படைவலுச் சமநிலையே தீர்வுக்கான அடிப்படை

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
தமது தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆரம்பகால கோரிக்கை என்பதற்கு மேலாக இன்று அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அனைத்துலகத்திற்கு உண்டு. ஆனால் கிழக்கை முற்றாக இராணுவ மற்றும் அரசியல் வழிகளில் தனிமைப்படுத்துவதன் மூலம் அந்த நிலைப்பாட்டை தகர்த்துவிடலாம் என்பது இலங்கை அரசுகள் காலம் காலமாக கடைப்பிடிக்கும் கொள்கையாகும்.

எனினும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்களில் முக்கிய புள்ளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் வழிகளில் தீர்வைக் காணவேண்டும் என கூறிவந்தாலும் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை தமிழ் மக்கள் அறிவதற்கான காலம் கனிந்துள்ளது என்பதையே தற்போது கூறமுடியும்.

ஏனெனில் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு படை வலுச் சமநிலை முக்கியம் என்பது மேற்குலகத்தின் அண்மைக்கால கொள்கை. பொஸ்னிய சேர்பிய போரை முடிவுக்கு கொண்டுவந்து ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு இந்த உத்தியே பயன்படுத்தப்பட்டது. சேர்பியர்கள் போர்க்களங்களில் வெற்றிகளை ஈட்டும் போது படைப்பலம் தம்மிடம் சாதகமாக இருப்பதாகவே அவர்கள் எண்ண தலைப்படுவார்கள். பேச்சுவார்த்தை மேசைகளை விட போர்க்களங்களில் அதிக அனுகூலங்களை பெற்றுவிடலாம் என்பதும் அவர்களின் கனவாகலாம் என்பது கொள்கை வகுப்பாளர்களின் கருத்தாக இருந்தது.

ஆகவே படை மேலாதிக்கத்தின் அடிப்படையில் ஒரு தீர்வுக்கு முன்வருமாறும் சேர்பியர்கள் நிபந்தனைகளை விதிக்கலாம் என்பதும் அவர்களின் கருத்தாக இருந்தது. எனவே தான் படைவலுச் சமநிலை அங்கு பேணப்பட்டது.

இலங்கையின் நிலையும் தற்போது அது போன்றதே. விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவை முடக்கவேண்டும் என அனைத்துலக சமூகத்தின் முக்கிய நாடுகளால் கொண்டு வரப்பட்ட தடைகளை தனக்கு சாதகமாக்கிய இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தின் மீது மேற்கொண்ட படை நடவடிக்கைகளின் மூலம் அதன் படைபலம் உயர்ந்துள்ளதான ஒரு தோற்றப்பாட்டை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படை நடவடிக்கைகளானது இரு இனங்களுக்கும் இடையிலான உளவியலில் தாக்கங்கள், அரசியல் தீர்வு தொடர்பான நம்பிக்கைகள் போன்றவற்றில் கடுமையான தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதற்கும் அப்பால் மேற்குலகத்தின் அரசியல் தீர்வு சமன்பாட்டிற்கும் சவாலான ஒன்றாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரையிலான ஏறத்தாழ அறுபது வருடங்களில் எந்தவிதமான ஒரு தீர்வும் கிடைக்கப்பெறாத இனமாகவே தமிழ் இனம் உள்ளது. அந்த மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் எனக்கூறும் அனைத்துலகத்தின் எதிர்கால நடவடிக்கை என்ன? அனைத்துக்கட்சி குழுவினூடாக ஒரு நியாயமான தீர்வை முன்வைக்க கூடிய அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலையில் இந்த அனைத்துலக சமூகம் உண்டா? என்பவை பொதுவாக எழுந்துள்ள கேள்விகள்.

அனைத்துலகத்தின் கண்டனங்களை பெறாத கிழக்கு மீதான படை நடவடிக்கை, தொடர்ச்சியான வான் தாக்குதல்கள், படை நடைவடிக்கை வெற்றி விழாக்கள் என்பன தாம் ஓர் உயர் படைவலு நிலையில் உள்ளதான தோற்றப்பாட்டை இலங்கை அரசிற்கும், தென்னிலங்கை மக்களிற்கும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே சேர்பிய படையினரின் மனநிலையைத்தான் அவர்களும் கொண்டிருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. அதாவது பேச்சுவார்த்தை மேசைகளை விட போர்க்களங்களில் அதிக இலாபங்களை ஈட்டிவிடலாம் என்ற கருத்து அவர்களிடம் ஏற்பட்டு இருக்கலாம். இது சிங்கள மக்களின் உளவுணர்விலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதற்கான சான்றாகத்தான் அண்மையில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தினால் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 54.6 வீத சிங்கள மக்கள் போருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிங்கள மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் இருந்து அரசியல் தீர்வை உருவாக் கக்கூடிய சூழலை அனைத்துலக சமூகம் எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றது?

படைவலுவில் மீண்டும் மாற்றம் ஏற்படும்படி அது நடவடிக்கை எடுக்கப்போகின்றதா? அந்த ஒரு மாற்றம் இல்லாது விட்டால் அனைத்துலகத்தின் அரசியல் தீர்வு என்ற கூற்றுக்கள் எல்லாம் வெறும் ஏமாற்றும் வார்த்தைகள் தான் என்பது இலகுவாக புரிந்து கொள்ளப்படக்கூடிய உண்மையாகிவிடும். ஏனெனில் அமைதி முயற்சிக்கான ஒரு சூழலை தோற்றுவிப்பதற்காக 1987 ஆம் ஆண்டு இந்திய அரசு கூட தனது படைவலுவைக் கொண்டே இலங்கை அரசை மிரட்டியிருந்தது. பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான மிராஜ் 2000 ரக தாக்குதல் மிகை ஒலி விமானங்கள் தாழப் பறந்து மிரட்ட, அன்ரனோவ் - 32 பி கனரக சரக்கு விமானங்கள் உணவுப் பொருட்களை வடபகுதியில் வீசியிருந்தன.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கவும், அதனை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும் அன்றைய ஜெயவர்த்தனா அரசு இணங்கியதற்கான காரணமும் இந்தப் படை பலம் தான். அதாவது அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் ஒரு படைவலுச் சமநிலையை எட்டும் நிலையில் இருக்கவில்லை. எனவே அரசை ஒர் அமைதி வழிக்கு கொண்டுவந்து தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலைநிறுத்த பலமான படையை முன்நிறுத்த வேண்டிய நிலை இந்தியாவிற்கு இருந்தது.

அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் மேற்பார்வையில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தமும், அமைதிப் பேச்சுக்களும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்கும் இடையில் ஒரு சமநிலையை எட்டும் நிலை வந்துவிட்டது என்ற தருணத்தில் உருவாகியது.

இலங்கையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை கருதினால் 1985 ஆம் ஆண்டு திம்பு, 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம், 1990 ஆம் ஆண்டு பிரேமதாசா அரசுடனான பேச்சுக்கள், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அரசுடன் நடைபெற்ற பேச்சுக்கள், 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் உருவாகிய அமைதிப் பேச்சுக்கள் என போரும் பேச்சும் மாறி, மாறி நிகழ்ந்த போதும் 1987, 2002 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பேச்சுக்களே ஒரு சிறு அரசியல் நகர்வையாவது ஏற்படுத்தும் என மக்களாலும், அனைத்துலகத்தினாலும் அதிகளவில் நம்பிக்கை வைக்கப்பட்டவை. இந்த நம்பிக்கைகளுக்கான காரணம் இந்த இரண்டு முயற்சிகளும் படைவலு அச்சுறுத்தல் (இந்தியப்படை) அல்லது சமநிலை (விடுதலைப் புலிகளின் படைபலம்) என்ற தளத்தில் உருவாகியவை.

எனவே மேற்குலகத்தின் சமன்பாடுகள் உலகத்தின் வேறுபகுதிகளில் சரியாக பொருந்தினாலும் அவர்கள் அதனை இலங்கையில் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றார்கள், இலங்கை தொடர்பான அவர்களின் பூகோள அரசியல் என்ன என்பதில் தான் அவர்களின் சமா தான முகத்தின் உண்மைத்தன்மை புலப்படும்.

இன்று வடக்கு கிழக்கு போர்க்களங்களில் ஏற்பட்டிருக்கும் ஒரு தேக்க நிலையும் இந்த உண்மைத்தன்மைகளை அறிவதற்கான ஒரு கால இடைவெளியாகும் என்று குறிப்பிட்டாலும் தவறாகாது. அதாவது மேற்குலக ஆதிக்கமும், பிராந்திய வல்லாதிக்கமும் கொண்டுள்ள வேறுபட்ட அணுகுமுறைகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் எத்தகைய நிலையை கொண்டுவரப் போகின்றன என்பது தான்.

2007 ஆம் ஆண்டிற்கான உலக படைவலுச் சமநிலையின் சுருக்கம் கூறுவது என்ன? அதாவது நாம் ஒரு முனைவாக்கப்பட்ட உலகிலா (ருni-pழடயச றழசடன) அல்லது பல முனைவாக்கப்பட்ட உலகிலா (ஆரடவi-pழடயச றழசடன) வாழ்கின்றோம் என்றால், அதற்கான விடை நாம் முனை வாக்கப்படாத உலகத்திலேயே (ழேn-pழடயச றழசடன) வாழ்கின்றோம் என்பது தான்.

ஏனெனில் உலகம் தற்போது அமெரிக்காவினால் முனை வாக்கப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றினாலும், அமெரிக்காவிடம் அனைத்துலகத்தின் செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்களை தயாரிக்கும் வலு இருக்கின்றது. ஆனால் அதனை உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த முடியாத பலவீனம் உண்டு.

ஏனைய நாடுகளை எடுத்துக்கொண்டால் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களை எதிர்க்கக்கூடிய பலம் அவர்களிடம் உள்ளது எனினும் அதற்காக அனைத்துலகத்தின் கவனத்தை ஒன்று குவிக்கமுடியாத தன்மை அல்லது வெளியாரின் தலையீடு இன்றி உள்ளூரில் தமது திட்டங்களை நிறைவேற்ற முடியாத தன்மை போன்ற பலவீனம் அவர்களிடம் உண்டு.

இலங்கை இனப்பிரச்சினையிலும் உலக வல்லரசினதும், பிராந்திய வல்லாதிக்க நாடுகளிற்கும் இடையிலான இந்த இழுபறிகள் எதிரொலித்த படி தான் இருக்கின்றன. அண்மையில் கொசோவோ சுதந்திரம் அடைவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் உலக வல்லாதிக்க மற்றும் பிராந்திய வல்லாதிக்க தன்மைகளும் பூகோள அரசியலும் தான் காரணம். இந்த சிக்கல்கள் தான் கொசோவோ மக்கள் தாமே தமது சுதந்திர பிரகடனத்தை செய்யவேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளது. மேற்குலகத்தினதும், பிராந்திய வல்லாதிக்க நாடுகளினதும் வேறுபட்ட அணுகுமுறைகள் இலங்கையிலும் கொசோவோ போன்றதொரு நிலையை ஏற்படுத்தலாம் என்ற நிலையையே உருவாக்கி வருகின்றது. அதாவது தமது தலைவிதியை அந்த மக்களே எழுதும் ஒரு சூழ்நிலையை இது தோற்றுவிக்கலாம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

Please Click here to login / register to post your comments.