தந்திரோபாயப் பின்னகர்வுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்
இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக் கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு.

இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது.

தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள்.

மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் தொப்பிகலையை விட்டு வன்னிக்குச் சென்றுவிட்டார்களென்று புதுக் கணக்கொன்றை அவிழ்த்து விட்டுள்ளார் எதிர்க்கட்சித்தலைவர் ரணில்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு புலிகளுடன் இரகசிய உறவு உண்டென சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறி அரசியல் இலாபம் ஈட்டப் பார்க்கிறது ஐ.தே.க.

இராணுவத் தோல்விகளைச் சாடுவதும், சிறு வெற்றிகளுக்கு புலி உறவு முலாம் பூசுவதும் வழமையான எதிர்க்கட்சிகளின் பிரசாரப் பாணியாகும்.

ஆகவே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சர்வதேசம் என்கிற மூன்று பிரிவினரையும் புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.

விடுதலைப்புலிகள் பலவீனமடையும்வரை பொறுமை காக்கும் உத்தியையே சர்வதேச சமூகம் கடைப்பிடிக்கிறது.

    கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு சர்வதேசம் வழங்கும் நிதியுதவிகளை அதிகரிபதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தவிருப்பதாக அரசு கூறுவது சர்வதேசத்திற்கு மகிழ்ச்சியான விடயம்தான்.

அத்தோடு பாரிய முலீடுகளையும் மேற்குலகம் செய்ய வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவீனங்களையும் படைத்துறை செலவுகளையும் ஈடுசெய்ய வேண்டிய அவசரத் தேவை அரசிற்குண்டு.

அரசில் சிறிது காலமாகவே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் அதிரடி அதிர் வேட்டுக்கள் குறைந்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சர்வதேசத்திற்கெதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது.

பிரித்தானியத் தூதரை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ நாட்டை விட்டு விரட்டியது போன்று ஜேர்மனியத் தூதரையும் நிதி வழங்கா விட்டால் விரட்டப் போவதாக பரப்புரையொன்று வெளிக்கிளம்பியுள்ளது.

அதாவது அச்சுறுத்தி நிதி பெறும் ஒருவகையான கப்பம் கேட்கும் அரசியலை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை வன்னிக்குள் முடக்கும்வரை எந்தவொரு மேற்குலக நாட்டிலிருந்தும் அழுத்தங்கள் அரசை நோக்கி நகரா வண்ணம், இராஜதந்திர காய்நகர்த்தல்களை நுணுக்கமாகக் கையாள்வதே அரசின் தற்போதைய உத்தி முறையாகும்.

இந்நிலையில், வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு அண்மையில் தமிழ்ச்செல்வன் வழங்கிய செவ்வியில் குறிப்பிடப்பட்ட விடயமானது பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதெனலாம்.

படை நிலைகளும் பொருளாதார இலக்குகளும் தாக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் இளந்திரையனும் யுத்தத்திற்கு தயாராக தமது படையினர் இருப்பதாக அரசியல்துறைச் செயலர் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னி முற்றுகை இறுக்கமடையும் பொழுதே இக்கூற்றுக்களிற்கான எதிர்வினைகள் செயலுருப்பெறலாம்.

வன்னியைச் சூழவுள்ள சகல முன்னரங்க நிலைகளிலும் எறிகணை வீச்சுக்களையும் சிறியளவிலான மோதல்களையும் அரச படைகள் மேற்கொள்ளும் நகர்வும் முற்றுகைக்கான முன் தயாரிப்பு என்பதைவிட, எப்பக்கத்தை உடைத்தபடி விடுதலைப் புலிகள் போரை ஆரம்பிப்பார்களென்பதை அறிய பலர் காத்திருக்கின்றனர்.

முற்றுகையை இறுக்குவதற்கு இன்னமும் கால அவகாசம் அரசிற்குத்தேவை. அதற்கு முன்பாக புலிப்பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டால் புதிய படையணிகள் உருவாவது தடுக்கப்படுவதுடன் இராணுவத்தை விட்டு தப்பிச் செல்லும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தொப்பிகலை வெற்றி விழாவின் நிறைவுடன் சகலரும் எதிர்பார்ப்பது விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நகர்வினைத்தான்.

ஜனாதிபதி மஹிந்த என்ன செய்கிறார் என்பது தெரிந்த நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பிரதேசங்களை விடுவித்தல் என்கிற புதிய சரத்தை புலிகளும் பயன்படுத்துவார்களென்பதை சகலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    தொப்பிகலைச் செய்தியுடன் திடீரென முளைத்த சர்வதேச பேச்சுவார்த்தை நாடகங்கள் மறைந்து போயுள்ளதை அவதானிக்கலாம்.

தந்திரோபாயப் பின்னகர்வின் இறுதிக் கட்டத்தை விடுதலைப்புலிகள் அண்மித்து விட்டார்களென்பதே தமிழ்ச்செல்வனின் இறுக்கமான செய்தியின் சாராம்சம்.

ஜெயசிக்குறுச் சமரும், இஸ்ரேலிய 6 நாள் போரும், வியட்கொங் படையணிகளின் நீண்ட பாய்ச்சலும் கலந்து புதிய வடிவிலான போர்க் கலை உத்தியொன்று பிரயோகிக்கப்படலாம்.

அரசபடைகள் மேற்கொண்ட ஜெயசிக்குறு என்கிற நீண்ட கால படையெடுப்பின் பின்னர் விடுதலைப் புலிகள் வன்னியை வசமாக்கிக் கொண்டார்கள்.

வன்னியை கைப்பற்ற படைக் குவிப்பை மேற்கொண்ட இராணுவம் ஆனையிறவு படைத் தளத்தை இழந்தது.

இவ்வகையான சோக வரலாறுகளை மறைத்தபடி நடத்தும் தொப்பிகலை களியாட்டங்கள், தற்காலிக மகிழ்ச்சியையும் சில அரசியல் வெற்றிகளையும் அரச தரப்பிற்கு வழங்கலாம்.

பரவலாக அதிகரிக்கப் போகும் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்கள், இராணுவத்தின் ஆளணி வளத்தை கிழக்கில் முடக்கும் வகையில் பரவலாக்கப்படலாம். ஏற்கனவே தொப்பிகலையை ஆக்கிரமிக்க வடக்கிலிருந்து அழைத்துவரப்பட்ட படையினர் திரும்புவதற்குரிய வாய்ப்புகளும் அரிதாகவுள்ளது.

தொப்பிகலையை கைப்பற்றிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த விரும்பும் இராணுவ தீர்விற்கான காலத்தை வழங்க இணைத் தலைமை பரிவாரங்கள் நீண்ட வரிசையில் தமது பயணங்களையும் மேற்கொள்ளலாம்.

இவர்களின் தற்போதைய மௌனம், அடுத்த கட்ட புலிகளின் நகர்வுகளை பயங்கரவாதமாகச் சித்திரிக்க முறையானதொரு நிலையையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்.

வடக்கு கிழக்கை தற்காலிகமாக இணைத்து மாகாண சபை ஆட்சி புரிந்த இந்தியாவிற்கு அந்நாட்களெல்லாம் கலைந்த கனவுகளே.

சர்வதேசத்தின் போலிமுகம் அம்பலமாகி நிஜத் தோற்றம் வெளிவரும் இந்நிலையில் சுயபலமொன்றே தமிழினத்தின் பூரண விடுதலையை பூர்த்தியாக்கும் என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்கிறார்கள்.

தமிழர் தாயகத்தை பிரித்துவிட்டோமென ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பரிக்கிறது.

பௌத்த சின்னங்களை நட்டு புதுவரலாறு உருவாக்க, இடந்தேடி சிலர் அலைகின்றனர். ஆகவே இறுதிப் போரை தீர்மானிக்கப்போவது புலிகளல்ல. அரசாங்கமும் சர்வதேசமும் தான்.

Please Click here to login / register to post your comments.