வன்னி முற்றுகைக்கு தயாராகும் இலங்கை அரசும் சர்வதேசமும்

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்
சகல தரப்பின் நகர்வுகளும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அரசின் மூல உத்தியை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின், அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமென்று கூறிய கருத்து, எதுவித சிக்கலுமின்றி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எவ் வகையிலாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எதுவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.

சமாதான ஒப்பந்தம், அனுசரணையெல்லாம் மாயமான் வேட்டை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இறுதி நிகழ்வான, வன்னி முற்றுகையை நோக்கி இராணுவம் நகரும் வரை, மனித உரிமை மீறல் என்கிற உடுக்கை அடித்தபடி சர்வதேசம் காலத்தைக் கடத்தும்.

இணைத் தலைமை கூட்டத்தைக் கூட்டி, அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக பாவனை காட்டும்.

அதேவேளை புலம்பெயர் நாடுகளிலுள்ள போராட்ட முனைப்பினை அழித்திடும் முயற்சியினையும் சமாந்தரமாக மேற்கொள்ளும்.

அதாவது, மனித உரிமை மீறல்கள் அத்துமீறிப் போகாத வகையில், இராணுவ முன்னெடுப்புகளை தீவிரப்படுத்த வேண்டுமென்பதே அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்யும் சர்வதேசப் பிரதிநிதிகள் அரசின் காதில் இரகசியமாகச் சொல்லும் செய்தி.

ஏ-9 பாதையை மூடினாலும் சம்பூர், வாகரை மற்றும் படுவான்கரையை இராணுவம் கைப்பற்றினாலும் வன்னி மண் மீது விமானப்படை குண்டு வீச்சினை மேற்கொண்டாலும், தினமும் பொதுமக்கள் கொல்லப்பட்டாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் சாகவில்லையென்ற உடும்புப் பிடியாக நிற்கும் சர்வதேசத்தின் நோக்கம்தான் என்ன?

விடுதலைப் புலிகளை சர்வதேசமெங்கும் தடை செய்தபடி, அவர்களோடு பேசித் தீருங்களென்று கூறும் சர்வதேச கபடத்தனத்தின் பின்புலத்தில் விடுதலைப் போராட்டத்தை அழித்தலென்பதே அவர்களின் கொள்கையாகக் கணிப்பிட வேண்டும்.

அரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலின் இறுதிக்கட்டமான வன்னி முற்றுகை உருவாகும் வரை, சர்வதேசத்தின் போக்கு அறிக்கைகளோடும், கூட்டத் தொடர்களோடும் மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

நீண்டதொரு அஞ்ஞான வாசத்தின் பின், மறுபடியும் வவுனியா, திருமலை, மட்டக்களப்பில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது சேவையை ஆரம்பிக்கப் போகிறது. அரசிடம் கேள்விக்கணை தொடுக்காமல், தமது செயற்பாடுகளை மேற்கொண்டாலே போதுமென்கிற கொள்கையுடன் மறுபடியும் அவர்களின் அலுவலகங்கள் இயங்கலாம்.

இன அழிப்பினைக் கண்காணிப்பதற்கும் சர்வதேசத்திற்கு ஒரு குழு தேவையல்லவா? அதன் கடமையும், இருப்பும் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சர்வதேசத்தின் கரிசனை மேலோங்கி இருப்பதாகக் கருதுவதும், பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பதற்காகவே சர்வதேசம் பெரும்பாடுபடுகிறதெனக் கொள்வதும், சுய ஏமாற்றத்தையே வெளிப்படுத்தும். வன்னியைச் சூழ அரசாங்கம் மேற்கொள்ளும் படைக்கல குவிப்பு அப்பட்டமான போர்நிறுத்த மீறலாகும்.

அது குறித்து சர்வதேசம் கவலை கொள்ள வேண்டுமெனத் தமிழர்கள் கவலையடைவது பொருத்தப்பாடான விடயமல்ல. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயுமுள்ளனர்.

அரசின் இராணுவ மூலோபாயத்தோடு இணைந்து செல்லும் சர்வதேசம், அதை அடைவதற்கு அரசு பிரயோகிக்கும் வழிமுறைகளையிட்டு அதிக கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பது கடினமானதுதான்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் அழுத்தத்தை சமாளிக்க ஒஸ்லோவில் கூட்டம் நடத்தி சில ஓரங்க நாடகங்களை நடத்தலாம். ஆயுதக்குழுக்களை அடக்கி வைக்குமாறு எச்சரிக்கையும் விடலாம்.

இந்த நாடகங்கள் ஒருபுறம் 50 ஆவது தடையாக அரங்கேறும்போது ஜனாதிபதியும் தனது நிகழ்ச்சி நிரலை தடைகளின்றி சீராக நிறைவேற்றி வருகிறார். வன்னியைச் சூழ, தனது பொறிகளையும், அரண்களையும் விரைவாக நிர்மாணிக்க, பிராந்திய நாடுகளிடையே போட்டி நிலையை உருவாக்கி, ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியுள்ளது இராணுவம்.

அத்துடன் 57, 58 என புதிய விசேட படையணிகளை உருவாக்கி வவுனியா, மணலாறு களமுனைகளில் நிறுத்த, ஆட்சேர்ப்புப் படலத்தை ஆரம்பித்துள்ளது.

மன்னார் முன்னரங்க நிலைகளில் படைக்குவிப்போடு ஆழ ஊடுருவும் படையணிகளில் செயற்பாடுகளும், வரணி இடைத்தளத்தில் பாரிய கனரக ஆயுதங்களோடு கூடிய படைகளின் அணி சேர்ப்பும் வன்னி முற்றுகைக்குரிய முன் தயாரிப்புகளாகும்.

அண்மைக் காலங்களில் முகமாலை, வவுனியா முன்னரங்குகளில் விழுந்த பலத்த அடி புதிது புதிதாக படையணி உருவாக்கத்தின் தேவையை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

அதிக இழப்புகளைச் சந்திக்கும் மிகப் பலவீனமான இராணுவ முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்த நாட்டின் திறைசேரியிலிருந்து நிதி உறிஞ்சப்படுகிறது. நாட்டின் இயங்கு நிலை குலையாமல் இருப்பதற்கு ஜப்பான் போன்ற நாடுகள் ஊடாக ஒட்சிசன் வழங்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.

பொருளாதார தடைவிதித்து அழுத்தம் பிரயோகிக்கப்படுமெனக் கூறுவதெல்லாம் மனித உரிமைச் சங்கங்களையும் தமிழ் மக்களையும் தடவிக் கொடுக்கும் ஒரு இராஜதந்திர உத்தியே.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இடங்களை இந்திய, இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட்ட செய்தி, ஊடகங்கள் பலவற்றில் வெளிவந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லையென்கிற சந்தேகம் ஏற்கனவே மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது.

இரு தரப்பும் இணங்கினால் மறுபடியும் பேச்சுவார்த்தைகளின் அனுசரணையாளராகத் தொழிற்பட விரும்புவதாக எரிக் சொல்ஹெய்ம் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.

எதைப் பற்றிப் பேசலாமென அவரே தெரிவித்தால் மக்களிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தெளிவு பெறும். பேசுவதைப் பற்றி சிந்திக்க முன்பாக, தொப்பிகலையை ஆக்கிரமித்து, கிழக்கை விடுவித்த வெற்றிச் செய்தியுடன் தமது அரசியல் எதிரிகளை மௌனமாக்கி, விழாக் கோலம் பூண அரசாங்கம் விரும்புகிறது.

விழாவிற்கு மேடை அமைத்தால், விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேடைக்கு வர விரும்பமாட்டார்களென்பதால் வெற்றிச் செய்தியை அடக்கி வாசிக்கும்படி மேற்குலகம் பவ்வியமாக ஜனாதிபதியிடம் கூறலாம்.

ஆயினும் வன்னியை இன்னுமொரு பயாஃப்ரா (டீயைகசய) வாக மாற்றிட அரசும், சர்வதேசமும் மேற்கொள்ளும் காலநீட்சித் தந்திரம் எவ்வளவு தூரம் சாத்தியமாகுமென்பதை புலிகளின் அடுத்தகட்ட நகர்வே தீர்மானிக்கப் போகிறது. முதலில் யார் இந்த பயாஃப்ரா தேசிய இனமென்ற கேள்வி எழலாம்.

1967 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி தனிநாட்டுப் பிரகடனம் செய்து அதை தக்க வைக்க 1970 ஜனவரி 15 ஆம் திகதி வரை நைஜீரியா இராணுவத்துடன் மோதி, இறுதியில் தோல்வியுற்ற இனமே இந்த பயாஃப்ரா மக்கள்.

நைஜீரியா நாட்டுடன் இணைக்கப்பட்ட இத்தேசிய இனம், தன் மண் மீதான எதிரியின் ஆக்கிரமிப்பிற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது.

பெற்றோலிய எண்ணெய் வளம் நிறைந்த அப்பகுதியை முற்றுகைக்குள்ளாக்கிய நைஜீரிய இராணுவம், பொருளாதாரத் தடைவிதித்து உணவு விநியோகத்தை தடை செய்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர்.

சுற்றிவளைக்கப்பட்ட அத்தேசம், நைஜீரியா படைகளின் வான், கடல் வெளித் தாக்குதல்களுக்குள்ளாகியதால் நீண்டகாலச் சமரினை நடத்தக்கூடிய வளம் பயாஃப்ராவிற்கு இல்லாமல் போயிற்று.

விடுதலைப் புலிகள் போன்று சுயபொருண்மிய அபிவிருத்திக் கட்டமைப்பு அமைக்கப்படாததும் நீண்ட காலத்திற்கு பொருளாதார அழுத்தங்களைத் தாங்கும் வல்லமையை அவர்களுக்கு வழங்கத் தவறிவிட்டது.

ஒரு பிரதேசத்தை முற்றுகைக்குள் வைத்திருக்க, எவ்வகையான வழிமுறைகள் கையாளப் படுமென்கிற விடயத்தை பயாஃப்ரா போராட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஒப்பீட்டு அடிப்படையில் பயாஃப்ரா கள நிலைமைக்கும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்ட முறைமைக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.

உலகில் நடந்தேறிய விடுதலைப் போராட்டங்களிற்குள் உள்ளடக்கப்படாத, பல இராணுவ படைப் பிரிவுகள் விடுதலைப் புலிகளிடம் உண்டு.

வான் படை, கடற்படை, சிறப்பு கொமாண்டோ படை மற்றும் பீரங்கிப் படையோடு, விஷேடமாகக் குறிப்பிடத்தக்க கரும்புலிப் படை பிரிவொன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இருக்கிறது.

முற்றுகையை எக்கணத்திலும் உடைத்தெறியக் கூடிய இப்படைக் கட்டுமான வல்லாண்மை பயாஃப்ரா போராட்டத்தில் காணப்படவில்லை. வன்னித்தள அமைப்பினை நோக்கினால், கிழக்குப் பகுதி கடலாலும், ஏனைய சகல பகுதிகளும் தரையால் சூழப்பட்டுள்ளன. இங்கு மேற்குப் புறமாகவுள்ள கடலை அண்டிய மன்னார் நிலப்பிரதேசம் வடக்கு, தெற்கு முன்னரங்க நிலப்பரப்போடு ஒப்பிடுகையில் மிகச் சிறியளவிலான பகுதியாகும்.

முகமாலை, மன்னார், வவுனியா முன்னரங்க எல்லைப் பிரதேசத்தில் குவிக்கப்படும் ஆளணி, படைக்கள வளங்கள், அப்பிரதேச பின்தளங்களிற்கு நீண்டதூர எறிகணை வீச்சுக்களாலும் வான் புலிகளின் விமானத் தாக்குதல்களாலும் ஏற்படப்போகும் அச்சுறுத்தலால் சிதைக்கப்படும் சாத்தியப்பாடுகள் உண்டு. இதற்கு மறுதலையாக, வன்னியின் மையப் பின்தளப் பலத்தினை அழிப்பதற்கு, தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களை அரசு மேற்கொள்கிறது.

அதேவேளை, வன்னி முன்னரங்க நிலைகளிலிருந்து இடைவிடாத ஆட்டிலெறித் தாக்குதல்களையும் நடத்துகின்றனர். வரணி, நாகர்கோவிலில் படைகுவிப்பு அதிகரிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமிருந்தாலும் வவுனியா கள முனையிலேயே தமது பரீட்சார்த்த நகர்வுகளை இராணுவம் பிரயோகிக்கிறது.

பல களம் கண்ட இராணுவ கொமாண்டோக்களை குவித்து உருவான படைப் பிரிவுகள் வவுனியா முன்னரங்கில் பலத்த இழப்புகளைச் சந்திப்பதால், பிறிதொரு நகர்வினை மணலாற்றில் முன்னெடுக்க இராணுவம் திட்டமிடலாம்.

தரை வழி, வான் வழியாக அழுத்தங்களை வன்னி மீது பிரயோகித்த வண்ணம் காலத்தை நீடிக்கும்போது தமது படைப் பலத்தை நவீனமாக்கும் தயாரிப்புக்களையும் அவசரமாக அரசு மேற்கொள்கிறது.

சீனாவின் வரவினைத் தடுக்க, ஆயுதங்களை அள்ளி வழங்குகிறது இந்தியா. இந்திய ராடர்களுக்கு 'கண் பார்வை" குறைந்துள்ளதால், அதிநவீன முப்பரிமாண ராடர்களை வழங்க முன்வந்துள்ளது சீனா.

வெல்லப்பட முடியாத இந்த யுத்தத்திற்கு கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் கடனடிப்படையிலேயே பெறப்படுகிறது. அதைத் திருப்பிக்கொடுக்க 100 வருடங்கள் கூடப்போதாது இலங்கை அரசிற்கு.

வன்னி அரச படைகள் முற்றுகையிடும்போது, சர்வதேசத்தின் முற்றுகைக்குள் இலங்கை அகப்படுவதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவில்லையென்பதே மிகவும் சோகமானது. வன்னி முற்றுகையை புலிகளால் உடைத்தெறிய முடிந்தாலும், சர்வதேசத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற, இலங்கையால் இயலாதென்பதே சாசுவதமான உண்மையாகும்.

Please Click here to login / register to post your comments.