வடக்குடன் போர் மட்டுப்படுத்தப்படுமா?

ஆக்கம்: விதுரன்
வடக்கு - கிழக்கில் நூறு வீதமாயிருந்த யுத்தத்தை, கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம் ஐம்பது வீதமாகக் குறைத்து விட்டதாக அரசு கருதுகிறது. இதுவரை நாளும் வடக்கு - கிழக்கில் நடைபெற்ற போர் இனிமேல் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால், அரைவாசிப் போர் முடிவடைந்துவிட்டதாகவே அரசு ஒரு மாயைக்குள்ளிருக்கிறது.

கிழக்கில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்த மரபுவழிச் சமர் இப்போது கெரில்லா போராக மாற்றம் பெற்றுள்ளது. கிழக்கில் புலிகளால் மீண்டும் அணிதிரள முடியாதென்பதால் இனிமேல் கிழக்கில் கெரில்லா தாக்குதலுக்கு முகம் கொடுத்தால் போதுமென அரசு கருதுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதேநேரம், கிழக்கிலிருந்து புலிகள் விலகிச் சென்ற போது தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையும் அவர்கள் மிகப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தியுள்ளனர். கிழக்கில் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய பின்னரே மட்டக்களப்பில் குடும்பிமலை (தொப்பிகல)பகுதியை படையினர் கைப்பற்றியதால், எப்படி அவர்களால் தங்களது ஆட் பலத்தையும் ஆயுத வளத்தையும் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த முடிந்ததென்ற கேள்வி எழுகிறது.

குடும்பிமலைப் பகுதியே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் மிக முக்கிய வலுநிலையாக இருந்தது. அங்கு தான் அவர்கள் ஆட்லறிகள், மோட்டார்களென கனரக ஆயுதங்களை குவித்திருந்தனர். குடும்பிமலையை கைப்பற்றும் இறுதிப் போரை படையினர் ஆரம்பித்த போது அங்கு 800 இற்கும் மேற்பட்ட புலிகள் நிலை கொண்டிருந்ததாக படைத்தரப்பு கூறிவந்த போதும் குடும்பிமலையை படையினர் கைப்பற்றியதாகக் கூறும்போது அங்கு ஒருசில புலிகளே கொல்லப்பட்டனர்.

அப்படியாயின் அங்கு நிலைகொண்டிருந்த 800 புலிகளும் எப்படி பின்வாங்கினர். அவர்கள் வசமிருந்த கனரக ஆயுதங்களுக்கென்ன நடந்ததென அரசும் படைத்தரப்பும் குழம்பிப் போயிருக்கும் நிலையில் புலிகள் தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையும் மிகப் பாதுகாப்பாக வேறோரிடத்திற்கு நகர்த்தியமை, கிழக்கில் தேவையேற்படும் போது புலிகள் பெருமெடுப்பில் அணி திரள்வரென்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கில் மூதூர் கிழக்கு முதல் குடும்பிமலை வரையான கடந்த ஒரு வருடகாலப்போரில் புலிகளுக்கேற்பட்ட இழப்புகள் மிகக் குறைவு. படைத்தரப்பினர், புலிகளின் இழப்புகள் குறித்து பல மடங்காக அறிவித்து வந்த போதும் அவர்கள் தங்கள் ஆட்பல இழப்பை நன்கு மட்டுப்படுத்தியதுடன் கனரக ஆயுதங்களில் மிகப் பெரும்பாலானவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திவிட்டனர்.

கிழக்கில் முன்னர் படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளுக்கு மீண்டும் படையினர் வந்துள்ளனரே தவிர இந்த ஒரு வருடப்போரில் புலிகளின் ஆட்பலத்திற்கோ அல்லது ஆயுத வளத்திற்கோ அவர்களால் குறிப்பிடத்தக்களவு சேதங்களைக்கூட ஏற்படுத்த முடியாது போனமை படையினரின் யுத்த தந்திரத்திற்கேற்பட்ட பெரும் பின்னடைவாகும்.

1995 இல் வடக்கே யாழ்.குடாநாட்டை படையினர் கைப்பற்றியபோது, எவ்வாறு தங்கள் ஆளணிக்கும் ஆயுத வளத்திற்கும் சேதமேற்படாது அவற்றை மிகப் பாதுகாப்பாக வன்னிக்கு நகர்த்தினார்களோ அவ்வாறே கிழக்கு கள முனையிலும் புலிகள் மிகக் குறைந்த இழப்புகளையே சந்தித்தமையானது புலிகளின் யுத்தமாகும்.

கிழக்கை கைப்பற்றியதை, இன்னொரு தேசத்தை கைப்பற்றியதுபோன்று அரசு வெற்றி விழாக் கொண்டாடியதன் மூலம், கிழக்கு இலங்கைக்குரியதல்ல, தமிழீழத்திற்குரியதென்பதை அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது. இல்லையேல் புலிகள் கிழக்கை இழந்ததன் மூலம் தமிழீழக் கனவு சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் கிழக்கின்றி புலிகளால் வடக்கை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி தமிழீழம் பற்றி சிந்திக்க முடியுமெனவும் தெற்கில் கேள்வியெழுப்புகிறார்கள்.

எனினும், கிழக்கில் தங்கள் வசமிருந்த நிலப்பிரதேசத்தை மட்டுமே தாங்கள் இழந்ததாகக் கூறும் புலிகள் அங்கு தங்களது தாக்குதல் முறையை மாற்றியமைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதன் மூலம் இனிமேல் அங்கு கெரில்லாத் தாக்குதல்கள் நடைபெறப்போவதையும் அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

கிழக்கில் மிகப்பெரும் பகுதி புலிகள் வசமிருந்தது. தற்போது அந்தப் பகுதிகளில் மிகப்பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் இராணுவ ஆளணி கிழக்கில் பெரும்பாலான பகுதிகளிலும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தான், கிழக்கில் அகலக் கால் வைத்துள்ள படையினர் ஒரு பொறிக்குள் சிக்கியுள்ளதாக புலிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசுக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேவீர ஹேரத்தின் கொலையால் அரச அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான கொலைகள் தொடர்ந்தால் அங்கு சிவில் நிர்வாகம் செயலிழக்கும். இராணுவமே சிவில் நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

இதனால், கிழக்கில் அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் கிழக்கில் சிரேஷ்ட அதிகாரிகளின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் படையினர் தாக்குதல்களுக்கிலக்காகும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப்போகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அங்கு உடனடியாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சட்டத்திருத்தங்களையும் பாராளுமன்றின் மூலம் அரசு செய்துள்ளது. இந்தத் திருத்தங்களினூடாக கிழக்குத் தேர்தல்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத் திருத்தமானது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னத்தை இல்லாதொழிக்கும் நோக்கம் கொண்டதென கூட்டமைப்பு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனைப் பாராளுமன்றத்திலும் பகிரங்கப்படுத்தியுள்ளதுடன் கிழக்கே தாங்கள் எவருமே செல்ல முடியாதளவுக்கு அங்கு ஆயுதக் குழுக்களூடாக அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு கடந்த வருட முற்பகுதியில் கோரப்பட்டு இத்தேர்தல்களுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நியமனப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கமைய, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டு புதிதாக நியமனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனால், கூட்டமைப்பினர் இந்த தேர்தலுக்காக தாக்கல் செய்த நியமனப் பத்திரங்கள் ரத்தாகியுள்ளன. இனி கூட்டமைப்பினரும் புதிய நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே, தேர்தல் தொடர்பாக ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் வெடித்துள்ள நிலையில் கூட்டமைப்பினரால் அங்கு செல்லவோ புதிதாக நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யவோ முடியாத நிலையே உள்ளது.

மேற்படி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசு பாராளுமன்றில் அவசர அவசரமாகக் கொண்டு வந்து கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பினர் போட்டியிடமுடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

அதேநேரம், இந்தத் தேர்தலில் கூட்டமைப்பினர் வெளியிடங்களிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடலாமென்பதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்தப் பிரதேசத்திற்குள் வசிக்க வேண்டுமெனவும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, கூட்டமைப்பினர் வெளியிடங்களிலிருந்து கூட போட்டியிட முடியாதவாறு ஏற்பாடுகள் அவசர அவசரமாகச் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கில் நடைபெறும் தேர்தல்களில் தமிழ்த் ேதசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுவிட்டால் அது, வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்துவதுடன் தமிழீழக் கோரிக்கையை கிழக்கில் மீண்டும் வலுவடையச் செய்துவிடுமென்பதாலேயே இங்கு நடைபெறும் தேர்தலில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் எவரையும் போட்டியிடாதவாறு செய்வதே இனவாதிகளின் திட்டமாகும்.

இன உணர்வையும் தேசிய உணர்வையும் மறைக்கவே `கிழக்கின் உதயம்' என்ற மாயமானைக் காட்டி பாரிய அபிவிருத்தித் திட்டங்களெனக் கூறி கிழக்கை துரித அபிவிருத்தி செய்வதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுடன் இந்த அபிவிருத்தித் திட்டங்களை சாட்டாக வைத்து கிழக்கில் தேவைக்கேற்ப சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கருணா குழுவுக்குள் ஏற்பட்ட பிளவும் (பிள்ளையான் குழு) கருணா குழுவுக்கும் ஈ.பி.டி.பி. க்குமிடையிலான மோதல்களும் இனவாதிகளுக்கு வாய்ப்பாகியுள்ளது. தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் இந்த மோதல்களை மேலும் வலுவடையச் செய்து தமிழர்களை கூறுகளாக்கி, அதன் மூலம் பல்வேறு காரியங்களையும் சாதிக்கவே அரசு விரும்புகிறது.

இவ்வாறு கிழக்கு நிலைமைகளிருக்கையில் வடக்குடன் புலிகளை மட்டுப்படுத்திவிட வேண்டுமென்ற முனைப்பில் அரசு தீவிரம் காட்டுகிறது. வடக்கில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களென்பதைவிட அங்கு புலிகளின் தாக்குதல்கள் குறித்தே அரசு அச்சமடைந்துள்ளது.

கிழக்கு வெற்றியின் மூலம் தற்போதைய யுத்தம் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கருதும் படையினர், வடக்கில் புலிகளுடனான போரில் வெற்றிகளைப் பெறாவிட்டாலும் தோல்விகளைச் சந்திக்கக் கூடாதென்பதில் கவனமாயுள்ளனர்.

மடுவைக் கைப்பற்றி அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயம் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு படையினர் இதுவரை பலதடவைகள் முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை.

வடக்கில் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து புலிகளின் பகுதிகளினுள் நுழைய வேண்டுமானால் வடக்கில் புலிகள் அணிதிரள்வதைத் தடுத்து அவர்களை சிதறடித்து ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக்கிவிட்டு, புலிகள் பலவீனமாயுள்ள ஏதாவதொரு முனையில் பெருமெடுப்பில் நகர்ந்து அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்க வேண்டுமென்பதே படையினரின் திட்டமாகும்.

இதனை நோக்காகக் கொண்டே, புலிகளை வடக்கில் முன்னரங்க நிலைகளில் அணிசேரவிடாது தடுப்பதற்காக புலிகளின் பகுதிகளில் அவர்களது சகல முன்னரங்க நிலைகளை நோக்கியும் அதற்கப்பாலும் படையினர் இரவு பகலாக மிக அகோர ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

வவுனியா , மன்னார், மணலாறு, யாழ்.குடா என சகல பகுதிகளிலும் படையினரின் இந்தத் தாக்குதல்கள் தொடர்கிறது. குடாநாட்டில் தென்மராட்சி முன்னரங்க நிலைகளிலிருந்து படையினர் ஏவும் பல்குழல் ரொக்கட்டுகள் ஆனையிறவு வரைகூட வருகிறது. புலிகள் தங்களுக்கெதிராக பாரிய தாக்குதலைத் தொடுப்பதற்கு தயாராவதை தடுக்கும் நோக்கிலேயே, வடக்கில் தினமும் இவ்வாறான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலையில் ஆட்பலத்தை விட அரசும் படையினரும் ஆயுத பலத்தையே நம்பியுள்ளனர். எந்தளவிற்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்க முடியுமோ அந்தளவிற்கு போர்த் தளபாடங்களை வாங்கிக் குவித்து வடக்கை சுடுகாடாக்கியாவது புலிகளை அழித்துவிட வேண்டுமென அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. ஆனாலும் வடக்கில், குறிப்பாக வவுனியா - மன்னார் எல்லையில் படையினர் தினமும் சந்திக்கும் இழப்புகள் அவர்களுக்கு, வடக்கு களமுனை எப்படியிருக்கப்போகின்றதென்பதை தெளிவுபடுத்தி வருகிறது. கிழக்கை போலன்றி வடக்கு களமுனை படையினருக்கு பெரும் புதைகுழிகளாயிருக்கப்போகின்றன என்பதை வடக்கில் தினமும் நடைபெறும் மோதல்கள் காண்பிக்கின்றன.

இதேநேரம், மூதூர் கிழக்கு சம்பூர் பகுதியில் கடற்புலிகளின் தளங்கள் மிகவும் வலுவாயிருந்த போது கிழக்கிலும் கடற்புலிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தியதுடன் திருகோணமலைத் துறைமுகத்திற்கும் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளத்திற்கும் கடற்புலிகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருந்தனர். யாழ். குடாவிற்கான கடல்வழிப் போக்குவரத்தைக்கூட சம்பூரிலிருந்து கடற்புலிகள் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

ஆனால், மூதூர் கிழக்கை படையினர் கைப்பற்றி விட்டதால் கிழக்கில் கடற்புலிகளின் ஆபத்து இல்லாது போய்விட்டதாக அரசு கருதுகிறது. அத்துடன், வடக்கில் முல்லைத்தீவிலுள்ள கடற்புலிகளின் தங்களது செயற்பாட்டையும் கட்டுப்படுத்திவிட்டால் வடக்கிலும் கடற்புலிகளை பலவீனமாக்கிவிடலாமென படைத்தரப்பு கருதுகிறது.

மிகக் கடுமையானதும் தொடர்ச்சியானதுமான வான்வழித் தாக்குதல், கடற்புலிகளின் தளங்களுள்ள பகுதிகள் அல்லது அதற்குச் சமீபமான நிலப்பிரதேசங்களை கைப்பற்றுதல் மற்றும் கடற்படையினரை மேலும் வலுப்படுத்தி ஒரே நேரத்தில் அவர்களது தாக்குதல் பலத்தை வடபகுதி கடற்பரப்பை நோக்கி திருப்புவதன் மூலம் கடற்புலிகளை செயலிழக்கச் செய்ய முடியுமெனவும் அவர்கள் கருதக்கூடும்.

கிழக்கில், குறிப்பாக திருகோணமலையில் சம்பூர் பகுதியை புலிகள் இழந்ததன் மூலம் கடற்படையினருக்கிருந்த மிகப்பெரும் அச்சுறுத்தல் தடுக்கப்பட்டது. சம்பூரை இழந்ததன் மூலம் வடக்கு - கிழக்கில் கடற்படையினரை முழு அளவில் கட்டுப்படுத்தும் வாய்ப்பை புலிகள் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடற்படையினருக்கு நிகராக கடற்புலிகளின் செயற்பாடுகளிருப்பதை கடற்படையினர் மட்டுமல்ல அரசும் நன்கறியும். கடற்புலிகளின் செயற்பாட்டை முடக்கி வடக்கில் புலிகளின் பிரதேசங்களைத் தாக்க முடியுமென படைத்தரப்பு நினைக்கும் போது புலிகளின் விமானப் படையையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

`கிழக்கின் உதயம்' நிகழ்வின் மூலம் ஜனாதிபதி போர்ப் பிரகடனம் செய்துவிட்டதால் இனி போர்நிறுத்தமுமில்லை அதற்கான உடன்பாடுமில்லை. வடக்கே பெரும் போர் வெடிக்கப்போகிறது. இந்தப் போர் வடக்குடன் மட்டுப்படுத்தப்படுமா அல்லது நாடெங்கும் வியாபிக்கப்போகின்றதா என்பதே இன்றைய கேள்வி.

Please Click here to login / register to post your comments.