'கிழக்கின் உதயம்' சிங்கள ஆக்கிரமிப்புக்கான அரசாங்கத்தின் உபாயம்?

ஆக்கம்: அஜாதசத்ரு
அரசபடையினரால் கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரகடனப்படுத்திய அரசாங்கம் அது தொடர்பான தேசிய விழாவொன்றை கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் கொண்டாடியதுடன் அது தொடர்பான நிகழ்வுகளை அரச ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. இதனைவிட `கிழக்கின் உதயம்' என்ற பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்துவைத்துள்ளது.

1987 இல் அப்போதைய மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நம்பிக்கையொன்றை விட்டுச் சென்ற வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை உயர் நீதிமன்றத்தின் ஊடாக இல்லாதொழிப்பதற்கு துணைபோக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள் விழாக்களில் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்து சுமார் இரண்டு இலட்சம் மக்களின் வாழ்விடங்களை அழித்தொழித்து அகதிகளாக்கிய பின்னர் `கிழக்கின் உதயம்' என்ற வெற்றிக்களிப்பை பிரகடனப்படுத்தியது.

முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தை இவ்வருடம் ஜனவரியின் ஆரம்பத்தில் ஆக்கிரமித்த அரச படையினர் பின்னர் அங்கிருந்து வெளியேறிய மக்களை கட்டாயத்தின்பேரில் மீளக் குடியேற்றினர்.

பின்னர் மார்ச் மாதப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய படுவான்கரைப் பிரதேசம் மீது சுமார் ஒன்றரை மாதகாலமாக தொடர்ச்சியான பல்குழல் ரொக்கெட் தாக்குதல், ஷெல்வீச்சு மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அரசபடையினர் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் காரணமாக படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு பெருமளவில் இடம்பெயர்ந்த மக்கள் அரச நிவாரண உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்களையும் இடம்பெயர்ந்த பிரதேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களினது உதவிகளுடன் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அகதி வாழ்க்கையை எதிர்கொண்டனர்.

சுமார் ஒன்றரை மாதகால இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் கிழக்கை மீட்டதாக அறிவித்த அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்புவதற்கு அனுமதியளித்தது.

மீளக்குடியேறும் மக்களுக்கு வாரத்திற்கு ஒரு தடவை உலருணவுப்பொருட்கள் வழங்கப்படுமென்றும் அரச அதிகாரிகளினால் நஷ்டஈடு மதிப்பிட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது.

எனினும் படுவான்கரைப் பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு இதுவரை இரண்டு தடவைகள் மாத்திரமே குறிப்பிட்டளவு உலருணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் நஷ்டஈடு வழங்கப்படுவதற்கான மதிப்பீட்டு அறிக்கைகள் பிரதேச செயலக அதிகாரிகளால் மீள்குடியேற்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரைகாலமும் முன்னெடுக்கப்படவில்லையென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் மாவிலாறு, மூதூர் பிரதேசங்களிலிருந்து போர் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கான அனைத்து வசதிகளும் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதுடன் நஷ்டஈடும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட படுவான்கரைப் பிரதேச மக்கள் விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் கால்நடை வளர்ப்பையுமே பிரதான தொழிலாகக் கொண்டவர்கள்.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள பாடசாலைக் கட்டிடங்கள், பொதுக் கட்டிடங்கள், குடியிருப்புகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதுடன் எஞ்சியிருக்கும் வீடுகளும் ஷெல் தாக்குதல் காரணமாக காடுகளிலிருந்து வெளியேறிவந்த யானைக்கூட்டங்களால் அழிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

இதனைவிட பெரும்பாலான கால்நடைகள் போர் நடவடிக்கைகள் காரணமாக அழிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவை நாடுகளுக்குள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் போர் நடவடிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெரும்போக நெற்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 16,690 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் இழக்கப்பட்டும் இதனால் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.

கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இவ்வாறான பல்வேறு அவலங்களுக்கும் அச்சத்துக்கும் மத்தியில் அகதி முகாம்களில் தமது வாழ்நாட்களை கழித்துக் கொண்டிருக்கும் நிலையில் `கிழக்கின் உதயம்' அபிவிருத்தித் திட்டம் என்ற பொய்ப் பிரசார நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் மறுபுறத்தில் பாரிய சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கும் திட்டமிட்டு வருவதையே அதன் அண்மையகால நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எடுத்துக் காட்டுகின்றன.

`கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்திவிட்டு தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையூடாக கிழக்கிலுள்ள வளங்களை சூறையாடுவதற்கான வேலைத்திட்டமொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டியுள்ளதே தற்போதைய உண்மை நிலவரமாகும்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியதன் மூலம் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை தொடர்ந்தும் அகதிகளாக வாழும் நிலைக்கு முடக்கியுள்ளது.

மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ள அரசாங்கம் அப்பிரதேசத்தில் அனல் மின் நிலையமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் அது தொடர்பாக இந்தியாவின் உதவிகளையும் வேண்டிநிற்கிறது.

இதனைவிட மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசக்களை அண்மித்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முன்னோடி நடவடிக்கையாக புனித பூமி பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை புதிதுபுதிதாக நிர்மாணித்து வருகின்றது.

மூதூர் கிழக்கு, சம்பூர், சேனையூர், சீனன்வெளி, கட்டைபறிச்சான், மூதூர் மூன்றாம் கட்டை மலை போன்ற பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்பட்டு சுற்றிவர பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைவிட மூதூர் கிழக்கிலுள்ள இலங்கைத் துறைமுகம் என்ற பாரம்பரிய தமிழ்க் கிராமம் லங்காபட்டுண என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களான கந்தளாய், தெனமரவாடி, சேருவல போன்ற பிரதேசங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைப் போன்றே மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பிரதேசங்களையும் அபகரிக்கும் நடவடிக்கைகளில் இன்றைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

அதேநேரம் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இன்று பெரும்பான்மையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி மன்னார் சென்று அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

அரச படையினரால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் பின்னணியிலும் அப்பகுதியைச் சேர்ந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பௌத்த மதகுருமார்கள் பலரும் முனைப்புடன் செயற்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் படை உயரதிகாரிகளும் அங்குள்ள வேப்பவெட்டுவாள் வீதியை `சார்ஜன் பத்திரண மாவத்தை' என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அதுமட்டுமன்றி கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றில் தொல்லியல் ஆய்வுகள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த திணிப்பு ஒன்றுக்கும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறியவருகிறது.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள `கிழக்கின் உதயம்' அபிவிருத்தி திட்டமென்பது முழுமையான சிங்கள பௌத்த திணிப்பு ஒன்றையே வெளிக்காட்டி நிற்பதையே அரசுடன் ஒட்டிக் கொண்டு உறவாடும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உணரத்தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அங்குள்ள முஸ்லிம் மக்களின் எதிர் காலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

Please Click here to login / register to post your comments.