அடுத்த கட்டமாக மடு குறிவைக்கப்படுகிறதா ?

ஆக்கம்: கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன்
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றிய தரப்பினரும் அக்கறையுடைய தரப்பினரும் சற்றுப்பின்னகர்ந்துள்ள ஒரு நிலை காணப்படுகிறது. போர் எல்லாக்கட்டுகளையும் மீறி தன்பாட்டில் விரிவடைந்து செல்லும்போது அதனை வெளியே நின்று பார்க்கும் ஒரு நிலைக்கு இந்தத்தரப்பினர் இப்போது தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் பலவீனங்களுக்குள்ளால் பலம் பெற்ற போர் கண்காணிப்புக்குழுவை வெறுமனே ஒரு பார்வையாளராக்கிவிட்டது என்றும் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அதிலும் இப்போது கண்காணிப்புக்குழு போரைக்கண்காணிக்கும் ஒரு குழுவாக மாற்றமடைந்திருப்பதற்கும் அதனுடைய இந்தப் பலவீனமே காரணம் என்ற விமர்சனமும் பலமாக எழுந்திருக்கிறது.

இந்தமாதிரியான ஒரு எதிர்பாராத நிலை இனப்பிரச்சினை விவகாரத்தில் முன்னர் இந்தியாவுக்கு ஏற்பட்டது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக என்று கூறிவந்த இந்திய அமைதிப்படை இலங்கையில் போர் செய்யும் ஒரு இராணுவமாக மாற்றமடைந்தது. அப்படியொரு எதிர்பாராத, சிக்கலான மாற்றத்துக்கு தென்னிலங்கை அப்போது ஒரு வகையான ராஜதந்திரத்தைக் கையாண்டிருந்தது. அது பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போது போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு போரைக்கண்காணிக்கும் குழுவாக மாறியிருக்கிறது.

இன்னும் இந்தமாதிரியொரு நிலைமை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு ஏற்படவில்லை. ஆனால் நோர்வே மிகமோசமான பல அனுபவங்களைப் பெற்றுள்ளது.

பொதுவாகச் சொன்னால் எரிக்சொல் ஹெய்ம் ஒரு தடவை சொன்னதைப்போல இலங்கைப்பிரச்சினையை எவரும் நினைத்த மாதிரியோ நினைத்த மாத்திரத்திலோ தீர்த்துவிட முடியாது. அதிலும் சமாதானத்துக்கு இலங்கையைப் பழக்கியெடுப்பதென்பது மிகக் கடினமானதென்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இதனால் பொதுவாகவே சமாதானத்தை விரும்புவோர் இப்போது பின்தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இப்போதைக்கு சமாதான விரும்பிகளின் கை பொதுவாக உள்நாட்டிலும் சரி வெளியுலகிலும் சரி பலவீனமானதாகவே இருக்கிறது. ஆகையால் போர்தான் இப்போதைக்கு அதிக சாத்தியமுள்ளதொரு தெரிவாக சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் இருக்கிறது.

ஆனால் இந்தப்போர் யாரும் நினைப்பதைப் போல இலகுவான போராகவோ உடனடியாக முடிந்து விடும் போராகவோ இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இனி நடக்கக்கூடிய போர் என்பது எதையும் தீர்மானிக்கக்கூடியதொரு போராகும். அதாவது திருப்பங்கள் மாற்றங்களை விளைவிக்கக் கூடிய வலு இந்தப்போருக்கு இருக்கிறது.

கடந்த ஒன்றரை வருட காலம் வரையும் நடந்த போரில் இந்தத்திருப்பங்களுக்கு அதிக இடமிருக்கவில்லை. வெளியே அரசாங்கத் தரப்பு பல பிரதேசங்களைக் கைப்பற்றியிருப்பதாக ஒரு தோற்றத்தைக்காட்டினாலும் இன்னமும் புலிகளின் போர் ஆற்றலையோ சமவலு நிலையையோ அது பாதித்ததாகச் சொல்ல முடியாது.

புலிகள் தங்களின் போரிடும் ஆற்றலை வலுவாக்கி வைத்திருக்கும் வரையில் அவர்கள் தொடர்பாக எந்த முடிவுக்கும் வரமுடியாது.

ஒரு விடுதலை அமைப்பு தன்னுடைய போரிடும் ஆற்றலைப் பாதுகாத்து வைத்திருக்கும் வரையில் அதனை எந்தச்சக்தியாலும் வெல்ல முடியாது என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு.

அடுத்த நடவடிக்கையை முற்றிலும் வித்தியாசமான முறையில் தொடங்குவதே புலிகளின் வழமை. இன்றைய நிலையில் பதிலடியை கொடுக்கவே புலிகள் விரும்புவார்கள்.

புலிகளுக்கு இது இப்போதைய அவசரமாகத் தேவையாகவும் இருக்கிறது.

ஏனெனில் கிழக்கே படை நடவடிக்கையை முடித்துக் கொண்டு அடுத்ததாக அரசாங்கம் வடக்கே புதிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. வடக்கே அதற்கான முஸ்தீபுகளிலும் அது ஈடுபட்டு வருகிறது.

வடக்கில் மன்னாருக்கும் வவுனியாவுக்கும் இடையில் தொடர்ச்சியாக படையினரை முன்னகர்த்த முயற்சிப்பதும் இந்த அடிப்படையில் தான். அதிலும் மன்னார் மடு தேவாலயப்பகுதியை கைப்பற்றுவதே இப்போது படைத்தரப் பின் சிந்தனையாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

மடுவைக்கைப்பற்றுவதன் மூலம் அரசாங்கம் ஒரு அரசியற் பிரசாரத்தைச் செய்யலாம். அல்லது அரசாங்கத்தின் அரசியற் பிரசாரத்துக்கு மடுவைக் கைப்பற்றினால் அது வலு வசதியாக இருக்கும்.

அத்துடன் இப்போதுள்ள நிலைமையின்படி அரசாங்கம் வடக்கில் வேறு எங்கும் இலகுவில் வெற்றியைக் கொண்டாடக் கூடிய தாக்குதல்களைச் செய்யவும் முடியாது. மற்ற எல்லா முனைகளிலும் புலிகள் மிகப்பலமாகவே இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மன்னார், மடு, தம்பனை போன்ற பகுதிகளில் வலுக் குறைந்திருக்கிறார்கள் என்று அர்த்தமுமில்லை.

இந்தக்களத்தில் புலிகள் எப்படியான பலமுடனிருக்கிறார்கள என்பதை இதுவரையிலும் இந்தப்பகுதியில் நடந்த சமர்கள் படையினருக்குப் புரிய வைத்திருக்கும். அதிலும் தெரிந்தெடுத்த படையினரைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய படையணியே இந்த நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது.

எப்படியோ மடுவைக் கைப்பற்றி விட்டால் அது வடக்கில் பிரகாசமானதொரு வெற்றியாக வர்ணிக்கப்பட வசதியாக இருக்கும் என்று அரசாங்கம் கணக்கிட்டிருப்பதாகவே தெரிகிறது.

மடுவுக்கு வெளியுலகில் ஒரு கவர்ச்சி உண்டு. வன்னியிலும் அதிக பிரசித்தியானதொரு மையமாக அது இருப்பதும் அது ஒரு அகதிகள் சரணாலயமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம்.

எனவேதான் அரசு தற்போது மடுவை குறி வைத்திருக்கிறது. ஆனால் அரசு மடுவுக்குக் கிட்ட நெருங்குவதற்கே கடும் சிக்கலை எதிர் கொள்ளவேண்டிவரும் என்பதையே அண்மைய கள நிலைவரங்கள் புலப்படுத்துகின்றன.

ஆனால் இப்போது அரசாங்கத்தரப்பிலும் போருக்கு ஆதரவான பெருந்தளமொன்று வலுவாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. போரை முழுச்சிங்களச்சமூகமும் ஆதரிக்கின்றது என்று ஒரு நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் படையினரின் போர் உளவியலையும் அரசாங்கம் உயர்த்தி வைத்திருக்கிறது.

படையதிகாரிகளைப் பொறுத்தவரையில் வடக்கும் கிழக்கும் ஒரே மாதிரியானவையல்ல என்பதே அவர்கள் வலியுறுத்தும் விடயமாகும். இரண்டு களமும் வேறுவேறு யதார்த்தத்தையுடையவை. வேறுவேறு விளைவுகளுக்குரியவை என்றும் அவர்களுக்கு தெரியும்.

எது எப்படியோ இப்போது அவசர அவசரமாக வடக்கில் ஒரு வெற்றி அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. கிழக்கின் குடும்பிமலை வெற்றியை எவ்வளவோ பிரமாண்டப்படுத்த அரசாங்கம் முனைந்தபோதும் அதை அரசாங்கத்தின் பெரும்பாலான அங்கத்துவக்கட்சிகளே கடுமையாக விமர்சித்தும் புறக்கணித்தும் விட்டன.

எனவே இதற்குப்பதிலாக வடக்கில் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டால் இந்த விமர்சனங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிடலாம் என்பதே அரசின் எண்ணமாக இருக்கலாம்.

போரில் அரசாங்கத்தரப்பு முன்னேறுகிறது என்ற ஒரு தோற்றம் உருவாகினாலே போதும், சமாதானப் பேச்சுவார்த்தையும் கிடையாது தீர்வுத்திட்டப் பிரச்சினைக்கும் இடமில்லை.

அரசாங்கம் வடக்கில் எங்கோ ஓர் இடத்தில் போரை ஆரம்பிக்கவில்லை என்றால் புலிகள் திரண்டு ஒரு மிகப்பிரமாண்டமான வலிய தாக்குதலை தொடுத்து விடுவார்கள் என்பதும் படை அதிகாரிகளுக்கு புலப்படாத விடயமல்ல. அப்படி புலிகள் தாக்குதலைத் தொடுக்காமலிருக்கும் படியான ஒரு உபாயமாகவே மன்னார் வவுனியாப்பகுதிகளின் மோதல்களும் படை நடவடிக்கையும் இடம்பெறுகிறது என்பதுதான் விமர்சகர்களின் கருத்தாகும்.

ஆக வடக்கின் போர்க்களம் பெரும் விளைவுகளை உருவாக்கக்கூடியதொரு நிலைமையே காணப்படுகிறது. இந்த நிலைமை இப்போது சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. எனவே அடுத்து வரும் நாட்கள் அல்லது நடவடிக்கைகள் என்பது போரில் முழு அளவில் முதலீடு செய்யப்பட்டதாகவே இருக்கப் போகிறது.

சமாதானத்தின் முதலீடு அதற்குரிய பெறுமதி யைத் தருவதாகவும் போரின் முதலீடு அதற்குரிய பெறுமதியைத்தருவதாகவுமே இருக்கும். அதாவது அதனதன் அம்சங்களுக்கேற்ப அதனதன் விளைவுகளுமிருக்கும்.

இதுவே விளைபெறுமானமாகும்.

Please Click here to login / register to post your comments.