வடபோர் முனையில் கடற்புலிகளை முறியடிக்க சர்வதேச உதவியை நாடும் அரசு

ஆக்கம்: விதுரன்
தெற்கில் திடீர் அரசியல் மாற்றங்களேற்படலாமென்ற நிலை தோன்றியுள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் அரசிலிருந்து விலகிவிட எத்தனித்து வருவதால் எவ்வேளையிலும் அரசு பெரும்பான்மை பலத்தையிழந்து ஆட்சி கவிழலாமென்றதொரு நிலைமையேற்பட்டுள்ளது. இதனை ஆட்சியாளர்களும் எதிர்பார்த்திருப்பதால் அடுத்த தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

அரசிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து பாராளுமன்றம் எவ்வேளையிலும் கலைக்கப்படலாமென்றதொரு நிலைமை உருவானது. இ.தொ.கா. திடீர் பல்டி அடித்து, மீண்டும் அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்ததன் மூலம் அரசு கவிழுமென்ற நிலைமை உடனடியாக இல்லாது போய்விட்டது.

மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காது சுயாதீனமாகச் செயற்படப் போவதாக இ.தொ.கா. அறிவித்துள்ளதன் மூலம், அவர்கள் எவ்வேளையிலும் காலை வாரலாமென்பதை ஆட்சியாளர்கள உணர்ந்துள்ளதால், அரசை ஸ்திரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளில் ஜனாதிபதி இறங்கும் அதேநேரம் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராவார்.

தெற்கில் அரசுக்கெதிரான உணர்வலை கூடி வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே பலர் அல்லல்படுகையில் குடும்பிமலை (தொப்பிகல) வெற்றி அவர்களது பசியை போக்கிவிடாது. அடுத்த தேர்தலை எதிர்கொள்வதாயின் மேலுமொரு பெரும் வெற்றி தேவையென அரசு எண்ணுகிறது.

வடக்கே பெரும் போரை நடத்த வேண்டியிருப்பதால் யுத்தச் செலவு மேலும் மேலும் அதிகரிக்கப் போகிறது. இதனால், மக்களின் பொருளாதாரச் சுமையை இந்த அரசால் உடனடியாகக் குறைக்க முடியாது போய்விடும். இந்த நிலைமையைச் சமாளித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமாயின் போர் முனையில் பாரிய வெற்றிகளைப் பெற வேண்டிய அவசர, அவசிய நிலையேற்பட்டுள்ளது.

குடும்பிமலை வெற்றியானது சாதாரணதொரு விடயம். அந்த வெற்றியை மிகவும் பெரிதுபடுத்துவதன் மூலம் இந்த அரசின் புகழை உயர்த்த முனைவதுடன் மக்களின் கவனத்தை, பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து போர்முனை நோக்கித் திருப்பிவிடலாமென அரசு கருதுகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறினாலும் அங்கு நிலைமை வேறு விதமாகவேயுள்ளது.

குடும்பிமலையை பிடித்ததன் மூலம் கிழக்கை தாங்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகவும் தற்போது கிழக்கில் புலிகளில்லையெனவும் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குடும்பிமலையிலிருந்து புலிகள் பின்வாங்கிவிட்டாலும் புலிகள் கிழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. இதனை, அரச படைகளுடன் இணைந்து செயற்படும் கருணா குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மரபு வழிச் சமரிலிருந்து புலிகள் இங்கு கெரில்லாச் சமருக்கு மாற்றம் பெற்றுள்ளனரே தவிர வேறெதுவும் நடக்கவில்லை. படையினரின் கவனம் வடக்கில் திரும்பும் போது கிழக்கில் கெரில்லா தாக்குதல்கள் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது அங்கு நிலைமைகளை மோசமடையச் செய்யலாம். இதனாலேயே கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகளை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டுமென அரசு தீவிரம் காட்டுகிறது.

அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கவும் மற்றொரு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டால் அதற்காக சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுவிடவும் அரசு அவசரம் காட்டும் அதேநேரம், வடக்கில் பாரிய தோல்விகளைச் சந்தித்துவிடக் கூடாதென்பதிலும் அக்கறையாகவுள்ளது.

புலிகளும் இதனை நன்குணர்வர். அதனால், வடக்கில் இடம்பெறப்போகும் போருக்காக அவர்களும் நன்கு தயாராகி வருகின்றனர். யாழ். குடாவிலிருந்து முன்னர் பின்நகர்ந்தது போன்றோ, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறையிலிருந்து பின்நகர்ந்தது போன்றோ வன்னியில் ஒரு அடிகூட பின்னகர முடியாது. அவ்வாறானதொரு நிலைமை வடக்கை பறித்துவிடுமென்பதை அவர்கள் நன்குணர்வர்.

வடபகுதிப் போர் இலங்கைப் படையினருக்கு மிகப்பெரும் சவாலாயிருக்கும்- இங்கு புலிகளின் ஆட்பலமும் ஆயுத பலமும் குவிக்கப்பட்டிருப்பதுடன் கடற்புலிகள் இங்கு நன்கு பலமுடனிருப்பதால் அரச படைகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்து வரப்போகும் போருக்காக வன்னியிலும் மணலாறிலும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளனர்.

வடபகுதிச் சமரில் கடற்புலிகளை இலக்கு வைப்பதில் அரசும் படைத்தரப்பும் தீவிரம் காட்டுகின்றன. கடற்படையை பெரிதும் பலப்படுத்தி வரும் அரசு இந்தியாவின் ஆதரவுடன் கடற்புலிகளின் நடவடிக்கைகளை முடக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்ப இந்தியாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடற்புலிகளுக்கெதிராக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது.

புலிகளுக்கான ஆயுதக் கப்பல்கள் வடக்கே வருவதைத் தடுக்கும் தீவிர முயற்சிகளில் இலங்கை - இந்திய கடற்படைகள் தீவிரம் காட்டுகின்றன. வடபகுதிக் கடற்பரப்பை கடற்புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடச் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது.

ஆசியானில் இலங்கையும் இணைந்துள்ளது. இலங்கையின் கடற்பரப்பை கடற்புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஆசியான் நாடுகள் உதவ வேண்டுமென அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பினூடாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு கடற்புலிகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருப்பரென இலங்கை எச்சரிப்பதுடன் இந்தக் கடற்பிராந்தியத்தில் வல்லரசுகளின் கடற்படைகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க, சீன, அவுஸ்திரேலிய அரசுகள் இந்தக் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஆசியான் மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கோரிக்கை விடுத்ததன் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் கடற்புலிகளை சமாளித்து விட்டால் வடபகுதி போர்முனையில் சுலபமாக வெற்றிபெற்று விடலாமென அரசு கருதுகிறது.

இவ்வாறு சர்வதேச கடற்படைகளின் உதவியைப் பெற இலங்கை முற்படுவது இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் தானே வல்லரசென இந்தியா மார்தட்டி வருகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அந்நிய கடற்படைகள் ஆதிக்கம் செலுத்த முற்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.

இலங்கை அரசின் இந்தக் கோரிக்கை இந்தியாவை சினமடையச் செய்தாலும், கடற்புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து இலங்கையை விடுவித்தால் வல்லரசுகளின் கடற்படைகளை இந்தக் கடற்பிராந்தியத்தினுள் நுழையவிடாது தடுத்துவிடலாமென இந்தியா கருதுகிறது. இதனால், கடற்புலிகளுக்கெதிராகவும் விடுதலைப்புலிகளுக்கெதிராகவும் செயற்படுவதில் இந்தியா தீவிரம் காட்டிவருகிறது.

இந்தியாவை சினமடையச் செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்தியாவை செயற்பட வைப்பதில் இன்று, நேற்று மட்டுமல்ல காலாகாலமாக இலங்கை அரசு வெற்றி கண்டே வருகிறது. இதனை இந்தியா இன்று வரை புரியவில்லை. இதன் மூலம் இலங்கை தனது தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்து வருகிறது.

இலங்கைப் பிரச்சினையில் ராஜதந்திர ரீதியில் வெற்றிகளைப் பெற முடியாத இந்தியாவை இலங்கை அரசு தனது தேவைக்கேற்ப ஆட்டுவித்து வருகிறது. விரும்பியோ, விரும்பாமலோ இலங்கை அரசு வேறு நாடுகளின் உதவிகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக இந்தியா தனது தார்மீகப் பொறுப்புகளைக் கூட புறந்தள்ளிவிட்டு இலங்கையின் வசதிக்கேற்ப செயற்பட வேண்டியுள்ளது.

இம்முறை வடபகுதிப் போரில் இந்திய கடற்படையை மிகத் தந்திரமாக ஈடுபட வைப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. அதற்கேற்பவே இந்தியக் கடற்படையும் செயற்படுகிறது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்குமிடையில் மறைமுக ஒத்துழைப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, புலிகளுக்கான ஆயுத விநியோகத்தை தடுப்பதில் இந்தியா தீவிரம் காட்டுகிறது. புலனாய்வுத் தகவல்களை இலங்கைக்கு வழங்குவதில் மிகவும் அக்கறையாகவுள்ளது. இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகளை பலவீனமாக்க வேண்டுமென்பதில் இந்தியாவும் ஆர்வமாயுள்ளது. இதன் மூலம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வு கிடைக்கமாட்டாதென்பது நன்கு தெரிந்தும் இந்தியா ஈழத் தமிழர்களது போராட்டத்திற்கெதிராகச் செயற்படுவதில் தீவிரம் காட்டுகிறது.

இவ்வாறானதொரு நிலையை சாதகமாகப் பயன்படுத்தி வடக்கிலும், பாரிய தாக்குதல்களை நடத்திவிட வேண்டுமென்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அவசர வெற்றிகளைப் பெற்றுவிடுவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய படை நகர்வுகளுக்கான முழு ஏற்பாட்டையும் அரசு பூர்த்தி செய்துள்ளது.

இந்த நிலையில் வடக்கில் படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்தால் அது அரசுக்கு பேரிடியாகிவிடும். அவ்வாறானதொரு பதில் தாக்குதலுக்கு புலிகளும் தயாராகியுள்ளனர். வவுனியா - மன்னார் எல்லையில் அண்மைக் காலமாக படையினர் மேற்கொண்ட பல படை நகர்வுகள் படுதோல்வியடைந்தன. இது படையினர் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றையடுத்தே வன்னியிலும் மணலாறிலும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்தில் இரு தடவைகளாவது இராணுவத் தளபதி வவுனியாவுக்கும் யாழ். குடாவுக்கும் அவசர பயணங்களை மேற்கொள்கிறார். படைநகர்வுகள் குறித்து பல திட்டங்கள் போடப்படுகின்றன. வடக்கே படையினரின் மனோதிடத்தை அதிகரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலரும் அங்கு சென்று வருகிறார்.

வடக்கில் மடுவை கைப்பற்றிவிட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டியது. நாளை திங்கட்கிழமை மடு மாதா கோவில் திருவிழா ஆரம்பமாவதற்கிடையில் மடுக் கோவில் பிரதேசத்தை கைப்பற்றிவிட வேண்டுமென படையினர் பல தடவைகள் முயன்றும் எதுவும் கைகூடவில்லை. பேரிழப்புகளையே அவர்கள் சந்தித்தனர். இது படையினருக்கு பெரும் பின்னடைவென்பதுடன் வடபோர்முனை எப்படியிருக்கப் போகின்றதென்பதையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

வடக்கில் பல முனைகளிலிருந்தும் பாரிய படைநகர்வுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளவே படையினர் முனைவர். புலிகளின் ஆயுத பலம் ஒரேயிடத்தில் குவிவதைத் தடுக்க வேண்டிய தேவை படையினருக்குள்ளது. இதனால், வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ். குடா பகுதியிலிருந்து ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலை ஆரம்பித்து எங்கு புலிகள் பலவீனமாயிருக்கிறார்களோ அங்கு மேலும் முன்னேறுவதும் படையினரின் நோக்கமாகும்.

புலிகளும் இதனை நன்கறிவர். இதனால், புலிகளும் இதற்கேற்ப தங்கள் தாக்குதல் உத்திகளை வகுத்துள்ளனர். தற்போதைய நிலையில் தாக்குதல் சமரை ஆரம்பிப்பதை விட தற்காப்புச் சமரே அவர்களுக்கு பலமாயிருக்குமெனக் கருதப்படுவதால் சில அதிரடித் தாக்குதல்களை விட படையினரின் பாரிய நகர்வை எதிர்கொள்ளவே புலிகள் தயாராயிருப்பர்.

தற்போதைய நிலையில் அரசு சில அவசர வெற்றிகளுக்காக படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும். அரசியல் காரணங்களுக்காகவே இந்த இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறலாம். இதனையும் புலிகள் நன்கறிவர். இதனால், படையினருக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்த புலிகள் முனைவர். இவ்வாறானதொரு இழப்பு வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேலதிக படை நடவடிக்கைகளை நிறுத்திவிடக்கூடும்.

இவ்வாறு வடபகுதி போர்முனை அடுத்த பாரிய சமருக்காக தயாராகியுள்ளது. அந்தச் சமர் ஆரம்பமானால் அதன் தாக்கம் வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கக்கூடும். இது தவிர்க்க முடியாதது. இதனால், தலைநகரிலும் தென் பகுதியிலும் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முன்னைய காலங்களைப் போன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் பாரிய தாக்குதல்கள் நடைபெற்றுவிடக் கூடுமென்ற அச்சமுமுள்ளது.

தற்போது, ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்த முயற்சிகள் தற்காலிக வெற்றியைப் பெற்றாலும் எவ்வேளையிலும் அரசு கவிழ்ந்து விடலாமென்றதொரு நிலையுள்ளதால் மற்றொரு தேர்தலுக்கு அனைவரும் தயாராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதார இராணுவ நெருக்கடியால் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வெற்று வேட்டுகளாலும் பொய்ப் பிரசாரங்களாலும் அரசியல், பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திவிடலாமென நினைத்தாலும் இராணுவ அழுத்தங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்த அரசு இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது. மக்கள் எதனை விரும்புகின்றார்களென்பதை இனி வரும் நாட்கள் தீர்மானிக்கப் போகின்றன.

Please Click here to login / register to post your comments.