இலக்கு வைக்கப்படும் தளபதிகள்!

ஆக்கம்: விதுரன்
யாழ்.குடாநாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலேற்பட்டுள்ளது. வடக்கில் ஏனைய களமுனைகளை விட குடாநாட்டில் படைத் தளபதிகளின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலானது, குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அண்மைக்காலங்களில் குடாநாட்டில் படைத்தளபதிகள் பலர் விடுதலைப் புலிகளின் ஷெல் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் தாக்குதல்களிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியமையானது, அடுத்த தடவைகள் நடைபெறும் தாக்குதல்களிலிருந்து அவர்கள் தப்புவார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

யாழ்.குடாவின் பெரும் பகுதி படையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ளது. வடமராட்சி கிழக்கு மற்றும் முகமாலைக்கு அப்பாலுள்ள பகுதிகளே புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளன. எனினும், குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமையை இன்று புலிகள் குடாநாட்டுக்கு வெளியிலிருந்தே கட்டுப்படுத்தும் நிலைமை படிப்படியாக உருவாகி வருகிறது.

குடாநாட்டின் பூகோள வரைபடம் புலிகளின் மனக்கண்ணில் நன்கு பதிந்துள்ளது. எங்கு எது இருக்கின்றதென்பதெல்லாம் அவர்கள் மிக நன்கறிந்துள்ளனர். ஒவ்வொரு முக்கிய படைத்தளங்களது தூரம்,திசை என்பனவற்றையும் அவர்கள் நன்கு கணித்து வைத்திருப்பதால் தேவையேற்படும் போது துல்லியமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை பலாலி கூட்டுப் படைத்தளம் மீது புலிகள் ஆட்லறிஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். மிக நீண்ட நாட்களின் பின் இந்தச் ஷெல் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அன்றைய தினம் அந்த நேரத்தில் பலாலி விமானத் தளத்தில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் செல்லும் அன்ரனோவ் விமானம் தரையிறங்குவதாயிருந்தது. எனினும், கொழும்பில் அன்றைய தினம் காலை வானிலை சீரில்லாததால் இராணுவத் தளபதியின் பலாலி விஜயம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமடைந்ததால் மிகப் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக படைத் தரப்பு கூறுகிறது.

பலாலி படைத்தளம் மீதான ஷெல் தாக்குதலில் இராணுவத் தளபதியே இலக்கென்பதால், இராணுவத் தளபதி உட்பட சிரேஷ்ட தளபதிகள் ஒவ்வொருவரதும் ஒவ்வொரு அசைவையும் புலிகள் மிக உன்னிப்பாக அவதானித்து வருவது தெளிவாகிறது. அன்றைய தினம் காலை வானிலை சீரில்லாததால் இராணுவத் தளபதி இராணுவத் தலைமையகத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு செல்வதில் சில மணி நேரம் தாமதமேற்பட்டது.

இல்லையேல், ஏற்கனவே திட்டமிட்டபடி இராணுவத் தளபதி காலை 8.45 மணியளவில் பலாலி விமானத் தளத்தில் தரையிறங்கியிருப்பார். அந்த நேரத்திலேயே பலாலித் தளம் மீது புலிகள் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுமார் அரை மணிநேரத்தில் 18 ஷெல்கள் வீழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலானது இராணுவ தலைமைப் பீடத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத் தளபதியின் குடாநாட்டு விஜயத்தை புலிகள் எப்படி இந்தளவு துல்லியமாக அறிந்து கொண்டார்களென்ற கேள்வி அனைவரையும் பெரும் ஆச்சரியத்திலும் பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி புலிகளின் ஷெல் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். குடாநாட்டில் முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதிக்கு இவர் சென்றிருந்த போது, அந்த இடத்தை நோக்கி புலிகள் பலத்த ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தில் இராணுவத் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்ட வசமாக அந்த நேரத்தில் அவர் பலாலி செல்லாததால் அவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விரு தாக்குதல்களுமானது குடாநாட்டை புலிகள் எந்தளவு தூரம் கண்காணித்து வருகிறார்களென்பதை தெளிவுபடுத்துவதுடன் குடாநாட்டுக்கு வெளியிலிருந்தே புலிகள் குடாநாட்டை முற்றுகைக்குட்படுத்தி வருவதையும் நன்கு புலப்படுத்தி வருகிறது.

இராணுவத் தளபதியின் யாழ். விஜயத்தை புலிகள் எப்படி அறிந்து கொண்டார்களென்ற கேள்வி இராணுவத் தலைமைப் பீடத்தில் எழுந்துள்ளது. மிகவும் இரகசியமாகவும் ஒரு சில சிரேஷ்ட தளபதிகளுக்கு மட்டுமே தெரிந்த இந்தப் பயணத்தை புலிகள் எப்படி அறிந்து கொண்டார்களென்ற கேள்வி இராணுவத் தலைமையகத்தை குடைகிறது. புலனாய்வுத் தகவல்கள் மூலம் புலிகளால் இந்தளவுக்கு துல்லியமாக அறிந்து கொள்ளும் சாத்தியமில்லை என்பதால் இராணுவத் தரப்பே புலிகளுக்கு இந்தத் தகவலை வழங்கியிருக்க வேண்டுமென படைத்தரப்பு கருதுகிறது.

அப்படியாயின், கொழும்பிலிருந்து படைத்தரப்பு இந்தத் தகவலை புலிகளுக்கு வழங்கியதா அல்லது குடாநாட்டுக்குள்ளிருந்து (பலாலி) படைத்தரப்பு இந்தத் தகவலை புலிகளுக்கு வழங்கியதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் குடாநாட்டில் முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதிக்குச் சென்ற யாழ். மாவட்டத் தளபதி புலிகளின் ஷெல் தாக்குதலிலிருந்து மயிரிழையில் தப்பியதால், புலிகளுக்கு குடாநாட்டிலுள்ளிருக்கும் படைத்தரப்பிடமிருந்தே தகவல்கள் கிடைக்கின்றன என்ற சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளது.

ஏனெனில், இராணுவத் தளபதி குடாநாட்டுக்கு விஜயம் செய்வது குடாநாட்டிலிருக்கும் சில சிரேஷ்ட படைத் தளபதிகளுக்கும் கொழும்பிலுள்ள சிரேஷ்ட தளபதிகள் சிலருக்குமே தெரியுமென்பதால் இவரது யாழ். விஜயம் பற்றி கொழும்பிலிருந்து அல்லது குடாநாட்டிலிருந்து புலிகளுக்குத் தகவல் வழங்கப்பட்டிருக்கலாமெனக் கூறலாம்.

அதேநேரம், யாழ். மாவட்டத் தளபதி முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதிக்குச் செல்வது அங்குள்ள சில சிரேஷ்ட தளபதிகளுக்கு மட்டுமே தெரியவரும். கொழும்பிலுள்ள படைத்தரப்பினருக்கு தெரிவதற்கான சாத்தியம் குறைவென்பதால் அன்றைய தினம் யாழ். மாவட்டத் தளபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கான தகவலையும் இராணுவத் தளபதியை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கான தகவலையும் குடா நாட்டுக்குள்ளிருந்தே புலிகள் பெற்றிருக்கலாமெனப் படைத்தரப்பு கருதுகிறது.

அண்மைக்காலமாக முப்படைத் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவும் வடக்கே படை முகாம்களுக்கு அடிக்கடி விஜயம் செய்துவருகையில், படைத்தரப்பிடமிருந்து இவை தொடர்பான தகவல்கள் புலிகளுக்கும் கிடைத்து வருவது மிகப்பெரும் ஆபத்தெனவும் பாதுகாப்புத் தரப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

குடாநாட்டில், ஏற்கனவே இவ்வருடம் பெப்ரவரி மாதம் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றது. கொடிகாமம் பகுதியில் கவசப்படையணியின் அலுவலகமொன்று திறக்கப்பட்டபோது அங்கு குறிதவறாது நடத்தப்பட்ட பலத்த ஷெல் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் படுகாயமடைந்தனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த கட்டளைத் தளபதியான லெப்.கேணல் ஒருவர் பின்னர் மரணமானதுடன் படுகாயமடைந்த மேலும், மூன்று லெப்.கேணல்களில் ஒருவர் இன்றுவரை கடமைக்குத் திரும்பவே முடியாத நிலையிலுள்ளார். இந்த அலுவலகத்தில் திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பளை, பூநகரி உட்பட மூன்று திசைகளிலிருந்து சரமாரியாக ஷெல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத் திறப்புவிழாக்கூட முதலில் திட்டமிட்டபடி நடைபெறாது கடைசி நேரத்தில் ஒரு மணி நேரம் தாமதமாகவே நடைபெற்றது. இந்த நிலையில் கூட, சரியான நேரத்தில் அங்கு புலிகள் பலத்த ஷெல் தாக்குதலை துல்லியமாக நடத்தி படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியதன் மூலம், இது குறித்து புலிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த வைபவம் நடைபெறும் நேரம் ஒரு மணி நேரம் பிற்போடப்பட்டதும் தெரிவிக்கப்பட்டதாகவே படைத்தரப்பு கருதுகிறது. இல்லையேல் திறப்பு விழாவை கடைசி நேரத்தில் ஒரு மணி நேரம் பிற்போட்டது எப்படி புலிகளுக்கு தெரியவந்தது? எப்படி அவர்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தினார்களென்ற கேள்வியும் எழுகிறது.

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் புலிகள் மிகத் துல்லியமாக இலக்குகளைக் கணித்து ஒரே நேரத்தில் திடீரென பல திசைகளிலிருந்தும் ஷெல் தாக்குதல்களை நடத்தும்போது இலக்குத் தவறுவதில்லையென கருதப்படுகிறது. துல்லியமாகத் தகவல்களைப் பெறுவதுடன் அதன் பின் அவர்கள் துல்லியமாகத் தாக்குதல்களை நடத்துவது குறித்து படைத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கூட வவுனியாவுக்கு மேற்கே பம்பைமடு பகுதியில் இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் மீது புலிகள் மிகத் துல்லியமாக ஷெல் தாக்குதல்களை நடத்தி இரு ஆயுதக் களஞ்சியங்களை முற்றாக அழித்து பல நூறு ஆட்லறி ஷெல்களைக் காலியாக்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கில் புலிகள் தங்களது கண்காணிப்பை மிகவும் தீவிரமாக்கியுள்ளதுடன் புலனாய்வுத் தகவல்களை நன்கு திரட்டி மிகத் துல்லியமாகத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் படையினருக்கு அவ்வப்போது பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதேநேரம் தரைவழிவிநியோகத் தொடர்பற்ற யாழ். குடாநாட்டில் எவ்வேளையிலும் எங்கிருந்தும் தாக்குதல்களை நடத்தி எந்தப் பகுதிகளையும் செயலிழக்கச் செய்ய முடியுமென்பதையும் புலிகள் நிரூபித்து வருகின்றனர்.

புலிகள் வசம் தற்போது 122 மில்லிமீற்றர் ஆட்லறிகள் - 22 ம் 152 மி.மீ. ஆட்லறிகள் - 2 ம், 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள் மூன்றிற்கும் மேலிருப்பதுடன் அவற்றின் மூலம் துல்லியமாகத் தாக்கும் திறனும் கொண்டிருப்பது படையினருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவுள்ளது.

வன்னியில் புலிகளின் பிரதேசங்களைச் சுற்றியிருக்கும் பல இராணுவ முகாம்களில் 152 மி.மீற்றர் ரக நீண்ட தூர ஆட்லறிகளுள்ளன. இவற்றைப் பயன்படுத்தியே புலிகளின் பகுதிகளினுள் படையினர் தினமும் பலத்த தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். இந்த ரக ஆட்லறிகள் சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்திற்கு தாக்குதல்களை நடத்தக்கூடியவை.

தற்போதைய நிலையில் புலிகள் ஆட்லறிகளைப் பயன்படுத்தி இராணுவ இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறனைப் பெற்றுவிட்டமை அண்மைக்கால தாக்குதல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுவருவதால் அவர்கள் வசம் மேலும் சில 152 மி.மீ. ரக ஆட்லறிகள் சென்று விட்டால் நிலைமை குறித்து சிந்தித்துப் பார்ப்பதே கடினமெனப் படைத் தரப்புக் கருதுகிறது.

இதனால், வன்னியில் படை முகாம்களை புலிகளின் முற்றுகைக்குள்ளிருந்து பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. இல்லையேல், இங்குள்ள படை முகாம்கள் சில புலிகள் வசம் வீழுமானால் அது ஏனைய படை முகாம்களினது வீழ்ச்சிக்கும் வழி வகுத்து விடலாமென்ற அச்சம் படைத்தரப்புக்குள்ளது.

முன்னர் சயனைட் வில்லையுடன் திரிந்த புலிகள் பின்னர் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறினர். அதன்பின் சயனைட்டுக்குப் பதிலாக இடுப்பில் வெடிகுண்டைக் கட்டி நடமாடினர். சயனைட் அருந்தி ஒரு போராளி உயிர்துறப்பதைவிட, தப்ப முடியாதவொரு சந்தர்ப்பத்தில் இடுப்பில் பொருத்தியிருக்கும் குண்டை வெடிக்க வைக்கும்போது எதிரிக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்த முடிவு செய்தனர்.

தற்போது அவையெல்லாவற்றுக்கும் அப்பால் கருவிகளை மிகத் துல்லியமாகக் கையாள்வதன் மூலம், இருந்த இடத்திலிருந்து மிக நீண்ட தூர இலக்குகளை மிகத் துல்லியமாகத் தகர்ப்பதன் மூலம் எதிரியை நிலைகுலையச் செய்து வருகின்றனர். இது கள முனையிலும் பாரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.

இவ்வாறு புலிகளின் போர்முறை மாற்றம் பெற்று வருகையில், வட பகுதிப்போர் முனையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. தினமும் சிறு சிறு மோதல்கள் இடம்பெறுகின்றன. இது எவ்வேளையிலும் பாரிய சமராக மாற்றம் பெறலாம். இதற்கு இரு தரப்பும் தயாராகவேயுள்ளன. இதனால் வடக்கில் பருவமழைக்கு முன்னர் பாரிய சமருக்கான சாத்தியங்கள் மிக அதிகம்.

Please Click here to login / register to post your comments.