தொப்பிகல கைப்பற்றலும் கிழக்கின் எதிர்காலமும்

 • கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கத் தரப்பலிருந்து எடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எனப்படும் நாடுகளும் இந்தியாவும் பார்த்து ரசித்து வந்துள்ளன. அதில் தமக்கு ஏதாவது நன்மைகள் , நலன்கள் கிடைக்குமா என்பதையிட்டு அவை அக்கறையாக இருந்தனவே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரியவாறு உதவவோ, ஆலோசனை வழங்கவோ அன்றி நடவடிக்கைகள் எடுக்கவோ அவை முன்வரவில்லை

  இந்த வாரம் நடுப்பகுதியில் கிழக்கின் தொப்பிகல பிரதேசத்தை இலங்கை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக அறிவித்துக் கொண்டது. புலிகள் இயக்கமும் தாம் பின்வாங்கியிருப்பதாகக் கூறியுள்ளது. தொப்பிகலவைக் கைப்பற்றியதன் மூலம் முழு கிழக்கு மாகாணத்தையும் தாம் மீட்டெடுத்து இருப்பதாக அரசாங்கம் முரசறைந்து நிற்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாவிலாறு நோக்கி ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை முழுக் கிழக்கையும் புலிகள் இயக்கத்திடமிருந்து கைப்பற்றும் நோக்குடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இராணுவமும் அரசாங்கமும் பிரகடனம் செய்துள்ளன. இராணுவ ரீதியில் பெற்றுள்ள இவ் வெற்றியைக் கொண்டாட அரசாங்கம் தயாராகியும் வருகின்றது.

  அரசாங்கமும் ஜனாதிபதியும் கூறிவரும் இந்த இராணுவ வெற்றி உண்மையான ஒரு வெற்றியாக இருக்க முடியுமா? இதற்குப் பதிலாக ஒரு நியாயமான தீர்வின் அடிப்படையில் புலிகள் இயக்கமும் ஏனைய தமிழ் அமைப்புகளும் சமாதானத்தை விரும்பும் சக்திகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் வெற்றி நிலைநாட்டப்பட்டிருந்தால் அது விழா எடுக்க வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கும். அதை விடுத்து இராணுவ வெற்றிக்காக குதூகலிப்பது அரசியல் நோக்கங்களுக்கு வலுச் சேர்ப்பதற்கும் யுத்தத்திற்குக் காரணமான இனப்பிரச்சினையைத் திசை திருப்புவதற்குமேயாகும். அத்துடன், எத்தகைய இராணுவ வெற்றியும் நிரந்தரமான ஒன்றாக அமைய முடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். கைப்பற்றலும் வெற்றியும் பின் வாங்கலும் தோல்வியும் இராணுவ ரீதியில் மாறி வரக் கூடியவைகளாகும். கடந்த கால் நூற்றாண்டுகால யுத்தத்தில் இவற்றின் மாறும் போக்குகளைக் காண முடிந்திருக்கிறது. நாம் அக்கறைப்படவும் அவதானிக்கவும் வேண்டிய விடயம் யாதெனில் இத்தகைய இராணுவ வெற்றிகளால் யுத்தத்திற்குக் காரணமான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பதேயாகும்.

  இத்தகைய யுத்த வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவர மாட்டாது என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், தொப்பிகல வெற்றிக்கு வாழ்த்துக் கூறி நிற்கும் ஜனாதிபதி இதேபாதையில் வடக்கையும் வெற்றிகொள்ளப் போவதாகப் போர்ச் சங்கு ஊதி நிற்கிறார். அதனுடைய அர்த்தம் யுத்தத்தின் மூலமான இராணுவத் தீர்வே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியும் என்பதாகும். இப்போதெல்லாம் தேசிய இனப்பிரச்சினை பற்றியோ அதன் காரணமான யுத்தம் என்பது பற்றியோ அரசாங்கமும் ஜனாதிபதியும் அவர்கள் சார்பான ஊடகங்களும் குறிப்பிட்டுக் கொள்வதில்லை. பயங்கரவாதம் என்பது பற்றியே உரத்துப் பேசுகிறார்கள். ஏனெனில், அதுவே வசதியானதும் வாய்ப்பானதுமாகும். உள்நாட்டில் எழுந்து நிற்கும் பிரச்சினைகளுக்கு மறைப்புக் கட்டவும் சர்வதேச அரங்கில் தேசிய இனப் பிரச்சினையை மூடி மறைக்கவும் பயங்கரவாதம் நல்லதோர் கவசமாகும்.

  அதனாலேயே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கத் தரப்பிலிருந்து எடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எனப்படும் நாடுகளும் இந்தியாவும் பார்த்து ரசித்து வந்துள்ளன. அதில் தமக்கு ஏதாவது நன்மைகள், நலன்கள் கிடைக்குமா என்பதையிட்டு அவை அக்கறையாக இருந்தனவே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரியவாறு உதவவோ அன்றி ஆலோசனை வழங்கவோ அன்றி நடவடிக்கைகள் எடுக்கவோ அவை முன்வரவில்லை. பதிலுக்கு யுத்தம் உக்கிரமடையக் கூடிய வழிவகைகளைக் காட்டி ஆயுத விற்பனையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகரிக்கவே முன்னின்று வந்தன.

  இதன் காரணமாகவே கிழக்கை அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை சர்வதேச சமூகமும் இந்தியாவும் தமது மௌன அங்கீகாரம் மூலம் ஆதரித்து நின்றன. இதனை இப்போதும் விளங்கிக் கொள்ள மறுக்கும் தமிழ்த் தலைமை எனப்படுவோர் அமெரிக்காவையும் இந்தியாவையும் தங்கள் உரிமைகளுக்கான நண்பர்களாகவும் அதற்கும் அப்பால் இரட்சகர்களாகவும் வரித்து நிற்பதுதான் விசனத்திற்குரியதாகும். மனிதாபிமான நடவடிக்கைகள் என்றும் மனித உரிமை மீறல்கள் என்றும் சலசலப்புக் காட்டுவது அவர்களின் சொந்த தேவைகளுக்கே அன்றி நமது நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்து சமாதானமும் சுபிட்சமும் வர வேண்டும் என்பதற்காக அல்ல. இதனை இந்நாட்டின் அனைத்து மக்களும் தூரநோக்கில் உணர்ந்து கொள்ளாதவரை மீட்சி என்பது கிடைக்கப் போவதில்லை.

  மேலும், கிழக்கைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி வெற்றி விழாவாக முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கம் தான் எதிர்நோக்கி நிற்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறது. மக்கள் அணுகமுடியாத அளவிற்கு வேகமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியவில்லை.

  ஊழல், மோசடி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பன தலைவிரித்தாடுகின்றன. அவற்றில் எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் இருப்போரின் கைகள் தாராளமாக இருந்து வருகின்றன. அவை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசப்படுகின்றது. பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றன. ஏற்கனவே பாராளுமன்றக் குழு `கோப்' ஆராய்ந்து முன்வைத்த விடயங்கள் எவ்வித நடவடிக்கையும் இன்றி உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் ஏனையவற்றுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழு எதையும் சாதிக்கப் போவதில்லை. அதேபோன்றே மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுக்களும் இழுபட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் சமாளிக்கவும் திசை திருப்பவும் `பயங்கரவாதம்' என்பது மிகவும் கவர்ச்சிக்கு உரியதாக மக்கள் முன்காட்டப் படுகின்றது.

  மேலும், தொப்பிகல கைப்பற்றப்பட்ட இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக கிழக்கில் அரசியல் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதியும் அரசாங்கமும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டன. புலிகள் இயக்கத்திற்குள் உருவாக்கப்பட்ட பிளவும் வடக்கு, கிழக்கு என்ற பிரதேசவாத எண்ணங்களும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

  பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் பலவீனப்படுத்தல்களுக்கும் கிழக்கு களமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது இரகசியமல்ல. இதனை உறுதிப்படுத்தவும் பேரினவாத செயற்றிட்டங்களைக் கச்சிதமாக முன்னெடுக்கவுமே கிழக்கில் தேர்தலை நடத்தவும் அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் எதிர்காலம் சுபிட்சமடையும் எனக் கூறப்படுவது எவ்வகையிலும் நம்பகத்திற்குரியதல்ல. கடந்த காலங்களில் பேரினவாதத்தின் துரித செயற்பாடுகளில் குறிவைக்கப்பட்ட பிரதேசமாக இருந்து வந்ததே கிழக்கு மாகாணம் என்பதை எல்லோரும் நன்கு அறிவர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நில-நீர் அபகரிப்புகளும் இனவன்முறை மூலம் பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் சிதைக்கப்பட்டமையும் நடந்தேறிய வரலாற்றுச் சம்பவங்களாகும். அவ்வாறே அண்மைக் காலங்களில் கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது கிராமங்களுக்கும் நடந்தேறி வருகின்றன.

  இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் இருந்தே கிழக்கின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைகள், இராணுவ நகர்வுகளால் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் யாவற்றையும் இழந்த எதுவுமற்ற ஏதிலிகளாக மாற்றப்பட்டு விட்டனர்.

  மீளக்குடியமர்வு, புனரமைப்பு, புனர்வாழ்வு என்பதெல்லாம் வெறும் வாயுரைப்புகளில் தான் இருந்து வருகின்றது. அதற்கும் மேலாக அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆங்காங்கு கிள்ளித் தெளிக்கும் உதவிகளில் இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து வருகின்றன. அத்தகைய உதவிகளால் இழந்த வீடுகளை மீளமைக்கவோ, தொழில்களுக்கு மீளவோ முடியாத நிலையில் தான் மக்கள் இருந்து வருகின்றனர்.

  இயல்பாகவே வடக்குடன் ஒப்பிடும் போது கிழக்கின் மக்கள் பொருளாதார, சமூக ,கல்வித் துறைகளில் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் விவசாயிகளும் மீனவர்களுமாவர். அவர்கள் தமிழர்கள், முஸ்லிம் என்ற அடையாளங்களுக்குள் வாழ்ந்த போதிலும், வர்க்க ரீதியில் பொருளாதார, சமூக, கல்வி நிலைகளில் சுரண்டப்பட்டு வருபவர்களாகவே உள்ளனர். அத்தகைய மக்கள் தான் பேரினவாத ஒடுக்கு முறையிலும் பாதிக்கப்பட்டு அல்லற்படும் மக்களாகவும் உள்ளனர். அத்தகைய கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் காட்டும் தேர்தலும் நிர்வாகச் செயல் முறைகளும் விமோசனமாக மாட்டாது என்பது மட்டும் உண்மையானதாகும்.

  பேரினவாத ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தில் ஒடுக்கப்படும் எந்தவொரு தேசிய இனமும் விமோசனத்தையோ, சுபிட்சத்தையோ பெற முடியாது. அதற்குப் பதிலாக சிலவகைச் சலுகைகளை அனுபவிக்கும் அரசியல் பிரதிநிதிகள் ஏதாவது நன்மைகளையும் இலாபங்களையும் அடைய முடியுமே தவிர மக்களுக்கு வெறும் எலும்புத் துண்டுகள் மட்டுமே சென்றடையக் கூடியனவாகும்.

  அரசாங்கம் கூறும் கிழக்கின் தேர்தலாலும் ஜனநாயக நடைமுறைகள் எனப்படுவனவற்றாலும் இராணுவ செயற்பாடுகளில் இருந்து மக்கள் விடுபடப் போவதில்லை. மூதூர் கிழக்கு சம்பூர் அதி உயர் பாதுகாப்பு வலயம், பொருளாதார வர்த்தக வலயம் என்பன கைவிடப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படப் போவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிளவும் விரிசலும் மேன்மேலும் பேரினவாதத்தால் கிழக்கில் தூண்டப்படும்! அத்துடன் சிங்கள மக்களுடனான கசப்புணர்வுகளுக்கும் இன வக்கிரங்களுக்குமான பேரினவாத எண்ணெய் வார்ப்பு மேலும் கிழக்கில் அதிகரிக்கவே செய்யும். இத்தகைய நிலை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி, சிங்கள சாதாரண மக்களுக்கும் சாதகமான ஒன்றல்ல. முதலாளித்துவ பேரினவாத ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே சாதகமானதும் வாய்ப்பானதுமாகும்.

  Please Click here to login / register to post your comments.