யுத்த முயற்சியில் கால் பதிக்க எத்தனிப்பது பெரும் பொருளாதாரப் பின்னடைவையே தரும்

ஆக்கம்: டெனி அத்தபத்து (தமிழில்: நாடோடி)
அரசு குடுமிமலையைக் (தொப்பிகல) கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, மேலுமொரு யுத்த முயற்சியில் கால்பதிக்க எத்தனித்து வருகிறது. இந்த முயற்சி சாதகமானதா இல்லையா என்பதை போரியல் நிபுணர்களே தீர்மானிக்கவேண்டும்.

ஆனால், இந்நாட்டு அரசியல்வாதிகளின் கொள்கை வழி எண்ணங்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இவை எவ்வாறானபோதிலும், நலிவுற்றதொரு நாடான இலங்கை, என்ன செய்யப்போகிறது என்ற வினாவுடன் இன்றும் கடந்த காலத்திலும் இந்த யுத்தம் விழைவித்த விழைவித்து வரும் விழைவுகளையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைகிறது இக்கட்டுரை.

கடந்த ஜூலை 22ஆம் திகதிய "லக்பிம' பத்திரிகையில் பிரசுரமான இக்கட்டுரை றுஹூணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான ஆய்வுத்துறை சார் பேராசிரியர் டெனி அத்தபத்துவால் எழுதப்பெற்றதாகும்.

அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகின்றது.

யுத்தத்தை முன்நோக்கி நகர்த்தவேண்டுமெனக் கூறும் தரப்பினரும் மற்றும் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனக் கூறும் தரப்பினரும் இன்று இந்நாட்டில் உள்ளனர். அரச தரப்பினரால் மாத்திரமல்ல வெவ்வேறு அரசியல் கட்சிகள் மத்தியிலிருந்தும்கூட இவ்வாறு மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தை வடபுலம் வரையில் விஸ்தரித்துச் செல்வதா இல்லையா என்பது குறித்து அரசு இன்னமும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வரவில்லை.

எவ்வாறானபோதிலும் யுத்தத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதால் இலங்கையின் பொருளாதாரம் எந்தளவு தூரத்துக்கு வீழ்ச்சியடையும் என்பது குறித்து றுஹூணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானத் துறையின் பேராசிரியரான டெனி அத்தபத்து இங்கு விரிவாக கருத்துகளை வெளிப்படுத்துகையில்,

""தற்போது அரசுத் தரப்பு, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொண்டுவரும் யுத்தத்தை தீவிரமாக முன்நகர்த்திச்சென்று அதற்கொரு முடிவு காணவேண்டுமென வலியுறுத்திவரும் தரப்பொன்று இன்று இந்நாட்டில் உள்ளது.

வேறு சில தரப்புகள், தொப்பிகலை யுத்தத்தில் அரசு பெற்ற வெற்றியோடு இந்த யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, பேச்சுகள் மூலமான தீர்வொன்றை எட்ட முன்வரவேண்டியுள்ளது எனக் கருத்து வெளியிட்டு வருகின்றன. ஆனாலும் யுத்தத்தை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் அளவுக்கு இலங்கையின் வசம் பொருளாதார பலம் இல்லை'' என்ற முக்கியத்துவம்மிக்கதொரு கருத்தை பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கருத்து வழங்குகையில்,

"இந்த யுத்தத்துக்காக ஏற்கனவே அரசுக்கு ஆண்டொன்றில் 100 பில்லியன் ரூபாக்களுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்யவேண்டி நேர்ந்துள்ளது.

காலப்போக்கில் இந்த யுத்தச் செலவினம் மென்மேலும் அதிகரித்துச் செல்லுமேயன்றி எவ்விதத்திலும் குறைவடையப் போவதில்லை. எனவே, நீண்டகாலத்துக்கு யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது எனத் தீர்மானித்து யுத்தத்தை வலிந்து இழுத்து விட்டுக்கொள்வதால் அது நாட்டுக்கு எந்தவிதத்திலும் இலாபகரமானதாக அமையமாட்டாது.

பெரும் அழிவுகளையே சந்திக்க நேரும். அந்தவகையில் முன்னேற்றமடைந்து வரும் இலங்கையைப் போன்ற நாடொன்றுக்கு யுத்தச் செலவினம் என்பது பெரும் அழிவுகளையும் பாரிய அளவிலான பாதிப்புகளையுமே ஏற்படுத்தும்".

பொருளாதாரச் செயற்பாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் பேராசிரியர் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களுக்கமைய யுத்தம் தொடர்வதன் காரணமாக பெரும் தொகை நிதி விரயமாக்கப்படுவதோடு அப்பாதிப்பு நின்றுவிடப் போவதில்லை. பாரிய அளவிலான உயிரிழப்பு மற்றும் சொத்திழப்புகளுக்கும் அது காரணமாகிறது.

தமது உடல் உழைப்பை நாட்டுக்கு ஈந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பெரும் பங்களிப்பு வழங்கும் இந்நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கும் இளைய சமுதாயம் இவ்விதம் அவலமான விதத்தில் தமது பெறுமதிமிக்க உயிர்களைக் காவு கொடுக்க நேர்வது பெரும் அபாக்கியமே துரதிஷ்டவசமானதே.

அந்தவகையில், நாட்டின் உற்பத்திச் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் மனித உழைப்பை நாடு இழக்க நேர்வதானது, நாட்டின் எதிர்காலப் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு ஏற்படுத்தப்படும் பாரிய அளவிலான பாதிப்பு என்பதைப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை எனவும் பேராசிரியர் டெனி அத்தபத்து சுட்டிக்காட்டுகிறார்.

சொத்திழப்பு மற்றும் அடிப்படை வசதிகள் முற்றாக அழிவுற நேர்வது, யுத்தம் ஏற்படுத்தும் பாரதூரமான பாதிப்பு என்பவற்றையும் அவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். அவை தனியாரின் சொத்துக்களாக இருப்பினும் சரி, அல்லது அரச சொத்துக்களாக இருப்பினும் கூட அவ்வாறு இழக்கப்படும் அசையும், அசையாத அனைத்துச் சொத்துக்களும் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்குபவையே.

அந்தவகையில், சொத்திழப்புகள் என்பது பொருளாதாரத்தை நலிவுறச் செய்யும் பாரிய அளவிலான பாதிப்பாகும். இந்த யுத்தம் காரணமாக வடபுலத்தில் பெருமளவிலான தரைப் பிரதேசம், விவசாயத்தை உரிய வகையில் மேற்கொள்ள இயலாத நிலைப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இது ஈடுசெய்ய இயலாத பெரும் பாதிப்பாகும். அந்தவகையில், கடந்த காலத்தில் விவசாய அபிவிருத்திக்கு இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் மிகப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.

ஆனால், இன்று அப்பிரதேசங்கள் புதர் மண்டிப் போய் தரிசு நிலங்களாக மாறியுள்ளதையே காணமுடிகிறது. இந்த நிலைப்பாடு இந்நாட்டின் பொருளாதார ஈட்டல்களுக்கு விழுந்துள்ள பெருத்த அடியாகும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

அத்தோடு, விவசாயத்தை நம்பித் தமது வாழ்க்கையை நடத்திவந்த குடும்பங்களின் பொருளாதார நிலை பெரும் பின்னடைவை எட்ட நேர்ந்துள்ளமையானது, நாட்டின் உற்பத்திச் செயற்பாடுகள் நலிவுறுவதற்குக் காரணமாகியுள்ளது எனவும் அப்பிரதேசங்களில் மாற்றுத் தொழில் மார்க்கங்களை மேற்கொள்வதற்கு புதிதாக தொழிற்சாலைகளை நிறுவுவதற்குப் பொருத்தமான புறச்சூழல் நிலவாமை மற்றும் ஏற்கனவே செயற்பட்ட தொழிற்சாலைகள் குண்டுத் தாக்குதல்கள் போன்ற பாதிப்புக்கள் காரணமாக அழிவுற நேர்ந்துள்ளமை காரணமாக நாட்டின் தேசிய உற்பத்தி இலக்கைப் பூரணப்படுத்திக்கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

அடிப்படை வசதிகள் அழிவுற நேரும்

அடிப்படை வசதிகள் அழிவுற நேர்வது தொடர்பாக அவர் கருத்து வழங்குகையில்,

மின்சாரம், குடிதண்ணீர், போக்குவரத்து மார்க்கங்கள், பாலங்கள், தொலைபேசிச் சேவை, பொதுக் கட்டடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் காரணமாக எந்தளவுக்கு அழிந்து போயுள்ளன? ஒரு விதத்தில், இந்த அழிவுகள் அனைத்தையும் கணிப்பிட்டுப் பார்க்கும்போது அது, பல ஆயிரம் பில்லியன்களாக இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மறுபுறத்தில், இவ்வாறு யுத்தம் காரணமாக அடிப்படை வசதிகள் அழிவுற நேரும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நேரும்வேளையில், அரசு அப்பிரதேசங்களில் அழிவுறும் அனைத்து அடிப்படை வசதிகளையும் மீண்டும் நிர்மாணித்து வழங்கவேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகிறது. இவ்வாறு யுத்த மோதல்கள் காரணமாக அடிக்கடி அந்த வசதிகள் அழிவுற நேரும்போது ஒவ்வொரு தடவைகளிலும் அவற்றைப் புதிதாக நிர்மாணித்து வழங்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், தொடர்ந்தும் இவ்வாறு வளங்கள் அழிந்து போகும் நிலைப்பாட்டை நாம் எவ்வாறு எதிர்கொள்ளமுடியும் என்பதும் அவர் முன்வைக்கும் வாதமாகும்.

நாட்டின் நிதி நிலை திருப்திகரமானதாக அமையாதவிடத்து, அந்த நிலைப்பாடு, நாட்டின் பொதுமக்களது வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்குப் பெரும் அசௌகரியங்களையும் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடக் காரணமாகிறது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கமைய, இன்று நாட்டில் உருவாகியுள்ள நிதிப்பற்றாக்குறைக்கு, கடந்த காலத்தில் நாம் முகம் கொடுக்க நேர்ந்த அவலம்மிக்க வேதனையான யுத்தம் விழைவித்துள்ள பாதிப்பே காரணமாகியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தநிலை தொடர்ந்தும் நிலவுமானால், நாட்டில் வாழ்க்கைச் செலவீனம் மென்மேலும் அதிகரித்துச் செல்வதைத் தடுத்து நிறுத்த இயலாது போவதுடன் அதன்காரணமாக நாட்டுமக்கள் (சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்தது) போன்று துடிதுடித்துத் துன்புற நேர்வதையும் தடுத்து நிறுத்த இயலாது போகலாம் என்பதையும், எனவே இந்த யுத்தத்துக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு இன்று முகம் கொடுத்துள்ள அவல நிலை குறித்து மேலும் அவர் கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கிறார்.

அரசு கடன்தொகைகளில் சிக்குண்டு விழி பிதுங்க நேரும்

நாட்டின் பொருளாதார நிலை திருப்திகரமானதாக நிலவாதவிடத்து, நாட்டின் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்கள் மற்றும் உதவி நிதித்தொகைகளைப் பெறுவதும் பெரும் சிரமத்துக்குரியதொரு காரியமாக அமையும். இன்று இந்த நாடு அத்தகைய சிரமநிலைக்கு முகம் கொடுத்து வருவதை நாமின்று அனுபவித்து வருகிறோம்.

இத்தகைய சிரம நிலைக்கு அரசு முகம் கொடுத்துள்ளமை காரணமாகத் தற்போது மிக அதிக வட்டிக்குக் குறுகிய காலத்தில் மீளளிக்கும் கடன் தொகைகளைப் பெற வேண்டிய இக்கட்டு நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கெள்ள இயலாது போவதன் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி கீழிறங்கிச் செல்லும் வேகம் மென்மேலும் அதிகரிக்கக் கூடும்.

அதேபோன்று, இறக்குமதிச் செலவீனம் அதிகரிப்பதோடு நாட்டில் நிலவும் குழப்பமான நிலைப்பாடு காரணமாக ஏற்றுமதிச் செயற்பாடுகள் பெரும் சரிவை நோக்கித் தள்ளப்படுகிறது. இவ்வாறு நாட்டின் ஏற்றுமதிச் செயற்பாடுகள் பெரும் பின்னடைவை எட்டுவதால் வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை மென்மேலும் அதிகரித்துச் செல்ல நேர்கிறது. அதற்குப் பரிகாரம் காண முற்படும் அரசு மென்மேலும் கடன்தொகைகளில் சிக்குண்டு விழிபிதுங்கி நிற்க நேர்கிறது.

அத்தோடு வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறை இடைவெளியை நிரப்புமொரு முயற்சியாக அரசு புதிதாகப் பண நோட்டுகளை அச்சிடுகிறது.

அதன் பலாபலனாக நாட்டின் பணவீக்கம் மென்மேலும் அதிகரித்துச் செல்கிறது. இவ்வாறு பணவீக்கம் அதிகரிக்கும்போது, அதன் பலாபலனாக ஊழியர்களுக்கு அதிகரித்த சம்பளங்களை வழங்கவேண்டி நேர்கிறது. அச்செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ளத் தவறுமிடத்து, அத்தரபினர் சம்பள அதிகரிப்புக் கோரும் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் அதிகரிக்கக் கூடும். இந்த நிலைப்பாடு சுற்றிச் சுழன்று நாட்டின் மீதே பேரிடியாக விழக்கூடும்.

யுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் மறுபுறத்தில், யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இராணுவத்தை அபிவிருத்தி செய்யும் போராயுத போர்த்தளபாடக் கொள்ளவனவுக்கு, தாக்குதல் விமானக் கொள்வனவுக்கு மேலதிக விலைகளைச் செலுத்தவேண்டி நேர்கிறது. படைப் பிரிவுகளுக்கு அதிகரித்த சம்பளங்களையும் வழங்க வேண்டி நேர்கிறது. இவ்வாறு யுத்தம் தொடர்பாகச் செலவிடப்படும் அனைத்துத் தொகைகளும் முதலீட்டுத் தொகைகள் அல்ல. அதன்காரணமாகப் பொருளாதார மேம்பாட்டுக்கான இலாபங்கள் நாட்டுக்குக் கிடைப்பதில்லை. பணவிரயம் மாத்திரமே நாட்டுக்குக் கிடைக்கும் பலாபலனாகும்.

அதேபோன்று, அரசுடன் யுத்தம் புரியும் எதிர்த்தரப்பும்கூட விரயமாக்குவது நாட்டின் பொது நிதியேயாகும். அத்தரப்புகள் எத்தகைய மார்க்கங்களில் பணத்தை ஈட்டிக்கொண்டாலும்கூட அத்தொகைகள் அனைத்தும் நாட்டின் பொது நிதியேயாகும். அந்தவகையில், இந்த இரு தரப்புகளுமே நாட்டின் பொது நிதியையும் வளங்களையுமே அழித்து வருகின்றன என்றே கூறமுடியும்.

இவ்வாறு யுத்தத்தின் காரணமாக ஏற்படுத்தப்படும் நேரடிப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் அத்தபத்து, யுத்தத்தின் பக்கவிளைவுகளாகப் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளும் பாரிய அளவானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் யுத்தம் இடம்பெறாத பிரதேசங்களில் பொருளாதாரத்துக்கு யுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் மிக அதிகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில்,இன்று உல்லாசப் பயணத்துறை பெரு வீழ்ச்சி கண்டுள்ளது. யுத்தம் நிலவாத பிரதேசங்களில் இடம்பெறும் குண்டுவெடிப்புகள் போன்றவற்றால் மனித சிரமத்தால் கட்டியெழுப்பப்படும் வளங்கள் அழிவுறுவது, கட்டடங்கள் சரிந்து வீழ்வது, அடிப்படை வசதிகள் அழிவுறுவது போன்றே அன்றாடம் மேற்கொள்ளப்படும் பொருளாதார ஈட்டல் தொடர்பான உற்பத்திச் செயற்பாடுகளுக்கு மறைமுகமாக ஏற்படுத்தப்படும் பாதிப்புகளும் பாரிய அளவிலானவை என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு விழுந்துள்ள பெருத்த அடி

மற்றொரு புறத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்வுகளுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பான செலவினங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச செல்கின்றன. அதேபோன்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வராத நிலைப்பாடும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு விழுந்துள்ள பெருத்த அடியாகும்.

பலனளிக்கும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு உள்ள வாய்ப்புகள் சிதறுண்டு போயுள்ள நிலைப்பாட்டையும் நாட்டின் இன்றைய நிலை தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. நாட்டில் இன்று உருவாகியுள்ள இந்த நிலைப்பாடு காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்களும் கூட வேற்றுநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதை இன்று காணமுடிகிறது.

இலங்கை ஒரு யுத்த நாடு அபாயகரமானது என்ற கருத்து வெளிநாடுகளில பரவி வருவதன் காரணமாக அந்த நாடுகளில் இலங்கை குறித்து நிலவிவரும் கருத்துகள் திருப்திகரமானவை அல்ல. அந்த நிலைப்பாடு இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப் பாதிப்பானதாகும், என்பதும் அவரது கருத்து வெளிப்பாடாகும்.

யுத்தம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டு எதிரிகள் பூண்டோடு அழிக்கப்படவேண்டும். அதன்பின்னரே நாட்டின் பொருளாதாரம் கட்டி எழுப்பப்படல் வேண்டும் எனக் கருத்துகளை வெளிப்படுத்திவரும் தரப்புகளுக்கு இவர் இவ்வாறு பதிலளிக்கிறார்:

குடுமிமலை (தொப்பிகல) மீட்கப்பட்டதன் பின்னர், முல்லைத்தீவு உள்ளிட்ட கிளிநொச்சி அடங்கும் வட பிரதேசம் கைப்பற்றப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டை அரசு இன்று கைக்கொள்ள முயல்வதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்த முயற்சி கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டதைப் போன்று இலகுவாக வெற்றிபெறக் கூடியதொருகாரியம் அல்ல. அது நீண்டகால யுத்தமொன்றாக இழுபடுவது நிச்சயமே. குறுகிய காலத்தில் அப்பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொள்ளமுடியமென மனப்பால் குடிப்பது அந்தளவுக்கு புத்திசாலித்தனமானது அல்ல.

அரசுப்படைகள் அத்தகைய தாக்குதலொன்றை மேற்கொள்ள நேர்கையில், விடுதலைப்புலிகள் தமது முழுமையான போர்ப் பலத்தையும் களத்தில் இறக்குவார்களென்பதில் எந்தவொரு சந்தேகத்துக்கும் இடமில்லை. அந்தவகையில், அந்த யுத்த மோதல்கள் பல ஆண்டுகளை விழுங்கும் நீண்டதொரு யுத்தமாகவே இழுபடக்கூடும்.

நாடு இன்று முகம்கொடுத்துள்ள பொருளாதார நலிவுநிலையில் அரசால் இத்தகைய யுத்தமொன்றை நீடித்து மேற்கொள்வது சாத்தியமானதா என்பது கேள்விக்குரியதாகிறது. மேலும், அந்த யுத்தம் ஏற்படுத்தும் பொருளாதார ரீதியிலான அழிவும் பாரிய அளவிலானதாகவே இருக்கும்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைத் தக்கவைத்துக் கொள்வது, மீண்டும் தொடரும் யுத்தத்துக்கு மேலதிகச் சிப்பாய்களைச் சேர்த்துக் கொள்வது போன்ற முயற்சிகள் எந்தளவு தூரத்தில் நிறுத்திக்கொள்ளப்படும் என்பனவற்றை ஊகிப்பதும் சிரமமானதே.

சரியான தீர்மானத்துக்கு வருவதே புத்திசாலித்தனமானது

இவ்வளவுக்கும் அப்பால் யுத்தத்தைத் தொடர்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு போரியல் நிபுணர்களைச் சார்ந்ததாகும். அது தொடர்பாக இந்நாட்டு அரசியல்வாதிகளின் கொள்கைவழிக் கருத்துகளும் இங்கு முக்கியத்துவம் பெறும் ஒரு விடயமாகும். ஆனாலும், இலங்கையைப் போன்ற நலிவுற்ற நாட்டுக்கு இந்த முயற்சி எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல. ஏற்கனவே நலிவுற்றுள்ள பொருளாதாரம் இந்த யுத்த முயற்சி மூலம் அதள பாதாளத்தில் விழுவதற்கே வழி வகுக்கும்.

எனவே, யுத்தத்துக்குப் பதிலாக பேச்சுகள் மூலமான தீர்வொன்றுக்கே எத்தனிக்க வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைப்பாடு மற்றும் இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியின் நலன் இவற்றைக் கவனத்தில்கொண்டு மிகச் சரியான தீர்மானத்துக்கு வருவதே புத்திசாலித்தனமானது'' என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். *

Please Click here to login / register to post your comments.