கடந்த கால வரலாற்று தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுக்கும் மகிந்த அரசு

ஆக்கம்: தாயகத்திருந்து புரட்சி
பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 19 ஆம் நாள் மகிந்த அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த �குடும்பி மலை வெற்றிவிழா� நிகழ்வானது எந்தவிதமான களிப் பேருவகையோ அல்லது எதிர்பார்ப்புக்களோ இன்றி சப்பென்று நிறைவடைந்துவிட்டது.

பௌத்த பேரினவாதத்தினை மாணவர்கள் உள்ளடங்கலாக அனைத்து சிங்கள மக்களின் மனங்களிலும் ஊட்டி தனது தொடர்ச்சியான போர் முயற்சிகளுக்கு ஆதரவு தேடுவதற்காகவும் மக்களின் வாழ்க்கைச் செலவுச்சுமை மற்றும் ஏனைய பொருளாதார நெருக்கடிகளையும் மறைப்பதற்காகவும் மிகவும் சிறந்த வழியாக இவ்விழா அமையும் என்று மகிந்த அரசினால் பெரிதும் நம்பப்பட்டபோதிலும் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறாக சிங்கள மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாதது மிகுந்த ஏமாற்றத்தினை மகிந்த அரசிற்கு அளித்துள்ளது.

சுதந்திர தின விழாவினைக் கொண்டாடுவது போல பெரும் எடுப்பில் சுதந்திர சதுக்கத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ்விழாவிற்கு அழைப்பிதல் அனுப்பப்பட்டிருந்த முக்கியமான வெளிநாட்டுதூதுவர்கள் வேண்டுமென்றே இவ்விழாவிற்கு வருகை தராது புறக்கணித்தார்கள்.

அதாவது நன்கொடை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சமூகமளிக்கவில்லை. சிறிலங்கா அரசினது போர் நடவடிக்கைகளுக்கும் அதனது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கும் இவ்விழாவில் வெளிநாட்டு தூதுவர்களின் பங்கேற்பு அங்கீகாரம் அளிப்பதாக அமைந்துவிடும் என்பதாலேயே தாங்கள் இதனைப் புறக்கணித்ததாக வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, மங்கள சமரவீரவின் சிறிலங்கா மக்கள் சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் வௌ;வேறு காரணங்களுக்காக இந்நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணிப்புச் செய்தன.

இதனைவிட முக்கியமான விடயம் என்னவென்றால் சிறிலங்கா ஜனாதிபதியின் உரை தொடர்பாக எழுந்துள்ள கரிசனைகளும் சந்தேகங்களும் தான். இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த, உலகின் எந்தவொரு நாடும் தனது நாட்டின் ஒரு பகுதியினை ஒரு போராடும் அமைப்பிற்கு ஒப்பந்தத்தின் மூலமாக சட்டப+ர்வமாக வழங்கியது கிடையாது என்றும் இதில் கைச்சாத்திட்டவர்கள் குற்றவியல் நடவடிக்கையை புரிந்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இது நேரடியாகவே முன்னாள் பிரதம மந்திரியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினை இலக்கு வைத்து கூறப்பட்ட கருத்தாகும்.

உலக வரலாற்றை சற்றுப்பார்ப்போமானால், சூடான் போன்ற நாடுகளில் அரசாங்கங்களுக்கும் போராடும் அமைப்புக்களுக்கும் இடையிலே பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த படைகளை அவ்வாறே பேணுவது, மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்துவது போன்ற விடயங்கள் சமாதான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் போது உள்ளடக்கப்படுவது வழக்கமாகும்.

எனவே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவின் உலகிலே ஒரு நாட்டிலும் இவ்வாறான ஒப்பந்தங்கள் இடம்பெற்றது கிடையாது என்ற கூற்றானது உலக வரலாற்றினை அவர் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை என்பதனையே தெரிவிக்கின்றது. அத்துடன் �போராடும் அமைப்புக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்� என்ற எண்ணக்கருவினை சிறிலங்கா படையினர் குடும்பிமலையில் பெற்ற வெற்றி மூலம் சிதறடித்துள்ளதை உலகிற்கு தெளிவாகவும் உரத்தும் கூறியிருக்கின்றனர் என்ற ஜனாதிபதி மகிந்தவின் உரையானது சிறிலங்கா அரசும் அதனது ஆயுதப் படைகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையோ அல்லது சமாதான முயற்சிகளையோ ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை என்பதனை பன்னாட்டு சமூகத்திற்கு தெளிவாக எந்தவிதமான ஐயத்திற்கும் இடமின்றி தெரிவித்துள்ளதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

ஜனாதிபதி மகிந்தவின் சுதந்திர சதுக்க உரையின் பெரும்பகுதியானது சிறிலங்கா முப்படையினரைப் புகழ்ந்து பாராட்டுவதிலும் கிழக்கில் இடம்பெற்ற படைத்துறை நடவடிக்கைகளில் மகிந்தவும் ஒரு பங்காளியாக செயற்பட்டதை வெளிப்படுத்தும் விதமாகவுமே காணப்பட்டது. இப்பொழுது தென்தமிழீழத்தில் இடம்பெற்ற படைத்துறை நடவடிக்கைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.

தென்தமிழீழத்தின் தரைத்தோற்றத்தின் தன்மையானது பெரும் வயல்வெளிகளையும் காடுகளையும் சிறிய மலைக்குன்றுகளையும் கொண்டதாக அமைந்துள்ளதோடு இடையிடையே ஆறுகளும் நீர் ஏரிகளும் இந்நிலப்பரப்பினை ஊடறுத்து காணப்படுகின்றன. அத்துடன் சிறிலங்கா படையினர் இப்பிராந்தியத்திலே பல நூற்றுக்கணக்கான முகாம்களையும் காவல்நிலைகளையும் அமைத்துள்ளதோடு இப்பகுதிகளில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் சிறிலங்கா படையினரின் மோட்டார் மற்றும் ஆட்டிலறிகளின் எறிகணை வீச்சிற்கு கிழக்கு பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளும் தாக்குதல் இலக்குகளாக அமையக்கூடிய வகையிலேயே இப்பிராந்தியம் விளங்குகின்றது.

மாறாக, வட தமிழீழத்தின் நிலவமைப்பின் தன்மையைக் கருத்தில் எடுத்துக்கொண்டால் இலங்கைத்தீவிலே காடுகளின் அடர்த்தி கூடிய பிராந்தியமாகவும் காடுகளுக்கும் கடற்கரைக்கும் தொடர்ச்சியுள்ள பகுதியாகவும் இப்பிராந்தியம் விளங்குகின்றது. அத்துடன் கடலில் அல்லது தரையில் இருந்து சிங்களப் படைகளால் ஏவப்படும் எறிகணை வீச்சிற்கு அப்பாற்பட்ட பிராந்தியமாகவும் வன்னிப் பிரதேசம் பல உட்பகுதிகளைக் கொண்டதாக விளங்குகின்றது.

உலக விடுதலைப் போரியியல் நுணுக்கங்களைக் கவனமாகக் கற்றதன் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலையின் படைத்துறை மூலோபாயம் வகுக்கப்பட்டது. ஒரு அடக்குமுறை அரசிற்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப்போர் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அதற்கு விடுவிக்கப்பட்ட தக்கவைக்கப்படக்கூடிய தளப்பிரதேசம் இன்றியமையாதது. வியட்னாம் போருக்கு யுனான் மாநிலமும், கியூபாவின் விடுதலைப் போர், கிழக்கு திமோரின் விடுதலைப்போர் ஆகியவற்றிற்கு அவற்றின் மத்திய மலைப்பிராந்தியங்களும் எரித்திரிய விடுதலைப் போருக்கு அதன் போhராளிகள் தக்கவைக்கப்பட்ட தளப்பிரதேசமும் அந்த நாடுகளின் விடுதலைப் போராட்ட வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை உலக போரியியல் வரலாறு பதிந்து வைத்திருக்கின்றது.

மேற்கூறிய படைத்துறை மூலோபாய கோட்பாடுகளையும் அவ்வப்போது களநிலவரங்களில் காணப்படுகின்ற சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப தந்திரோபாய முன்னகர்வுகளையும் பின்வாங்கல்களையும் மேற்கொள்வது வழக்கமாகும்.

விடுதலைப் புலிகள் 1995-96 காலப்பகுதியில் இது போன்ற தந்திரோபாய பின்வாங்கல் நடவடிக்கையினை மேற்கொண்டபோது சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் அவரது முப்படைகளின் தளபதியும் மாமனுமான ஜெனரல் ரத்வத்தவும் புலிகளின் 98 வீதமான பலம் முறியடிக்கப்பட்டு விட்டது என்று வெற்றிமுழக்கமிட்டார்கள்.

ஆனால் போரியியல் தொடர்பான மிகவும் அடிப்படையான அறிவைக்கொண்டவர்களே, விடுதலைப் புலிகளின் தந்திரோபாய பின்வாங்கலை மிகவும் புத்திசாலித்தனமான நகர்வு என்று கூறியதுடன் சிங்களப் படைகளுக்கு இனிமேல்தான் பாரிய நெருக்கடிகளும் இழப்புகளும் ஏற்படப்போகின்றது என்று கூறினார்கள். அத்துடன் போரியல் வல்லுனர்கள் இவ் வெற்றிகரப் பின்வாங்கலை சீனா தேசத்தின் தந்தையான மவோ சேதுங் அவர்களின் மாபெரும் நடைப்பயணம் என்ற தந்திரோபாயப் பின்வாங்கல்களுக்கு ஒப்பிட்டார்கள்.

இற்றைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த �போரியற்கலை� என்ற கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய சீன இராணுவ மேதையான சன் சூ அவர்களின் கருத்துக்களின் படியும் 19 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த படைத்துறை மூலோபாய வல்லுனர்களான கார்ல் வொன் குளோஸ்விச் மற்றும் அன்ரோனி கென்றி யோமினி ஆகியோர்களின் கோட்பாடுகளின்படியும் ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. �ஒரு போரின் அடிப்படை நோக்கமே எதிரியின் இராணுவ வளங்களையும் அவனது போரிடும் ஆற்றலையும் அழிப்பதாகும். போரின் வெற்றி என்பது இதனடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது.�

இராணுவ வளங்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது படையணிகள், வழங்கல் விநியோகங்கள், கவசப்படை, ஆட்டிலறிகள், பீரங்கிகள், மருத்துவ உதவிகள், கடற்படை, வான்பலம், கட்டளைபீடம், புலனாய்வு (அணு ஆயுதங்கள், விண்வெளி ஆதிக்கம்) போன்றனவற்றையாகும்.

யாழ். குடாநாட்டிலிருந்து பின்வாங்கியதில் இருந்து சரியாக மூன்று மாதங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ படைத்தளம் மீது தரை மற்றும் கடல் வழியாகப் பாரிய தாக்குதலை தொடுத்து முல்லைத்தீவு முழு நகரையும் மீளக் கைப்பற்றினார்கள். இத்தாக்குதலில் சிறிலங்கா முப்படைகளையும் சேர்ந்த 1,600-க்கும் அதிகமான சிங்களப் படையினர் கொல்லப்பட்டார்கள்.

இதேபோன்று 13 ஆம் திகதி மே மாதம் 1997 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆம் திகதி டிசம்பர் மாதம் 1998 ஆம் ஆண்டு வரை நீடித்த யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையை திறப்பதற்காக வவுனியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படுதோல்வியில் முடிவடைந்ததோடு விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை மூலம் ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை ஓட ஓட விரட்டி அடித்து இந்நடவடிக்கையின் மூலம் சிங்களப் படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்கள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள். அது மாத்திரமல்லாது ஆனையிறவு பெருந்தளத்தையும் கைப்பற்றி யாழ்க் குடாநாட்டின் வாசல் வரையும் தமது படையணிகளை நகர்த்தினார்கள்.

இதன்பின் சிறிலங்கா இராணுவம் யாழ். குடாநாட்டில் இருந்து ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி கீல (தீச்சுவாலை) என்ற இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. இந்த இராணுவ வலிந்த தாக்குதலை எதிர்த்து விடுதலைப் புலிகள் மூர்;க்கத்தனமான எதிர்தாக்குதலைத் தொடுத்து படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியதோடு சிறிலங்கா இராணுவத்தின் சண்டையிடும் படையணிகள் நீண்டகாலத்திற்குத் தாக்குதல் நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபட முடியாதளவிற்கு சிதைக்கப்பட்டன. இப்பொழுது மீண்டும் அதே நாடகம் அரங்கேறுகின்றது.

சந்திரிகாவின் இடத்திற்கு மகிந்தவும் அனுருத்தவின் இடத்திற்கு சரத் பொன்சேகாவும் (இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையினைத் தொடர்ந்து குடும்பிமலை வெற்றிச் செய்தி ஓலையினை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் தனித்தனியாக மகிந்தவிடம் கையளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது வேறுகதை) கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார்கள். தங்களால் �வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசமாக� சந்திரிகாவினால் யாழ். குடாநாடு காட்டப்பட்டதைப்போன்று மகிந்த கிழக்குப் பிராந்தியத்தினை பரப்புரை செய்து வருகின்றார்.

கடந்த கால வரலாறுகளில் இருந்தும் பட்டறிவுகளில் இருந்தும் பாடம் கற்கத் தவறுபவர்களை அல்லது மறுப்பவர்களை வரலாறு ஒருபோதும் மன்னித்தது கிடையாது. இத்தகையவர்களுக்கு வரலாற்றின் குப்பைத்தொட்டியே பரிசாக வழங்கப்படும். இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால் சந்திரிகா காலத்தின் தவறான வரலாற்று உதாரணங்கள் மீண்டும் மகிந்த அரசாட்சியில் உருவாகப்போகின்றனவா என்பதுதான்.

Please Click here to login / register to post your comments.