அரசியல் திருவிழாவாகும் குடும்பிமலை படை நடவடிக்கை

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையின் பெரும்பாலான தினசரிகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்குப் பகுதியான குடும்பிமலை (தொப்பிக்கல) வெற்றிவிழா தொடர்பான செய்திகளே அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கும் போது படைநடவடிக்கைகள் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு.

அதன் வெற்றி விழாக்களும் பெரும் எடுப்பில் நடத்தப்படுவதுண்டு. தற்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளும் சூறாவளி சந்திப்புக்கள், வெளிநாட்டு பயணங்கள், ஊடகங்களுடனான நேர்காணல்கள் என்பவற்றால் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளத்தின் உறுதித் தன்மை அதன் ஆயுட்காலம் தொடர்பாக கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனவே தான் இன்று குடும்பிமலையின் வெற்றியுடன் கிழக்கை முற்றாக கைப்பற்றி விட்டதாக கொண்டாடுவது இராணுவ நலன்களை விட அரசியல் நலன்களின் அவசிய தேவையாகிவிட்டது. ஆனால் குடும்பிமலையுடன் கிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் முற்றாக முடக்கப்பட்டு விடும் என்ற கூற்றுத் தான் சிறுபிள்ளைத்தனமானது.

ஏனெனில் 1995 ஆம் ஆண்டு வடபகுதி மீதான படை நடவடிக்கைக்காக பெரும் தொகையான படையினர் நகர்த்தப்பட்ட போதே குடும்பிமலை விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. குடும்பிமலை மட்டுமல்ல வாகரை, சம்பூர், மாவிலாறு போன்றவை கூட அதன் பிற்பாடு வந்தவை தான்.

அப்படியானால் அதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் கிழக்கில் இயங்கவில்லையா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. விடுதலைப்போர் ஆயுதப்போராக கருக்கொண்ட போது அது வடக்கிலும் கிழக்கிலும் சமகாலத்தில் தோற்றம் பெற்றிருந்தது. அன்றில் இருந்து இன்றுவரை களங்களிலும் போராட்ட வடிவங்களிலும், போரியல் உத்திகளிலும் பல தடவைகள் மாற்றங்கள் நிகழ்ந்த போதும் இரு மாகாணங்களில் எந்த ஒன்றில் இருந்தும் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற முடியவில்லை என்பது நாம் கண்ட வரலாறு.

ஆனால் புவியியல் அமைப்பு, சமூகவியல் கட்டமைப்பு, இன விகிதாசாரம் போன்றவற்றின் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் வேறுபட்டதாகவே அமைந்து வந்துள்ளன. அதாவது வடக்கு மிகவேகமாக மரபுவழிச் சமருக்குரிய களமாக மாற்றம் பெற்றிருந்த போதும் கிழக்கு பல காலம் தொடர்ச்சியாக கெரில்லா தாக்குதல் களமாக இருந்து வந்தது.

இருந்தாலும் 1995 ஆம் ஆண்டு படையினர் தமது கவனத்தை வடபோர்முனையில் குவித்த போது, கிழக்கின் அதிக கேந்திர முக்கியத்துவமற்ற பகுதிகளை கைவிடத்தொடங்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் உருவாகியதுடன், கிழக்கில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்தி படைக் கட்டமைப்புக்களையும் உருவாக்கி இருந்தனர்.

எனினும் அவர்களின் மரபுவழிச் சமருக்கான போர்ப் படையணிகள், போர்த்தளவாடங்கள் என்பன அங்கு மட்டுப்படுத்தப்பட்டே இருந்தன. கனரக ஆயுத வளங்களிலும் இலகுவாக நகர்த்தக் கூடிய ஆயுதவளங்களே அதிகமாக அங்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதற்கு அந்த பகுதியின் பூகோள அமைப்பும் பிரதான காரணம். அதாவது இலகுவான முற்றுகைக்குள் இந்தப் பகுதிகள் சிக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு.

நாலாம் கட்ட ஈழப்போர் மூர்க்கமாக ஆரம்பமாகிய போது மூன்றாம் கட்ட ஈழப்போரில் வடபோர் முனை ஏற்படுத்திய தாக்கங்களை தென்னிலங்கை மறக்கவில்லை. எனவே தான் பூகோள ரீதியில் பலவீனமான களமுனையான கிழக்கு அரசினால் தெரிவுசெய்யப்பட்டது. 1995 களில் நடைபெற்ற சூரியக்கதிர் நடவடிக்கையை விட அதிகளவான சுடுவலுவுடன், பெருமளவான ஆட்தொகையுடன் கிழக்கு மீதான படை நடவடிக்கை ஆரம்பமாகியது. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த மாவிலாறு படை நடவடிக்கையுடன் ஆரம்பமாகிய இந்த படை நடவடிக்கை தற்போது ஒரு வருடத்தை எட்டியுள்ளது.

அதாவது வடபோர்முனை நடவடிக்கைக்காக கைவிடப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்றுவதற்கு தேவைப்பட்ட படைபலம், சுடுவலு, காலம், கொடுக்கப்பட்ட விலைகள் என்பவற்றை நோக்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகின்றது. ஒரு காலத்தில் அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பிற்காலத்தின் பொறியாக மாறி விடுவதுண்டு.

அரசின் கிழக்கு மீதான படை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தற்போது குடும்பிமலை உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் அடைந்துள்ளது. எனினும் களநிலமை எதிர்பார்த்ததைப் போல சுலபமாக இருக்கவில்லை. கடந்த வாரம் அங்கு முன்னகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய துல்லியமான எறிகணை வீச்சு தாக்குதலில் முன்னகர்ந்த படை பற்றாலியனின் கட்டளை அதிகாரி, அவரது துணை அதிகாரி உட்பட 5 படையினர் கொல்லப்பட்டும் டசினுக்கு மேற்பட்ட படையினர் காயமடைந்ததாக அரச தரப்பு தெரிவித்திருந்தது.

ஏறத்தாள ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட கடுமையான முயற்சிகளின் பின்னர் படையினர் குடும்பிமலையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், கிழக்கை முற்றாக கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் அரசின் இந்த அறிவிப்பின் பின்னணியில் விடை காணமுடியாத பல கேள்விகள் உள்ளன. குடும்பிமலையில் இருந்த விடுதலைப் புலிகளும் அவர்களின் ஆயுதங்களும் எங்கே? இந்த காட்டுப்புறத்தில் அதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற படையினர் தொடர்ந்து தங்கியிருக்க போகின்றனரா? கடந்த ஒரு வருடம் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் 2350 சதுரகிலோமீற்றர் பரப்பளவை தக்கவைக்க தேவைப்படும் படையினர் எவ்வளவு? படை நடைவடிக்கைகளுக்காக கிழக்கில் குவிக்கப்பட்ட படையினர் எதிர்காலத்தில் களத்தை விட்டு மீள முடியுமா? இவை போன்று மேலும் பல கேள்விகள் மக்களின் மனங்களில் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

விடுதலைப் புலிகளை பொறுத்த வரையில் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததைப் போல மீண்டும் ஒரு கெரில்லா நடவடிக்கைக்கு ஏற்ப தமது படை மற்றும் போரியல் உத்திகளை மாற்றியமைத்து விட்டனர் என்றே தெரிகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் குடும்பிமலை மீதான படை நடவடிக் கைகள் ஆரம்பமாகியபோதே விடுதலைப் புலிகள் தமது போரியல் உத்திகளை மாற்றி அமைத்ததுடன், கெரில்லா தாக்குதல் அணிகளாக தமது அணிகளை ஒழுங்குபடுத்தியிருந்தனர். மேலதிகமான போராளிகளும், ஆயுதங்களும் வன்னிக்கு நகர்த்தப்பட்டும் விட்டன. அதாவது படையினர் பரந்த காட்டுப் பகுதியில் உள்ள வெற்றுப் பிரதேசத் தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கிழக்கில் படையினர் தமது நகர்வுகளை முடித்துக் கொண்டு ஒய்வுக்கு வரும் போது கெரில்லாக்கள் தமது நடைவடிக்கையை ஆரம்பிக்கலாம். அதாவது விடுதலைப் புலிகள் பத்துக்கும் குறைவான சிறு சிறு குழுக்களாக நடைவடிக்கையில் இறங்கும் போது களநிலைமை மேலும் விபரீதமாகும். அதன் பின்னர் கெரில்லாக்களை தேடுவது, தமது படை நிலைகளையும், ரோந்து அணிகளையும் பாதுகாப்பது என படையினருக்கு முன்னுள்ள பணிகள் பலமடங்கு அதிகமாகவே இருக்கும்.

இதற்கு சிறந்த உதாரணமாக 1995 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட யாழ். குடாநாட்டை குறிப்பிடலாம். 1995 ஆம் ஆண்டு 3 டிவிசன்களை கொண்டு கைப்பற்றப்பட்ட 860 சதுரகிலோமீற்றர் பிரதேசத்தை தக்கவைப்பதற்கு கடந்த 12 வருடங்களில் படையினர் செலுத்திய விலைகள் மிக மிக அதிகம். தற்போது 4 டிவிசன்கள் இருந்தும் விடுதலைப் புலிகளின் கெரில்லா நடவடிக்கைகளை அங்கு தடுக்க முடியவில்லை.

பெருமளவான மக்களை கொண்ட நகர்ப்புறங்களுடன் கூடிய கிராமப்புறங்களை தக்கவைப்பதற்கு 40,000 படையினர் இருந்தும் போதவில்லை என்னும் போது பெருமளவான காடுகள், பற்றைகள், குன்றுகள், ஏரிகள், செறிவு அற்ற மக்கள் தொகை என்பவற்றை கொண்ட 2350 சதுரகிலோ மீற்றர் பரப்பளவை பாதுகாக்க தேவைப்படும் படையினரின் எண்ணிக்கை அவர்களுக்கு முன்னுள்ள சிரமங்களை சாதாரண மக்களால் கூட இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

யாழ். குடாநாட்டை பொறுத்தவரையில் அங்கு சென்ற படையினரை மீள பெறமுடியாத நிலை தான் அரசுக்கு ஏற்பட்டிருந்தது என்பதை விட மேலதிக படையினரும் அங்கு அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதனை தக்கவைப்பதற்காக சிறப்பு படையணிகள், கவசப்படையணிகள் என புதிய புதிய படையணிகளையும் இலங்கை படையினர் உருவாக்கி வருகின்றனர்.

அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியிருந்த இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா யாழில் 40 விடுதலைப் புலிகளே ஊடுருவியிருப்பதாகவும் அவர்கள் அங்கு நிலைகொண்டிருக்கும் 40,000 படையினருக்கு கடுமையான தலையிடியை கொடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

சிறுசிறு குழுக்களாக உள்ள இந்த 40 விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து இராணுவ நிலைகளையும் ரோந்து அணிகளையும் காப்பாற்றுவதற்கு 20 பற்றாலியன் துருப்புக்கள் தொடர்ச்சியாக ரோந்துகள், தேடுதல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்திருந்தார். அதாவது அவரது கூற்றின் படி 40 விடுதலைப்புலிகள் 20 பற்றாலியன் துருப்புக்களை களத்தில் முடக்கியுள்ளனர்.

யாழில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இன்று வரை மோதல்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கடுமையான சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள், மீன்பிடித்தடைகள் என எத்தனையோ விதமான பாதுகாப்பு நடை முறைகளை மேற்கொண்ட போதும் குடாநாட்டின் பாதுகாப்பு மிகுந்த அச்சுறுத்தலில் தான் உள்ளது.

யாழ். குடாவுக்கே இத்தகைய நிலை எனில் கிழக்கில் கெரில்லாக்களை தேடுவது என்பது வைக்கோல் கும்பத்துக்குள் ஒரு வைக்கோலை தேடுவது போன்றது தான். கிழக்கில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு படையினரை விலக்கிவிட்டு சாதாரண படையினரிடமோ, காவல்துறையினரிடமோ அல்லது ஊர்காவல் படையினரிடமோ பாதுகாப்பை ஒப்படைப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடும்பிமலை பகுதியில் இலங்கை இராணுவத்தின் வான்நகர்வு சிறப்பு படையே நிலைகொண்டிருந்தது. சாதாரண படையினரால் அதனை தக்கவைக்க முடியாது என்பது அன்றே உணரப்பட்டிருந்தது.

ஏனெனில் குடும்பிமலை களமுனை கிழக்கின் ஏனைய களமுனைகளை விட வேறுபட்டது. அதாவது அது பாறைகள், மலைகள், காடுகள் நிறைந்த பகுதி. எனவே அங்கு மரபுவழிப் படைக்கலங்களான பீரங்கிகள், தாக்குதல் விமானங்கள், டாங்கிகள் என்பவற்றின் பயன்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. மேலும் அடர்ந்த காட்டுப் பகுதியில் இலக்குகளை கண்டறிய பயன்படும் ஜி.பி.எஸ் எனப்படும் தொகுதிக்கும் செய்மதிகளுக்கும் இடையிலான தொடர்புகளும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருப்பதுடன், பற்றரியில் இயங்கும் அவற்றின் ஆயுட்காலமும் காட்டுப்புறத்தின் வெப்பம், ஈரலிப்பு தன்மைகளினால் விரைவில் முடிந்து விடும்.

மேலும் சாதாரண படையினர் காட்டுப்புறச் சமருக்கு ஏற்றவர்கள் அல்ல, எனவே தான் அரசு இரு கொமாண்டோ றெஜிமென்ட், மற்றும் சிறப்பு படை பட்டாலியன்களை இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்திருந்தது.

1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட படை நடைவடிக்கையின் போதும் சிறப்பு படையினரே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த படையணிகள் காட்டுப்புறச் சமருக்கென சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். ஆனால் தற்போது உள்நுளைந்திருக்கும் இவர்கள் அதனை விட்டு வெளியேறுவது என்பது இயலாத காரியம்.

முன்னரும் யாழ் குடாநாட்டை கைப்பற்றியதும் காவல்துறையினரையும், ஒரு தொகுதி படையினரையும் அங்கு நிறுத்தி விட்டு மீண்டும் கிழக்கை கைப்பற்றிவிடலாம் என அப்போது போர் உத்திகள் வகுக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் சிறப்பு படையணியான 53 ஆவது படையணியும் முழுமையாக அங்கேயே நிரந்தரமாக தங்க நேரிட்டதுடன், இலங்கை இராணுவத்தின் பெரும் படைப்பலமும் அங்கு தான் முடங்கிப்போய் கிடக்கின்றது. எனவே தற்போது கிழக்கில் அகலக் கால்வைத்துள்ள படையினரின் நிலையும் அது தான்.

350 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட குடும்பிமலையை மட்டும் பாதுகாக்க தேவைப்படும் சிறப்பு படையினரின் எண்ணிக்கை அதிகமானது. சிறப்பு படையினர் மட்டுமல்லாது எறத்தாள இரு டிவிசன்கள் இராணுவமும் அதற்கு தேவை. எனவே கடந்த ஒரு வருடமாக கிழக்கில் கைப்பற்றப்பட்ட முழுப் பிரதேசங்களையும் தக்கவைப்பது என்பது மிகவும் கடினமானது.

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள பரந்த களமுனைகளில் ஒரு இடத்தில் விடுதலைப் புலிகளின் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் ஒன்று நிகழுமாயின் அது நிலைமையை தலை கீழாக மாற்றுவதுடன், படையினரை ஒருங்கிணைக்க முடியாத நிலைமையையும் தோற்றுவிக்கும். இது தான் ஜெயசிக்குறு படை நடவடிக்கை கூறிய பாடம்.

ஜெயசிக்குறு சமர் இராணுவ வியூகங்களை விடுத்து அரசியல் களத்திலும் 1999 களின் இறுதியில் காத்திரமான செய்திகளை கொடுத்திருந்தது. அதாவது இராணுவ வெற்றிகளை சார்ந்த அரசியல் என்பது கம்பி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் சமநிலை தவ றினாலும் பாதாளம் தான் பதிலாகும். எனவே குடும்பிமலையும் எதிர்காலத்தில் பல அரசியல், இராணுவ செய்திகளை கூறத்தான் போகின்றது ஆனால் அதுவரை அரசியல் திருவிழாக்கள் தொடரும்.

Please Click here to login / register to post your comments.