இலங்கைத் தமிழர் நிலை; அரசாங்கங்கள் செய்யலாம் அரசு செய்யலாமா?

ஆக்கம்: பீஷ்மர்
கடந்த ஒரு வார காலமாக தலைநகரில் தமிழ் மக்கள் குறிப்பாக தற்காலிக தேவைகளுக்காக தலைநகருக்கு வரும் தமிழ் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஏற்கனவே நடந்த கடத்தல், காணாமல் போதல் ஆகிய விடயங்களில் பாதுகாப்புத் துறையினருக்கு ஒரு பங்குண்டு என்ற சந்தேகம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்கின்றது. விமானத் தாக்குதல் ஒன்றினை விடுதலைப் புலிகள் மேற்கொண்டமை புறக்கோட்டை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் கிளேமோர் குண்டு வெடிப்பு ஆகியவற்றின் பின்னர் பாதுகாப்புத் துறையினர் கொழும்பின் பாதுகாப்புப் பற்றி மிகக் கவனமாகயிருக்க வேண்டுவது அவசியமே. ஆனால், இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அரசு, அரசாங்கம் பற்றிய சில அடிப்படையான வினாக்களை கிளப்புகின்றன.

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பல சந்தேகத்துக்குள்ளான அல்லது சந்தேகத்துக்குரிய தமிழர்கள் என்ற வரையறைக்கு அப்பாலே சென்று தமிழர்கள் என்ற நிலையில் ஒட்டுமொத்தமாக தண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மறுக்கமுடியாது. இதற்கான உதாரணம் `லொட்ஜ்'களிலும் வேறுசில தங்குமிடங்களிலும் வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்கள் தங்குகின்றனர் என்றும் அவர்கள் எல்லோரையும் அத்தகைய இடங்களிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் மூன்று நாட்களுக்கு முன்னர் காவல்துறையினரால் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு அவ்வாறு தங்கியவர்கள் பலர் அடுத்த நாள் டாம் வீதி போன்ற இடங்களில் மிகவும் அல்லலுற்றதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கை அடிப்படையான அரசியற் பிரச்சினையொன்றை கிளப்புகின்றது. அவ்வாறு கிளம்பும் பிரச்சினை அரசு, அரசியல் பற்றிய அடிப்படை வினாக்களை கிளப்புகின்றது.

அரசறிவியலில் அரசுக்கும் (State) அர சாங்கத்துக்கும் (Government) சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. அரசு என்பது நாடு முழுவதுக்கும் பொதுவான நிறுவனம். அரசு நிலையில் மக்கள் அதன் `பிரஜைகள்' என்றே பார்க்கப்படுவார்கள். நாளாந்த அரசியல் யதார்த்தத்தில் இந்த பிரஜைகள் பல்வேறு குழும அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கலாம். இனவாரியாக, மொழிவாரியாக என பல்வேறு அடிப்படைகளில் குழும அமைப்புகள் அமையலாம். ஆனால், பிரஜைகள் என்ற அடிப்படையில் அந்த அரசின் ஆட்சியாப்பு சில அடிப்படை `மனித' உரிமைகளை வழங்குகின்றது. இவற்றை எந்தவொரு அரசாங்கமும் மறுதலிக்க முடியாது.

மூன்றாவது உலக நாடுகளைப் பொறுத்த வரையில் அதுவும் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகள் சுதந்திர அரசுகளாக நிறுவப்பட்ட பொழுது அவை அரசியல் யதார்த்தத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு மொழி, இன, பிரதேச குழுமங்களாகயிருப்பது தவிர்க்கப்பட முடியாததாகும். ஆனால், அந்த நாட்டின் பிரஜைகள் என்கின்ற வகையில் இந்த குழும அடிப்படைகளை ஊடறுத்துச் செல்கின்ற `நாடு' என்ற கோட்பாடு உண்டு.

இலங்கை நிலையில் எடுத்துக் கொண்டால் காலனித்துவ கால அரசியல் வரலாறு காரணமாக காலனித்துவ ஆட்சி முடிவிலும் இனக்குழும அடிப்படையிலேயே அரசா ங்கங்கள் தெரிவு செய்யப்படலாயின. யூ.என்.பீ. பெயரளவிலேனும் ஐக்கிய தேசியத்தை குறிப்பிட அதன் பிரதான எதிர்நிலைக் கட்சியோ தன்னை சிங்களத்தை மையப்படுத்தி ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியென தன்னை பிரதானப்படுத்திக் கொண்டது.

சிங்களவர்கள், தமிழர்கள் என்கின்ற வரையறைக்கு அப்பாலே போய் பொதுவுடைமைவாதிகள் சமசமாஜிஷ்டுகள் என மார்க்ஷிஷ்ட் கட்சிகள் காணப்பட்டாலும் இனக்குழும அரசியல் போராட்டத்தில் இவை சுதந்திரக் கட்சியின் பக்கமே சாய்ந்தன. இந்த நிலையில் தமிழருக்கென ஒரு அரசியற் கட்சி மேற்கிளம்புவது தவிர்க்கப்பட முடியாததாயிற்று. உண்மையில் சிங்கள நிலைப்பாடுகளின் உக்கிரம் காரணமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்ற தமிழ்க்கட்சிகள் எல்லாம் தமிழர் கூட்டணியென எழுந்தன.

அரசாங்க நிலையில் இந்தப் போட்டிகள், பிணக்குகள் வளர்ந்தன, பெருகின. ஆனால், அடிப்படையில் அவை இலங்கை முழுவதும் ஓர் அரசு என்ற நிலைப்பாட்டின் கீழ் நின்று கொண்டே தமது கோரிக்கைகளை முன்வைத்தன. உண்மையில் முதலில் அவை நாட்டுப் பிரிவினை பற்றி பேசவில்லை. சமஷ்டி பற்றியே பேசின, இலங்கை முழுவதுக்கும் பொதுவான மாவட்ட சபைகள் பற்றியே பேசின.

அரசு வேறு, அரசாங்கம் வேறு. ஆனால், இனக்குழும வாரியாக பிரிந்த அரசாங்கங்கள் சிங்களத்துவ தன்மை மேலோங்க மேலோங்க தமிழர் விரோதப் போக்கொன்றினை கடைப்பிடிக்கும் இயல்பொன்று காணப்பட்டது.

ஆனால், இதனை தென்னிலங்கையின் சில சிங்களக் கட்சிகள் எதிர்த்தன. இப்பொழுதுள்ள நிலைமைகளை பார்க்கும் பொழுது தமிழர்கள் என்றதன் காரணமாக இலங்கையின் பிரஜைகள் என்ற அடிப்படையிலே கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுதலிக்கப்படுவதைக் காணலாம்.

அரசியல்வாதியொருவர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேறுங்கள் என்று சொல்வது வேறு. ஆனால், இலங்கையின் காவல்படை கொழும்பில் விடுதிகளில் வட, கிழக்கு, மலையக தமிழர்கள் இருக்கக் கூடாது என்பது நிச்சயமாக வேறுபட்ட ஒரு நிலையாகும். இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே அதனை `சரிக்கட்டு'வதற்கான தேசிய, சர்வதேசிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. சம்பவத்தையடுத்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் நோக்கமுள்ளது என்று கூறினாலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிஸ் தலைமை அதிகாரி இந்தத் தோறணையில் விடுதிப் பொறுப்பதிகாரிகளிடம் பேசவில்லை. இலங்கை காவற்படை இந்த அரசாங்கத்தின் காவற்படையல்ல. இலங்கை அரசின் காவல்படை. அரசுக் காவல்படையில் தமிழர்கள் இன்று (7 ஆம் பக்கம் பார்க்க)

உயர் உத்தியோகத்தில் இல்லாவிட்டாலும் அது இலங்கை முழுவதற்கும் பொதுவான காவல்படை. அத்தகைய ஒரு படை தமிழர்களை வைத்திருக்காதீர்கள் என்று சொல்ல முடியுமா/

அப்படிச் சொல்வது சட்டப்படியானதா? தமிழர்கள் இலங்கைப் பிரஜைகள் இல்லையா?

அரசறிவியலைப் பொறுத்தவரையில் இதுவொரு பாரதூரமான நிலை. உண்மையில் இந்த நிலைமையின் பாரதூரத் தன்மையை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் வற்புறுத்தியிருக்க வேண்டும்.

பகிரங்கமாகவே எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

அது ஒரு புறம் இருக்க, இத்தகைய ஆணைகளே அந்த ஆணைகளை ஏற்க வேண்டியிருப்பவர்கள் மனதில் தாங்கள் இந்த அரசின் பிரஜைகள் அல்லவா? என்ற வினாவை தங்கள் தங்கள் மனங்களுக்குள்ளே கிளப்புகின்றன.

உண்மையில் இத்தகைய போக்கே பிரிவினை வாதத்துக்கு இடமளிக்கின்றது. வலுவளிக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளை ஒரு புறத்தில் மேற்கொண்டு விட்டு மறுபுறத்தில் `பெதும்வாதிகள்' ( பிரிவினை வாதிகள்)என்று தாக்குவதில் அர்த்தமில்லை. துரதிர்ஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக அரச நிர்வாக இயந்திரம் இந்த உண்மையை மனங்கொள்வதில்லை.

சிங்கள ஊடகங்கள் தமிழர்கள் என்றால் இலங்கை அரசுக்கு எதிரானவர்கள் என்ற தொனி தோன்றும் வகையில் எழுதுகின்றார்கள்.

இதற்கு நல்ல உதாரணம். சென்ற வாரம் வெடிமருந்துகளுடன் பிடிபட்ட லொறி பற்றிப் பேசும் பொழுது அதிலிருந்தவர்கள் தமிழர்கள் என்று வானொலியும் கூறிற்று. பத்திரிகைகளும் கூறிற்று. இவ்வாறு கூறுவதன் உள்ளர்த்தம் என்ன?

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பல இலங்கை அரசு நம்முடையதல்ல என்ற மனநிலையை ஏற்படுத்துகின்றது. இந்த மனப்பாங்கை நிறுத்துவது அவசியம். மிக மிக அவசியம். இல்லையென்றால் பிரிவினைவாதத்துக்கான தேவையை அரசாங்கமே ஏற்படுத்துகின்றது என்றாகி விடுகின்றது.

Please Click here to login / register to post your comments.