நாட்டை வழிநடத்தக் கூடிய திராணியுடன் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இல்லை

ஆக்கம்: டிட்டோ குகன்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் நோக்கும்போது நாட்டை இனிமேலும் வழிநடத்தக்கூடிய திராணி அதற்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நாடு எதிர்நோக்கியிருக்கின்ற சவால்களுக்கும் மக்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்கும் தீர்வுகளைக் காண அரசாங்கத்தினால் முடியாமல் போய்விட்டது என்று முன்னாள் அமைச்சரும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

தினக்குரலுக்கு பேட்டியொன்றை அளித்த குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான திசாநாயக்க, `ஜே.வி.பி. தலைமையில் புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியுமென்றால் நாளைக்கே அதைச் செய்வோம்' என்று குறிப்பிட்டார்.

அவரது பேட்டியை கேள்வி பதில் வடிவில் தருகிறோம்.

கேள்வி: ஜே.வி.பி. அதன் தலைமையின் கீழ் புதிய தேசிய முன்னணியொன்றை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. அப்படியெனில் உடனடி ஆட்சி மாற்றமொன்றை கொண்டு வர ஜே.வி.பி. எதிர்பார்க்கிறதா?

பதில்: ஆம், நாளைக்கே அரசொன்றை ஸ்தாபிக்க முடியுமெனில் அதைச் செய்வோம். ஏனெனில், தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நோக்கும்போது அதற்கு இந்த நாட்டை இனிமேலும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய திறனில்லை என்பது புலனாகிறது. நாடு முகம் கொடுத்துள்ள சவால்களுக்கும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும் இந்த அரசாங்கத்துக்கு தீர்வு தேட முடியாமல் போயுள்ளது. இதற்கான முழுத் தவறையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசின் மீது சுமத்திவிட முடியாது. குறிப்பாக முன்னர் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது ஆட்சி செய்யும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அணியினரும் ஒரே மாதிரியான ஆட்சி முறைமையையே பின்பற்றுகின்றனர். எனவே வேறுபட்ட சமூக பொருளாதார கொள்கையுடைய புதிய ஆட்சியொன்று இந்த நாட்டுக்கு உடனடித் தேவையாக உள்ளது. எனினும், புதிய அரசாங்கமானது தற்போதுள்ள அரசாங்கத்துக்கு மாற்றீடாக இருக்காமல் நாட்டையும் மக்களையும் சரியான மாற்று வழியில் இட்டுச் செல்லும் புதிய அரசாங்கமே தேவை.

கேள்வி: சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே ஜே.வி.பி.க்கு பாராளுமன்றத்தில் கணிசமான (39) ஆசனங்கள் கிடைத்தன. இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி இல்லாமல் ஜே.வி.பி. தனித்து போட்டியிட்டு ஆட்சியமைக்கக் கூடிய அளவிற்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்ற முடியுமென நம்புகிறீர்களா?

பதில்: ஜே.வி.பி. என்பது எப்போதுமே இந்த நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்குமொரு அரசியல் இயக்கம். மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்க முடியாத அளவுக்கு நாம் எந்த தவறையும் செய்ததில்லை. களவாடியதோ நாட்டை சீரழித்ததோ கிடையாது. நாம் எமக்கு சம்பாதித்துக் கொள்ளும் தொழிலாளர் அரசியலைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அத்துடன், கடந்த காலங்களில் நாம் வகித்த அமைச்சுப் பதவிகளை சிறந்த முறையில் நிருவகித்ததன் மூலம் இந்த நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ய முடியுமென்பதை நாம் நிரூபித்து காட்டியுள்ளோம். எனவே, எம்மை ஆட்சிக்கு கொண்டு வர மக்களுக்கு எந்த தயக்கமும் இருக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலும் வரும்போது ஜே.வி.பி. மக்களுடன் எவ்வளவு நெருங்கியிருக்கிறது என்பதை சகலராலும் கண்டுகொள்ள முடியும். அதன்படி எதிர்வரும் எந்தவொரு தேர்தலும் எமக்கு சாதகமான தேர்தல் முடிவுகள் கிடைக்குமென நம்புகிறோம்.

கேள்வி: முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஷ்ரீபதி சூரியாராச்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவார்களாயின் அது பாரிய அரசியல் தவறொன்றுக்கு வழி வகுக்குமென உங்கள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜே.வி.பி. ஆரம்பிக்கவிருக்கும் புதிய தேசிய முன்னணிக்கு ஐ.தே.க.விலிருந்து எவராவது இணைய விரும்பினால் அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: மங்கள சமரவீரவும் ஷ்ரீபதி சூரியாராச்சியும் ஐ.தே.க.வுடன் இணைந்து ஏற்படுத்தும் கூட்டணியின் மூலம்தான் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென நினைத்தார்களென்றால் அது தவறு. ஐ.தே.க. கடைப்பிடித்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் தவறு என்பதனாலேயே 2001 இல் அக்கட்சியின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தை 2 வருடங்களிலேயே வீட்டுக்கு அனுப்ப வேண்டி ஏற்பட்டது. பொருளாதார மற்றும் அரசியல் தொடர்பான கொள்கை பிரச்சினைகளிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை கட்டியெழுப்பும் பிரச்சினைகளிலும் அவர்கள் தோல்விகளையே கண்டுள்ளனர். எனவே, ஐ.தே.க.வுடன் செல்லும் பயணமானது நாட்டை பின்னோக்கி செலுத்துவதாகவே இருக்கும். எனினும், சமூக பொருளாதாரத் துறையில் பாரிய கொள்கை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியுமெனில் அவ்வாறான மாற்றத்தின் மூலம் மட்டுமே இன்று நாடு முகம் கொடுத்துள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியும். அவ்வாறான மாற்றத்துக்கு எவரும் இணங்கி வந்தாலும் நாம் ஏற்றுக் கொள்ளத் தயார். மங்கள சமரவீரவுக்கும் சரி ஷ்ரீபதி சூரியாராச்சிக்கும் சரி அதற்கான பாதை திறந்தே உள்ளது. அத்துடன், சுதந்திரக்கட்சியிலுள்ளவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். அவ்வாறான நபர்கள் ஐ.தே.க. விலும் இருக்கின்றார்கள் என நாம் நம்புகிறோம். ஐ.தே.க.வுக்கு வாக்களிக்கும் சகலரும் கள்வர்கள் அல்ல. ஐ.தே.க.வுக்குள்ளும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். எனவே, இந்த புதிய தேசிய முன்னணியை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு நாம் அழைக்கிறோம். எனினும், இதன்போது கடந்த கால வரலாற்றையும் நாம் கட்டாயம் ஆராய்ந்து பார்ப்போம்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்ற ஒன்றுபடுமாறு ஜே.வி.பி.க்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருக்கும்போது ஜே.வி.பி. எதற்காக ஐ.தே.க.வை எப்போதுமே புறக்கணித்து செயற்படுகிறது?

பதில்; நாம் ஐ.தே.க. விற்கு மட்டுமல்ல, சுதந்திரக்கட்சிக்கும் எதிரானவர்கள் தான். அடுத்தது ஐ.தே.க.வுடன் இணைந்து இந்த நாட்டை எங்கு கொண்டு செல்வது? ஐ.தே.க. இந்த நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளது. இதற்கு முன்னர் அக்கட்சி 2 வருடங்கள் ஆட்சியிலிருந்தது. அதன் கொள்கைகளிலோ ஆட்சி முறையிலோ தலைமைத்துவத்திலோ எந்த மாற்றமுமில்லை. எனவே, ஐ.தே.க.வுடன் எந்தவொரு பயணமும் செல்ல முடியுமென நாம் நினைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுக்கிறார். பலதையும் பேசுகிறார். அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: வடக்கு, கிழக்கில் படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது நடத்துவதாகக் கூறப்படும் விமானத் தாக்குதல்களினால் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனரே?

பதில்: எமது நிலைப்பாட்டையும் கருத்தையும் தமிழ் மக்கள் எம்மிடம் தெரிந்து கொள்ள வேண்டும். எமது கருத்துகள் தமிழ் மக்களுக்கு எமது மார்க்கமாக சென்றடையவில்லை. ஐ.தே.க.வினர் எம்மை பற்றி கூறும் கதைகள் அல்லது அரச சார்பற்ற அமைப்பினர் மற்றும் அரசாங்கத்திலுள்ளவர்கள் எம்மைப் பற்றி கூறும் கருத்துகள் மூலமே எமது கருத்துகள் தமிழ் மக்களை சென்றடைந்துள்ளன. எனினும், தமிழ் மக்களிடத்தில் எமது நிலைப்பாட்டை வலியுறுத்த நாம் ஒருபுறம் தவறிவிட்டோம்.

இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என 3 இனங்கள் இருக்கின்றன. அவர்கள் இந்தியர்களா அல்லது வேறு யாருமா என்பது பற்றிய வரலாறு எமக்கு தேவையில்லை. இந்த பிரதான மூன்று இனங்களுக்கும் 2 பிரதான மொழிகள் இருக்கின்றன. இந்த மூன்று இனத்தவர்களும் இந்நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை இருக்கிறது. இது வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பிரதேசங்களுக்கும் பொருந்தும். எனினும், இதுவரை அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் மூவின மக்களிடையேயும் சமத்துவத்தைப் பேண தவறிவிட்டன. இந்த அரசாங்கங்கள் மூவின மக்களை மட்டுமல்ல குறைந்தது சிங்கள மக்களைக் கூட திருப்திப்படுத்த தவறிவிட்டன. இதன் காரணமாகவே அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கீழ் மட்டத்திலிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.

இந்த அரசாங்கங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேச மக்களுக்கோ, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கவில்லை. அதேபோல் அம்பாந்தோட்டை, கிராந்துருகோட்டை, அநுராதபுரம், பொலநறுவை போன்ற பிரதேசங்களில் வாழும் கீழ்மட்ட மக்களின் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இம் மக்களுக்கு பல வாழ்வாதார பிரச்சினைகள் இருக்கின்றன. அடிப்படை வசதிகளோ உட்கட்டமைப்பு வசதிகளோ வேலை வாய்ப்புகளோ இம்மக்களுக்கு இல்லை. இவ்வாறு பாரியளவு தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு சமமான அளவு பாதிக்கப்பட்ட சிங்கள மக்களும் இங்கு இருக்கின்றனர். இதற்கிடையே தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக சில வரலாற்று தவறுகளும் இடம்பெற்றுள்ளன.

இதுவரை வந்த அரசாங்கங்கள் அனைத்தும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒன்று சிங்கள இனவாதத்தை கிளப்பி விட்டனர் அல்லது தமிழ் இனவாதத்தை கிளப்பி விட்டனர். உதாரணமாக முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச கரும மொழியாக்குவதாக கூறினார். அது சிங்கள மொழியின் மேல் அவர் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல. அன்று அதிகாரத்தை கைப்பற்ற அவர் வைத்த உறுதிமொழிதான் அது. இதேபோல் தமிழ்த் தரப்பிலும் இனவாத தலைவர்களும் இருந்தனர். இவர்கள் கொழும்பிலிருப்பது சிங்கள அரசாங்கம். தமிழர்களுக்கு தனி அரசாங்கம் தேவையென்று தமிழ் மக்கள் மனதை திசை திருப்பினர். இதுவும் பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியை பெற்று அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே செய்யப்பட்டது. எனவே, இவர்கள் அரசுடன் மக்களை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக அவர்களை தூர விலக்கினர். இதில் சமூகப் பிரச்சினைகள் இருந்தன. வேலை வாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் என பல பிரச்சினைகள் மக்களுக்கு இருந்தன. இது வடக்கிலும் இருந்தது. தெற்கிலும் இருந்தது. இதேநேரம், தெற்கிற்கு எதிராக வடக்கில் தனி ஆட்சியொன்றை அமைக்க வடக்கு யோசனை செய்தது. இதன் விளைவாக தமிழ் இனவாத இயக்கம் உருவாகி அது ஆயுத இயக்கமாக உருவெடுத்து தமிழ் ஜனநாயகத் தலைவர்களை தொடர்ந்தும் ஜனநாயக வழியில் செயற்பட அனுமதி மறுத்தனர். அதாவது ஜனநாயக அமைப்புகளை ரத்து செய்தனர் அல்லது தலைவர்களை கொலை செய்தனர். இல்லாவிட்டால் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களும் ஒன்றில் விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகளாக இருக்கிறார்கள், இல்லாவிட்டால் புலிகளின் கொலைப்பட்டியலில் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பின்பற்றிய வெளியுறவு கொள்கையானது முற்றிலும் தவறானது. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுடன் எமக்கு மிக நெருங்கிய வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க இடமிருந்தது. எனினும், ஜயவர்தன ஜனாதிபதியானதும் அமெரிக்காவுடன் நெருக்கமான வெளியுறவுக் கொள்கையை நாடிச் சென்றனர். இதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலிருந்த உறவுகள் சீர்கெட்டன. இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியா உபயோகித்துக் கொண்டது.இலங்கை அரசுக்கு எதிரான உணர்வை ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் மூலமே இந்தியா வெளிப்படுத்தியது. அந்த இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கியது தொடக்கம் ஆயுத பயிற்சி வழங்கியது வரை அரசுக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்தியா செய்தது. இதுவரை அது வளர்ச்சி பெற்று வந்தது.

ஆனால், இன்று தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி ஏனைய சகல அணிகளையும் அழித்து விட்டு ஆதிக்கத்தை தம்வசப்படுத்தியுள்ளனர். அத்துடன், அங்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. அதுபோலவே நாட்டை பிளவுபடுத்துவதற்கும் புலிகள் போராடுகிறார்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாய்பப்பூமி என்ற கோட்பாட்டை முன்வைத்தே அவர்கள் நாட்டை பிளவுபடுத்தும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவறு. ஏனெனில், வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் தாயகமென ஏற்றுக் கொண்டால் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் தமிழ் மக்களின் நிலைமை என்ன?

தற்போது சிங்கள- தமிழ் மக்களிடையே யுத்தமெதுவுமில்லை. இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் இனச் சுத்திகரிப்பில் ஈடுபடும் அமைப்பினர். வடக்கு, கிழக்கில் சில கிராமங்களில் வசித்த சிங்கள மக்களை சிங்களவர்கள் என்பதற்காக வெளியேற்றினார்கள். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டினர். வேறு எந்த அடிப்படை காரணமும் இங்கு கிடையாது. எனவே, பிரித்து கொடுத்தால் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட அமைப்பினர் கைகளுக்கே அதிகாரம் செல்லும். அப்படியொரு சூழ்நிலை வரும்போது மேலும் அப்பகுதிகளில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களில் வாழ்க்கைப் பிரச்சினை ஏற்படும். இப்படியான நிலைமை வரும்போதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இந்த மோதல் உருவெடுக்கும். இது நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இப்பிரச்சினைக்கு அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும். ஆனால். ஐ.தே.க., சுதந்திரக்கட்சி போன்ற முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எம்மை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக பிளவுபடுத்துவதே தேவையாக இருக்கிறது.

இன்று களவு, இலஞ்சம், ஊழல், விமானக் கொள்வனவில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் என எதை கேட்டாலும் யுத்தத்தை சாட்டாகக் கூறி மூடி மறைக்கின்றனர். தங்களது இயலாத் தன்மையை மூடி மறைக்கும் திரையாக முதலாளித்துவ நிர்வாகிகள் இந்த யுத்தத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பிடித்தமான சொல்லாக யுத்தம் மாறியுள்ளது. எனவே, இவர்களுக்கு நாம் ஒன்றுபடுவதை குழப்பும் தேவை இருக்கிறது.

பயங்கரவாதப் பிரச்சினையான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமைக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கும் இடைஞ்சலாக இருந்து வருகிறது. எனவே, இந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். இதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் ஒருபோதும் தமிழ் மக்களை பாதிப்பதாக அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழ் மக்கள் சமூகத்துக்கு ஏற்படும் இவ்வாறான பாதிப்புகளினாலேயே விடுதலைப் புலிகளுக்கு தற்கொலை குண்டுதாரிகள் உருவாகின்றனர். எமது அரசாங்கங்கள் செய்த தவறுகளினால் தமிழ் இளைஞர்கள் அதற்குள் தள்ளப்பட்டுள்ளனர். நாம் அந்த இளைஞர்களின் மனதை வெற்றி கொள்வதில் தோல்வியடைந்திருக்கிறோம்.

இதைப்போலத்தான் கொழும்பிலுள்ள லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதிலும் அரசாங்கம் முட்டாள்தனமான முடிவை எடுத்திருந்தது. அம்மக்களை பலவந்தமாக வெளியேற்றும் உரிமை அரசாங்கத்துக்கு இல்லை. இவ்வாறான பல முட்டாள்தனமான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. எனவே, விமானத் தாக்குதல்களின் போது அப்பாவி பொதுமக்களை பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் படையினருக்கும் உண்டு. ஏனெனில், அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் புலிகளுக்கே சார்பாக அமைந்துவிடும்.

கேள்வி: ஜே.வி.பி.யின் பொது செயலாளரான ரில்வின் சில்வா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மகிந்த சிந்தனையை காட்டிக் கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். அப்படியெனில், மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஆதரவளித்தது தவறென நீங்களோ அல்லது உங்கள் கட்சியினரோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலேனும் நினைத்ததுண்டா?

பதில்: ஜனாதிபதி தேர்தலின்போது எமது கட்சி சார்பாக தனியானதொரு வேட்பாளரை நிறுத்தும் சூழ்நிலை அன்று இருக்கவில்லை. எனவே, அப்போதைய நிலைமையில் நாம் ஆதரவு வழங்குவதென்றால் மகிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இதில் ரணில் விக்கிரமசிங்க தான் ஏற்கனவே 2 ஆண்டுகள் நடத்திய சீர்கேடான ஆட்சியின் எஞ்சிய பகுதியையும் முன்னெடுத்துச் செல்லவே வாக்கு கேட்டார். மகிந்த ராஜபக்ஷ வேறாக இருந்தார். உண்மையில் சிறந்த வேட்பாளர்கள் இருக்கவில்லை. இருந்த இருவரில் ஒருவர் "குறைந்தளவு கெட்டவன்" மற்றையவர் "அதிகளவு கெட்டவன்". எனவே, எமக்கு அப்போதைய தருணத்தில் வேறொரு ஜனாதிபதியை நியமிக்க முடியாததால், நாட்டுக்கு அதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துநிறுத்தினோம். ஆனால், நாம் ஆதரவளித்தவரும் கெட்டவர்தான். எனினும், அச்சந்தர்ப்பத்தில் எமக்கு அதைவிட சிறந்த பெறுபேற்றை நாட்டுக்கு கொண்டுவர முடிந்திருக்கவில்லை. எமக்கு வெற்றி கொள்ள முடியாததால் நாம் குறைந்த கெடு விளைவிக்கும் பிரதிபலனை கொண்டு வந்தோம். அது இப்போது மேலும் கெட்டுப்போக ஆரம்பித்துள்ளது. அது எமக்கு தெரியாமலில்லை. எனவே தான் பழைய தவறான அரசியல் முடிவுகளை சரி செய்து கொள்வதற்காக ஜே.வி.பி. தலைமையில் புதிய தேசிய முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம்.,

கேள்வி: கொழும்பிலுள்ள லொட்ஜ்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக அரச தரப்பிலிருந்து பரஸ்பரம் முரண்பாடான கருத்துகளை முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு யார் பொறுப்புக் கூற வேண்டுமென நீங்கள் கூறுகிறீர்கள்?

பதில்: இதற்கு முழுப் பொறுப்பையும் கூற வேண்டியது ஜனாதிபதி தான். ஜனாதிபதிக்கு தெரியாமல் இது நடந்ததென எவரும் கூறினால் அதற்கும் ஜனாதிபதி தான் பொறுப்பு. ஏனெனில், இவ்வாறானதொரு பாரிய சம்பவம் இடம்பெறுவது பாதுகாப்பு அமைச்சரும் முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதிக்கு தெரியாதென்றால் அதுவும் அவரது குறைபாடே. அப்படியில்லாமல் ஜனாதிபதிக்கு தெரியாமல் அதிகாரிகள் அதாவது பொலிஸ் மா அதிபர் அல்லது பாதுகாப்பு செயலாளர் போன்றோர் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பார்களாயின் அது அவர்கள் ஜனாதிபதியை கணக்கிலெடுக்கவில்லை என்றே அர்த்தப்படும். எனவே, எந்த வழியில் பார்த்தாலும் கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டியவராக இருக்கிறார்.

கேள்வி: வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டதால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது சம்பூர் பகுதியிலும் அதியுயர் பாதுகாப்பு வலயம் அரசினால் ஏற்படுத்தப்பட்டிருப்பது அப்பிரதேச மக்களுக்கு அநீதி இழைப்பதாக அமையாதா?

பதில்: கட்டாயமாக. எனினும், யுத்த சூழ்நிலையில் படையினருக்கு அவர்களின் அளவுகளுக்கு ஏற்ப அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்படும். சமாதான சூழ்நிலை தோன்றிய பின்னரே அதை முற்றாக விலக்கிக் கொள்ள கூடியதாக இருக்கும். எனவே, சமாதான சூழ்நிலை ஏற்படும் வரை சொந்த இடங்களை இழந்த மக்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எனினும், நட்டஈடு வழங்குவதால் சமாதான சூழ்நிலை வந்தபிறகு மீண்டும் அம்மக்களின் சொந்த இடங்கள் வழங்கப்படக்கூடாதென நாம் கூறவில்லை. அம்மக்களின் இடங்கள் சமாதான சூழ்நிலை உருவான பிறகு மீள ஒப்படைக்கப்படுமென்ற உறுதியுடன் அதுவரை அவர்களுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவே நாம் கூறுகிறோம்.

இதேநேரம், சம்பூர் அதியுயர்பாதுகாப்பு வலயத்தில் எமக்கு சில தேவைகள் இருக்கின்றன. எனினும், அதன் எல்லைகளைக் குறைக்க முடியும். இருந்தபோதும் அபிவிருத்தி திட்டங்களின் போது மக்களின் இடங்கள் பறிபோகலாம். கொழும்பிலும் பாதுகாப்பு காரணமாக இவ்வாறு சில இடங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இங்கு விஷேடமாக யுத்தம் என்ற காரணத்திற்காக மட்டும் யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் இடங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் அங்கு சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தி அம்மக்களின் சொந்த இடங்களை மீண்டும் வழங்க வேண்டும். அதேபோல், தற்போது சுவீகரிக்கப்பட்டிருக்கும் இடங்களுக்காக அம்மக்களுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

Please Click here to login / register to post your comments.