கிழிக்காமல் பிரிக்கும் அரசாங்கம் - சிதைக்காமல் பிரிக்கும் சர்வதேசம்

ஆக்கம்: இதயச்சந்திரன்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கிழக்கை மீட்ட வெற்றிப் பெருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. "கிழக்கின் விடியல்' என்கிற பெயர் சூட்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் ஜனாதிபதி. மரக் கதைகள் கூறும் எதிரிகளை மௌனமாக்கியுள்ளார்.

இவ்விழாவில் குளிர்காயும் இனவாத சக்திகள், சுவரொட்டிச் செய்திகளூடாக தமது இருப்பையும் நிலை நிறுத்தியுள்ளனர். வடக்கையும் விடுவியுங்களென்று ஜனாதிபதிக்கு பொறி வைக்கவும் அவர்கள் தவறவில்லை.

உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும், களநிலைமை மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிப்பதால், விழாவில் முகங்காட்டி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிய சர்வதேசம் விரும்பவில்லை.

மன்னார், வவுனியா முன்னரங்க நிலைகளில் அரசு மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை முயற்சி முறியடிக்கப்படுவதையும் அம்பாறையில் 5 புலிகளும், படுவான்கரையில் 8 புலிகளும் மோதலில் கொல்லப்பட்டதாக அரச படைத்துறைப் பேச்சாளர் கூறுவதற்கும், கிழக்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டு விட்டார்களென்று விழாக் கொண்டாடுவதற்குமிடையேயுள்ள யதார்த்தத்தையும் இணைத்தலைமைகள் புரிந்து கொள்கிறார்கள்.

ஆயினும் காவல்துறையும், ஊர்காவல் படைகளும், அதிரடிப்படையும் மட்டு. அம்பாறையைத் தக்கவைக்கப் போதுமானவையென ஜனாதிபதி கருதினால், யாழ்.குடாவினுள் 40 ஆயிரம் படையினர் தேவையற்றதொன்றெனக் கணிக்கப்படலாம்.

ஆகவே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய அரசபடை நகர்த்தலும், கிழக்கிலிருந்து வடக்கிற்கு விடுதலைப்புலிகளின் நகர்வும், புதிய சமன்பாடொன்றை உருவாக்கும்.

கிழக்கில் உருவாகும் படை முடக்கம், இராணுவத்தின் ஆளணிவளத்தை பரவலாக்குகிறது. ஒரு மரபுப் படையணியை எதிர்கொள்வதை விட, பரவலான கெரில்லா அணிகளை முகங்கொள்வதற்கே அதிக படைவலு தேவை.

சிறு கெரில்லாத் தாக்குதல்கள் நடத்தப்படும் பொழுது, படையினரின் ஊர்வலங்கள் குறைக்கப்பட்டு, முகாம்களுக்குள் முடக்கப்படுவதை குடாநாட்டில் காணலாம்.

கனரக ஆயுத நகர்த்தல்கள் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்ப டுத்தப்பட்டு, இரவில் மேற்கொள்ளப்படுவதும், கெரில்லாத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதன் அடிப்படையில் அமைகிறது.

படுகொலைகளிற்கும் பின்புலக்காரணிகள் பலவுண்டு. நகர்ப்புற கெரில்லாத் தாக்குதல்கள் அதிகரிக்காவண்ணம் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கே புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. கெரில்லாக் குழுக்களின் நகர்வுகளை கண்காணிக்கக்கூடிய அளவிற்கு படைப்பலம் போதாமையால், துணைக் குழுக்களின் பிரதேச அறிவையும், மொழி அனுகூலத்தையும் பயன்படுத்தி, போராட்ட உணர்வினை மழுங்கடிக்கும் வகையில் அச்சவுணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.

சமூக உணர்வு நிரம்பிய புத்தி ஜீவிகள் கூடுமிடமான யாழ். பல்கலைக்கழகத்தின் மீதான முற்றுகையும் போராட்ட கருத்துருவாக்கத்தை சிதைப்பதற்கே பிரயோகிக்கப்படுகிறது.

கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்குமென்பதை புரிந்து கொண்டு, ஆயுதப் போராட்டத்தில் முன்பு ஈடுபட்டவர்களே இந்த துணைக் குழுக்கள்.

மக்கள் பலமற்ற நிலையில், புலி எதிர்ப்புக் கூட்டணி அமைத்து, ஜனாதிபதியுடன் பேரம் பேசலாமென கற்பனை செய்வது கூட, பழைய வரலாற்றுப் பாடங்களிலிருந்து உருவாகவில்லை. கிழக்கில் உருவாகும் இராணுவ மயப்பட்ட அபிவிருத்திக்கான நிர்வாகங்களில், பன்முகப்பட்ட ஜனநாயக மரபுகள் பேணப்பட இயலாதென்பதை இவர்கள் புரிய மறுக்கின்றனர்.

மக்களை அந்நியமாக்கி, எவ்வகையான அபிவிருத்திகளை அங்கு மேற்கொள்ள அரசு முனைகிறதென்பதை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட சம்பூர் பிரதேசம் வெளிச்சமாக்குகிறது.

மக்கள் மீளக் குடியேற முடியாத வகையில், உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயம், தவறானதென தொடுக்கப்பட்ட வழக்கினை அரச உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சட்டத்தின் தீர்ப்புகளுடன் அனுசரித்துப்போவதா இல்லையேல் அதை எதிர்த்துப் போராடுவதாவென்பதை ஒற்றையாட்சிக்குள் தீர்வு தேடும் ஜனநாயகவாதிகள் முடிவு செய்ய வேண்டும்.

மக்கள் பலத்தினை சிதைத்த பின் மாவட்ட சபையும் கிடையாதென்பதை உணர்ந்து கொள்ள அதிக விளக்கங்கள் தேவையில்லை. வடக்கையும், கிழக்கையும் சட்டம் பிரித்து விட்டது. தாமென்ன செய்ய முடியுமென கூறுபவர்கள் சட்டத்தின் வழிசெல்வதே உகந்தது. அதை நியாயப்படுத்தலிற்கும் ஒரு நியாயம் அவர்களுக்கு உண்டு.

அதேவேளை இச்சட்டங்களெல்லாம் இன அழிப்பின் வெளிப்பாடுகளென்று கூறுபவர்கள், அதற்கெதிராகப் போராடுவது கூட ஜனநாயகத்திற்குட்பட்டதுதான்.

தமிழ் கூட்டமைப்பினர் ஜனநாயக மரபு வழியிலும், விடுதலைப் புலிகள் ஆயுதப்போராட்ட வழியிலும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறார்கள்.

வன்முறைப் போராட்டத்தை அரசும், சர்வதேசமும் பயங்கரவாதமாகச் சித்திரிப்பது அவர்களின் நலனிற்கு ஏதுவான விடயமாகலாம்.

ஆயினும் சுதந்திரமடைந்த காலம் முதல் தொடரும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டங்களிற்கு விடை ஏது மற்ற நிலை தொடர்வதையிட்டு எச்சக்திகளும் கவலை கொள்வதில்லை.

பேசித்தீருங்களென்று பாடுவதும், ஆயுதப் போராட்ட தோற்றத்தின் பின்னாலேயே உருவானது. 77, 83 இன அழிப்பின் போது தேசிய விடுதலைப் போராட்டத்தின் வன்முறைப் பரிமாணம் சிதைந்துவிடுமென எண்ணியதால் சர்வதேசம் அதிக அக்கறை கொள்ளவில்லை. ஆடிக்கலவரத்தோடு உள்நுழைந்த இந்தியா, ஒப்பந்தத்தோடு தனது நலனைப் பாதுகாத்து, தேசிய விடுதலையை அழிக்க முற்பட்டது.

பின்னர் போராட்ட சக்திகள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை விரிவாக்க சமாதானம் என்ற போர்வையில் காலடி வைத்தது மேற்குலகம்.

புரிந்துணர்வு ஒப்பந்தக் காகிதத்தை, கிழிக்காமல் கிழிப்பது எப்படியென்கிற புதிய சூத்திரத்தை கையாண்டபடி, மா விலாறு தொடங்கி தொப்பிகலை வரை தனது பிரதேச ஆக்கிரமிப்பு விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்துகிறது இலங்கை அரசு.

கிழிக்காமல் கிழிக்கும் இந்த தந்திரத்தை, சர்வதேச ஒப்பந்தக்காரர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்து ரசிக்கிறார்கள்.

புலிபாய்ந்தால், பிரம்பெடுத்து தடை விதித்து, தனிநபர்களைக் கைது செய்து, சிறுவர் படைசேர்ப்பு என்று தலையில் கல்லடிபட்ட நாய் போல காலை உயர்த்தி ஊளையிட்டு பயங்கரவாத மந்திரமோதுவதே மேற்குலகின் மாரித் தவளைப் பாட்டு.

சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கிழிக்காமலேயே விடுதலைப் புலிகளை அழிக்க முயலும் அரசின் புதிய ஜனநாயக வழிமுறையை, உலகமயமாக்கிகள் வியந்து பார்க்கின்றனர்.

பாலஸ்தீனத்தை இரு கூறாக்கியது போன்று தமிழர் தாயகத்தை இரண்டாகப் பிளக்க முயலும் முயற்சியையும் மேற்குலகம் வரவேற்கிறதென்பதே அப்பட்டமான உண்மையாகும்.

உலகெங்கணும் தமது நியாயமான உரிமைக்காகப் போராடும் எந்த இனத்தையோ அல்லது உழைக்கும் வர்க்கத்தையோ இவர்கள் ஆதரித்ததாக வரலாறு இல்லை.

தமது குழிபறிப்புத் தந்திரங்கள் தோல்வியுறும் பொழுதோ அன்றேல் பிரதேச நலனிற்கு சாதகமாக அமையுமென்று கருதினால் மட்டுமே தவிர்க்க முடியாமல் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள்.

உலகெல்லாம் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் தலைவனாக பின்லேடன் அவர்கள் தற்போது மேற்குலகால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்லேடன் என்கிற பச்சை நிறக் கண்ணாடியூடாக பார்க்கப்படும் சகல போராட்டங்களும் பயங்கரவாதமென்கிற பச்சையாகவே அவர்களுக்கு புலப்படுகிறது.

இருப்பினும் நியாயபூர்வமான உரிமைப் போராட்டங்களை அங்கீகரிக்கும் பாரம்பரியம் தமிழ் மக்களுக்கு உண்டென்பதையும் சில ஆய்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தென்னாபிரிக்க நிறவெறிக்கு எதிரான மண்டேலாவின் போராட்டமாக இருந்தாலும் பிலிப்பைன்ஸ் ஜோமெரியா சிசனின் புதிய மக்கள் இராணுவத்தின் (NPA) வர்க்கப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டாலும் அதனை போராட்ட நட்புப்புரிதலுடன் (Solidarity) ஏற்றுக்கொண்டவர்களே ஈழதேச விடுதலைப் போராளிகள் என்பதை நவீன முற்போக்குகள் உணரவேண்டும்.

பாலஸ்தீன விடுதலை இயக்க முகாம்களில் பயிற்சிபெற்று, சியோனிசத்திற்கெதிரான சமர்களிலும் ஈழப்போராளிகள் பங்காற்றியதை நினைவிற்கொள்ளல் வேண்டும். நிகரகுவா சன்டினிஸ்டாக்களோடும் தமது தோழமை உணர்வை பங்கிட்டார்கள்.

இன அழிப்பிலிருந்து மக்களை மீட்க, ஆக்கிரமிப்புக்கெதிரான போரில் பங்கு கொள்ளாமல், உலக போராட்டங்களுடன் ஒத்திசைவு கொண்டு ஆதரியுங்களென்று, அந்நியமாகி இருப்பவர்களைப் பார்க்கிலும், மண் மீட்கப்போராடுபவனே சிறந்த யதார்த்தவாதியும் மண்ணின் மைந்தனுமாவான்.

2002 பெப்ரவரியில் சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற தமிழர் போராட்ட தலைமை ஏகாதிபத்தியங்களின் தடை அச்சுறுத்தல் மற்றும் கைதுகளுக்கு அடிபணியாமல், இலட்சியத்திலிருந்து விலகாமல், உறுதியுடன் செயற்பட்டதென்பதை சில முற்போக்கு ஆய்வாளர்கள் இலகுவாக மறந்துவிடுகிறார்கள். எவரும் எம்மை அங்கீகரிக்க முன்பாக எம்மை நாமே முதலில் அங்கீகரிக்க வேண்டும். தமிழர் தேசிய விடுதலைப் போராட்டமானது உலக அடக்கு முறையாளர்களுக்கு சார்பாக நடத்தப்படுமாயின் அதைச் சுட்டிக்காட்டும் தார்மீகப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு

Please Click here to login / register to post your comments.