புதிய உலக ஒழுங்கில் பூர்விக தேசிய இன விடுதலை

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்

இலங்கை விவகாரத்தில் தலையிடும் நாடுகள் அனைத்தும், தமிழ் மக்களை தேசிய சிறுபான்மையினமாக அரசு கூறுவது போன்று கருதுவதே தற்போதைய சிக்கல் நிலைமைக்கு பெருந்தடையாகவுள்ளது.

தேசிய இனம் (Nation) என்கிற வரையறைக்குள் தமிழ் மக்களை உள்ளடக்கினால் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு விடுமென்ற அச்சமே 'சிறுபான்மையினர்" என்ற சொல்லாடலை பயன்படுத்தத் தூண்டுகிறது.

தேசிய இனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பொதுப்பண்புகளான தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரே மொழி, கலாசாரம், தொன்மை போன்றவை தமிழ் மக்களிடம் அமைந்திருந்தும் இறையாண்மை என்கிற ஆக்கிரமிப்புச் சிறைக்குள் அவர்களை அடைத்தலே பிராந்திய நலனிற்கு இசைவாக அமைகிறது.

தேசிய இனம், சிறுபான்மையினம் என்கிற மாறுபட்ட பரிமாணம் கொண்ட இரு வேறு கருத்து நிலைகளை தமக்கேற்றவாறு பொருத்திப் பார்க்கும் போக்கு, பிரச்சினையின் அடிப்படையை பலவீனமாக்க உதவுகிறது.

தேசிய விடுதலைப் போராட்டமானது, வர்க்கப் போராட்டத்தின் ஒருபடி நிலையாக கணிக்கும் கோட்பாடு, முன்பு மாக்ஸியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனாலும் அத்தேசிய விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டமாக அமையும் போது வர்க்கப் போராட்டத்தை நோக்கிய வரையறைக்குள் அதனை இணைத்து பார்ப்பதில் அம்மாக்ஸியவாதிகளுக்கு சிக்கல் ஏற்படவில்லை.

தேசிய இனம் (Nation), தேசிய இனத்துவம் (Nation hood) குறித்து ஜோசப் ஸ்டாலின் முன்வைத்த கருத்துநிலை இற்றைவரை பல மாக்ஸிஸ அறிஞர்களால் பின்பற்றப்படுவது போல் தெரிகிறது.

தொம் நயிரின் (Tom Nairn), ஜோன் ஈரென்றிச் (John Ehrenreich) போன்ற அறிஞர்கள் மாறுபட்ட சில புதிய கோட்பாடுகளையும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கியல் போக்கு குறித்து முன் வைத்துள்ளனர்.

"Nationalism is not a Form of Class Struggle nor even a Product of Class Struggle" தேசியவாதமென்பது வர்க்கப் போராட்டத்தின் ஒரு படி நிலையல்லவென்றும், அதன் உற்பத்தியாகவும் அமையாதெனவும் தமது வாதத்தை வெளியிடுகிறார்கள். அத்தோடு It is an Autonomous Force; A Second Motor of History என்கிற முடிவிற்கும் வருகிறார்கள்.

அதாவது தேசியவாதமானது வரலாற்று அசைவியக்கத்தின் இரண்டாம் படி நிலையான சுய உந்து விசை என்று புரியப்படுகிறது. தேசியவாதக் கோட்பாட்டை அடோல்வ் ஹிட்லர் முன்னிலைப் படுத்தும் போது பாஸிஸத்தின் பிற்போக்குவாதமாகவும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான சக்திகள் கையாளும் போது முற்போக்கானதாகவும் கணிப்பிடப்பட்டது.

அதேவேளை சன்டினிஸ்டாக்களின் ஆட்சிக்கால நிக்கராகுவாவில் பூர்வீக தேசிய இனங்களின் பிராந்திய சுயாட்சி உரிமை, உறுதிப்படுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூர்வீக தேசிய இனம் என்கிற அடிப்படைக் கோட்பாட்டை பெருந்தேசிய இன அதிகார வர்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதே முதன்மையான இன முரண்பாட்டிற்கு அடித்தளமிட்டுள்ளது.

தேசிய இனம், தேசிய சிறுபான்மை என்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் ஒரு பூர்வீக தேசிய இனம் (Native Nation) என்பதனை அங்கீகரிக்கும் வரை இனப்பிச்சினைக்கான தீர்வின் சாத்தியமான கூறுகள் வலுவற்றுப்போகுமென்பதே நிதர்சனமாகும்.

ஏகாதிபத்திய முகாம், சோசலிச முகாம், காலனி முகாம் என்ற மூவுலகக் கோட்பாட்டின் அடிப்படையில் உலகம் பிரித்தறியப்பட்ட காலத்து தேசிய விடுதலைப் போராட்டங்களின் முரண்பாட்டு நிலைகளும் தற்கால ஒருதுருவ நிலை உலகக் கோட்பாட்டில் நடைபெறும் தேசிய இன விடுதலை போராட்டங்கள் எதிர்கொள்ளும் புதிய முரண்நிலை சவால்களும் பண்பு ரீதியில் வேறுபட்டவையாகவுள்ளன.

அதாவது சமகாலத்து பின் நவீனத்துவவாதிகள் (Post Modernist) கூறும் விளக்கங்கள் விசித்திரமாகவுள்ளன. தேசியத்தையும் பாஸிஸத்தையும் மெல்லிய நுண்ணிய கோடொன்று பிரிப்பதாகவும், அது ஒரு மாயை (Myth என்பது போன்றொரு புரிதலையும் திணிக்க முனைகிறார்கள். வரலாற்று நகர்வில் பதியப்பட்ட 'தேசியம்" பற்றிய தத்துவக் கோட்பாடுகளை உடைத்து தளமற்ற பெருவெளியில் உலகமயமாதலின் பொதுக் கோட்பாடான ஓர் உலகக் கருத்துருவத்தை விதைப்பதற்கு அவசரப்படுகிறார்கள்.

அதேவேளை நாட்டின் தலைநகர் வரை உலக மயமாதலின் கரங்கள் நீட்சியுற்றிருந்தாலும், கிராமங்களின் வாசல் கதவுகளை தட்டும் காலம், நில ஆக்கிரமிப்பு போர்வையில் முயற்சிக்கப்படுகிறது.

ஆகவே தேசிய உயிர்ப்பினைத் தக்க வைப்பதைவிடுத்து, பூகோள மயமாதலின் சந்தைக்கான நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்வதனூடாக இன அடையாளமிழத்தலை முற்போக்கான வரலாற்றுத் தேவையாக உருவகிக்க முயல்பவர்களே தேசிய உணர்வு, பாசிசத்தை நோக்கி நகருமென பதற்றமடைகின்றார்கள்.

அறிவியல், விஞ்ஞானம் ஆகியன வளர்ச்சியடைந்த மேற்குலகின் மொழி, கலாசார விழுமியங்களை கேள்வியற்று உள்வாங்கி, அதனோடு இசைந்து போவதன் மூலம் வரலாற்று இயங்கியல் வளர்ச்சியின் பாதையில் இணைந்து கொள்ளலாமென்கிற நாடோடிக் கூட்ட மனோபாவம் வளரவே தனித்துவ தேசிய இன அடையாள மறுத்தலென்பது உரத்துக் கூறப்படுகிறது.

சந்தைப் போட்டியில் ஈடுபடும் வல்லரசுகள், மொழித் திணிப்பையும் தமது ஆதிக்க நலனிற்கு ஏதுவாக, ஊடகங்கள் மூலம் ஏற்படுத்துகின்றன. ஈரான் மீதான ஆக்கிரமிப்பிற்கு யூரோ நாணயத்தின் எழுச்சியும் ஒரு காரணியாகும். டொலரின் வீழ்ச்சிக்கு வெனிசுலாவின் எண்ணெய்ப் பங்கீடும் மறைமுக அழுத்தக் காரணியாகும். இவற்றைவிட அமெரிக்கச் சந்தையினுள் நுழைய சீனதேசத்திற்கு அத்தியாவசிய ஆங்கில மொழியாற்றல் வரிந்து திணிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்த ஜப்பான், சீனா மற்றும் சில மேற்குலக வல்லரசுகளில் தாய்மொழிக் கல்வி மறுக்கப்படவில்லை. தேசியத்தின் அடிக்கட்டுமானங்கள் சிதைவுறாமலே, உலக சந்தைப் கோட்டினுள் தம்மை அந்நாடுகள் இணைத்துக் கொள்கின்றன.

ஏகாதிபத்தியங்களின் உச்சகட்ட வளர்ச்சி நிலையின் ஒரு படி நிலையாகவே இந்த உலகமயமாதல் கோட்பாடு முனைப்புப் பெறுகிறது.

சந்தைப் போட்டி விரிவாக்கத்தில், ஒன்றையொன்று விழுங்கும் முரண்நிலைப் போட்டியும் தவிர்க்க முடியாமல் வெளிப்படுத்தப்படுகிறது. உலகின் ஏகோபித்த வல்லரசு ஸ்தானத்தை தங்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் எத்தனங்கள், எண்ணெய்வள நாடுகளை தமது பிடிக்குள் கொண்டு வருவதாகவும், போட்டியாளர்களை அழிப்பதற்கு பிரயோகிக்கப்படுகிறது. இவ்வகையான ஆதிக்கப் போட்டிச் சூழலிற்குள் தனித்துவத்தை நிலைநிறுத்த அனைத்து பிற்போக்கானவைகளாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

தமது தேசிய இனத்துவ விழுமியங்களைப் பேணியவாறு சந்தைக் களமாகத் திகழும் வளர்ச்சியடையாத நாடுகளின் பூர்வீக தேசிய இனத்துவத்தை சிதைக்க வேண்டிய தேவையும், இவ்வுலகமயமாக்கலின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி தான். சிறுபான்மையினர் என்கிற கருத்தை நாட்டு இறையாண்மைக்குள் இலகுவாகச் செருகி விடுகிறார்கள்.

தாயகக் கோட்பாட்டை சிதைக்கும், ஆளும் வர்க்கங்களின் செயற்பாடுகளிற்கு பயங்கரவாதத்திற்குகெதிரான போர் என்ற அடிப்படையில் வெளிப்படையாகவே ஆதரவினையும் தெரிவிக்கிறார்கள்.

ஓருலகச் சிந்தனையில் தேசிய இன தனித்துவங்கள் கரைந்து போகுமென்பதே பூகோள மயமாக்கலின் கோட்பாடு இதனடிப்படையில், உலக மயமாக்கலுடன் நேரடி முரண்நிலையை உருவாக்காமல், போராட்டத்தை தக்கவைத்து, விடுதலையை வென்றெடுக்கும் வழிமுறையை சமராடிகள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினையாகவுள்ளது.

பேச்சுவார்த்தை ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு, எட்டப்பட முடியாதெனப் புரிந்து கொள்ளப்பட்டாலும், பூகோள மயமாக்கலினால் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை சிங்கள தேசம் புறக்கணித்து நில ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தும் இவ்வேளையில் தமிழர் தேசியத் தலைமையினால் எடுக்கப்படும் விடுதலைக்கான பாதை அம்மக்களின் பிறப்புரிமையை வரலாற்றில் பதிவாக்க வேண்டும்.

ஒரு மொழி இரு நாடு, இரு மொழி ஒரு நாடு என்கிற யாப்பு உருவாக்கியின் எச்சரிக்கை மறைந்து இரு தேசமா அல்லது இரு நாடுகளின் கூட்டரசா என்பதன் அடிப்படையில் இன முரண்நிலை தீர்க்கப்படவேண்டுமென்பதை சர்வதேசமும், சிங்களமும் தீர்மானிக்கும் காலம் உருவாவது தவிர்க்க முடியாததாகிறது.

யதார்த்த களநிலைமைகளை மறுதலித்து, தேசிய இனக்கோட்பாடுகள் வகுப்பு விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாக அமையலாம்.

இனத்திற்கான வரையறைகள் தத்துவங்கள், பேசுபொருளாகி, கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் போது அவ்வினமே அழிக்கப்பட்டிருக்கலாம். அழிக்கப்பட்ட இனத்தின் போராட்ட வரலாறு குறித்தும், அதை நிறைவேற்றியவர்கள் ஐ.நா. சபையில் அதற்கான விளக்கத்தை பயப்ரா (BIAFRA) தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அழித்த நைஜீரியாவின் இராணுவ ஜெனரல் போன்று இறுகிய நெஞ்சுடன் கூறலாம்.

ஆயினும் இலங்கை அரசு முகங்கொடுக்கும் தேசிய விடுதலைப் போராட்ட சக்தியின் முழுப் பரிமாணத்துள், படைக்கட்டுமானப் பிரிவுகளும் அரசுக்குரிய உட்கட்டுமானங்களும், அதைவிட அடக்குமுறைக்குள்ளாகும் தமிழின மக்கள் கூட்டத்தின் ஏகோபித்த ஆதரவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், இராணுவ சிந்தனை வயப்பட்ட அரசியல் தீர்வு போராட்ட சக்திகளின் சிதைவில் தங்கியிருப்பதால் வன்முறைக்களத்தில் தீர்வின் முடிவுவரை எழுதப்படுமென்பதே வரலாற்று நிகழ்வாக அமையும். இன்னொரு நாட்டின் மீதான நில ஆக்கிரமிப்பின் வெளிப்பாடுகளே இச் செயற்பாடுகள். ஆக்கிரமிப்பாளரே, தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு யுத்தம் புரியும் போது சமூக விஞ்ஞானக் கருத்துருவாக்கிகளுக்கு மட்டும் இவை புரியப்படுவதில்லை.

ஓர் இனத்தின் பிரிந்து வாழும் உரிமை மறுக்கப்படுவதும், ஜனநாயக விரோதமான செயல்தான் பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்குள் வாழவேண்டுமென நிர்ப்பந்திப்பதும் பாசிசச் சிந்தனையின் மற்றுமொரு வடிவந்தான்.

வர்க்க பேதமற்று, தேசிய இனமொன்றின் அழிவு நிகழ்த்தப்படும்போது அழிப்பவனின் வர்க்க நிலைப்பாடுபற்றி ஆராய்ந்து, இரண்டு இனங்களும் இணைந்து வர்க்கப் புரட்சியை முன்னெடுத்தலே சரியான வழிமுறையென்று கற்பனாவாத சித்தாந்தங்கள் பேசுவதும் கனவுநிலைதான்.

ஏனெனில், தத்துவங்களையும், வரலாறுகளையும் உருவாக்கியவர்கள் மக்களே. இனமொன்றினை அழிக்கும் வரலாறுகளை தோற்றுவிக்கும் பிற்போக்குச் சக்திகளை அழித்திடும் புதிய வரலாறுகளை படைப்பதும் இதே மக்கள்தான். கலைமட்டுமல்லாது, சித்தாந்தங்களும் மக்களுக்கானதாக இருத்தல் வேண்டும்.

Please Click here to login / register to post your comments.