்திலும் நடத்தப்படும் எறிகணை வீச்சுக்கள் அவர்கள் இலக்கை கண்டறியும் நவீன தொழில்நுட்ப சாதனங்களையும், தமது புலனாய்வுத் தகவல்களையும் சிறப்பாக ஒருங்கிணைத்து வருவதை தெளிவாக்கி வருகின்றது. ஆனால் எதிர்வரும் பருவமழைக் காலத்தில் கடல் கொந்தளிப்பு, பாதகமான காலநிலைகளினால் குடாநாட்டுக்கான கடல்வழி வழங்கல்கள் சீராக இருக்கப் போவதில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் பலாலி வான்படை ஓடுபாதையும் பீரங்கி தாக்குதலுக்கு உட்படுமாக இருந்தால் குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பது படையினர் மத்தியில் உள்ள பெரும் அச்சம்.

பலாலிக்கான வான் போக்குவரத்தை தமக்கு தேவையான வேளைகளில் நிறுத்த முடியும் என்பதை அண்மையில் இரு தடவைகள் விடுதலைப்புலிகள் நிரூபித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள பீரங்கித் தாக்குதல் வடபோர் முனை சமர் தொடர்பான படைத்தரப்பின் எதிர்பார்ப்புக்களில் பல புதிய குழப்பங்களை தோற்றுவிக்க போதுமானது.

Please Click here to login / register to post your comments.