சர்வதேசத்தின் அரசியல் முற்றுகைக்குள் மகிந்த அரசு சிக்குகின்றதா!

ஆக்கம்: எல்லாளன்

ஒன்றரை வருட மகிந்தரின் ஆட்சியில் சிங்கள அரசு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்டுள்ளது. சர்வதேசத்தில் இருந்துவரும் அரசியல் நெருக்கடி களாலும் - உள் முரண்பாட்டால் எழுந்த அரசியல் சிக்கல்களாலும் மகிந்த அரசு தடுமாறுகின்றது. தமிழருக்கு எதிரான இனக்குரோதச் செயற்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி வெளிநாடுகள் மீது வெறுப்புணர்வு காட்டல் என்ற கட்டத்திற்கு மகிந்த அரசுசென்றுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் கொழும்பு அரசாங்கம் மீது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் எல்லை கடந்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகிற்குக் கூறிக்கொண்டு தமிழரை இன அழிப்புச் செய்யும் சிங்கள அரசின் செயற்பாடுகளைச் சர்வதேச சமூகம் கேள்விக்குட்படுத்த ஆரம்பித்துள்ளது.

தமிழரின் இனச்சிக்கல்களுக்கு இராணுவ வழியில் தீர்வு தேடமுடியாது என்று உலக நாடுகள் சிங்கள அரசிற்கு இடித்துக்கூற முற்பட்டுள்ளன. தமிழினத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்து! போரை நிறுத்து!

சமாதானத்திற்கான கதவுகளை உடனடியாகத் திற! என்று உலக நாடுகள் மகிந்த அரசை நோக்கி உரத்துக்கூறுகின்றன. ஆயினும், இவற்றுக்குச் செவிமடுக்க மகிந்த அரசு தயாராக இல்லை.

மகிந்த ராஜபக்சவும் - அவரது அமைச்சர்களும் “போர் அன்றி வேறெந்தவேலையும் இல்லை” என்று முழங்கிவருகின்றனர். தங்களது முடிவில் கைவைக்கும் எந்த நாட்டையும் கடுமையாக விமர்சித்துக் கருத்துக்கூறவும் அவர்கள் தயங்கவில்லை.

கொழும்பு அரசியலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சிங்கள அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையே ஒருவித “பனிப்போர்” நிலவுவதைக் காணமுடியும்.

சிங்கள அரசிற்கு எதிராக உதவிநிதிக் குறைப்பு - ஆயுத விற்பனைக்கு மறுப்பு - எச்சரிக்கை விடுப்பு - அழுத்தங்கள் கொடுப்பு என்று உலக நாடுகள் சில அரசியல் - இராணுவ - பொருளாதார ரீதியில் மகிந்த அரசிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இதன் வளர்ச்சிக்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபை என்ற உலக அரசியல் மன்றத்தின் சக்திமிகுந்த பிரிவாகிய பாதுகாப்புச் சபைக்குச் சிங்கள அரசின் மனித உரிமை மீறல் விவகாரத்தை எடுத்துச் செல்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை 24 மணிநேரத்திற்குள் வெளியேற்ற உத்தரவிட்டதுடன், அந்த வெளியேற்ற உத்தரவைக் கண்டித்து விமர்சித்த உலகநாடுகளைப் பகிரங்கமாகவே தாக்கி அறிக்கைவிட்ட கோத்தபாய ராஜபக்சவை உலகநாடுகள் சில தனியாகவும் குறிவைத்துள்ளன என்றும் செய்திகள் கசிந்துள்ளன. கோத்தபாய ராஜபக்சவிற்கும் - இவரைப் போன்று பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிங்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் வெளிநாடு செல்வதற்கான விசாக்களை வழங்காமல் தடுப்பதற்கு உலக நாடுகள் உத்தேசித்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மகிந்த அரசு மீது சர்வதேச நாடுகள் காட்டும் சீற்றத்தைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே கட்ச்p மகிந்த ஆட்சியில் சிங்கள அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதென்றும், இலங்கை அரசை உலக நாடுகள் தனிமைப்படுத்த முயல்கின்றன - இது சிங்கள தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கப்போகின்றன என்றும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது. மகிந்த பதவி விலகி வீடு போகவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரதத் தொடங்கியுள்ளன.

மகிந்த அரசின் அமைச்சராக இருந்து பதவி விலக்கப்பட்ட மங்கள சமரவீர மற்றும் சிறிபதி சூரியாராச்சி போன்றோர் புதியதாகக் கட்சி தொடங்கி மகிந்த ராஜபக்சவிற்குத் தலைவலியை உண்டு பண்ணியுள்ளனர். இவர்களுடன் சந்திரிக்கா அம்மையாரும் இணைந்து மகிந்தவின் ஆட்சிக்கு சமாதிகட்ட முயலப்போகின்றார்கள் என்றும் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

இவ்விதம் மகிந்த அரசானது தனது ஒன்றரைவருட ஆட்சிக்காலத்திலேயே சர்வதேச ரீதியாகவும் - உள்நாட்டிலும் அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இராணுவ ரீதியாகவும் வடபுலப் போர்முனையில் சிங்களப் படைகள் சந்தித்துள்ள தேக்கநிலை மகிந்த அரசைக் கவலையடையச் செய்துள்ளது.

முப்படைப் பலத்தையும் புலிகள் இ;யக்கம் மரபுப் போர்முறையில் தாக்கமாக வெளிப்படுத்தியுள்ளதும் மகிந்தரின் இராணுவத் தீர்வுக் கனவையும் கேள்விக்குரியதாக்கிவிட்டுள்ளது. புலிகளின் வான்படை, கடற்படை, தரைப்படையின் வளர்ச்சியையும், புலிகளின் சிறப்புப் படையணிகளின் எழுச்சியையும் சிங்கள அரசு கண்ணாரக்கண்டு வருகின்றது.

வன்னி நிலத்தில் நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் எண்ணம் தமது அரசிற்கு இல்லை என்று கோத்தபாய ராஜபக்ச கூறுவதை, மேற்கூறியபடி சிங்களத்தின் இராணுவ முடக்கல் நிலையுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கமுடியும். இருந்தாலும் சிங்களப்படைத் தளபதிகள் வன்னி நிலம் மீது போர் தொடுக்கும் எண்ணத்துடனேயே உள்ளனர் என்பது உண்மையாகும்.

சிங்கள அரசு தற்போது சந்தித்துள்ள அரசியல் - இராணுவ நெருக்கடி நிலைகளை அது முன்னரும் பல தடவைகள் சந்தித்துள்ளது. அந்த நெருக்கடிகளை சர்வதேச நாடுகளின் பொருண்மிய மற்றும் அரசியல் ஆதரவுத்துணையுடன் சமாளித்துள்ளது என்பதும் உண்மையாகும்.

சிங்கள அரசு மீது தற்போது சர்வதேச நாடுகள் காட்டும் பகைமைப்போக்கு நீடித்து நிலைக்கும் என்று எவரும் எதிர்வு கூறமுடியாது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு அரசியல் காய்நகர்த்தல் மூலம் தற்போதைய நெருக்கடிகளை மகிந்த ராஜபக்ச இல்லாதொழிக்கவும் கூடும். கோடைகால மழைமேகம் போல சிங்களம் மீதான சர்வதேச பகைமை, திடீரெனக் கலைந்து அதனுடன் நட்புறவு பாராட்டினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

புலிகள் இயக்கத்தின் நிதானப்போக்கையும் - மகிந்த அரசின் கடும்போக்கையும் உலகம் சரிவர இனங்கண்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை யளிக்கும் விடயமாகவே உள்ளது. தமிழரின் அரசியல் பிரதிநிதிகள் புலிகள் இயக்கம் தான் என்பதை உலகநாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன என்று ஐ.தே கட்சித் தலைவர்களுள் ஒருவரான ரவி கருணாநாயக்க கூறியிருப்பது ஒரு அரசியல் யதார்த்தத்தைத் தெளிவு படுத்தியுள்ளது. உலக நாடுகளிடையே ஏற்பட்டுவரும் அந்த அரசியல் மாற்றம் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

தாயகத் தமிழர்களும் - புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் பலஇலட்சம் தமிழர்களும் புலிகளின் பின்னால் அணிதிரண்டு நிற்பதை உலகம் அவதானித்தபடியே உள்ளது ஒரே தலைமையின் கீழ் - ஒற்றுமை உணர்வுடன் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் விடுதலைக்காகப் போராடுவதைச் சிங்கள - முஸ்லீம் அரசியல் தலைவர்களே சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தேசிய ஒற்றுமைதான் எமது விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகும். இந்த தேசிய ஒற்றுமையின் செயல்பூர்வ வெளிப்பாடான இராணுவ பலமே எமது விடுதலைப் போரை வெற்றிபெறச் செய்யும்.

தமிழரின் படைபலம் இன்று மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் உயர்தரத்தில் உள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியுள்ள எமது தாயகப் பகுதி நிலங்களில் வாழும் மக்கள் பல்வேறு அவலங்களைச் சந்திக்கின்றனர். இராணுவ வலயங்கள் - பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயர்களில் விரட்டப்பட்ட எமது மக்கள் இப்போது பொருண்மிய வலயங்கள் என்ற பெயரிலும் வெளியேற்றப்பட்டு நில அபகரிப்பு நடைபெறுகின்றது. கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்குக் கடும் சீற்றத்தை வெளியிட்ட உலகநாடுகள் தாயக நிலப்பரப்பில் தமது வீடுகளைவிட்டு இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவதை கண்டிக்காது வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு புதிராகவே உள்ளது.

மனித உரிமை விவகாரங்களிலும் அரசியல் - மற்றும் நலன்களைக் கலந்து சிந்திப்பது அருவருப்பாகவே உள்ளது. ஆனால் இதுதான் இன்றைய உலக அரசியலின் யதார்த்தம் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.

மகிந்த அரசின் இனவெறிச் செயற்பாடுகளையும் - போர் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முனையும் அதன் இராணுவ அணுகுமுறையையும் உலகம் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Please Click here to login / register to post your comments.