ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அதிகார வர்க்க ஊடகங்களின் சதி!

ஆக்கம்: கலைஞன்
 • ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்...

  கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கைக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்க வேண்டுமென இந்திய அதிகார வர்க்க ஊடகங்கள் மத்திய அரசை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

  இலங்கை தனக்கு தேவையான உதவிகளை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ பெறக்கூடாதென கண்டித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியாவே இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமென அறிவித்தார். இதையடுத்து இலங்கையிலும் இந்தியாவிலும் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்து பின்னர் தணிந்துவிட்டநிலையில் இலங்கை அமைச்சர் திடீர் விஜயம் செய்து நாராயணனை சந்தித்துள்ளார்.

  ஆனாலும், இலங்கை அமைச்சரின் விஜயத்தையும் அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுடன் நடத்திய பேச்சுகளையும் திட்டமிட்டு மூடி மறைத்த அதிகார வர்க்க ஊடகங்களும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இலங்கைக்கு உதவி வழங்க வேண்டுமென்ற திட்டமிட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

  இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை முதலமைச்சர் கருணாநிதி முன்னர் வெளிப்படையாக எதிர்த்ததுடன் இலங்கைக்கு எவ்வித ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடாதெனவும் வலியுறுத்தி வந்தார். அத்துடன், தமிழக அரசியல்வாதிகளும் இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்தனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்தனர்.

  ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளுக்கான பாதுகாவலர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முகமூடி போட்டுக் கொண்டாலும் தமது அரசியல் இருப்புக்கு ஆபத்துகள் வரும் போதெல்லாம் ஈழத்தமிழர் விடயத்தில் வாய்மூடி மௌனிகளாகி விடுவது வழமை. அதனையே இன்று தமிழினக் காவலனென தன்னைக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதியும், வைகோ, ராமதாஸ் போன்றோரும் செய்து வருகின்றனர்.

  தமிழ்நாட்டுத் தலைவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி விட்டுள்ள மத்திய அரசின் உளவுத்துறை இதனைப் பயன்படுத்தி `பாதுகாப்பு பொருளாதார' கொள்கையை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்குகிறது. இந்தியாவின் தேசிய நலன்களுக்கும் தமிழ்நாட்டு அரசியல் நிலைமைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளால் பாதிப்புக்குள்ளான இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையை மாற்றுவதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் துணிந்து களமிறங்கிவிட்டார்.

  ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை. சதி நடவடிக்கைகளை வழிநடத்துவதில் முன்னர் ஜே.என்.டிக்ஸிட் சிறப்புடன் செயற்பட்டார். அவரின் மரணத்தின் பின்னர் அந்நடவடிக்கையை உளவுத்துறையின் முன்னாள் இயக்குநரான மயன் கோத்தே கீயாத் நாராயணன் என்கின்ற எம்.கே.நாராயணன் தொடர்ந்து வருகிறார்.

  பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலர் `விடுதலை' இராசேந்திரன் எழுதியுள்ள `ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி' என்ற நூலில் எண்பதுகளின் தொடக்கம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் எவ்வாறு ஈழப்பிரச்சினையில் பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கெதிரான சதிகளையும் அதற்கு இந்தியாவை ஆட்சி புரிந்த கட்சிகள் துணைபோன அவலத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

  விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்குமெதிராகவும் தன்னுடைய ஆளுகையை நிலைநிறுத்தும் ஒரே நோக்கோடும் இந்திய உளவுத்துறை தொடர்ந்து திட்டமிட்ட சதிவலைகளை பின்னியதை வெளிப்படுத்தியுள்ள விடுதலை இராசேந்திரன், இதற்கு முக்கிய தூண்களாக செயற்பட்டோர் ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். இதில் நாராயணன் தொடர்பாக அவர் எழுதியுள்ளவற்றில் சில பகுதிகளைப் பார்ப்போம்.

  "தமிழர் பிரதேசத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து மிகப் பெரும் யுத்தத்திற்கு இலங்கையரசு தயாராகிவரும் நிலையில், இந்திய உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது திரைமறைவுப் பணிகளை வேகமாக முடுக்கிவிட்டுள்ளன.

  பல்லாயிரக்கணக்கான அகதிகள் இலங்கை இராணுவத்தின் கொடூர தாக்குதலிலிருந்து தப்பி குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்த அகதிகளுக்கு மனிதாபிமானத்தோடு உதவுவதற்கு இந்திய கடற்படையும் உளவு நிறுவனங்களும் தயாராக இல்லை. இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு பிணமாகிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் முனைப்பான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகவில்லை.

  மாறாக இலங்கை அரசு நடத்திவரும் போரில் அந்த அரசின் இராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் மறைமுக முயற்சிகளில் இந்திய உளவு அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

  இரும்புக் குண்டுகள் தயாரிப்போர் தமிழகம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்கவே இவைகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். படுகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டிய அவசியமின்றியே ஓராண்டுவரை சிறைவைக்க ஆட்சியாளர்களுக்கு உதவக்கூடிய `ஆள் தூக்கிச்சட்டம்' தான் தேச பாதுகாப்புச் சட்டம்.

  தமிழ்நாடு மீண்டும் விடுதலைப் புலிகளின் தளமாகிவிட்டதைப் போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தமிழர்களை அச்சுறுத்தி அவர்களை ஈழத் தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்து விடாமல் வாயடைக்கச் செய்யவே இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.

  இந்தச் செயற்பாடுகளை முடுக்கிவிடும் மூளைக்கு சொந்தக்காரராக ஒருவர் செயற்படுவதாக தமிழக பொலிஸ் துறையின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் தான் எம்.கே. நாராயணன்.

  பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை இயக்குநரான மயன்கோத்தே கீயாத் நாராயணன் (எம்.கே.நாராயணன்) 2005 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி வரை இப்பதவியிலிருந்த ஜே.என் டிக்ஸிட் காலமானதையடுத்து அடுத்த மூன்று வாரங்களில் அதாவது ஜனவரி 25 இல் மயன்கோத்தே கீயாத் நாராயணன் (எம்.கே. நாராயணன்) இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

  ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழரின் போராட்டத்தை சீர்குலைக்க கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வரும் புதுடில்லியின் பார்ப்பன அதிகார மையத்தோடு நெருக்கமாக செயற்பட்டு வந்தவர்தான் நாராயணன். அந்த அனுபவங்கள்தான் இப்போது பிரதமருக்கு ஆலோசகராக செயற்படும் பதவியை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

  கொழும்பு ஊடகங்கள் நாராயணனை எப்போதுமே தங்கள் நேச சக்தியாகவே கருதி வருகின்றன. இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாராயணன் வந்தவுடன் சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கின. இந்திய பார்ப்பன ஊடகங்களும் இலங்கை பிரச்சினையில் இவர் மிகவும் கைதேர்ந்தவர், சாதுர்யமானவர் என்று இவரைப் புகழ்கின்றன. ஆனால், அப்படி என்ன சாதனையை இவர் செய்து காட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் வராது. உண்மையான போராளிகளுக்கு எதிராக இருந்தாலே போதும் இத்தகைய புகழ் மகுடங்கள் சூட்டப்பட்டு அவர்கள் உயர் அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்பட்டு விடுகிறார்கள். இதுதான் இந்திய தேசிய பார்ப்பன அதிகார அமைப்பின் இயங்குமுறை.

  கடந்த பெப்ரவரி மாதம் ஆங்கில, சிங்கள கொழும்பு நாளேடுகள் எம்.கே. நாராயணனை புகழ்ந்து தள்ளி, அவரது உரை ஒன்றையும் பெரிய அளவில் வெளியிட்டன.2007 பெப்ரவரி 11 ஆம் திகதி 43 ஆவது மூனிச் சர்வதேச மாநாட்டில் பாதுகாப்புக் கொள்கை பற்றி உரையாற்றிய அவர் தீவிரவாத இயக்கங்கள் எப்படி நிதி திரட்டுகின்றன என்று விவாதித்தார்.அப்போது விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவது பற்றிக் குறிப்பிடும் போது புலிகள் போதை மருந்து விற்பனை மூலமே நிதி திரட்டுவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

  ஆதாரம் ஏதுமற்ற ஒரு புகார். அப்படி ஏதாவது ஒரு இடத்தில் புலிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? என்று எதுவித தரவுகளுமின்றி சர்வதேச மாநாடொன்றில் நாராயணன் பொறுப்பின்றி சுமத்திய அவதூறு இது. இதைத்தான் சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சியோடு வெளியிட்டன.

  ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் பல நாட்கள் தங்கி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க காத்துக் கிடந்தனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாது தவிர்த்தவர் நாராயணன்தான். இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் படுகொலைகளை நேரில் எடுத்துச் சொல்வதே அந்த மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம். ஆனால், கியூபாவில் ஹவானா நகரில் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது அங்கே பிரதமருடன் இலங்கையில் அமைச்சராகவிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கியூபா வரச்சொல்லி சந்திக்க ஏற்பாடு செய்தவர் இந்த நாராயணன்தான்.

  1985 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த படுகொலையில் நேரடித் தொடர்பு கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா. பாராளுமன்றப் பிரதிநிதிகளை மன்மோகன் சிங்குடன் சந்திக்கும் ஏற்பாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த நாராயணன், தமிழ்நாட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லியில் சந்தித்துப் பேச வைத்ததோடு ஹவனாவில் பிரதமரை சந்தித்துப் பேசவும் ஏற்பாடு செய்தார் என்பதிலிருந்தே நாராயணன் சிங்கள ஊடகங்களால் ஏன் புகழப்படுகிறார் என்பது புரிந்திருக்கும்.

  1987 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும் ஒரு ஒப்பந்தத்தை செய்தனர். அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டுமென இந்தியா கட்டாயப்படுத்தியது. இந்த சதிவலையைப் பின்னிய அதிகார வட்டத்தில் எம்.கே. நாராயணனுக்கும் முக்கிய பங்குண்டு.

  புலிகளின் தலைவர் பிரபாகரன் அவசர அவசரமாக டில்லிக்கு 1987 ஜூலை 23 ஆம் திகதி அழைக்கப்பட்டார். அப்போது இலங்கையில் இந்திய தூதுவராக இருந்த ஜே.என். டிக்ஸிட் ஒப்பந்தத்தின் நகலை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணிநேரத்துக்குள் ஒப்பந்தத்தை முழுமையாக படித்து சம்மதம் தெரிவிக்க வேண்டுமெனவும் இல்லையேல் விடுதலைப் புலிகளை ஊதித்தள்ளிவிடுவோம் என்று வாயில் `சுருட்டை' பற்ற வைத்துக் கொண்டே மிரட்டினார்.

  அந்த சூழலில் ஜூலை 23 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை பிரபாகரனுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தவர் அப்போது புலனாய்வுத்துறையின் இயக்குநராகவிருந்த இதே நாராயணன் தான்.

  தமிழீழ பிரச்சினை பற்றியோ போராடும் இயக்கங்கள் பற்றியோ சரியான புரிதலோ மதிப்பீடுகளோ இல்லாது அவசர கோலத்தில் அதிகார வெறியில் அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் நாராயணனும் ஒருவர். இத்தகைய அதிகாரிகள் தான் இலங்கைப் பிரச்சினையை கையாளுவதில் சமர்த்தர்களாக பார்ப்பன சிங்கள ஊடகங்களால் சித்திரிக்கப்படுகின்றனர் ஜே.என் டிக்ஸிட், எம்.கே. நாராயணன் என்ற இரட்டையர்கள் தான் ஈழத்துக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதில் மூளையாகவிருந்து செயற்பட்டவர்கள்.

  தமிழ் மக்களைக் கொன்று குவித்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி இலங்கை இராணுவத்தின் வெறியாட்டங்களை மிஞ்சுமளவுக்கு இராணுவ வேட்டை நடத்திய இந்திய அமைதிப்படை, கடைசியில் இங்கிருந்து அவமானப்பட்டு வெளியேறியது. உலக அரங்கில் இந்தியாவின் முகத்தில் கரிபூச செய்த இந்த முடிவை எடுத்தவர்களில் ஒருவரான எம்.கே. நாராயணன் தான் இப்போதும் ஈழப் பிரச்சினைக்கு பிரதமரின் ஆலோசகராக செயற்படுகிறார். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் இலங்கை அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து இந்தியா ஒதுங்கிக் கொண்டாலும் இந்தியாவின் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்து திரைமறைவு செயல்களில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

  ஈழத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் 2003 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஜே.என். டிக்ஸிட் ஒரு கட்டுரை எழுதினார். அதில் இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை இந்தியா ஆதரித்துக் கொண்டே இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தீவிரமான உதவிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசு பலமான நிலையிலிருந்து விடுதலைப் புலிகளோடு பேச முடியும் என்று எழுதினார்.

  2004 ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில் `இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும் டிக்ஸிட் இதையே வலியுறுத்தினார்.

  எனவே, ஈழப்பிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் தலையீடு என்பது இலங்கைக்கு ஆதரவாகவே இருந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவின் பிரதமர்கள், அமைச்சர்கள் எவரும் இப்பிரச்சினை பற்றி வாய்மூடி மௌனம் சாதித்த நேரம் அது. ஆனால், வெளியுறவுத்துறை அதிகாரிகளாகவிருந்த பார்ப்பனர்கள் இப்படி வெளிப்படையான கருத்துத் தெரிவிக்கும் அதிகாரம் படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள். இதேவரிசையில் இடம்பெற்ற மற்றொரு உளவுத்துறை இயக்குநர்தான் எம்.கே. நாராயணன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  நாராயணனின் செயற்பாடுகளால் ஈழத்தமிழர் மட்டுமன்றி இலங்கையரசும் சினமடைந்துள்ளது. சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதக் கொள்வனவு செய்ய இலங்கையரசு மேற்கொண்ட நடவடிக்கையும் இவ்விரு நாடுகளிடமிருந்தும் இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாதென்ற நாராயணனின் எச்சரிக்கையும் இந்திய- இலங்கை உறவை கீழ்நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. பாகிஸ்தானுடன் இலங்கையின் நெருக்கம் அதிகரித்ததையடுத்தே இந்தியாவின் சார்பில் நாராயணனின் கடும்தொனியிலான இந்த அறிவிப்பு வெளியானது.

  விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கையரசுக்கு உதவ வேண்டுமாயின் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டுமென இந்தியா விரும்புகிறது. ஆனால், இலங்கை பேரினவாத சக்திகள் இந்தியாவின் விருப்புக்கு மாறாகவே செயற்படுகின்றன. இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாதென்ற இந்தியாவின் கொள்கை இராஜதந்திர, பொருளாதார விடயங்களில் எதிரொலிப்பதாலேயே தற்போது இலங்கையரசுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

  ஆனாலும், இந்தியாவின் `பெரியண்ணன்' வேலையை சகித்துக் கொள்ள இலங்கையரசும் பேரினவாதிகளும் தயாராகவில்லை. `உதவு முடியுமாயின் உதவு. இல்லாவிடில் நாம் வேறு இடம் பார்க்கிறோம்' என்று மிரட்டுமளவுக்கு அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஏனெனில், இந்தியாவை ஓரங்கட்டிவிட்டு தமது ஆதிக்கத்தை இலங்கையில் நிலை நாட்ட சீனாவும் பாகிஸ்தானும் போட்டி போடுவேதே இந்தியாவை மிரட்டுமளவுக்கு இலங்கைக்கு தைரியத்தைக் கொடுத்தது.

  புலிகளுக்கெதிரான இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனின் செயற்பாடுகள் இலங்கையரசுக்கும் பேரினவாதக் கட்சிகளுக்கும் ஒருபக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மறுபக்கம் நாராயணனின் அதிக பிரசங்கித்தன செயற்பாடுகள் சினத்தை ஏற்படுத்தியுள்ளன.

  சிறந்த இராஜதந்திரியாகவின்றி உளவுத்துறை தொடர்புடையவராக நாராயணன் தொடர்ந்தும் செயற்படுவதே இந்திய- இலங்கை உறவை கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

  வெள்ளைக்காரர்களிடமிருந்து அஹிம்சாவளியில் சுதந்திரம் பெற்ற இந்தியத் திருநாடு, இலங்கையில் சுதந்திரத்திற்காக இரு தசாப்த காலத்துக்கும் மேலாக போராடிவரும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழித்தொழிப்பதற்காக பேரினவாத இலங்கையரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இது எந்த வகையில் நியாயமென்பது இந்திய அரசுக்கே புரியாததொன்று.

  ஆனால், தமது தேசிய நலனுக்காக எந்த நாசகார வேலையையும் செய்ய வேண்டுமென்பது இந்திய அரசு நன்றாக புரிந்து வைத்துள்ள ஒன்று.

  எனவே, தமது தேசிய நலன்கள், சுய இலாபங்களுக்காக அடிமைப்பட்ட ஒரு இனத்தின் சுதந்திரப் போராட்டத்தை அழிக்க முற்படுவது அடிமைப்பட்டவர்களாகவிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியர்களுக்கு அழகல்ல.

  Please Click here to login / register to post your comments.