வடக்கில் தாக்குதலை ஆரம்பிப்பதா? கிழக்கை தொடர்ந்து தக்கவைப்பதா?

ஆக்கம்: விதுரன்

தெற்கில் அரசியல் நிலைமை மோசமடைகிறது. கிழக்கை கைப்பற்றி பாரிய வெற்றிக் கொண்டாட்டத்தை அரசு நடத்திய போதிலும் தெற்கில் அரசுக்கெதிராக பெரும் உணர்வலைகள் எழுந்துள்ளதை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணி காட்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கை படையினர் கைப்பற்றியதற்கு அரசியல் ரீதியாக வழங்கப்படும் முக்கியத்துவமானது, குடும்பிமலையின் (தொப்பிகல) வீழ்ச்சியானது இராணுவ ரீதியில் புலிகளுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தவில்லையென்பதை தெளிவுபடுத்துகிறது.

அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் கிழக்கை இழந்தது புலிகளுக்கு பின்னடைவுதானென்றாலும் குடும்பிமலை வெற்றிக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு அது கேந்திர முக்கியத்துவமானதல்ல. இலங்கை வரலாற்றில் இதுவரை காலமும் பெறாததொரு வெற்றி போல் அரசு இதனை சித்திரிக்க முயல்வது வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டதென்பதை படைத்தரப்புமறியும்.

இந்த வெற்றிக்கு இந்தளவுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுவிட்டதால், படையினரால் இனி குடும்பிமலையை கைவிட்டு விலக முடியாததொரு இக்கட்டான சூழ்நிலையேற்பட்டுள்ளது. ஆட்பற்றாக்குறையால் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதும் கைப்பற்றிய இடங்களைத் தக்கவைத்திருக்க முடியாதும் படையினர் திண்டாடி வருகையில், குடும்பிமலைக்கு அரசியல் ரீதியில் மிகப்பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிட்டதால் இராணுவத்தினர் அதனைத் தக்கவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும் கிழக்கின் பல பகுதிகளிலும் புலிகள் பதுங்கியுள்ளனர். குடும்பிமலைக்கு அப்பால் பின் நகர்ந்த புலிகளை விட மட்டக்களப்பில் மட்டும் 300 இற்கும் மேற்பட்ட புலிகள், இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கும் பகுதிகளினுள் நடமாடுவதாக புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர்.

மட்டக்களப்புக்குள் நடமாடும் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக படையினர் மத்தியில் மாறுபட்டதகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கை மிக இறுக்கமாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலைமை அரசுக்கேற்பட்டுள்ளது. இதனால், கிழக்கில் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரை தொடர்ந்தும் நிறுத்த வேண்டிய கட்டாய நிலைமையுள்ளது.

எங்காவது ஓரிடத்தில் பாதுகாப்பு குறைபாடு அல்லது படையினரின் எண்ணிக்கையில் குறைவேற்பட்டால் அந்த இடங்கள் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகும் சூழ்நிலை விரைவில் ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கிழக்கில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலை அரசுக்கேற்பட்டுள்ளது.

தெற்கில் அரசுக்கெதிராக கடும் உணர்வலைகள் ஏற்பட்ட நிலையிலேயே கிழக்கை கைப்பற்றி அதன் வெற்றிமூலம் தெற்கை சமாளிக்க அரசு முயல்கிறது. நாட்டில் இடம்பெறும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதல், கைதுகள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறலானது, சர்வதேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தொடரும் போருக்காக அரசு கோடி கோடியாகப் பணத்தை செலவிடுவதால் நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதுடன் பொருட்களின் விலை அதிகரிப்பால் வாழ்க்கைச் செலவு பலமடங்காகி சாதாரண மக்கள் வாழ முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. இது தென்பகுதி மக்களை சீற்றமடையச் செய்துள்ளது.

சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் ஏற்படும் பாரிய நெருக்கடிகளைச் சமாளிக்கவும் அந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்குமாக அரசு இராணுவ வெற்றிகளையே எதிர்பார்த்திருக்கிறது. இவ்வாறான இராணுவ வெற்றிகள் மூலம் எதிர்ப்புகளைச் சமாளித்துவிடலாமெனக் கருதும் அரசு, கிழக்கை போன்றே வடக்கிலும் உடனடி வெற்றிகளைப் பெற்றுவிடவும் அவசரம் காட்டுகிறது.

தெற்கில் பௌத்த சிங்களப் பேரினவாதிகளை திருப்திப்படுத்தி வருவதுபோல சிங்கள கிறிஸ்தவ மக்களையும் திருப்திப்படுத்தும் முயற்சியிலும் அரசு இறங்கியுள்ளது. இதற்காகவே வன்னியில் மடுப்பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமெனத் தீவிரம் காட்டி வருகிறது.

அடுத்த மாதம் 06 ஆம் திகதி மடு உற்சவம் ஆரம்பமாவதற்கு முன் மடுக் கோவில் உட்பட அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றி தென் பகுதியிலிருந்து அங்கு பெருமளவு கிறிஸ்தவ மக்களை அழைத்துச் சென்று அவர்களது அபிமானத்தையும் பெற்றுவிட வேண்டுமென அரசு துடிக்கிறது. எனினும், கடந்த சில மாதங்களில், மடுவை நோக்கி மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பாரிய படை நகர்வையும் பல தடவைகள் சிறு சிறு நகர்வுகளையும் மேற்கொண்டும் எதுவுமே பலனளிக்கவில்லை.

பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ள படையினர் மீண்டும் மீண்டும் இதற்கான முயற்சியில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மேற்கொண்டாலும், புலிகள் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு தந்திரத்தின் மூலம் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி அவர்களது முயற்சிகளை முறியடித்து விடுகின்றனர்.

இந்த நிலையில், வடக்கில் பாரிய படை நடவடிக்கையை தொடர்வதற்கு பெருமளவு ஆட் பலமும் பெருமளவு ஆயுத பலமும் தேவைப்படுகிறது. ஆனாலும், கிழக்கில் கடந்த ஒரு வருடத்தில் பெருமளவு நிலப்பிரதேசத்தை கைப்பற்றியதன் மூலம் அந்தப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான படையினரை நிலைகொள்ள வைத்துவிட்டதால் அங்கு பெருமளவு படையணிகள் முடக்கப்பட்டுள்ளன.

இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் படையினருக்கான ஆட்சேர்ப்பென்பது, சாணேற முழம் சறுக்கும் நிலையிலுள்ளது. அத்துடன், பொருளாதார நிலையும் மிக மோசமாகிவிட்டதால் ஆயுதக் கொள்வனவுக்கு பணம் ஒதுக்க முடியாதுள்ளது.

இது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய பாரிய படைநடவடிக்கைகளை பெரிதும் பாதித்து வருவதால் தெற்கில் அரசியல் ரீதியில் கடும் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் எப்படிச் சமாளிப்பதெனத் தெரியாது அரசு தடுமாறுகிறது. எனினும், படையினருக்கு மேலும் 30,000 பேரை சேர்க்கவும் பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவும் அரசு முயல்கிறது.

`கிழக்கின் உதயம்' என்ற பெயரில் அங்கு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக பெரும் பிரசாரங்களை செய்துவரும் அரசு அதற்காக உலக நாடுகளிடமிருந்து பல நூறு கோடி ரூபா பணத்தை எதிர்பார்த்துள்ளது. இந்தப் பணத்தை பயன்படுத்தி ஆட்சேர்ப்பையும் ஆயுதக் கொள்வனவையும் மேற்கொண்டு விடலாமெனவும் எண்ணுகிறது.

அதேநேரம், கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முயலும் அரசு அதற்கு முன் அங்கு சிவில் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்த முயல்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய ஈடுபட்டுள்ளார்.

இவரது முதல் நடவடிக்கையாக, கிழக்கில் இனி எந்தவொரு அபிவிருத்திப் பணிகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்வதாயினும் அதற்கு படையினரின் அனுமதி பெறப்பட வேண்டுமென்பதுடன் இந்தப் பணிகளை படைத்தரப்பு கண்காணிக்குமெனவும் கண்டிப்பான உத்தரவுகளை விடுத்ததன் மூலம் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளிலிருந்து ஒதுங்கும் நிலையேற்பட்டுள்ளது.

இராணுவக் கெடுபிடிகளில்லையேல் அபிவிருத்திப் பணிக்கான நிதியுதவி அரச சார்பற்ற நிறுவனங்களூடாகவே வழங்கப்படும். இலங்கை அரசை சர்வதேச நாடுகள் நம்பப்போவதில்லை. எனினும், இராணுவக் கெடுபிடிகளாலும் அவர்களது தலையீடுகளாலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒதுங்கும் சூழ்நிலையேற்பட்டால் இந்த நிதி உதவிகள் அரசினூடாகவே வழங்க வேண்டியிருக்குமென அரசதரப்பு கருதுகிறது. இதனாலேயே கிழக்கின் சிவில் நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் கிழக்கை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்து அங்கு தேர்தல்களை நடத்திவிட்டால் போதுமென்பதே அரசின் நிலைப்பாடு, அங்குள்ள சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் மிகக் குறைவு. இது அரசுக்கும் இனவாதிகளுக்கும் பெரும் வாய்ப்பாகிவிடும்.

இதன்மூலம், கிழக்கில் நடைபெறும் தேர்தலில் தமிழர்களது பலத்தை இல்லாது செய்துவிட்டால் தாங்கள் விரும்பும் தரப்புக்களே மாகாண சபை ஆட்சியை கைப்பற்றுமென்பதால், பின்னர் அவர்கள் மூலம் கிழக்கில் தங்கள் விருப்பப்படி நிலைமைகளை மாற்றியமைக்கலாமென்பதும் இனவாதிகளின் எண்ணமாகும்.

இதற்காக கிழக்கில் பெருமளவு படையினரைக் குவித்து அங்கு தேர்தல்களை நடத்தும் அதேநேரம், வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, குறைந்தது 30,000 படையினரையாவது அவசரமாகத் திரட்டும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

கிழக்கின் வெற்றியை பயன்படுத்தி தெற்கில் படைகளுக்கு பெருமளவு ஆட்களைத் திரட்டிவிடலாமெனவும் அரசு எண்ணுகிறது. இந்த எண்ணம் சாத்தியமானால் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் கருதுகிறது. இல்லையேல், வடக்கில் பாரிய படை நடவடிக்கையை தொடங்கிய பின் நிலைமை மோசமாகிவிட்டால் கிழக்கிலிருந்து படைகளை வடக்கே நகர்த்த வேண்டிய நிலைமையேற்படும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் கிழக்கின் பெரும் பகுதி மீண்டும் புலிகள் வசமாகிவிடுமென்பதும் அரசுக்கு நன்கு தெரியும்.

இதனால், ஆட்பற்றாக்குறையால் முந்தைய காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் விட்டுவிடக் கூடாதென அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பெருமளவு படையினரை சேர்ப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. இதற்கான கால அவகாசத்தைப் பெறவும் கிழக்கில் தேர்தலை பிரச்சினையின்றி நடத்துவதற்குமாக அடுத்துவரும் மாதங்களில், சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க அரசு முயலக்கூடும்.

கிழக்கை கைப்பற்றியதன் மூலம் மிகவும் பலமாயிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளுடன் மீண்டுமொரு பேச்சுக்கு செல்லும் போது வடக்குப் பிரச்சினை குறித்தே பேசுவோமெனவும் கூற முற்படும். கிழக்கிற்கு தேர்தலை நடத்தி அதில் தெரிவு செய்யப்படுவோருடன் அங்குள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவோமெனக் கூறவும் முனைவர்.

கிழக்கில் தேர்தல் நடைபெறுமாயின் அது பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்தும். தமிழ் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டாலும் அவை சில ஆசனங்களைப் பெறும் விதத்திலேயே வாக்களிப்புக்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். தேர்தல் வெற்றியின் மூலமும் படையினருக்கு பெருமளவானோரைத் திரட்டுவதன் மூலமும் பின்னர் கிழக்கில் ஆயுதக் குழுக்களை இல்லாது செய்துவிடவும் இனவாதிகள் முயல்வர்.

இனிவரும் நாட்களில் கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் எப்படியிருக்கப்போகின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் குழுக்களை அரசு கையாளும்.

கிழக்கில் புலிகளால் கெரில்லாத் தாக்குதல்களையும் நடத்த முடியாத நிலையை உருவாக்கி அவர்களை அடக்கிவிட்டால் அங்கு தமிழ் குழுக்களின் தேவையிராது. அத்துடன், தமிழ் குழுக்களின் பிரசன்னம் பின்னர் தங்களுக்கே தலைவலியாயிருக்குமென்பதை அரசும் படைத்தரப்பும் புரிந்துகொண்டுள்ளதாலும் தமிழ் குழுக்களின் கட்டுப்பாடு தற்போது படையினர் வசமே உள்ளதாலும் நிலைமைக்கேற்ப அரசும் படைத்தரப்பும் இவர்களைக் கையாள முனையலாம்.

இலங்கை அரசும் இனவாதிகளும் படைத்தரப்பும் இவ்வாறெல்லாம் கணக்குப்போட்டு வருகையில் புலிகளும் ஒரு கணக்குப் போடுவர். வடக்கில் பாரிய படை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது அதன் தாக்கம் தெற்கிலும் மிகக் கடுமையாக எதிரொலிக்குமென்பதை அவர்கள் வெளிப்படையாகவே கூறிவிட்டதால் இனிவரும் போர் இலங்கை முழுவதும் பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடக்கில் படையினரால் உடனடியாகப் பெரும் போருக்குச் செல்ல முடியுமெனத் தோன்றவில்லை. கிழக்கை முழுமையாகத் தக்கவைத்துக் கொண்டே வடக்கில் போரைத் தொடங்க வேண்டுமென அரசு கருதுவதால் அதற்கும் சில காலம் செல்லலாம். இதனால், இடைப்பட்ட நாட்களில் அரசு சகல வழிகளிலும் தன்னை தயார்படுத்த முனையும்.

இவ்வாறானதொரு சூழலில் புலிகள் அடுத்து என்ன செய்யப்போகிறார்களென்ற எதிர்பார்ப்பு முழு உலகிலும் ஏற்பட்டுள்ளது. வடக்கே மிகப்பெரும் பகுதி அவர்கள் வசமிருக்கின்ற போதும் குறிப்பிட்டளவு பிரதேசத்தை படைத்தரப்பு கைப்பற்றுமானால் அது பல்வேறு விதத்திலும் புலிகளுக்கு நெருக்கடியாகி விடலாம். இதனால், புலிகளின் அடுத்த ஒவ்வொரு நகர்வையும் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Please Click here to login / register to post your comments.