தொப்பிக்கல அரசியல் வியூகங்களுக்கான ஒரு புதிய களமுனை

ஆக்கம்: டிட்டோ குகன்
இலங்கையின் தற்போதைய அரசியல் மேடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்தாலும், அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டுமென்ற விடயத்தில் மட்டும் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துகளை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ ஒன்றுபட்டு விடுகின்றன.

உதாரணமாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் தங்களுக்கிடையே அன்று தொடக்கம் இன்று வரை எப்போதுமே ஒத்துவராத கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் போதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் ஒன்றாக செயற்படாவிட்டாலும் அரசை கவிழ்க்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயற்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்று பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கட்சியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தால் ஏதோவொரு விதத்தில் தாங்கள் பாதிக்கப்பட்டதாகவே கருதுகின்றன. அதற்கான காரணங்களும் இருக்கின்றன. முன்னதாக ஜனாதிபதி தேர்தலின் போது, ஜே.வி.பி.யினர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் ஆதரவு வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டு, "மகிந்த சிந்தனை" வேலைத் திட்டத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வெற்றிபெறவும் ஆதரவளித்தனர். இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஜனாதிபதி "மகிந்த சிந்தனையை காட்டிக் கொடுத்துவிட்டதாக அவரையும், அவரது அரசாங்கத்தையும், கடுமையாக விமர்சித்து, அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை ஆழ ஊடுருவும் படையணிகளாக செயற்பட்டு பகிரங்கப்படுத்துமளவிற்கு ஜே.வி.பி. ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் வெறுப்புக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தால் இந்த நாட்டில் அழிப்பதற்கு இனி எதுவும் எஞ்சியில்லை என ஜே.வி.பி. யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான அநுர குமார திஸாநாயக்க `தினக்குரல்' க்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது, "2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது நாம் ஆதரவளிக்க ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்‌ஷ என்ற இரு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இதில் இருவரும் கெட்டவர்கள் தான். ஒருவர் பெரிய கெட்டவன். மற்றையவர் சிறிய கெட்டவன். எனவே, அப்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஏற்படும் அழிவை முடிந்தளவு குறைத்துக் கொள்ள சிறிய கெட்டவனை தேர்ந்தெடுத்தோம். அவர் இன்று பெரியாளாகி விட்டார் எனவும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. அந்த பேட்டியில் பகிரங்கமாகவே ஜனாதிபதியை சாடியிருந்தார்.

ஐ.தே.க.வை எடுத்துக் கொண்டால், அக் கட்சிக்கும், ஆளுந்தரப்பின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கடந்த வருடம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி செயற்படுவதற்காகவென கூறியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும், ஒப்பந்தம் கைச்சாத்தான சில நாட்களிலேயே ஐ.தே.க. விலிருந்து 18 உறுப்பினர்கள் அரசு பக்கம் இழுக்கப்பட்டதால், ஐ.தே.க. ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது. அன்று, தொடக்கம் அக்கட்சி அரசாங்கம் குறித்தும், ஜனாதிபதி மற்றும் அவரது, சகோதரர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியேயும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. இதன் விளைவாக, அரசாங்கத்துக்கு "ராஜபக்‌ஷ சகோதரர்கள் கம்பனி" என்ற பெயரைக் கூட ஐ.தே.க. சூட்டியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும், ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்துக்கு எதிரான இன்னுமொரு அணியாக புதிதாக இணைந்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னின்று உழைத்த இவ்விருவரும் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்களுடன் ஏற்பட்ட உட்பூசல்கள் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதன் பின்னர் ஸ்ரீபதி சூரியாராச்சி கைது, போன்ற பல முடக்கல் நடவடிக்கைகளின் பின்னர் இருவரும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினராக எதிர்த்தரப்பில் இணைந்துள்ளதுடன், அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் பற்றி பல விடயங்களை அம்பலப்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்.

இவ்வாறு எதிர்த்தரப்பிலுள்ள தெற்கு கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தை நம்பி ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் அரசாங்கத்துடன் ஒப்பந்தமெதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல், எப்போதுமே ஒரே நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வளவு காலமும் எதிர்த்தரப்பு கட்சிகள் குறிப்பாக தெற்கிலுள்ள அரசியல் கட்சிகள், பாரிய அமைச்சரவை, ஊழல், மோசடிகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் என பல விடயங்களை வைத்து, அரசாங்கத்தை விமர்சித்து வந்தன. அத்துடன், இலங்கையில் யுத்தமும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் நிலையில், அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகள் குறித்து ஐ.தே.க.வும் அரசாங்கம் ஏதாவது சமாதான பேச்சுகள் பற்றி செயற்பட்டால் ஜே.வி.பி.யும் விமர்சித்து எதிராக செயற்பட்டு வந்தன. ஜாதிக ஹெல உறுமயவினர் சமாதான பேச்சுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தப்போதும், தற்போது அரசில் அங்கம் வகிப்பதால் அவர்கள் இதுபற்றி எதுவும் வாய் திறப்பதில்லை.

தொப்பிகலை பகுதியை கைப்பற்றியதன் மூலம் கிழக்கு மாகாணம் முழுவதையும் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், படையினர் பெற்றதாக கூறப்படும் வெற்றியை பாராட்டி வாழ்த்த வேண்டிய நிலைமைக்கும் அதேநேரம், அரசாங்கத்தை எப்படியாவது விமர்சித்தே தீர வேண்டுமென்ற சூழ்நிலைக்கும் இந்த எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன என்பது அவர்களின் கருத்துகளிலிருந்தே புலப்படுகின்றன. இதன்மூலம் அரசாங்கத்துக்கு சார்பான ஆதரவு சொற்பமேனும் அதிகரித்து விடக்கூடாது என்ற ஆதங்கம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பொதிந்து கிடப்பதாகவே தோன்றுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே சாதாரண மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துமென்ற போதிலும், அரசாங்கத்தின் இந்த யுத்த வெற்றியானது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை மாயையாக மறைத்துவிடக்கூடுமென எதிர்க்கட்சிகள் அவதானமாக செயற்படுவதாகவே தெரிகிறது.

ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் ஆட்சி மாற்றமொன்றை விரும்பி நிற்கும் எதிர்க்கட்சிகள், கிழக்கு மாகாண யுத்த வெற்றி மூலம் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து விடக்கூடாது என்பதிலும், அரசாங்கத்துக்கு ஆதரவான சொல்லொன்று தங்களது வாயிலிருந்து வந்து விடக்கூடாது என்பதிலும் மிகவும் அவதானமாக செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

நாட்டு மக்கள் விலைவாசி உயர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் போது, அரசாங்கம் தொப்பிகல வெற்றியெனக் கூறி மக்களின் பணத்தை செலவு செய்து, விழா எடுக்கவுள்ளதாக, காலியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. ஆட்சியின் போதும், சிரேஷ்ட அதிரடிப் படையினர் மூலம் தொப்பிகலையை பிடித்திருந்ததாகவும், அது பின்னர் புலிகள் வசமாகியதாகவும் ரணில் விக்கிரமசிங்க அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொப்பிகல படை நடவடிக்கை தொடர்பாக ஐ.தே.க. வினர் இவ்வாறான விமர்சனங்களை மேற்கொண்டதுடன், அரசின் தொப்பிகல வெற்றி ஊடகங்களில் மட்டுமேயெனவும் அக்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியேயும் விமர்சித்து வந்தனர்.

தொப்பிகலையை படையினர் முழுமையாக கைப்பற்றி விட்டதாக அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்ததையடுத்து, படையினர் பெற்ற வெற்றியின் மூலம் அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல விமர்சித்துள்ளார்.

தொப்பிகலயை கைப்பற்ற பாடுபட்ட முப்படையினருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதேநேரம், நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவையும், ஊழல் மோசடிகளையும் மக்களிடம் மறைக்க அரசாங்கம் இந்த வெற்றியை பயன்படுத்திக்கொள்ள எடுக்கும் அரசியல் முயற்சியை ஐ.தே.க. வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரான விமல் வீரவன்ச எம்.பி.யும், படையினர் பெற்ற தொப்பிகலை வெற்றியை பாராட்டியுள்ளதுடன், படையினர் வெற்றிவாகை சூடியிருக்கும் தறுவாயில் நோர்வே தூதுவர் ஹன்சன் பிரட்ஸ்கரை கிளிநொச்சி சென்று புலிகளை சந்திக்க அரசாங்கம் ஏன் இடமளிக்க வேண்டுமெனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

நோர்வே தூதுவர் இலங்கையிலிருந்து விலகிச் செல்லவுள்ள நிலையில், புலிகளுடனான பிரியாவிடை சந்திப்புக்கென கிளிநொச்சி சென்றிருந்தமை ஒருபுறமிருக்க, ஏற்கனவே, படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்றபோது, அவை சமாதான நடவடிக்கைகள் என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளதுடன், அரசாங்கம் இவ்வாறான நாடகங்களை நிறுத்த வேண்டு மெனவும் சாடியுள்ளார்.

புதிய எதிரணியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும், தொப்பிகலையில் படையினர் பெற்ற வெற்றிகளை பாராட்டி வாழ்த்தியுள்ளதுடன், அப்பகுதியை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள எந்தத் திட்டமுமின்றி அரசாங்கம் இந்த படை நடவடிக்கையை முன்னெடுத்திருக்குமெனில் அது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட படையினருக்கு செய்யும் அவமதிப்பெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொப்பிகலையைத் தொடர்ந்தும் தக்கவைக்க 10 ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான படையினர் தேவையெனவும், அதற்கான படையினரை அரசாங்கம் எங்கிருந்து திரட்டப் போகிறதெனவும் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மோதலொன்றில் வெற்றிபெற்று முழு யுத்தத்திலும் வெற்றிபெற முடியாமல் போன உதாரணங்கள் பல உலகத்தில் இருப்பதாகவும், எனவே படையினரின் வெற்றிகளுக்காக சந்தோஷப்படும் அதேநேரம், அரசியல்வாதிகளினதும் தனிநபர்களினதும் தேவைகளுக்காக மோதல்கள் முன்னெடுக்கப்படுவதை கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்

இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது, எதிர்க்கட்சிகள், தொப்பிகல வெற்றியின் மூலம் அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் புள்ளிகள் அதிகரித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது புலனாகிறது. அரசாங்கத்தின் கீழேயே முப்படைகளும், பொலிஸாரும் இருக்கின்ற போதிலும், படையினர் பாராட்டப்படுகின்ற போதிலும், அரசாங்கம் தனித்து, விமர்சிக்கப்படுவதிலிருந்தே இதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அரசாங்கத்தின் இந்த வெற்றிக்காக அதை பாராட்டி விட்டால், இதுவரை தாங்கள் செய்து வந்த விமர்சனங்களை மக்கள் பொய்யென கருதக் கூடுமெனவும், அரசாங்கத்துக்கெதிரான ஆதரவை மீண்டும் கட்டியெழுப்புவது, கடினமான பணியாக அமைந்து விடுமெனவும் எதிர்க்கட்சிகள் எண்ணுவதாகவே தோன்றுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது சகோதரர்களின் பிடியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது.

தங்களது கட்சியிலிருந்து அரசுடன் இணைந்துகொண்ட 18 உறுப்பினர்களுக்கும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய ஜனாதிபதிக்கும் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஐ.தே.க.வுக்கு இருப்பதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெறுவதற்கு உழைத்திருந்த போதிலும் இறுதியில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும், பழிதீர்த்துக் கொள்ளவேண்டிய தேவைப்பாடு ஜே.வி.பி., மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருக்கும் இருப்பதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு சொல்லையாவது வெளியிட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

இருப்பினும், தொப்பிகலையை கைப்பற்றியதன் மூலம் விடுதலைப்புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை கைப்பற்றிவிட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் உண்மையான கள நிலைவரம் என்னவென்பது, களத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெளிவு.

Please Click here to login / register to post your comments.