வடக்கே வெடிக்கப் போகும் யுத்தம்!

ஆக்கம்: விதுரன்
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கு அரசு அவசரப்படவில்லை. அவர்களைத் தோற்கடித்த பின்பே பேச்சுகள் சாத்தியமென அரசு கூறுவதன் மூலம் வடக்கே பாரிய படை நடவடிக்கை மூலம் பலமானதொரு நிலையிலேயே பேச்சுக்குச் செல்ல அரசு முனைகிறது.

இதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சமாதானமென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக புலிகள் எச்சரித்திருப்பதன் மூலம் இனியெப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேச்சுகளுக்குச் செல்லப் போவதில்லையென்பதை புலிகளும் உணர்த்தியுள்ளனர்.

வடக்கில் நடைபெறப்போவதாக எதிர்பார்க்கப்படும் போர் இனிமேல் வடக்குடன் மட்டும் நின்றுவிடமாட்டாது. அது நாடு முழுவதும் பரவப்போகின்றதென்பது தெளிவாகிவிட்டது. புலிகளின் எச்சரிக்கையும் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.

வடக்கு - கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பினூடாக இரண்டாகப் பிரித்த இந்த அரசு, இன்று இராணுவ நடவடிக்கை மூலம் வடக்கு - கிழக்கை நிரந்தரமாகப் பிரித்துவிட்டதாகக் கருதுகிறது. கிழக்கை இழந்துவிட்டு விடுதலைப் புலிகளால் தமிழீழத்தை ஒரு போதுமே அடைய முடியாதென்பதால் கிழக்கை அரசியல் ரீதியாகப் பிரித்து இராணுவ பலத்துடன் கைப்பற்றியதன் மூலம் தமிழீழக் கனவை முற்றாகவே சிதைத்துவிட்டதாக சிங்கள தேசம் இறுமாப்புக் கொண்டுள்ளது.

கிழக்கை வெற்றி கொண்டு தமிழீழ கனவை சிதைத்ததற்காக நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு இனி இராணுவத் தீர்வே இறுதியானதென்ற ரீதியில் சிங்களதேசம் செயற்படத் தொடங்கிவிட்டது. பலத்த அடிகளும் பேரிழப்புகளும் கிடைக்கும் வரை இந்த எண்ணம் அவர்கள் மத்தியில் வலுவாகவே வேரூன்றும்.

கிழக்கைப் போல் வடக்கையும் பிடித்துவிட முடியுமென்றதொரு நப்பாசையும் அவர்கள் மனதில் தோன்றியுள்ளது. இதனால் வடக்கிலும் உடனடியாக பாரிய படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகளைப் பெற்றுவிட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

கிழக்கில் பெற்ற வெற்றியால் படையினர் மிகவும் உற்சாகமாகவுள்ளதால் வடக்கையும் வெற்றிகொண்டுவிடலாமென்ற மனோநிலையிலுமிருப்பதால் வடக்கிலும் உடனடியாக பாரிய படை நடவடிக்கைகளைத் தொடங்கிவிட வேண்டுமென்று அரசு முனைப்புக் காட்டுகிறது.

வடக்கில் பொருளாதாரத் தடைகளை விதித்து வன்னியில் உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அங்கு மிக மோசமானதொரு நிலையை உருவாக்குவதுடன் வடக்கே புலிகளுக்கு கடல் வழியூடாகக் கிடைக்கும் விநியோகங்களையும் முற்றாகத் தடுத்துவிட்டால் குறிப்பிட்ட சில மாதங்களில் அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட அவர்களது பிரதேசங்களுக்குள் இலகுவாக நுழைந்துவிட முடியுமென அரசு கருதுகிறது.

கிழக்கில் கடந்த ஜூலை மாதம் மாவிலாறில் தொடங்கிய போர் சம்பூர், மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று, வெருகல், கதிரவெளி, வாகரை, படுவான்கரை மற்றும் குடும்பிமலை (தொப்பிகல) எனத் தொடர்ந்து இன்று கிழக்கு புலிகளிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டுவிட்டதாக அரசு மார் தட்டுகிறது.

கடந்த ஒரு வருட காலமாக கிழக்கில் நடைபெற்ற பெரும்போர் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அரசு கருதுகிறது. இனி வடக்கு பற்றி யோசிக்கலாமெனவும் எண்ணுகிறது.

கடந்த அரசாங்கம் 1996 இல் வவுனியாவிலிருந்து யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்க மேற்கொண்ட ஜெயசிக்குறு படை நடவடிக்கை போன்றே திருகோணமலையில் மாவிலாறில் தொடங்கி மட்டக்களப்பில் குடும்பிமலை வரை படையினர் சென்றுள்ளனர்.

இந்த வெற்றி மூலம், இனியொரு போதும் தோல்வியேற்படாதென அரசு எண்ணுகிறது. ஆனால், ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் வன்னியில் 2 வருடங்களாக படையினர் கைப்பற்றிய பகுதிகளை புலிகள் 2 நாட்களில் கைப்பற்றிய வரலாற்றை புதிய அரசுக்கு தெரியாவிடினும் படையினருக்கு நன்கு தெரிந்திருக்கும்.

ஒட்டுசுட்டான் முதல் ஓமந்தை வரையான பிரதேசத்தை புலிகள் கைப்பற்றிய வரலாற்றை அனைவரும் அறிவர். இதன்பின் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டு யாழ் குடாவினுள் நுழைந்த புலிகள் எந்நேரத்திலும் குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றிவிடுவரென்ற நிலையிருந்த போது இந்தியா இதில் தலையிட்டது. குடாநாடு புலிகளின் பிடிக்குள் விழுந்து விடக் கூடாதென்பதில் இந்தியா கவனமாயிருந்து செயற்பட்டது.

அன்று குடாநாட்டை புலிகள் கைப்பற்றுவதை தடுத்து நிறுத்திய இந்தியா, இலங்கையுடன் தான் கைச்சாத்திட்ட வடக்கு, கிழக்கு ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டு, வடக்கும் கிழக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டபோது மௌனம் சாதித்தது. அத்துடன் கிழக்கை இராணுவ ரீதியாக துண்டாடவும் இந்தியா மறைமுகமாக இலங்கை அரசுக்கு உதவியுள்ளது.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்து சமாதான முயற்சிகளை ஆரம்பிக்குமாறு சர்வதேச சமூகம் வற்புறுத்தி வந்த நிலையில் தான் அவற்றையெல்லாம் மீறி இலங்கை அரசு மிகப்பெரும் படை நடவடிக்கைகள் மூலம் கிழக்கை கைப்பற்றியுள்ளது. எனினும் இது குறித்து சர்வதேச சமூகமும் இந்தியாவும் கைகட்டி வேடிக்கை பார்த்தன.

அதேநேரம், கிழக்கை அரசு முழுமையாகக் கைப்பற்றிய பின் புலிகளைப் பேச்சுக்கு அழைப்பது சுலமானதென சர்வதேச சமூகமும் இந்தியாவும் எண்ணியுள்ளனவா, அல்லது கிழக்கை அரச படைகள் கைப்பற்றிய போது மௌனமாயிருந்தது போல் இனி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ளும் போதும் மௌனமாயிருக்க வேண்டுமென எண்ணுகின்றனவா?

கிழக்கில் உடனடியாகத் தேர்தல்களையும் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளையும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. புலிகளின் கவனத்தை வடக்கே திசை திருப்புவதற்காக, கிழக்கில் தேர்தல் நடைபெறும் போது வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறலாம். அதேநேரம் புலிகளின் கவனம் தெற்கே திரும்பும் சாத்தியமுமுள்ளது.

தற்போதைய நிலையில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நடமாட முடியாத நிலையுள்ளது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் சுட்டுக் கொல்லப்படுவதன் மூலம் அங்கு கூட்டமைப்பினரின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் அரசின் துணையுடன் நடைபெறுகின்றன.

கிழக்கில் ஆயுத மேந்திய குழுக்களின் முகாம்களை பாதுகாக்கும் அரசு, ஆயுதமேந்தாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்ல முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது. இதனால் அங்கு தேர்தல்கள் நடைபெறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கில் செயல்பட முடியாத நிலைமை தோற்றுவிக்கப்படலாம்.

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றிபெறுவதை தடுக்கும் நடவடிக்கைகளே இவை. கிழக்கில் தாங்கள் விரும்பும் தரப்புகளை வெற்றிபெற வைப்பதன் மூலம் அங்கு தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்களை தோற்கடிக்க வைத்து கிழக்கில் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை மழுங்கடித்துவிட வேண்டுமென்பதில் அரசு அக்கறைகொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கு வெற்றிபெறுமானால் அது அரசிற்கு,அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பேரிடியாகிவிடும். அதேநேரம் கடந்த இரு தசாப்தத்திற்கும் மேலாக அங்கு நடைபெற்ற தேர்தல்களிலெல்லாம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களே அமோக வெற்றிபெற்று வந்த நிலையில் இனிவரும் தேர்தலில் அவ்வாறான உணர்வுமிக்கவர்கள் போட்டியிட முடியாது போவது அல்லது தோற்கடிக்கப்படுவதென்பது திட்டமிட்ட செயலாகவேயிருக்கும்.

கிழக்கு மாகாணத்தை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டதாக பெரும் விழாவுக்கு அரசு தயார்படுத்துகையில், மரபுவழிப் படையணியாகவிருந்த புலிகள் அங்கு கெரில்லா படையணியாக மாறியுள்ளனர். இனிவரும் நாட்களில் கிழக்கில் தங்களுக்கென்று கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின்றி அவர்கள் செயற்படப் போகின்றனர்.

கொழும்பில் பாதுகாப்பு மிக உச்சக்கட்டத்திலுள்ளது. பல்லாயிரக்கணக்கான படையினர் அனைத்துப் பகுதிகளிலும் குவிக்கப்பட்டு, இன்று நேற்றல்ல கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொழும்பு நகரில் அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வருடகாலமாக தினமும் பாரிய சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றுவதும் நடைபெறுகின்றன. புலிகளின் முகாம்கள் அல்லது அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் இங்கிருப்பதாலா கொழும்பில் இந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இல்லையே, கொழும்புக்குள் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் சில புலிகளுக்குப் பயந்தே இந்தளவு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல்தான், கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களிலிருந்து விலகிவிட்டாலும் அவர்கள் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் நிலைகொண்டு கெரில்லா படையணியாக தினமும் படையினரை மிரட்டப் போகின்றனர்.

கிழக்கில் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்தது அவர்களுக்கு பெரும் பின்னடைவுதான். தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து ஆட்லறி,

மோட்டார்கள் போன்ற கனரக ஆயுதங்கள் மூலம் படையினரை எந்தநேரமும் மிரட்டிக் கொண்டிருந்த புலிகளுக்கு, இனி அவ்வாறான மிரட்டல்களை விடமுடியாது போய்விட்டது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுமார் மூன்று இலட்சம் மக்களிருந்தனர். இது அவர்களுக்கு ஆட்சேர்ப்புக்கும் பெருமளவு வாய்ப்பாக இருந்தது. தற்போது அங்கு ஆட்சேர்ப்புக்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது. இதுபோன்ற பல வாய்ப்புகளை தற்போது புலிகள் இழந்துள்ளனர்.

படையினருடன் நெருங்கிச் செயற்பட அங்கு பல ஆயுதக் குழுக்களிருப்பதால் படையினர் அவர்களை இனிமேல் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் முகாம் அமைக்க வைத்து புலிகளுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட முனைவர். அதேநேரம் படையினரும் ஆயுதக் குழுக்களும் ஒருமித்தே செயற்படவுள்ளதால் மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்குமுள்ளாகும் போது அங்கு மோசமான நிலை உருவாகும் வாய்ப்புகளுமுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கில் இனிவரும் காலத்தில் தாங்கள் போரிடப்போகும் பிரதேசத்தின் அளவு குறுகலாகிவிட்டதால் அது தங்களுக்கு வாய்ப்பாயிருக்குமெனப் படைத் தரப்பு கருதக் கூடும். கிழக்கில் தற்போதைக்கு மரபு வழிச் சமருக்கான வாய்ப்பில்லையென்பதால் மரபுவழிச் சமரில் ஈடுபட்ட படையணிகளை வடக்கே மாற்றிவிடலாமென அரசு கருதும்.

அத்துடன் ஆட்லறி, பல்குழல் ரொக்கட், பாரிய மோட்டார்களையும் வடக்கே நகர்த்தவும் படைத்தரப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வடக்கில் நடைபெறும் போரிலும் வெற்றி பெற்றுவிட்டால் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை விடுவித்துவிடலாமெனவும் அரசு கருதக்கூடும்.

வெறுமனே இதனையொரு பயங்கரவாதப் பிரச்சினையாகக் காட்டியவாறும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண மறுத்தவாறும் பயங்கரவாதப் பிரச்சினையெனக் கூறி அதற்கு இராணுவத் தீர்வைக் காணவே அரசு முற்படுகிறது. அதேநேரம் புலிகள் மிக மோசமான பயங்கரவாதிகளெனக் கூறியவாறு தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசு காலாகாலமாக மிக மோசமான அழிவுகளையேற்படுத்தி வருகிறது.

இலங்கை அரசு கூறுவது போல் புலிகளும் மிக மோசமான பயங்கரவாதிகளாகச் செயற்படுவார்களானால் இலங்கையே இன்று சுடுகாடாகியிருக்கும். ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கெதிராகவும் ஷியா முஸ்லிம்களுக்கெதிராகவும் போராளிகள் நடத்தும் தாக்குதல்கள் போல் தெற்கிலும் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தால் இன்று நிலைமை எவ்வாறிருந்திருக்குமெனக் கூறத் தேவையில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கிலும் பாரிய தாக்குதலுக்கு அரசு தயாராகி வருகையில் இராணுவ, பொருளாதார நிலைகள் மீது தாக்கப் போவதாக புலிகள் எச்சரித்திருப்பதானது தெற்கில் நிலைமை மோசமடையப் போவதை உணர்த்துகிறது.

இராணுவ ஆக்கிரமிப்புக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவும் பொருளாதார நிலைகளை அழிப்பதினூடாக அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாக புலிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே வான் புலிகள் கொழும்பில் சில தடவைகள் தாக்குதல்களை நடத்திய நிலையில் இலங்கை அரசு பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்திருந்தது. அவ்வாறான தாக்குதல்களை புலிகள் மேலும் தொடர்ந்தால் அரசால் அவற்றை தாக்குப் பிடிக்க முடியாது போய்விடும்.

தெற்கில் அரசுக்கெதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வரும் நிலையில் தொப்பிகல வெற்றியை அரசு பெருமெடுப்பில் கொண்டாடி அதன் மூலம் எதிரணிகளின் எதிர்ப்பலைகளைச் சமாளிக்க முற்படுகிறது. அதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மங்கள சமரவீர இணைந்து செயற்படப் போவதை தடுக்க ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி ஐ.தே.க. தலைவர் ரணிலுக்கும் மங்கள சமரவீரவுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், தொப்பிகல வெற்றிக் கொண்டாட்டத்தை அன்றைய தினம் ஜனாதிபதி ஏற்பாடு செய்ததன் மூலம் ரணில் - மங்கள உடன்பாட்டுக்கு அவர் எந்தளவு தூரம் பயப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அதற்கு முக்கியத்துவம் கிடைப்பதைத் தடுக்கவே அன்றைய தினம் இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, தனது அரசியல் தோல்விகளை மறைக்க இராணுவ வெற்றிகளை ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதால் களமுனையில் படையினர் எதிர்க்கொள்ளப்போகும் மோசமான தோல்விகள் அரசுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கலாம். இதனால், கிழக்கை தொடர்ந்து வடக்கே பாரிய படை நடவடிக்கையென்பது பெரும் விஷப்பரீட்சையென்பதை உணராது ஆழமறியாது அரசு காலைவிடப் போகிறது.

Please Click here to login / register to post your comments.