அமைதி வழியில் தீர்வுகாண்பது சிங்களரின் நோக்கமல்ல!

ஆக்கம்: எஸ்.எம்.ஜி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதியான நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இன்றைய ஆளும் கட்சியினருக்கு மட்டுமல்ல, இலங்கை ஆதிக்க சக்திகளுக்கே கிடையாது. எப்படியாவது எந்த வெளிநாட்டின் உதவியைப் பெற்றாவது. எந்த வெளிநாட்டைச் சிக்க வைத்தாவது விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமிழ் இனத்தை ஈழத்தில் அழித்து விட வேண்டும். என்பதே ஆட்சியாளர்களினதும், ஆதிக்க சக்திகளினதும் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக் களைத்துப் போய்விட்டன. அதிகாரப் பரவலாக்கல்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரே வழி என்று எல்லோருமே சொல்கிறார்கள். சிங்கள ஆதிக்க சக்திகளும் அதிகாரப் பரவலாக்கல்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழி என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் சொல்கின்றன.

ஆனால் மனித உரிமைகளை மதித்து நடக்கும்படி சொல்லும் நாடுகளை சிங்கள ஆதிக்கம் மிரட்டுகிறது. 1957ஆம் ஆண்டில் ஈழ தமிழர் தந்தை செல்வநாயகம் தலைமையில் சாத்வீகப் போராட்டங்கள் நடைபெற்றபோது சந்திரிகாவின் தகப்பன் பண்டாரநாயகா பேச்சு நடத்தினார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது. வடக்கு கிழக்கு அதாவது தமிழர் தாயகமான தமிழ் ஈழத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச சபைகளை அமைத்து அவற்றுக்கு கல்வி, குடியிருப்பு பற்றிய பல்வேறு முக்கிய அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது. பிரதேச சபைகள் தாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்குத் தீர்மானித்தால் இணைவதற்கு இந்த ஒப்பந்தம் வசதி செய்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையில் சிங்கள இன வெறியர்கள் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.

பண்டாவே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அதிகாரப் பரவலாக்கல் முயற்சி கிள்ளி எறியப்பட்டது. சுதந்திரக் கட்சி கொண்டு வந்த இந்த பிரதேச சபைகள் மூலம் அதிகாரப் பகிர்வுத் திட்டம் கைவிடப்பட்டது.

அடுத்து யு.என்.பி. தலைவர் டட்லியும், தந்தை செல்வாவும் இரகசியமாகப் பேசி மாவட்ட சபைகள் அமைத்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஓர் இரகசிய ஒப்பந்தம் செய்தனர். இதை ஜே.ஆரின் மறைமுகத் தூண்டுதலின் பெயரில் சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இடது சாரித் தலைவர் டாக்டர் என்.எம். பெரரா பகிர்ந்து கொள்ளவிருக்கும் அதிகாரங்களை நாடாளுமன்றத்திலேயே அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்தி இரகசிய ஒப்பந்தத்தை நாட்டில் பிரிவினையைக் கொண்டு வரும் ஆபத்தானதென்று எடுத்துக்கூறினார்.

டட்லி-செல்வா ஒப்பந்தமானது அதிகாரங்களைப் பரவலாக்காமல் கிழித்தெறியப்பட்டது. தந்தை செல்வா தலைமையில் தமிழ் மக்கள் தொடர்ந்து இணைப்பாட்சி முறையில் தங்கள் தாயகத்தில் சுயாதீனமாக வாழ்வதற்கு காந்தீய வழியில் சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நாட்டைப் பிரிக்கப்பார்க்கிறார்கள் என்றும் பிரிவினைவாதிகள், "தேசத்துரோகிகள்" என்றும் செல்வா தலைமையிலான தமிழ் அரசுக்கட்சியினர் மீது சிங்கள ஆதிக்க சக்திகள் பழிசுமத்தினர். காந்தீய வழியில் நிராயுத பாணிகளாகச் சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்கள் மீது ஆயுதப்படைகளையும், காடையர்களையும் ஏவிவிட்டு கொலை, கொள்ளை, பெண்களை மானபங்கம் செய்தல் தமிழ் இளைஞர்களைச் சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தல் ஆகிய பயங்கரவாத அட்டுழியங்களை சிங்கள ஆட்சியாளர்களும் ஆதிக்க சக்திகளும் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில் 1976இல் இணைப்பாட்சி என்ற சமஷ்டிக் கோரிக்கையினால் பயனில்லை என்று வட்டுக்கோட்டையில் தமிழ்க்கட்சிகள் ஒன்று கூடி "இழந்த தமிழ் ஈழ அரசை மீளப்பெறுவது" என்று தீர்மானித்தன. இதை நாடாளுமன்றத்தில் பிரேரணையாக கொண்டுவருவதற்கு முன்னறிவித்தலும் கொடுக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதே கோரிக்கையை முன் வைத்து இழந்த தமிழ் ஈழ அரசை மீண்டும் அமைப்பதற்கு தமிழ் ஈழ மக்களின் ஆணையைப் பெற்றனர். (ஆனந்த சங்கரியும் இதே கொள்கையில் போட்டியிட்டு வென்றவர்).

இதே சமயம் 1958ஆம் ஆண்டில் முதல் தடவையாக நாடு முழுவதிலும் தமிழ் மக்களுக்கெதிராக இனக்கலகத்தைத் தூண்டி தமிழ் இனப்படுகொலை தொடங்கியது போல 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிந்ததும், காவல்துறையினர் மூலம் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு களியாட்ட விழாவில் கலகத்தைத் தொடங்கி மீண்டும் நாடு முழுவதும் தமிழ் இனப்படுகொலையைத் தாண்டிவிட்டனர். இது மீண்டும் 1983ஆம் ஆண்டில் வடக்குக் கிழக்கு மாகாணத்திலேயே தமிழ் இன அழிப்பை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இச்சமயத்தில்தான் தமிழ் இளைஞர்கள் சிங்கள இனவெறிப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களையும், மண்ணையும் பாதுகாப்பதற்குப் போராட்டத்தில் குதித்தனர்.

சாத்வீகப் போராட்டத்தில் எப்படி தமிழர் சிலர் கோடாரிக் காம்புகளாக மாறினார்களோ, அப்படி ஆயுதப் போராட்டத்திலும் கோடாரிக் காம்புகள் முளைத்தன. இவற்றையெல்லாம் மீறித் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சிங்கள ஆதிக்க சக்திகளின் பயங்கரவாதச் செயல்களை எதிர்த்து தமிழ் ஈழ மண்ணில் விடுதலையை நிலைநாட்டுவதற்கு ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தனர்.

இந்நிலையிலதான் அதிகாரப் பரவலாக்கல் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு உலகநாடுகள் பலவும் பல தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். பேச்சுவார்த்தைகளை ஆட்சியாளர்கள் ஒரு நாடகமாக ஆடி, உலக நாடுகளை ஏமாற்றுவதில் முனைந்தார்களே தவிர இனப்பிரச்சினைக்கு நியாயமான, நிரந்தரமான அமைதித் தீர்வு காண்பதற்கு சிங்கள ஆதிக்க சக்திகள் ஒருபோதும் மனப்பூர்வமாக முனைந்ததில்லை.

காந்திய வழியில் சாத்வீகப் போராட்டமும், ஜனநாயக முறையில் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த ஆணையும் ஒற்றையாட்சி அமைப்பில் சிங்கள ஆதிக்க சக்திகளால் நிராகரிக்கப்பட்டன. தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டு இன்றுவரை விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.

இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமோ, அதிகாரப் பரவலாக்கல் மூலமோ தீர்வு காண்பதற்கு சிங்கள ஆதிக்க சக்திகள் என்றுமே தயாராக இல்லை. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகில் வல்லரசுகளிடமிருந்தும் பிற நாடுகளிடமிருந்தும் உதவியைப் பெற்று விடுதலைப்புலிளை அழிப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலையை வெற்றிகரமாக நிறைவேற்றிவிடலாமென சிங்கள ஆதிக்க சக்திகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன.

இதற்காக பல்வேறு நாடுளையும், தீவிரவாத இயக்கங்களையும் விடுதலைப்புலிளோடு தொடர்புபடுத்தி சிண்டு முடியும் வேலையிலும் வெற்றிரமாகச் சிங்கள இனவெறியர்கள் கோடாரிக்காம்புகளின் துணையுடன் செயல்பட்டுவருகின்றனர்.

பயங்கரவாதம் மோசனமானதுதான், அதைவிட படு மோசமானது அரச பயங்கரவாதம் என்று அன்னை இந்திரா கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினையே இல்லை என்று சிங்கள ஆதிக்க சக்திகள் கூறி வருகின்றனர். தமிழ் இனமே இங்கு இல்லை என்று கூறுவதற்கு முதல்படியாகத்தான் இதைச் சொல்லிவருகின்றனரோ?

Please Click here to login / register to post your comments.