தென்னிலங்கையின் அரசியல் அலையடிப்புகளும் சுழியோட்டங்களும்

ஆக்கம்: பீஷ்மர்
கடந்த இரண்டு நாட்களாக அரசியல் முக்கியத்துவமிக்க செய்தியாக வந்திருப்பது ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலுள்ள இ.தொ.கா.வின் பதவி விலகலாகும். இதுவரை எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் முற்றிலும் வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் ஆறுமுகன் தொண்டமான் விலக வேண்டி வந்ததற்கான காரணம் அரசியல் ரீதியாக ராஜிநாமாச் செய்யாத மலையக மக்கள் முன்னணியை எந்த நிலைக்குத் தள்ளுமென்பது ஓர் உள்ளார்ந்த பிரச்சினை.

உண்மையில் ஆறுமுகன் தொண்டமான் சம்பவம் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கப் பிரச்சினைகளின் ஒரு சிறு மீறலேயாகும். கொதிக்கும் பானையை மூடியிருக்கும் சிறு தட்டுக்கூடாக ஆவி பிய்த்துக் கொண்டு வருவதைப் போலாகும்.

ஆனால், உண்மையில் சற்று ஆழமாக ஏறத்தாழ கடந்த ஆறு மாதகாலமாக ஐ.தே.கட்சியின் தலைவர் உடனடி அரசியல் மாற்றத்துக்கான இயக்கத்தை சிங்களப் பகுதிகளிலேயே மேற்கொண்டார்.

ராஜபக்ஷவின் நிர்வாக அதிகாரமுடைய ஜனாதிபதி என்னும் வகையில் அவர் பதவிக் காலம் வரையும் (2011) எதுவும் செய்ய முடியாதென அறிந்தும் அரசாங்க மாற்றம் வேண்டுமெனக் கூறும் பின்புலம் என்ன?

தற்போது பிரதமராகவுள்ள இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஒரு பிரச்சினைகளுக்கும் இடம் கொடுக்காத ஒருவரே என்பதும் பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷ மந்திரிசபையின் அமைச்சர்களாக முக்கிய இடம்பெறுபவர்கள் முன்னர் மங்களவும் தற்போது நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே போன்றவர்களே என்பதும் தெரிந்ததே.

அரசாங்கங்கள் பற்றிய ஆய்வில் அவற்றின் அதிகாரவலு ஸ்திரப்படுவது பற்றிப் பேசும்பொழுது அதிகாரத் தளம் (Power Bose) யாது என்பது பற்றி நோக்குவதையும் உள்ளடக்கும்.

மகிந்த ராஜபக்‌ஷவின் அதிகாரத் தளம் யாது என்ற வினாவுக்கான விடை பல பிரச்சினைகளைக் கிளப்புகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தொடர்ந்து பதவியில் இருக்காது போக அவரது அமைச்சுக்குள்ளேயிருந்து கொண்டே அவரை எதிர்த்தனால் தனக்கென ஒரு வலுவான பதவியை (பிரதமர்) பெற்றிருந்த மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் எதிர் வேட்பாளராக மட்டுமல்லாமல் அரசியல் முக்கியத்துவமுடைய சிங்களத்துவ அரசியல் அணிகளின் பிரதிநிதிகளாகவும் முன்னெடுக்கப்பட்டார்கள். ஜே.வி.பி., பௌத்த ஜாதிக பலவேகய கட்சிகளையும் சக்திகளையும் உள்ளடக்கி நின்ற ஒரு சிங்களத்துவ அரசியல் அணியின் பிரதிநிதியாளர். அவரது வெற்றியின் பிரதான காரணிகளில் ஒன்று அவர் அதுகாலவரை இலங்கை அரசியலில் ஆட்சி ஆதிக்கம் செலுத்திய குடும்பங்களைச் சாராதவர்களாகும். இதனூடு முக்கியம் அவர் றுஹுணு பிரதேசத்தில் பிரதிநிதியாக இருந்தமையுமாகும். எளிமையானவர், இனிய சுபாவம் உள்ளவர், நற்பெயருடைய குடும்பத்தில் பிறந்தவரென்ற வசீகரம் முக்கியமானதாகும்.

இதன் பின்புலத்தில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர், பிரதிநிதி என்பது எடுபடமாலே போயுள்ளது. அதற்குப் பிரதான காரணம் கட்சியின் தலைமை அவரிடம் அப்போது இருக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் ஜனாதிபதி சந்திரிகாவே. இந்தக் கதை நீண்டது. அதை அவர் நீட்டாமல் குறுக்கிக் கொண்டு நமது தேவையின் குவி மையத்துக்கு வரும்பொழுது தோன்றும் பிரச்சினைகளை நோக்குவோம்.

சந்திரிகா அம்மையார் ராஜபக்‌ஷவின் ஆட்சி அதிகாரம் பற்றித் தனது மனக்குறைகளை ஒழிவு மறைவாக வைக்கவில்லை. ஐ.தே. கட்சியின் சுகதேவைகள் ரணில் தலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக கட்சியை முன்னிலைப் படுத்தத் தொடங்கியது. இந்த நிலையில் இன்றைய ஜானதிபதி தனது அரசியல் தளத்தை வலுவாக நிறுவவேண்டுவது மட்டுமல்லாமல் அதில காலூன்றி நிற்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

ஜே.வி.பி. கூட்டரசாங்கத்தை அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை. தேர்தலில் முதல் தடவை வெற்றியீட்டிய பலவேகய பிக்குகளும் இணைந்து கொள்ள முடியாத நிலை. இதற்குள் சந்திரிகா அம்மையார் வெளிநாடு சென்றுள்ளார்.

இத்தகைய சூழலிலே தான் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியாக இருப்பவரே கட்சியின் தலைவராகவும் இருக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை சுதந்திரக் கட்சி எடுத்து அலரி மாளிகையில் நடந்த அதன் ஆளுநர் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதியை சுதந்திரக் கட்சியின் தலைவராக தேர்வு செய்தது. அதனை அநுரா பண்டாரநாயக்கவும் ஆதரித்தார்.

நிர்வாக ஜனாதிபதி என்றாலும் பராளுமன்றம் மூலமே அமைச்சரவையை அமைக்க வேண்டிய தேவை, சூழல் ஜனாதிபதிக்கிருந்தது. நிர்வாக ஜனாதிபதி என்கின்ற வகையில் அமைச்சரவையை முற்று முழுதாக நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால், நிர்வாக அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கீழ் சிலர் உத்தியோகத்தர்களாக்கப்பட்டு முக்கிய பதவிகள் வகித்தனர்.

மகிந்தராஜபக்ஷ தனது நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தனது சொந்த சகோதரரொருவரை விசேட ஆலோசகராக நியமித்தார். அதே குடும்பத்தைச் சார்ந்த இன்னொருவரையும் பாதுகாப்பு செயலாளராக்கினார். இவர்கள் நம்மிடையே நிலவுகின்ற இந்த அரசியல் பண்பாட்டின் பிரதிநிதிகள் என்று கொள்ளப்படத்தக்கவர்கள் அல்ல.

ஏறத்தாழ ஒருவர் சிவில் நிர்வாகத்துக்கும் மற்றவர் இராணுவ நிர்வாகத்துக்கும் பொறுப்பானவர். இராணுவ நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர் ஏற்கனவே தளபதியாக இருந்தவரின் நண்பர். அதனால், அவருக்கு கிழக்கில் இராணுவத்தின் வெற்றி ஊடுருவலுக்கு உதவ முடிந்தது. கதை இதுவரை இனிதாக சுவாரஸ்யமாக ஐ.தே.க.வுக்கு எதிராக ஓடிக்கொண்டிருந்தது.

இப்படியான சூழலில் ஆறுமுகன் தொண்டமானும் சந்திரசேகரனும் அமைச்சர் பதவிகளில் வேண்டப்படுவதும் ஒட்டிக் கொள்வதும் இயல்பு.பிரச்சினை எங்கே தொடங்கிற்று என்றால் கட்சி அரசியல் பாரம்பரியத்திற்குப் பழக்கம் இல்லாத சகோதரர்கள் கைகளிலேயே பலம் இருந்தமையே ஜனாதிபதி அவர்களின் பதவியின் தவிசை அனுபவிக்கவும் அலங்கரிக்கவும் தொடக்க சகோதரர்கள் பலம் அதிகமாகிக் கொண்டே போயிற்றாம். அமைச்சரவையில் 105 அமைச்சர்கள் இருப்பினும் நிதிக் கட்டுப்பாடு ஜனாதிபதி அலுவலகத்தின் கையினுள்ளேயே வந்து விட்டது என்ற இந்தச் சாட்டு பலமாகத் தொடங்கிற்று.

இந்த நிலையிலே தான் கொதிக்கும் பானையின்மேல் இருந்த மூடி தூக்கி எறியப்பட்டது. மூன்று முக்கிய அமைச்சர்களை நடத்தி வந்த மங்கள சமரவீர ஸ்ரீபதி சூரியாராச்சியுடன் வெளியேறினார். இதனுடன்தான் உண்மையில் ராஜபக்‌ஷவின் அதிகாரத் தளம் யாது என்ற பிரச்சினை முக்கியப்பட்டது. இதன் பின்புலத்திலே தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிக்கல்பட்டுள்ளது.

விலகியவர்கள் சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவைத் தமதாக்கி அதற்கு சந்திரிகா அம்மையாரின் கணவர் தனது கட்சிக்கு வைத்திருந்த பெயரை அடைப்புக்குறிக்குள் போடுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக சந்திரிகா திரும்பி வருகின்றார் என்றும், ஐ. தே.க.நியமனம் மூலம் எம்.பி.யாகப் போகின்றார் என்றும் பேச்சு இடம்பெற்றது.

சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதில் ஜனாதிபதிக்கு பெருத்த அசௌகரியம் உள்ளது. ஏனென்றால் சுதந்திரக் கட்சி என்பது ஒரு பண்டாரநாயக்கா கட்சி. கணவன் மனைவி இருவருமே பிரதமராக இருந்தவர்கள். ஆனால் அவர்களது மகளோடு அரசியல் உறவு இல்லை. போதாததற்கு அவரும் சு.க.வின் தோற்றத்தை வரவேற்றிருக்கின்றார். இப்படியான பின்புலத்தில் பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் எதிர்காலம் என்ன?

நான்கு பேர்தான் என்றாலும் ஆறுமுகன் தொண்டமான் முக்கியமாகின்றார். அதிலும் பார்க்க முக்கியம் ஜே.வி.பி. ராஜபக்ஷ அரசைக் கவிழவிடாது என்பதாகும். ஒரு வலுவான ஐ.தே.கட்சி எதிர்ப்பு அரசாங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு தாங்களே அருகதையானவர்கள் என்பதை காட்டுவதற்கு பலவீனப்பட்டுப்போன மகிந்த ஆட்சியைத் தொடர்ந்து பேணுவது அவசியமானது. இனித்தான் வதந்திகள் கூடப்போகின்றன. அதேவேளையில் நிர்வாக நெருக்கு வாரங்களும் கூடப்போகின்றன.

நிர்வாகம் குறிப்பாக பாதுகாப்பு நிர்வாகம் அரசியல் துறையின் ஆலோசனையைப் பெறுவதில்லை என்பதற்கு கொழும்பில் லொஜ் விவகாரம் நல்ல உதாரணம்.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ உசார் நிலைக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. பசில் ராஜப்க்ஷவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆறுமுகன் தொண்டமான் பதவியில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லையென்ற பேச்சுகள் அடிபடுகின்றன. இவற்றுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு என்ற வினா எழும்புவது இயல்பே. கிழக்கில் ஈட்டியுள்ள தேட்டங்கள் தென்னிலங்கையின் உஷ்ணத்தை இறைப்பதற்கு பயன்படுத்தப்படலாம்- பயன்படுத்தப்படும்.

Please Click here to login / register to post your comments.