குடாநாட்டை தக்கவைக்க கவசத்தாக்குதல் படை

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது.

ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும்.

ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம் என்னும் பெரும் திருவிழா எடுக்கப்பட்டது. பரீட்சை நேரம் என்றும் கூட பார்க்காது பாடசாலை மாணவர்களும் அதற்குள் இழுக்கப்பட்டனர். ஜனாதிபதித் தேர்தலின் போது பெற்ற 1.86 வீத அதிகமான வாக்குகளை ரணில்மங்கள கூட்டு சிதைத்துவிடலாம் என்பதும், பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறின் அது கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்பதும் ஆளும் தரப்பை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அரசியல் நெருக்கடிகள், பேரணிகள் என தென்னிலங்கை அரசியல் அரங்கம் சூடுபிடிக்கையில் வன்னியில் போர் மேகம் சூழ்ந்து வருவதாக வெளிவரும் செய்திகள் பெரும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளன. பெருமளவான படையணி அதிகரிப்புடன் பெரும் வலிந்த சமர் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் தயாராகி வருவதாகவும் அதற்கான மாதிரிப் பயிற்சிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும் ரொய்ட்டர்ஸ், பி.பி.சி போன்ற அனைத்துலக செய்தி நிறுவனங்களும் தென்னிலங்கை ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன.

ஆனால் எங்கு தாக்குதல் ஆரம்பமாகப்போகின்றது அதன் தாக்கம் என்ன என்பது தான் இன்றும் புரியாத புதிராக உள்ளது. யாழ். குடாநாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அதனை தடுப்பதற்கான தயார்படுத்தலிலும் அரசு தன்னை கடுமையாக ஈடுபடுத்தி வருகின்றது.

காங்கேசன்துறை, வடமராட்சி கடற்பகுதிகளில் அடிக்கடி நிகழும் கடல் தாக்குதல் ஒத்திகைகளும், வடமராட்சி கரையோ ரங்களில் இருந்து கடலை நோக்கி நடத்தப்படும் ஆட்லறி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்தி தாக்குதல் பயிற்சிகளும், பலாலி, நாகர்கோவில், தென்மராட்சி முன்னரங்க பகுதிகளில் நடைபெறும் தரைத் தாக்குதல் பயிற்சிகளும் யாழ். குடாவை தக்கவைக்க வேண்டும் என்பதில் அரசு பெரும் சிரமம் எடுத்து தன்னை தயார்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றன.

வட போர்முனையில் யாழ். குடாநாடு, மன்னார், மணலாறு, ஓமந்தை என தாக்குதல் நடைபெறலாம் என்று ஊகிக்கப்படும் களமுனைகள் பல இருந்த போதும் அரசு யாழ். குடாவின் மீதே அதிக அக்கறை கொள்கிறது.

அதாவது நான்கு டிவிசன் படையினரும் 40 வீதத்திற்கு மேலான கனரக ஆயுதங்களும் முடங்கிப்போயுள்ள யாழ். குடாநாட்டின் மீது பாரிய தாக்குதல் ஒன்று நிகழுமாயின் அதனால் ஏற்படும் ஆளணி, ஆயுத இழப்புக்கள் ஈடுகட்ட முடியாதவை என்பது படைவல்லுனர்களின் கருத்து. மேலும் ஏனைய களமுனை களைப் போல இந்தக் களமுனையில் இருந்து படையினரை பெருமளவில் அவசரமாக வெளியேற்றுவதோ அல்லது அவர்களுக்கான அவசர உதவிகளை வழங்குவதோ மிகவும் சிரமமானது. அதன் பூகோள அமைப்பு பாதகமானது.

எனவே தான் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு வீழ்ச்சி கண்டதுடன், யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடிக்குள் சிக்கிய போது அவர்களை வெளியேற்ற இந்தியாவின் உதவி நாடப்பட்டது. முறையான வழங்கல் வழிகள் அற்ற நிலையில் யாழ். குடாவை தக்கவைப்பது மிகவும் கடினமானது என்ற கருத்தின் அடிப்படையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு பெரும் உயிர், பொருள் இழப்புக்களுடன் 18 மாதங்கள் நடத்தப்பட்டன.

ஆனால் தற்போதைய படையினரின் உத்திகள் வேறுபட்டவை. அதாவது இலங்கையின் வரலாற்றில் பெரும் சமரான ஜெயசிக்குறுவின் தோல்விக்கு பின்னர் யாழ். குடாவை தக்க வைப்பதற்கு படையினர் தமது தற்காப்பு உத்திகளை மேன்மைப்படுத்தி வருகின்றனர். அதற்காக படையினர் சுடுவலு, படைவலு, கனரக ஆயுத வலுக்களை குடாநாட்டில் அதிகரித்து வருகின்றனர்.

சிறப்புத் தாக்குதல் படையணியான 53 ஆவது படையணி நிரந்தரமாக அங்கு நிறுத்தப்பட்டதுடன் அதனை புனரமைக்கும் வேலைகளையும் அரசு முதன்மைப்படுத்தி வருகின்றது. படையினரின் நகர்வுத்திறனை அதிகரிப்பதற்காகவும் அதன் தாக்குதிறனை அதிகரிக்கும் நோக்குடனும் சிறப்பு படையணிக்கு துணையாக கவசத்தாக்குதல் படையணியை (Mech-anized infantry) இராணுவம் உருவாக்கி வருகின்றது.

இந்த கவசத்தாக்குதல் படைப்பிரிவின் மூன்றாவது றெஜிமென்ட் இந்த மாதத்தின் முற்பகுதியில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளது. வெளியேறிய இந்த றெஜிமென்ட் தென்மராட்சியின் வரணிப்பகுதியில் நிலைகொண்டுள்ளது.

கவசப்படைப்பிரிவு, சிறப்பு படைப்பிரிவு போன்றவற்றில் இருந்து படையினரை தெரிவு செய்து தாக்குதல் வலுமிக்க படைப்பிரிவாக இதனை உருவாக்க முற்பட்டுள்ள படைத்தரப்பு தற்போது நேரடியாகவும் புதிய ஆட்கள் சேர்த்து வருகின்றது. மேஜர் ஜெனரல் எஸ்.எம்.டி.ஏ.ராஜபக்ச இதற்கான கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் உள்ள கவசப்படை பிரிகேட்டில் இருந்து வேறுபட்டதாக இந்த கவசத்தாக்குதல் படைப்பிரிவை உருவாக்கும் முயற்சிகளே நடைபெற்று வருகின்றன. தாக்குதலின் போது படையினரின் நகர்வை அதிகரித்தல், பாதகமான களநிலைமைகளில் இருந்து படையினரை அகற்றுதல் அல்லது அங்கு மேலதிகமான படையினரை நகர்த்துதல் போன்றவற்றில் இந்தப் பிரிவு பணியாற்றும். மேலும் நடவடிக்கையில் ஈடுபடும் படையினருக்கான ஆதரவுச் சூடுகளை வழங்குவதிலும் இந்த படையணி உதவி வழங்கும்.

கவசத்தாக்குதல் படைப்பிரிவு BTR-80, WZ551, Type-89 (YW534), BTR-152 போன்ற துருப்புக்காவி கவசவாகனங்களையும் (Armoured personnel carrier), BMP-1, BMP-2, BMP-3, Type-86 (WZ501) போன்ற இலகுகாலாட் தாக்குதல் கவச வாகனங்களையும் (ஐகெயவெசல கiபாவiபெ எநாiஉடந) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியம், சீன நாடுகளின் தயாரிப்பான இந்த வாகனங்கள் சங்கிலித் தொடர் சக்கரங்கள் (Tr-acks) அல்லது எல்லாச்சக்கரங்களும் இயங்கும் தன்மையை கொண்ட சக்கரங்கள் போன்றவற்றை கொண்டிருப்பதனால் கரடுமுரடான தரையமைப்புக்களிலும் அவை இயங்கக்கூடியவையாக இருக்கும்.

2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கவசப் படை பிரிகேட் 25 (18 இயங்கக் கூடியவை) பிரதான போர் டாங்கிகளையும், 158 கவச தாக்குதல் மற்றும் துருப்புக்காவி வாகனங்களையும் கொண்டிருந்தது. எனினும் ஆனையிறவின் வீழ்ச்சிக்கு பின்னர் குடாநாட்டை தக்கவைக்கும் நோக்குடன் கவசப்படையின் பலம் அதிகரிக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு 40 பிரதான போர் டாங்கிகளும், 46 துருப்புக்காவி மற்றும் கவசத்தாக்குதல் வாகனங்களும் கொள்வனவு செய்யப்பட்டன. அதன் பின்னர் கவசப்படைப் பிரிகேட்டில் இருந்து கவசத்தாக்குதல் படையணி தனிப்பிரிவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலகு காலாட் தாக்குதல் வாகனங்களானது நேரடியான சமர்களுக்கு ஏற்றவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டவை. ஆனால் துருப்புக்காவி வாகனங்கள் நேரடியான சமர்களுக்கு உகந்தவை அல்ல என்பதுடன் அவை ஆயுதவலுவிலும் குறைந்தவை. எனினும் இலகு காலாட்படை தாக்குதல் வாகனங்கள் சூட்டு ஆதரவை வழங்க துருப்புக்காவி வாகனங்கள் சிறப்புத் தாக்குதல் படையினரை நகர்த்துதல் என்பது தான் இந்த படைப்பிரிவின் உத்திகள்.

இந்தப் படையணியின் தாக்குதல் ஆயுதங்களைப் பொறுத்த வரையில் துருப்புக்காவி வாகனங்கள் 14.5 மி.மீ, 12.7 மி.மீ, 7.62 மி.மீ போன்ற கனரக மற்றும் இலகுரக துப்பாக்கிகளை கொண்டிருக்கும். கவசத்தாக்குதல் வாகனங்கள் கனரக இயந்திரத்துப்பாக்கிகளுடன் 20 மி.மீ, 30 மி.மீ, 73 மி.மீ போன்ற இலகு ரக பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், டாங்கி எதிர்ப்பு, விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் காவ வல்லவை. இவை அந்த வாகனங்களிலேயே பொருத்தப்பட்டிருக்கும்.

வடபோர்முனையை நோக்கி போர் முனைப்புக்கள் உச்சம் பெற்றுள்ள நிலையில் இந்த புதிய படைப்பிரிவை இராணுவம் அவசர அவசரமாக உருவாக்கி வருகின்றது. ஆனால் இந்தப் படைப்பிரிவு களத்தில் எத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணும் என்பது கேள்விக்குறியானது.

அதாவது இது ஒரு உளவியல் தாக்க படைப்பிரிவாகவோ அல்லது தற்பாதுகாப்பு படைப்பிரிவாகவோ தான் அதிகளவில் செயற்பட முடியும். ஏனெனில் இத்தகைய கவச வாகனங்கள் இராணுவத்தின் கவசப்படையில் முன்னர் அங்கம் வகித்தவை. மேலும் ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட விக்டர் கவச எதிர்ப்பு படையணியின் தாக்குதலில் கவசப் படைப்பரிவு கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தது.

இந்த சமரில் இராணுவம் அதிக கவச வாகனங்களை இழந்த சமராக புளியங்குளச் சமரை கொள்ளலாம். இதில் 02 டாங்கிகள் தகர்க்கப்பட்டும், 04 டாங்கிகள் சேதமாக்கப்பட்டதுடன், ஒரு கவசத்தாக்குதல் வாகனம் 73 மி.மீ பீரங்கியுடன் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

நாலாம் ஈழப்போரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலைப்பகுதியில் நடைபெற்ற சமரிலும் விடுதலைப் புலிகளின் கவச எதிர்ப்பு படையணியின் தாக்குதல்களில் சிக்கி ஒவ்வொன்றும் 15 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 04 T-55 ரக களமுன்னணி டாங்கிகள் (Main Battle Tanks -MBTs) சொற்ப நேரத்தில் அழிந்து போனதுடன், 02 டாங்கிகள் சேதமடைந்தன. மேலும் உக்கிரைன் நாட்டு தயாரிப்பான 02 இலகுகாலாட் கவசத்தாக்குதல் வாகனங்களையும் (BMP-2-AFVs) 02 சோவியத் தயாரிப்பு துருப்புக்காவிகளையும் (BTR-80 Armoured Personnel Carrier) படையினர் இழந்திருந்தனர்.

இந்தச்சமரே புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் அணி முதல் முதலாக பங்கு பற்றிய களம். இங்கு இந்த அணி டாங்கிப்படையணியுடன் இணைந்து தாக்குதலில் பங்குபற்றியிருந்தது.

ஈழப்போர் வரலாற்றில் சொற்ப நேரத்தில் கவசப்படையணி சந்தித்த பெரும் இழப்பு இதுவாகும். அதாவது விடுதலைப் புலிகள் இந்தப் படையணியை எதிர்கொண்ட விதம் பயன்படுத்திய உத்திகள், ஆயுதங்கள் என்பன தற்போதும் பெரும் ஆச்சரியம் கலந்த ஒன்றாகவே நோக்கப்படுகின்றது.

எனவே தான் வடபோர்முனையின் நாகர்கோவில், முகமாலை அச்சில் கவசத்தாக்குதல் படையணி நடைவடிக்கையில் ஈடுபடுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செக்கோஸ்லாவாக்கிய நாட்டு T-55 டாங்கிகள் சாதாரண RPG தாக்குதலுக்கோ, கண்ணிவெடிகளுக்கோ ஓரளவு தாக்குபிடிக்கும் விதத்தில் தாயாரிக்கப்பட்டதுடன், 300-00 மி.மீ உருக்குத் தகட்டால் ஆன கவசத்தையும் உடையவை. ஆனால் கவசத்தாக்குதல் வாகனங்களோ அல்லது துருப்புக்காவி வாகனங்களோ கவச எதிர்ப்பு ஆயுதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாதவை.

உதாரணமாக சில வகை கவசத் தாக்குதல் வாகனங்கள் 12.7 மி.மீ துப்பாக்கி ரவைகளை விட வலிமை மிக்க ரவைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாதவை. அதாவது இவை முன்னணி களமுனைகளை விட இலகுவான பின்னிலைக் களங்களுக்கே அதிகம் உபயோகம் மிக்கவை. இந்தக் களயதார்த்தம் கடந்த முகமாலைச் சமரிலும் உணரப்பட்டிருந்தது.

இராணுவத்தின் இந்தப் புதிய படை கட்டுமானத்தின் நோக்கம் இரண்டாகத் தான் இருக்க முடியும். ஒன்று டாங்கிப்படையணியின் பின்னணித் தாக்குதல் படையணியாக செயற்படுவதுடன் நகரும் துருப்புக்களுக்கு ஆதரவுச் சூட்டை வழங்குவது. இரண்டாவது யாழ். குடாநாட்டில் ஏற்படும் மோதல்களில் பங்கு வகிப்பது (தற்காப்புச் சமர்).

எனவே படையினரின் பலப்படுத்தல்களும், விடுதலைப்புலிகளின் ஒத்திகைகளும் வடபோர்முனையில் ஏற்படப்போகும் மோதல்கள் கடுமையாக இருக்கும் என்பதுடன் அதன் தாக்கமும் அதிகமாகும் என்பதற்கான அறிகுறிகளையே தாங்கி நிற்கின்றது.

Please Click here to login / register to post your comments.