இராணுவத்தின் திட்டமிடல்களால் மரபு வழிச்சமர் மாற்றம் பெறுமா?

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
இராணுவத்தீர்வே இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்பதுதான் காலம் காலமாக ஆட்சி செய்துவரும் அரசியல் கட்சிகளினதும், அரச தலைவர்களினதும் பிரதான நோக்கமா? என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது பொருளாதாரத்தை பேணுவதற்காகவும், தென்னிலங்கைப் பகுதிகளின் அபிவிருத்திக்கும் என அனைத்துலகத்தின் உதவிகளையும் கடன்களையும் பெறுவதற்காக அவ்வப்போது அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அனைத்துக்கட்சிக்குழு என்பன தொடர்பான பேச்சுக்கள் அடிபடுவதுண்டு.

ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவேனும் ஒரு சாக்குப் போக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பரவலாக எழுந்துள்ளன.

அதாவது இந்த அரசியல்தீர்வு முயற்சிகள் கூட இனப்பிரச்சனையின் தீர்வுக்காக அல்ல தமது படை நடைவடிக்கையில் பாதிப்புக்கள் ஏற்படாதபடி அனைத்துலகத்தை ஏமாற்றும் திட்டம் என்பதாக தான் கொள்ள முடியும். இராணுவத்தீர்வின் மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை, அதிகரித்த பாதுகாப்புச் செலவு, சீனா, இந்தியா, உக்ரேன், பாகிஸ்தான் என பல நாடுகளிடமும் வாங்கிக் குவிக்கப்படும் ஆயுதங்கள், முப்படைக்கும் ஆட்களை சேர்த்தல் என்ற திட்டங்கள் மூலம் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

இந்திய அரசின் மறைமுகமான படைக்கல உதவிகள், நேரடியான கூட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள், ஜப்பானின் தொடர்ச்சியான நிதி உதவிகள், ஏனைய நாடுகளின் படைக்கல உதவிகள் எல்லாம் இராணுவத் தீர்வை அவர்கள் மறைமுகமாக ஊக்குவிக்கின்றார்களா என்ற கருத்தை தமிழ் மக்கள் மத்தியில் வலுவடையச் செய்துள்ளது.

ஆனால் அரசின் இந்த இராணுவத் தீர்வு அல்லது இராணுவ நடவடிக்கை என்பது எதுவரை தொடரப்போகின்றது என்பது தான் தற்போதைய முக்கிய வினா. எனினும் கடந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய நேர்காணலில் இதற்கான விடை உண்டு.

கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றுவதும், வடக்கில் அவர்களை பலவீனப்படுத்துவதும் தான் தமது இராணுவ நடவடிக்கைகளின் குறிக்கோள் என அவர் தெரிவித்திருந்தார். அதாவது இந்த மறைமுகமான திட்டத்தின் சுருக்கம் என்பது விடுதலைப் புலிகளை கெரில்லா குழுவாக மாற்றுவதாகும். இதனை மறுபக்கமாக கூறுவதானால் விடுதலைப் புலிகளின் மரபுவழி போரிடும் தகைமையை இல்லாமல் செய்வதுதான் இராணுவத்தின் திட்டம்.

ஏனெனில் கெரில்லா போராட்டமாக தொடரும் போராட்டங்கள் நீண்டகாலம் இழுபட்டு செல்வதுடன், அதன் வீரியமும் மக்களிடம் காலப்போக்கில் மழுங்கிவிடும் தன்மையை பெற்றுவிடும். இப்படியாக நீண்டகாலம் கெரில்லா போரட்டமாக இழுபட்டு தொடர்ந்தும் முன்னேற்றம் காணாத போராட்டங்களாக பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளின் போராட்டங்களை குறிப்பிடலாம்.

அதேசமயம் ஒரு மரபுவழிப் படையணிகளை உருவாக்கி நிலப்பிரதேசங்களையோ அல்லது உறுதியான பின்தளத்தையோ தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாத போராட்டங்கள், கிடைத்த தீர்வை பெற்றுக் கொண்டு மழுங்கிப்போனதும், மழுங்கடிக்கப்பட்டதும் தான் உலகின் வரலாறு. இதற்கான சிறந்த உதாரணங்களாக வடஅயர்லாந்து போராட்டம், பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்பவற்றை குறிப்பிடலாம். இந்த இரு போராட்டங்களிலும் போராளிக் குழுக்கள் தொடர்ச்சியாக கெரில்லா போர் முறையில் தான் இருந்து வந்தன.

மரபுவழி போர் புரியும் தன்மையுள்ள ஒரு விடுதலைப் போராட்டமாக தம்மை மாற்றிக் கொள்ள முடியாது போனது வட அயர்லாந்து போராட்டத்தை மிக நீண்ட காலத்திற்கு இழுபட்டுச் செல்ல வைத்திருந்தது. பலஸ்தீன போராட்டத்தை பொறுத்தவரை அங்கு இருந்த போராட்ட அமைப்புக்கள் மரபுவழிப் போரிடும் தன்மையை உருவாக்கவில்லை என்பதுடன், அவற்றிற்கு ஒரு உறுதியான பின்தளப்பகுதியும் இருக்கவில்லை. நீண்டகாலம் கெரில்லா குழுவாக செயற்பட்டதனால் அதன் போராட்டம் காலப்போக்கில் மழுங்கடிக்கப்பட்டதுடன், அது தனது முக்கிய தலைவர்களையும் இழந்து இன்று தெருவில் தமக்குள் மோதிக் கொள்ளும் நிலையை அடைந்துள்ளது.

உலகின் வல்லாதிக்க நாடுகளின் விடுதலைப் போர் எதிர்ப்புச் சமன்பாடுகளில் போராளிக் குழுக்களை கெரில்லா தாக்குதல் குழு என்ற நிலையில் தொடர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என்பது முக்கியமானது. எனினும் ஒரு போராட்ட அமைப்பை மரபுவழிப் படையணியாக மாற்றுவதன் மூலம் போராட்டத்தை வென்றுவிடலாம் என்பது இதன் மறுதலையான கொள்கை.

உதாரணமாக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பொஸ்னியா போரில் பொஸ்னிய போராட்ட அமைப்பை பலப்படுத்தி அதனை மரபுவழிப் படையணியாக மாற்றி அமைத்து சேர்பிய அரசுடன் ஒரு படைவலுச் சமநிலையை எட்டுவதற்கு மேற்குலகம் உதவி புரிந்திருந்தது. அதன் மூலம் போரும் வெல்லப்பட்டது.

வியட்னாம் போரிலும் வியட்னாம் கெரில்லாக்கள் மரபுவழிப் படையணிக்குரிய தகைமைகளை கொண்டிந்ததனால் தான் போரில் அவர்களால் வெல்ல முடிந்தது. 1980களில் நடைபெற்ற சோவியத் படைகளுக்கொதிரான ஆப்கானிஸ்தானின் முஜாகுதீன் (ஆரதயாநனin) அமைப்பின் போராட்டத்தின் போது கூட முஜாகுதீன்களை ஒரு மரபுவழிச் சமர் புரியும் நிலைக்கு உயர்த்துவதற்காக அமெரிக்கா ஆயுத மற்றும் நிதி உதவிகளை தாராளமாக வழங்கியிருந்தது. முஜாகுதீன் போராளிகளின் மரபுவழிப் படைக்கட்டுமானங்களில் சோவியத்தின் வான்படையினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்காக ஸ்ரிங்கர் (குஐஆ-92யு ளுவiபெநச) ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் அமெரிக்கா அன்று தாராளமாக வழங்கியிருந்தது. இறுதியில் சோவியத் படைகள் வெளியேறியிருந்தன.

ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் 1980களின் ஆரம்பத்தில் அது ஒரு கெரில்லாப் போராட்டமாக உக்கிரமடைந்த போது அதனை ஒரு மரபுவழி படையணியாக மாற்றமடையாது தடுக்கும் முயற்சிகளில் இந்தியாவும் இலங்கையும் முனைப்பாக செயலாற்றி வந்திருந்தன.

எனினும் அவர்களின் கைகளையும் மீறி விடுதலைப் புலிகளின் படையணிகள் மெல்ல மெல்ல மரபுவழிப் படையணிகளாக மாற்றம் பெற்றன. 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதல் இலங்கையில் இரு இராணுவங்கள் உண்டு என்ற செய்தியை இலகுவாக உலகிற்கு உணர்த்தியிருந்தது.

எனினும் அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மரபுவழி படைக்கட்டமைப்பை சிதைத்து விடுவது என்ற திட்டத்துடன் தான் காலம் காலமாக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பட்டன. அதாவது ஒரு போராளி அமைப்பினது சண்டையிடும் வலிமையை குறைப்பதாயின் மக்களிடம் இருந்து அதனை அன்னியப்படுத்துவது முக்கியமானது என கருதப்பட்டது. இதனால் அந்த அமைப்புக்கான நிதி மற்றும் படையாட்களின் விநியோகங்களில் தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் அதனை பலவீனப் படுத்த முடியும் என்பது இராணுவ நிபுணர் களின் கருத்து.

இந்த கருத்தின் அடிப்படையில் தான் ஒவ்வொரு தடவையும் யாழ். குடா நாட்டை கைப்பற்ற படைத்தரப்பு முனைந்து வந்தது. 1993 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைவிடப்பட்ட நிலையில், 1995 ஆம் ஆண்டு அதிக படைவலு, சுடுவலுவுடன் யாழ். குடா கைப்பற்றப்பட்டது.

ஆனால் அதன்பின்னர் விடுதலைப் புலிகள் கெரில்லாக்களாக மாற்றமடையவில்லை மாறாக முற்று முழுதான மரபுவழிப் படையணிகளுக்குரிய கட்டமைப்பை பெற்றதுடன், 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட போது படைச்சமவலு நிலையையும் எட்டி இருந்தனர்.

இந்த மாற்றங்களுக்கு காரணம் என்ன? இராணுவ நிபுணர்களின் கருத்துக்கள் தவறாகிப் போனது எவ்வாறு என்பது ஆய்வாளர்களிடம் இன்று வரை பல குழப்பங்களை தோற்றுவித்தே வந்துள்ளன.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் யாழ். குடாநாட்டை இழந்த பின்னர் படைக்கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், புதிய சிறப்பு படையணிகளின் உருவாக்கம், கடற்புலிகளின் வளர்ச்சி, கனரக ஆயுதப் படைப்பிரிவுகளின் தோற்றமும், அவற்றின் துரித வளர்ச்சியும் கடுகதியில் அவர்களை தரம்மிக்க ஒரு மரபுவழிப் படையணியாக மாற்றம் பெற வைத்திருந்தது. இவற்றிற்கு பக்கபலமாக இருந்தது மக்களிடம் ஏற்பட்ட அரசியல் தெளிவுமாகும்.

எனினும் தற்போது நடைபெற்று வரும் நாலாம் கட்ட ஈழப்போரின் மோதல்களில் மீண்டும் விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானங்களை சிதைத்து அவர்களின் மரபுவழித் தாக்குதல் தகைமையை இல்லாது செய்யும் நோக்கமே பின்பற்றப்படுகின்றது.

அரசின் தொடர்ச்சியான படை நடவடிக்கைகள், அதிகரித்த வான் தாக்குதல்கள், விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் உத்திகள் என்பன அதனையே கட்டியம் கூறுகின்றன. அதாவது செறிவான வான் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகளின் கனரக ஆயுத வளங்களையும், படைக்கட்டுமானங்களையும் சிதைத்து விடலாம் என்பது அதன் ஒரு அங்கம்.

ஆனால் படையினரால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரல்களில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட வான்புலிகளும், ஈரூடகப் படையணியும் கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தி விட்டன. இந்த புதிய படையணிகளின் தோற்றம் போரை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது ஒருபுறம் இருக்க விடுதலைப் புலிகள் மரபுவழிப் படையணியையும் தாண்டி ஒரு முழுமையான தேசத்திற்குரிய கட்டமைப்புக்களை பெற்று விட்டார்களோ என்ற கருத்தை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கெரில்லா படையாக பரிணமித்து மரபுவழி படையணியாக மாற்றம் பெற்று விடுதலையை வென்றெடுத்த நாடுகள் கூட தமது தேசத்தின் தோற்றத்திற்கு முன்னர் வான்படையை கொண்டிருக்கவில்லை. அது மட்டுமல்லாது அரசின் படை பலப்படுத்தல்களுக்கு ஈடாக விடுதலைப் புலிகளும் புதிய வியூகங்களையும், போரியல் உத்திகளையும் வகுத்து வருவது உலக மட்டத்தில் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த புதிய போரியல் உத்திகளானது போரிலும் படைக்கட்டமைப்பிலும் மட்டும் சேதத்தை ஏற்படுத்திவிடாது, நாட்டின் பொருளாதாரம், அரசியல் அடித்தளம் என்பவற்றிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வியாபித்து போயுள்ளது.

அதாவது சில மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளுடன் மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட மோதல்கள் இன்று கடுமையான குழப்பநிலையை அடைந்துள்ளதுடன் அதில் இருந்து மாற்று வழிகளை தேட முடியாத படி முடங்கிப் போயுள்ளன என்பது தான் தற்போதைய நிலைமையின் சுருக்கம்.

ஆட்பலமும், அதிக எண்ணிக்கையான ஆயுதவலுவும் தான் இராணுவச் சமநிலையை தீர்மானிப்பவையாக இருக்கும் என்பதோ அல்லது அதன் மூலம் மறுதரப்பின் படைச்சமவலு நிலையை சிதைத்துவிடலாம் என்பதோ முற்று முழுதாக பொருந்துவதில்லை. அப்படி பொருந்துமானால் 60 இலட்சம் மக்கள் தொகையைப் கொண்ட இஸ்ரேல் மத்திய கிழக்கில் பலம்பெற்றிருக்க முடியாது.

ஏனெனில் இஸ்ரேலை விட அதை சுற்றியுள்ள அரபு நாடுகளின் ஆள், ஆயுத வலு பலமடங்கு அதிகம். எனினும் ஒரு மரபுவழிப்படையணியானது தனது பலத்தை எந்த சூழ்நிலையிலும் தக்கவைக்கும் காரணிகளாக மக்களின் மனவுறுதி, அரசியல் முதிர்ச்சி, சீரான இராணுவ முகாமைத்துவம், வளங்களை திரட்டக்கூடிய கட்டமைப்பு, எதிர்த்தரப்பின் போர் உத்திகளை திறம்பட எதிர்கொள்ளும் தன்மை என்பன கொள்ளப்படுகின்றன.

இத்தகைய தன்மைகள் தொய்வின்றி பேணப்படும் போது தாக்குதல்கள், எதிர்த்தாக்குதல்கள், கைப்பற்றல்கள், பின்வாங்குதல்கள் எல்லாம் மாறி மாறி நிகழ்ந்தாலும் ஒரு மரபுவழிப் படையணி தனது தன்மையை இழக்க மாட்டாது.

Please Click here to login / register to post your comments.