அங்கீகரிக்கப்பட்ட கொசோவோ விடுதலை அங்கீகரிக்கப்படாத தமிழர் போராட்டம்

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்
சென்ற வாரம் நண்பர் பரணி கிருஷ்ணறஜனி எழுதிய கட்டுரையொன்றினை 'தமிழ்நாதம்" இணையத்தளத்தில் பார்வையிட்டேன். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த இராணுவ, அரசியல் ஆய்வுகள், மக்களிடம் சென்றடையக்கூடிய வலுநிலையற்ற தளத்தினைக் கொண்டதென தனது ஆதங்கத்தினை அதில் வெளிப்படுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் படைவலுவுடன் கூடிய போர்த்திறனை, சர்வதேசம் புரியக்கூடிய வகையில் வெளிப்படுத்தினால், அவர்களின் போராட்டம் குறித்த பார்வையில் மாற்றமேற்படலாமென்பது அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தோழர் 'தராகி" சிவராமின் கட்டுரையொன்று, இராணுவத்தின் சில நகர்வுகளை தடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சரியான இராணுவ ஆய்வுகளூடாக மக்களின் சலிப்பான மனநிலையை நிமிர்த்தி போராட்ட உணர்வினைத் தக்கவைக்க வேண்டுமெனவும் அதில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் போரியல் முறைமைகளையும், உத்திகளையும் முள்ளிக்குளச் சமர் வரை ஆராயலாம். விடுதலைப் புலிகளால் வெல்லப்பட்ட பெருஞ்சமர்களான முல்லைத்தீவு, ஜெயசிக்குறு, ஆனையிறவு போன்றவற்றுடன் யாழ். குடா இழப்பையும், மட்டக்களப்பு பின்னகர்வுகளையும் ஒப்பிடலாம்.

தந்திரோபாய பின்னகர்வுகளும், சில முன்னகர்வுகளும் பெருந்தளப்பிரதேசங்களை மீட்டெடுப்பதில் முடிவுற்றதையும் ஆய்வு செய்யலாம்.

ஆயினும் உலகறிந்த இரகசியமாகக் கருதப்பட்ட புலிகளின் வான்படை வெள்ளோட்டம் எத்தருணத்தில் நிகழுமென்பதை எவராலும் எதிர்வுகூற முடியாமல் போயிற்று. அதேவேளை, இந்த சர்வதேசமென்றால் என்ன? அவை முன்பு நடைபெற்ற விடுதலை வேள்விகளை அணைத்திட எவ்வகையான சதிகளைப் பிரயோகித்தது? அவற்றை அப்போராட்டச் சக்திகள் எவ்வாறு முறியடித்து வெற்றி கொண்டன என்பதை மக்கள் முன் தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு தேசிய உணர்வு நிரம்பிய ஒவ்வொரு ஆய்வாளருக்கும் உண்டு.

அதேவேளை தோல்வியுற்ற 'பயாப்ரா" போன்ற போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில விடயங்களையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வதே புதிய போராட்டங்களைச் செழுமைப்படுத்தும். போராட கற்றுக்கொள்வதும், கற்பதற்காகப் போராடுவதும் அதற்குமப்பால் போராட்ட நோக்கு பற்றிய தெளிவு உணர்த்தப்படுதல் வேண்டும்.

ஒரு இலக்கை அடைவதற்கு, வன்முறைச் சமர்களும், சாத்வீக முறையிலான பேச்சுவார்த்தைகளும், நாடாளுமன்ற மேடைகளும் பயன்படுத்தப்படுவது பொது நியதி.

மக்களை இராணுவ மயப்பட்ட சிந்தனையுடையோராக மாற்றுவதனூடாக போராட்டங்கள் வெல்லப்படுவதில்லை. மக்களின் பூர்வீக தேசிய இன பிறப்புரிமையை, ஆழ்மனதில் விதைத்து விட்டாலே போதும் இலட்சியப் புள்ளி கைக்கெட்டிய தூரத்தில் வந்துவிடும்.

வட்டுக்கோட்டையிலும் தனியரசுத் தீர்மானம் மேற்கொண்ட தந்தை செல்வாவின் அறவழிப் போராட்டமாயினும், பிரபாகரனின் ஆயுதப் போராட்டமாயினும், சர்வதேசம் போட்ட பேச்சுவார்த்தை மேடையில் தமிழ்த்தரப்பு நியாயத்தை வெளிச்சமாக்கிய தேசத்தின் குரல் பாலசிங்கமாயினும், இலக்கு ஒன்று என்பதை எந்த வழிமுறைகளும் மாற்றவில்லை.

சமர்களில் ஏற்படும் பின்னடைவுகள் மக்கள் மனதில் சோர்வினை ஏற்படுத்துமாயின், அதற்கான பொறுப்பினை இராணுவ வெற்றிகளை தலையில் வைத்துக் கூத்தாடும் இராணுவச் சிந்தனையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இராணுவ மயப்படுத்தப்பட்டு வரும் இலங்கை அரசியல் போன்று, தேசிய விடுதலைப் போராட்டமும் அதனையே பிரதிபலிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது சிறு பின்னர்வுகளையிட்டு அதீத சோர்வினை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாகவே தொப்பிகல பின்னகர்வு, உலக தமிழர் சமுதாயத்தில் பல கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்கியுள்ளதென அறுதியிட்டுக் கூறலாம். தொப்பிகல வெற்றி விழாவை 'கிழக்கின் விடியல்" என கொழும்பில் கொண்டாடும்போது, நண்பனொருவர் தொலைபேசியில் என்னை அழைத்தார்.

'இருந்து பாரும், பெரிய அடியொன்று புலிகள் கொடுப்பார்கள்" என்றார் அவர். அடிக்கு அடி கொடுக்க வேண்டுமென்கிற மனோபாவத்தின் வெளிப்பாடாகவே அவரின் சீற்றம் அமைந்திருந்தது.

திருப்பி அடிக்காவிட்டால், புலிகளைப் பூனையென்று கூறுமளவிற்கு அவரின் அரசியல் ஞானம் வளர்ந்திருந்தது. 'உமது ஆய்வின்படி, இனி என்ன நடக்கும்?" சோர்வு ததும்பிய நிலையில் இன்னொரு கேள்வியினையும் முன்வைத்தார்.

'முதலில் ஒரு நூறு பவுண்சை வையும். நான் புலிச் சாதகம் கூறுகிறேன்!" என்றேன். நண்பருக்கு எனது கிண்டல் புரிந்தது. மௌனமானார்.

பத்தி எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் காண்டம் வாசிக்கும் சாத்திரக்காரர்கள் என்பதே சிலரின் கணிப்பு.

ஆர்வக் கோளாறும், தன் முனைப்பும் அதிகரித்த சில ஆய்வாளர்கள், போராட்ட சக்திகளின் சிதைவிற்கும் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பலர் புரிய மறுக்கின்றார்கள்.

யாழ். குடா படையினரால் கைப்பற்றப்பட்டபோதும் சிங்கள ஊடகங்கள் ஆர்ப்பரித்தன. ஈழப்போராட்டம் அழிந்துவிட்டதென ஆய்வாளர்கள் மாறிமாறி முதுகு சொறிந்தார்கள்.

தமிழ் மக்களின் மனநிலையோ வேறுவிதமான பரிமாணத்தை கொண்டிருக்கிறது. இடம்பெயர் வாழ்வும், விமானக் குண்டுவீச்சுகளும், பொருளாதாரத் தடைகளும், கனவாகிப் போன இயல்பு வாழ்வும், வாழ்விற்காகப் போராடும் உந்துதலை அம்மக்கள் மீது திணிக்கிறது.

அந்நியப் பார்வையில் சோர்வு நிலை கலத்தலென்பது இயல்பானது. போராட்டத்தில் பங்காற்றும் போராளிகளுக்கு வராத சோர்வு, பார்வையாளர்களுக்கு வரக்கூடிய சாத்தியம் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.

வியட்னாமிய விடுதலைப் போராட்டம் எத்தனையோ பின்னடைவுகளையும் அழிவுகளையும் உள்வாங்கியபடியே வென்றெடுக்கப்பட்டது. உள்வாங்கப்பட்ட சோக நிகழ்வுகளையிட்டு அம்மக்கள் சோர்வுற்றிருந்தால், அத்தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றியடைந்திருக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

ஹோசிமின் தலைமை மீதுள்ள பற்றும், விடுதலையை வென்றெடுக்கும் வேட்கையும், சிறு பின்னடைவுகளையெல்லாம் உமி நீக்கும் காற்றுப் போலாகித் தொழிற்பட்டது.

பாரிய பின்னகர்வுகளை எதிர்கொண்ட எரித்திய விடுதலைப் போராளிகளும், மக்களும் வல்லரசுப் படை வளங்களை கொண்ட எதியோப்பிய இராணுவத்தை தீரமுடன் எதிர்த்து, தமது மண்ணை மீட்டார்கள்.

விடுதலைப் போராட்டமென்பது பங்குச் சந்தை வியாபாரமல்ல. முதலீட்டாளர்கள் பங்கின் விலை எனும் போதே மேலதிக முதலீடுகளைப் போடுவார்கள். நிதியுதவி அளித்து, ஆதாய நோக்கில் பார்க்கப்படும் வியாபார விளையாட்டல்ல. உயிர்ப் பூவை உதிர்க்கும் விடுதலைப்போர்.

இலங்கைக்கு சில சர்வதேச நாடுகள் வழங்கும் நிதி மற்றும் ஆயுத உதவிகள் யாவும், தமது பிராந்திய நலன் பேண அளிக்கப்படும் முதலீடுகளே.

பேச்சுவார்த்தை நாடகங்களெல்லாம் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படப்போகிறதென்பதை உணர்கிற பொழுது மேடையேற்றப்படுகிறது. முதலீட்டிற்குள்ளாகும் கம்பனிக்குள் தகராறு உருவாகும்போது, ரணில் மஹிந்த உடன்படிக்கைகளும் முதலீட்டாளர்களால் திணிக்கப்படுகின்றன.

கம்பனி நிர்வாகியாக ரணில் அமர்ந்திருப்பதை முதலீட்டு சர்வதேச சமூகத்தினர் விரும்பினாலும், தம்மை நிர்வகித்து சீன முதலீட்டாளருடன் ஜனாதிபதி மஹிந்த கைகோர்க்கலாமென்கிற அச்சத்தினால், அவரையும் அனுசரித்துப் போவதே புத்திபூர்வமானதென்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

கம்பனியை உடைத்துத் தனிக் கம்பனி அமைக்க தமிழர்கள் விரும்புவதால், அச்செயலை பயங்கரவாதமாகச் சித்திகரித்து, உலக கம்பனிச் சட்டதிட்டங்களை மீறுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்ட விரும்புகிறார்கள். இவ்வாறான பங்குச் சந்தை மனோபாவம், எம்மவர் சிலரிடமும் உண்டு.

சமாதான தேனிலவு காலத்தில் பிரதான பாதையோரத்தில் காணி வாங்கியவர்கள் கொழும்பில், அடுக்குமாடி கட்டி முதலீடு செய்தவர்கள் எல்லோரும் போராட்டம் முடிந்துவிட்டது என்கிற நினைப்பில் இவற்றையெல்லாம் செய்தார்கள். போராட்டம் பற்றியதான தவறான புரிதலும், சர்வதேசம் குறித்த அதீத நம்பிக்கையும் இதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைகிறது.

இன்னும்கூட, நோர்வே அனுசரணையூடாக ஒரு நிரந்தர சமாதானம் உருவாகுமென்கிற நம்பிக்கை எம்மில் பலருக்குண்டு. பாலஸ்தீனப் பிரச்சினையில் நோர்வே அனுசரணை வகித்திருந்தும், அநுமான் வால் போன்று, இற்றைவரை அப்பிரச்சினை நீண்டு செல்வதை ஆய்வாளர்கள் பலர் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரலாற்றிலிருந்து பல படிப்பினைகளை கற்பதை விடுத்து, புலிகளின் படைவலு குறித்தான ஆழத்தைப் புரிவதால், சோர்வடைவதைத் தடுக்கலாமென கருதுவது தவறான தர்க்கப் பார்வையாகும்.

விடுதலைப் புலிகளின் படைவலு சூட்சுமத்தையும், அதன் அடி முடியைக் காண முடியாமலும் தவிக்கும் அரசு படைக்கு, இராணுவ ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோர் அறிவுக் கண்ணைத் திறக்கும் கைங்காரியத்தை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்பது தன் வாயால் கெட்ட தவளை போலாகிவிடும்.

அண்மைக்கால போராட்ட வரலாறுகளை ஆய்வு செய்தால் எரித்திரியா, கிழக்குத் தீமோர் போன்றவை தனி நாடுகளாக உருப்பெற்றதும், யூகோஸ்லாவியா உடைந்து, ஏழு தேசிய இனங்களில் கொசோவா தவிர்ந்த ஏனைய இனங்கள் தனி அரசு அமைத்ததையும் காணலாம்.

சர்வதேசப் பார்வைக் குவி மையம், செறிவடையும் பிரதேசங்களில் பிரிதலும், இறையாண்மை என்ற போர்வைக்குள் வலிந்த இணைப்பும் மேற்கொள்ளப்படுகின்றன.

கொசோவோவாவில் அரச பயங்கரவாதத்திற்கெதிரான நிலைப்பாடும், ஸ்ரீலங்காலங்காவில் விடுதலைப் போரை பயங்கரவாதமாக நோக்கும் திரிபு நிலையும், ஏகாதிபத்தியங்களால் பிராந்திய நலனிற்கேற்ற வகையில் கையாளப்படுகின்றன.

ஆகவே புலிகளின் படை வல்லாண்மை உணர்த்தப்படுவதால், ஏகாதிபத்தியங்களின் நிலைப்பாட்டில் மாற்றமேற்படுமென கற்பிதம் கொள்வது உலக ஒழுங்கினை புரியாத தன்மையின் அடிப்படையிலேயே உருவாக முடியும்.

சந்தைப் போட்டியில் தமக்குச் சாதகமான நிலை, பிரிவினைப் போராட்டத் தளத்தில் ஏற்படுமானால் அதனை அங்கீகரிக்க ஏகாதிபத்தியங்கள் தயங்காது. அதற்கான சூழல் உருவாகும் வரை, இன அழிவினைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் போராட்டத் தலைமைக்கு ஏற்படுகின்றது. நவம்பர் 28இல் தன்னிச்சையாக தனிநாட்டுப் பிரகடனம் செய்யப் போவதாக கொசோவோ மக்கள் கூறுகிறார்கள்.

கொசோவோ தனிநாடானால், அமெரிக்காவிற்கு அனுகூலமாக அமையுமென்பதால், அத்தீர்மானத்தை எதிர்ப்போர், அவ்வினத்தின் அழிவினைத் தடுக்கும் வழிவகைகளையும் கூறவேண்டும். ஆகவே, கொசோவோ மக்கள் போல, அரசியல் விழிப்புணர்வுடன் கூடிய போராட்டம் தமிழ் மக்களையும் இலக்கை நோக்கி இட்டுச் செல்லுமென்பதைப் புரிதல் வேண்டும்.

Please Click here to login / register to post your comments.