தொப்பிகல யுத்தத்தில் அரசு பெற்றது வெற்றியல்ல

ஆக்கம்: பேராசிரியர் சுச்சரித்த கம்லத்
அரசபடையினர் தொப்பிகலவை வென்றெடுத்துவிட்டார்கள். புலிகள் இயக்கம் அந்தப் பிரதேசத்தை விட்டுச் சென்று விட்டது. இந்ந நிலை அரசுக்கு ஒரு சிறிய வெற்றி. புலிகள் இயக்கத்துக்குச் சிறிய தோல்வி ஆயினும் இந்த வெற்றியைப் போலவே இந்தத் தோல்வியும் ஸ்திரமானதல்ல. கடந்த காலத்திலும் அவ்வாறே நிகழ்த்தது. ஆங்கிலத்தில் வெளியிடப்படும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தொப்பிகல சம்பந்தமாக உள்ள விடயங்கள் வெளியிடப்பட்டு முடிந்துவிட்டன. சிங்கள ஊடகங்களில் வெளியிடப்பட்டு முடிந்தவை இல்லாத விடயங்களாகும். நான் இதுபற்றி முன்னர் எழுதாததற்குக் காரணம் அரசும், அரசுக்கு பந்தம் பிடிக்கும் ஊடகங்களும் தொப்பிகலவை பிடித்து விட்டோம் என்று கூறிச் செய்த தீவிர பிரசாரத்தால் எழுச்சியடைந்திருந்த சிங்கள வாசகர்களின் கைகளால் கால்கை முறிபடவேண்டியிருக்குமே என்ற பயத்தால் ஆகும். வீதியில் செல்லும்போதும் முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும்போதும் காதில் விழும் பேச்சுகளால் நான் பயமடைந்திருந்தேன். சிங்கள ஊடகங்கள் கற்றுக்கொடுப்பவை, பிரசாரம் செய்பவை எல்லாம் மக்களின் மூளையைக் காலிசெய்து இதயங்களை நிரப்பும் செயலாகும்.

தொப்பிகலவில் பெற்றது போன்ற வெற்றியை "நெருப்புவெற்றி" அல்லது பெருமுயற்சியால் பெற்ற சிறிய வெற்றி எனப் பொருள்படும் Pyrrhic Victory என்னும் ஆங்கிலச்சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதாவது பெரும் சேதம் மூலம் பெற்ற வெற்றியாகும். பெரும் இழப்புடனான வெற்றி என்றும் குறிப்பிட முடியும். அது தோல்விக்கு சமமான வெற்றியாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள தொப்பிகல என்பது ஒரு கற்பாறை மலையாகும். கற்பாறையிலான மலைமேடு ஆகும். அதன் மேல் மேலும் சிறு சிறு கற்பாறையிலான மலையுச்சிகள் உண்டு. தூரத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் தோற்றத்திற்கு ஏற்ப அதற்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. ஆங்கில ஆட்சியாளர்களுக்கு அது பிரபுக்களின் தலைக்கவசம் போல் தெரிந்தது. அதனால் அதற்கு Barons Cap பெறன்கெப் என்று கூறினார்கள். பெறன் (Baron) என்பது கீழ்மட்ட பிரபுக்களைக்குறிப்பதாகும். கெப் (Cap) அவர்களுடைய தலைக்கவசம் அல்லது தொப்பியாகும்.

தமிழ் மக்களுக்கு அது தலை முடியால் கட்டுகின்ற குடும்பிபோல் தெரிந்தது. அதனால் அவர்கள் அதற்கு குடும்பிமலை என்று பெயரிட்டார்கள். குடும்பிபோன்ற மலை என்பது அதன் அர்த்தமாகும். முஸ்லிம்களுக்கு அது தலைமேல் அணியும் தொப்பிபோல் தெரிந்தது. அவர்கள் அதற்கு, தொப்பி, பாறை என்றார்கள். தொப்பி மலை என்பது அதன் பொருள். கல் என்பது கற்பாறை. சிங்களத்தில் கல் என்பது தமிழில் கல் என்பதிலிருந்து வழங்கப்படுவதாகும். சிங்களவர்களுக்கும் அது முஸ்லிம்களுக்குத் தெரிவதுபோலவே காட்சியளித்தது. இதனால் அதைத் தொப்பிகல என்று கூறினார்கள்.

தொப்பிகலவைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் சனத்தொகை அதிகமல்ல. மொத்தத்தில் சுமார் 5000 மக்கள் அங்கு வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிகப் பழைய காலத்திலிருந்தே அங்கு சிறிய தொகை மக்கள் வசித்து வந்துள்ளனர். மழை நீர் பெருமளவில் சேரும் மலை அடிவாரத்தைச் சுற்றி அவர்கள் வசித்தார்கள். அந்தப் பகுதி வில்லு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதன் ஒருமைச்சொல் வில்லுவ என்பதாகும். இங்கு, கள்ளிச்சேனை, ஊட்டுச்சேனை, மீரண்டவில்லு, கீரணியவில்லு, கத்தவனை, மஹஎலிய ஆகிய பழைய கிராமங்கள் அமைந்துள்ளன. கள்ளிச்சேனை, மீரண்டவில்லு என்பவை முஸ்லிம் கிராமங்கள் ஆகும். மஹஎலிய சிங்களக்கிராமமாகும். ஏனையவை தமிழ்க்கிராமங்கள் ஆகும், இந்த மூன்று இனத்து மக்களும் அந்தப் பிரதேசத்தில் நட்புறவுடனும், சுமுகமாகவும் வாழ்ந்து வந்தனர். இங்கு சிங்கள தமிழ் மக்களிடையே கலப்புத் திருமணங்களும் நடைபெற்றன. ஒரு இனத்தவர் மொழியை மற்ற இனத்தவர்கள் பேசி ஒற்றுமையாக வாழ்ந்தனர். சில தமிழ், சிங்களப் பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்து இஸ்லாம் மதத்துக்குமாறினாலும் அவரவருக்குப் பழக்கப்பட்ட வழக்கங்கள், ஆடையணிகளைக் கைவிடாது தமது உறவினர்களுடன் முன்னர் பழகிய மாதிரியே சுமுகமாகப் பழகிவந்தனர்.

அங்கு பெரும்பாலான மக்களும் முன்னைய காலத்திலிருந்து சேனைப்பயிர்ச்செய்கையையே செய்துவந்தனர். ஆனால் அந்தத் தொழில் காலப்போக்கில் குறைந்து விட்டது. 1956 மற்றும் 1958 ஆண்டுகாலப்பகுதியில் கல்லோயா தமிழர்கள் தூரத்தப்பட்டது, 1970 ஹெக்டர் கொப்பேகடுவ காணிப் புனரமைப்புத்திட்டம் காரணமாக மலைநாட்டு தோட்டங்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, 1977 ஆகஸ்ட் காலப்பகுதியில் வன்முறைகளைத்தொடர்ந்து மலைநாட்டுத் தோட்டத்தமிழர்கள் வெளியேறியது போன்ற சம்பவங்களின் பின்னர் தமிழர்கள் தொப்பிகல பிரதேசங்களில் குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து காடழிப்பு மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை அங்கு ஆரம்பித்தது.

தொப்பிகல பிரதேசத்தில் கற்பாறை மலையைச்சுற்றி பெரும் காடு உள்ளது. அது பாதுகாக்கப்பட்ட சரணாலயக் காட்டுப் பகுதியாக அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசம் சுமார் 350 தொடக்கம் 400 சதுர கிலோமீற்றர் பரப்புடையதாகும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளே ஆகும். அண்மைக்காலங்களில் இப்பகுதிகள் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசங்களாயின. இது சம்பவித்தது 1980 க்கும் 1990 க்கும் இடையில் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கேணல் கருணா புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தலைவராக நியமிக்கப்பட்ட காலகட்டத்திலாகும். இப்பகுதியில் அமைக்கப்பட்ட கட்டடங்களில் `மீனகம்' எனப்படும் புலிகளின் இராணுவத்தலைமையகமும், `தேனகம்' எனப்படும் புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகமும் அமைந்துள்ளது. தொப்பிகலவை அண்டிய கரடியனாறு பகுதியிலாகும். மாவீரர் எனப்படும் யுத்தத்தில் உயிரிழந்த புலிகள் இயக்கத்தினரின் மயானபூமி கரவைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசங்கள் தூரம் காரணமாகவும் மற்றும் காடுகள், பற்றைப்பிரதேசங்கள், மலைகள், குன்றுகள் ஆகியன அமைந்துள்ளதாலும் மிகவும் பாதுகாப்பானவையாகும்.

இங்கு ஆங்காங்கே கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் கருணா அந்தப் பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு நிரந்தரமாகத் தங்கியிருந்து எந்த யுத்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முயற்சி செய்யவில்லை. கருணாவின் காலத்தில் அரசபடைகள் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் புலிகள் இயக்கத்தினர் அடர்ந்த பெருங்காட்டுப் பிரதேசங்களுக்குள் சென்று மறைந்துவிடுவார்கள். இந்தியப்படை தாக்குதலை மேற்கொண்டவேளைகளிலும் அவ்வாறுதான் நிகழ்ந்தது. கருணாவின் காலத்தில் அந்தப்பிரசேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக புலிகள் திரண்டுவந்து தாக்குதல்களைத் தொடுப்பதில்லை. படையினர் வரும் போது காட்டுக்குத் தப்பியோடுவதும் படையினர் சென்றபின் மறுபடியும் திரும்பிவருவதுமே புலிகளின் செயற்பாடாக இருந்தது. இந்திய இராணுவம் கூட நீண்டகாலம் அங்கு தங்கியிருக்க வில்லை. அத்துடன் அப்பகுதியில் நிரந்தரமான முகாம்களை அமைக்காது அடுத்துள்ள முகாம்களை நோக்கியே படையினர் எப்போதும் நகர்ந்து சென்றுள்ளனர்.

இதில் முக்கிய விடயம் யாதெனில் புலிகள் இயக்கத்துடன் மோதல் ஏற்பட்ட வேளையில் கூட கருணா இந்தப் பிரதேசத்தில் தங்கியிருக்க முயற்சிக்கவில்லை. 2004 இல் வெருகல் கதிரவெளி, வாகரை ஆகிய பிரதேசங்களில் வன்னிப் புலிகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கருணா தொப்பிகலவிலிருந்து இறுதித்தாக்குதலை மேற்கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கருணா தொப்பிகலவில் தங்கியிருந்து தாக்குதலைத் தொடுக்கவில்லை. அத்துடன் கருணாவுடனான மோதலின் பின்னரும் புலிகள் இயக்கத்தின் பிரதான படையணியினர் தொப்பிகலவில் நிரந்தரமாகத் தங்கியிருக்க முயற்சிசெய்ய வில்லை. புலிகளும் அங்கிருந்த தேனகம் முகாமை மூடிவிட்டு அங்கிருந்த கட்டடங்களிலிருந்து வெளியேறினர். இந்த எல்லாவிடயங்களிலிருந்து தெரியவருவது அந்தப் பிரதேசத்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றிய நம்பிக்கை புலிகளுக்கு இருக்கவில்லை என்பதே. கருணாவுடன் மோதலின் பின்னர் புலிகள் இயக்கம் தொப்பிகலவைப் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியது அண்மையிலேயே ஆகும். திருகோணமலைக்குத் தெற்கேயும் வாகரைப் பிரதேசத்திலிருந்தும் புலிகள் இயக்கத்தினர் பின்வாங்கத் தொடங்கிய வேளையில் முக்கிய படையணியினர் வன்னியை முக்கிய நிலையமாகக் கொண்டு தங்கினர். இதனால் வன்னியிலுள்ள `பெய்ரூட் பேஸ்' முகாம் முக்கிய இடமாக மாறியது, வடக்கு,கிழக்குக்கிடையே போக்குவரத்துச் செய்யும் புலிகள் இயக்கப் படையணியினருக்கு பெய்ரூட் முகாம் தங்கிச் செல்லும் நிலையமாக அமைந்தது.

தற்போது புலிகள் இயக்கத்தினர் கிழக்கில் கெரில்லா போர் முறைக்கு மாறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கடைசியில் முக்கிய கெரில்லா குழுவினர் சிலவாரங்களுக்கு முன்னர் வடக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கேணல் ரமேஷ் 300 க்கும் மேற்பட்ட கெரில்லாக் குழுவினர் மற்றும் இராணுவ உபகரணங்களுடன் மீண்டும் வடக்கு சென்றிருக்கிறார். 200 க்கும் மேற்பட்ட புலிகள் இன்னும் வன்னியில் தங்கியுள்ளனர். அங்கு ராம், நாகேஷ், பல்லவன், கீர்த்தி, மனோமாஸ்ரர் முக்கிய கெரில்லாக் குழுவினருடன் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் வடக்கைச்சேர்ந்த ஜெயம் கமாண்டோ படையணியின் தலைவராக அங்கு இருக்கிறார். புதிதாகச் சேர்க்கப்பட்ட பலரும், விவாகமாகிய இயக்கத்தினரும், பெருமளவிலான பெண் புலிகளும் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.

தொப்பிகல வெற்றி என்பது இவ்வாறான சூனிய பிரதேசத்தைப் பிடித்ததே ஆகும். 800 புலிகள் இயக்கத்தினரைக் கொன்றுவிட்டதாகவும் அங்கு பெருந்தொகையான இராணுவ உபகரணங்கள், ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அடிக்கும் புளுகுகள் எல்லாம் பொய்யாகும். இந்த வெற்றிக்காக மாதக் கணக்காக தேசிய வருமானம் விணாக்கப்பட்டுள்ளது. இதற்காக 58 நாள் யுத்தத்திற்கென்று துப்பாக்கிகள், பீரங்கிகள், மோட்டார், மல்ரிபரல், றொக்கற்லோஞ்சர், இயந்திரத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பெருந்தொகையில் பயன்படுத்தப்பட்டன. கிபீர் மற்றும் மிக்-27 ஜெட்விமானங்கள் குண்டுகள் வீசுவதற்காக ஏற்பட்ட செலவு பெருமளவாகும். இனி மீண்டும் யுத்த உபகரணங்கள், ஆயுதங்கள், குண்டுகள் பெருந்தொகையில் கொள்வனவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஆயுதக்கொள்வனவு தரகு, இலாபம் மற்றும் வசதிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவது ஒன்றும் இரகசியமல்ல. இந்தப் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கு 30,000 முதல் 40,000 வரை பொலிஸ் படையினரை நிறுத்த வேண்டும். இதற்காக மலைபோல் பணம் தேவை.

இந்தியப்படையினர் இந்தப் பிரதேசத்தில் தங்கியிருக்காமல் சென்றது மேற்படி காரணங்களால் ஆகும். லக்கி அல்கம, ஜானக பெரேரா போன்ற இராணுவத் தளபதிகள் கிழக்கில் இருந்தபோது அந்தப் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்காமல் போனதும் இதனால்தான். தொப்பிகலவை அரசு என்ன உபாயத்திற்காக முக்கியத்துவம் கொடுத்துப் பிடித்துவைத்திருக்கிறது என்ற கேள்வி எழுந்திருப்பது இதனால்தான். ஓய்வுபெற்ற இந்திய இராணுவ ஜெனரல் அசோக் மேத்தாவும் கேணல் ஹரிகரனும் இவ்வாறே கேள்வி கிளப்பினர். அரசாங்கத்தால் தீவிரமாக ஊதிப்பெருப்பித்துள்ள இந்த தொப்பிகல பலூனை புலிகள் இயக்கத்தினர் எந்த நேரத்திலும் உடைக்கலாம்.

இந்தப் பிரதேசத்தில் படையினரை நிரந்தரமாக நிறுத்திவைப்பது முடியாததுடன், அவ்வாறு நிறுத்துவது வெள்ளை யானையை பராமரிப்பது போன்றதாகும். நிலைமை இவ்வாறு இருக்கும் போது அரசு அங்கே இராணுவத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்குக் காரணம் என்ன? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பெரும் பாதுகாப்பு வனங்களில் இருக்கும் பெறுமதிவாய்ந்த மரங்களைத் தறித்து விற்று கோடானுகோடி பணத்தை மலையாக சம்பாதிக்கமுடியும். இந்தச் சூழல் அழிப்புநடவடிக்கைகளே சிங்கராஜ வனம் போன்ற ஏனைய பாதுகாப்பு வனங்களிலும் நிகழும்.

இரண்டாவது காரணம் அங்கு சிங்களவர்களையும் சிங்களக்காடையர்கள், கொலைகாரர்களையும் கொண்டு சென்று குடியேற்றுதல், கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாரம்பரியம், கலாசாரத்தை மாற்றுதல் அவ்வாறு செய்து தமிழர்களை மிகச் சிறுபான்மையாக்கி தமிழினத்தை நசுக்குதல்.

1983 இல் காமினி திசாநாயக்க, என்.ஜீ.ஜீ.பண்டிதரத்ன, ஹர்மன் மாலிங்க குணரத்ன ஆகியோரின் ஏற்பாட்டின் கீழ் கிதிலகம சீலாலங்கார தேரோவால் வெலிஓய பிரதேசத்திலும் இவ்வாறே தமிழரை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

40,000 சிங்கள மக்களை மகாவலி அதிகார சபையின் வாகனங்களில் கொண்டு சென்று அங்கே விட்டுச் சென்றார்கள். அவர்களுக்காக பணம் செலவிட்டது மகாவலி அபிவிருத்தி அமைச்சும் சிங்கள முதலாளிகளுமாகும்.

சர்வதேச எதிர்ப்பும் அப்பிரதேசத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாகிய கே.டபிள்யூ. தேவநாயகம் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து எதிராகச் செயற்பட்டதால் அந்த குடியேற்ற முயற்சி நிறுத்தப்பட்டது.

இந்தக் கொடுமையான திட்டத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கக்கூடும். அன்று இரகசியமாக செய்யப்பட்ட செயலை இன்று உத்தியோகபூர்வமாகச் செய்யக்கூடும். சிங்கள காடையர்களை அங்கு குடியேற்றுவதற்காக முக்கியமான இராணுவப் படையணியை அங்கு நிறுத்த வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் அதற்காகவே இருக்கக்கூடும்.

வெலிஓயா பிரதேசத்தில் அன்று செய்தவைகளை இன்று தொப்பிகலவில் செய்யக்கூடும். அன்று மணலாறு எனப்பட்ட பெயர் கூட பின்னர் வெலிஓயா என்று மாற்றப்பட்டது. யுத்தத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக இருப்பவர்களுக்கு அவர்களுடைய கிராமத்துக்குத் திரும்பிச் செல்ல இடமளியாதிருப்பது மேற்படி கொடிய நோக்கத்துக்குச் சாட்சியாகும்.

தொப்பிகல வெற்றியின் இறுதிப் பத்திரம் இதுதான். தொப்பிகல வெற்றி கொண்டாட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடாத்தப்பட்டதை நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்று காலை 8.30 மணிக்கு சுபநேரத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மகாராஜா போன்ற தோற்றப் பரிகாசத்துடன் சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தந்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பாடசாலைப் பிள்ளைகள் அடுத்து வெற்றிக் கீதம் இசைத்தனர். அப்பொழுது படைத்தளபதி கிழக்கிலிருந்து புலிகளை துரத்திவிட்டதாக கூறும் யுத்தப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் பெரும் பெருமையுடன் கையளித்தார். விமானப்படை ஹெலிகொப்டர்கள் வானத்தில் வட்டமிட்டு வலம் வந்தன. 800 படையினர் அளித்த பெரும் வரவேற்புடன் அரச விழா முடிவடைந்தது.

பிரதேச மட்டத்திலும் இவ்வாறான வெற்றிக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. இதற்காக பாடசாலைப் பிள்ளைகள் வரவழைக்கப்பட்டார்கள். வெற்றியைப் போற்றும்படி பாடசாலை அதிபர்கள் பணிக்கப்பட்டார்கள். கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து இந்த அரச விழா நடாத்தப்பட்டது. எதற்காக? மக்களின் வயிற்றில் அடித்தல், கடத்திச் செல்லுதல், கப்பம் வாங்குதல், மனித உரிமை மீறல்கள் ஆகிய செயற்பாடுகளால் கடந்த காலத்தில் ஷ்ரீலங்கா அரசின் தோற்றம் சிதைந்து உடைந்து கொண்டிருந்தது. இதை "வெல்டிங்" செய்வதற்காகவே இந்த விழா நடாத்தப்பட்டது.

எரிபொருள் விலை, பாவனைப் பொருட்களின் விலைகளை உச்சத்துக்கு ஏற்றி யுத்தச் செலவிற்காக பணம் தேடும் நடவடிக்கைகளால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். தொப்பிகல வெற்றி எனப்படும் போதைக் குளிசையை விழுங்கச் செய்து அவர்களுக்குப் போதையூட்டுவதற்காகவே இந்த விழா நடாத்தப்பட்டது. ஆயினும், பெரும்பாலான மக்கள் இந்தப் போதைக் குளிசையை விழுங்கவில்லை என்பது விரைவாகவே நிரூபணமாகியது. அரசுக்கு எதிர்ப்புக் தெரிவிப்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடியதில் ஹைட் பார்க் மைதானமே அதிர்ந்தது. வேறு செல்வந்தக் குழுவொன்று இந்த எதிர்ப்பை முறியடித்துக் கொண்டிருந்தது மற்றுமொரு விடயமாகும். தொப்பிகல விடயம் அர்ப்பணிப்பா? தீர்ப்பா? மீட்சியா?

கடந்த காலத்தில் நிகழ்ந்ததுபோல புலிகள் இயக்க கெரில்லாக்கள் மீண்டும் தொப்பிகலவை ஆக்கிரமிக்கக்கூடும். இவ்வாறான நிகழ்வுகள் இதற்கு முன் இரண்டு தடவைகள் நிகழ்ந்துள்னள. இந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியேறியது. ஸ்ரீலங்கா இராணுவம் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டத்தை இலகுவாக முறியடித்தது. புலிகள் இயக்க கெரில்லாக்கள் கிழக்குப் பிரதேசம் முழுவதையும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குக் கீழ்க் கொண்டு வந்தார்கள். பல பிரதேசங்களில் சிங்கள இராணுவம் போக்குவரத்து செய்வதற்கு புலிகள் இயக்கத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.

மட்டக்களப்பு, அம்பாறை இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன. டென்சில் கொப்பேகடுவ தலைமையில் இராணுவம் இந்தப் பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றியது. இந்த யுத்தங்களில் தற்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவும் பங்குபற்றினார். இதன் பின்னரான வருடங்களில் புலிகள் இயக்க கெரில்லாக்கள் மீண்டும் இப்பிரதேசங்களுக்குள் புகுந்தார்கள். 1994 பொதுத் தேர்தலுக்காக கிழக்கைச் சுத்தம் செய்யும் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாயின. படையினர் தொப்பிகலவரை முன்னேறிச் சென்றனர். புலிகள் இயக்க கெரில்லாக்கள் பின்வாங்கிச் சென்றதால் பெரிய மோதல் நடைபெறவில்லை. அரச படையினர் கிழக்கில் பல பிரதேசங்களைக் கைப்பற்றியபோதும் கெரில்லாக்கள் கிழக்கில் மீண்டும் உறுதியாக நிலைகொண்டனர். இது நிகழ்ந்தது ஜயசிக்குறு நடவடிக்கைக்காக படையினர் அங்கிருந்து அழைக்கப்பட்ட வேளையிலாகும்.

இம்முறை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் கெரில்லாக்களுக்கு உயிரிழப்பு ஏற்படவோ அல்லது புலிகளின் இராணுவச் செயற்பாட்டு இயந்திரம் பழுதடையவோ இல்லை. அவ்வாறு அடிக்கும் புளுகுகள் எல்லாம் பொய்கள் ஆகும்.

வரலாறு புரண்டு வருகிறது. மார்க்சிஸ வாதத்தில் வழிகாட்டும் கோட்பாடுகள் உண்டு. அவை முன்னரைக் காட்டிலும் பிரபலமாகி வருகிறது. தொப்பிகல யுத்தத்தில் அரசு பெற்றது வெற்றி இல்லை. நிதியிழப்பும் உயிரிழப்புகளும் பெருந்தொகையில் ஏற்பட்டுள்ளன.

பக்கம் ஒன்று கிழிந்த பறைக்கு பேய்க்கூத்து ஆடவேண்டாம்

Please Click here to login / register to post your comments.