வெளிநாட்டு உதவிகளில் தங்கியுள்ள வடபோர்முனை

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
முன்னர் எப்போதும் இல்லாதவாறு இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் தற்போது அனைத்துலகத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளன. அனைத்துலக சமூகம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகமாகி வருகின்றது. இந்த முக்கியத்துவத்திற்கான காரணங்களாக இலங்கையில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்கள், ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த அமைதிப்பேச்சுக்களில் இருந்த அனைத்துலக சமூகத்தின் தொடர்புகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் என்பன இருந்த போதும் நான்காவது ஈழப்போரில் மேற்கொள்ளப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட தாக்குதல்களும், அதனை எதிர்கொள்ள தேவைப்படும் ஆயுதங்களும் அனைத்துலகத்தின் கவனப்புள்ளியை மேலும் செறிவாக்கியுள்ளது.

படையினரை பொறுத்தவரை அவர்கள் இரு உத்திகளுடன் செயற்பட்டு வருகின்றனர். அதாவது கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்றுதல், வடக்கில் தமது வசம் உள்ள பகுதிகளை தக்கவைத்தல். அதாவது கிழக்கில் தாக்குதல் சமர் (Offensive battle), வடக்கில் தற்பாதுகாப்பு சமர் (Defensive battle) என்ற இரு பொறிமுறைகளுடன் படையினர் செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் போர் என்பது ஒரு தரப்பின் உத்திகளுக்கு அமைய நடைபெறுவதில்லை, அதற்கு எதிரான உத்திகள் அல்லது அதனை முறியடிக்கும் உத்திகளை எதிர்த்தரப்புக்கள் வகுப்பது வழமை.

பிரகடனப்படுத்தப்படாத நான்காம் கட்ட ஈழப்போரை கருதினால், கடந்த ஆண்டு உக்கிரமடைந்த மோதல்களில் படையினர் பெரும் எடுப்பிலான பல படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவற்றில் பெருமளவானவை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், வடக்கிலும் ஒரு சில நடவடிக்கைகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெற்ற முகமாலைச் சமரை குறிப்பிடலாம்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மூதூர் மீதான நடவடிக்கை, முகமாலையில் மேற்கொள்ளப்பட்ட சமர், அதே மாதம் அல்லைப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட ஈரூடகப் படையணியினரின் நடவடிக்கை என்பனவற்றை தவிர பெரும் எடுப்பிலான வலிந்த தாக்குதல்களை அதன் பின்னர் நடத்தவில்லை.

எனினும் கடந்த வாரம் நெடுந்தீவு கடற்படை கண்காணிப்புத் தளத்தின் மீதான நடவடிக்கையும் ஒரு வலிந்த தாக்குதல் நடவடிக்கையே. ஆனால் அது பெரும் எடுப்பிலான தாக்குதல் அல்ல. நெடுந்தீவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒரு சிறப்பு படை (Commando style) நடவடிக்கை போன்றது.

விடுதலைப் புலிகளின் பெருமெடுப்பிலான தாக்குதல்கள் எதுவும் நடைபெறாத போதும் போர் மிகவும் தீவிரமான நிலையை அடைந்துவிட்டது போன்ற தோற்றப்பாடு உலக மட்டத்தில் உருவாகியுள்ளது.

மேலும் அதிகளவான பொருட்செலவுகளுடன் அரசு மிகவும் நவீன ஆயுதங்களையும் தேடியும் வருகின்றது. இதற்கு இந்தப் போரில் விடுதலைப் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தாக்குதல் அணிகள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

வான்படை, ஈரூடகப் படையணி என்ற புலிகளின் இரு படையணிகள் நான்காவது ஈழப்போரில் தோற்றம் பெற்றுள்ளன. இந்த இரு படையணிகளுமே ஒட்டுமொத்த இராணுவ நிகழ்ச்சி நிரல்களை குழப்பிவிட்டுள்ளதுடன், கண்ணுக்குத் தெரியாத படைவலுச் சமநிலையை அறியும் ஆவலையும் உலக அரங்கில் தோற்றுவித்துள்ளது எனலாம்.

அதாவது ஏனைய ஈழப்போர்களை போலல்லாது இந்த மோதல்களில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களும், படையணிகளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆயுதங்களே அனைத்துலக மட்டத்தில் கவனங்களை தோற்றுவித்திருப்பதுடன் அவற்றின் புதிய பார்வைகளுக்கும் வழிவகுத்துள்ளன.

மேலும் இதுவரை காலமும் எல்லா நாடுகளுடனும் பிடிகொடுக்காமல் நழுவிவந்த இலங்கை அரசை ஏதாவது ஒரு நாட்டின் ஆளுமைக்குள் சிக்கிக் கொள்ளவும் இது வழிவகுத்துள்ளது.

தற்போது அரசின் தெரிவாகியுள்ள ஆயுதங்களுக்கும், எதிர்கொள்ள வேண்டிய போருக்கும் ஏதாவது ஒரு நாட்டின் உதவிகள் நிச்சயமாக தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த இராணுவத் தேவைகளுக்கு இந்தியாவே உகந்த நாடாக இருக்கும் என்பது பாதுகாப்புத் தரப்பினரது வாதம். அதற்கான காரணிகளாக இரு நாடுகளின் எல்லைகளாக உள்ள கடற்பிரதேசங்களின் பாதுகாப்பு, தமிழ்மக்கள் செறிவாக வாழும் இரு பகுதிகளையும் (வட இலங்கை தமிழ்நாடு) பிரிக்கும் பாக்கு நீரிணையின் ஆளுமை, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் என்பன உள்ள போதும் இரு நாடுகளும் ஒரேவகையான கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதும் தற்போது புதிய காரணியாக சேர்ந்துள்ளது.

அதாவது இலங்கையும் இந்தியாவும் சோவியத் ஒன்றியம், இஸ்ரேல் போன்ற நாடுகளின் கனரக ஆயுதங்களை அல்லது அவற்றை ஒத்த ஆயுதங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன. உதாரணமாக டோரா பீரங்கிப்படகுகள், அன்ரனோவ்-32பி, அன்ரனோவ்-24 போக்குவரத்து விமானங்கள், மிக்-27, மிக்-29 ரக தாக்குதல் விமானங்கள், எம்ஐ-17, எம்ஐ-24, எம்ஐ-35 வகை உலங்குவானூர்திகள், சாம்-16 ஏவுகணைகள், ராடார்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

எனவே இந்த ஆயுதங்களின் செயற்றிறன் மிக்க உபயோகத்திற்கு இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் ஆயுதத்தொடர்புகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது படைத்தரப்பினரின் கருத்து. உதாரணமாக 2000 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட மிக்-27 ரக தாக்குதல் விமானங்கள் அதன் ஒய்வு நிலையை அடைந்த போது அதனை மறுசீரமைக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்வதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் இந்தியா அதிகளவில் பல வகையான மிக் ரக விமானங்களை பயன்படுத்துவதுடன், அதனை தயாரிப்பதற்கான அனுமதியையும், அவற்றை மறுசீரமைக்கும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் அருகில் உள்ள நாடு, குறைந்த செலவுகள், இலகுவான போக்குவரத்து என்பனவும் அதற்கான ஏனைய காரணங்கள்.

எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ் நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புக்கள் தோன்றக்கூடும் என்பதனால் அவை பின்னர் உக்ரேன் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் தற்போது அரசினால் கொள்வனவு செய்யப்பட உள்ள மிக்-29 ரக வான் தாக்குதல் விமானங்கள், ஏவுகணைகள், நவீன ராடார்கள் என்பவற்றிற்கான பயிற்சிகள், பராமரிப்பு, தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றிற்கு மிகவும் அதிகளவில் வெளிநாட்டு உதவிகள் தேவைப்படும் என்பது அரசுக்கு தெரிந்த விடயம். உதாரணமாக சவூதி அரேபியா தனது எப்-16, எப்-15 ரக தாக்குதல் வான்கலங்களின் உபயோகத்திற்கு அமெரிக்காவை சார்ந்து இருப்பதை குறிப்பிடலாம். எனவேதான் தமது படைக்கலப் பெருக்கத்திற்கும் அதன் உபயோகத்திற்கும் ஏதாவது ஒரு வலிமை மிக்க நாட்டை நாடவேண்டிய தேவை அரசுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

மேலும் வடபோர்முனையில் உள்ள பெரும் தொகை படையினருக்கான விநியோகத்தை சீராக்குவதற்கும் அதனைத்தக்க வைப்பதற்கும் இந்தியாவினது அல்லது வேறு ஒரு நாட்டினது உதவிகள் தேவை என்ற நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அரச விமானப்படையை பொறுத்தவரை அதனிடம் 02 ஹெக்கூல்ஸ் ஊ- 130 மு (ex - RAF Hercules-C1) கனரக சரக்கு விமானங்களுடன் சிறிய எண்ணிக்கையான அன்ரனோவ்-32 டீ விமானங்களும் உள்ளன. இவை தவிர சில அன்ரனோவ்-24 வகை விமானங்கள் வாடகைக்கும் அமர்த்தப்பட்டுள்ளன. அவற்றினால் படையினருக்கான அவசர உதவிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

படையினருக்கான விநியோகங்கள் மற்றும் போக்குவரத்துக்களை மேற்கொள்ளக் கூடிய கனரக உலங்குவானூர்திகளின் நிலைமையும் இதே போன்றதே. ஆஐ-17 ரக உலங்குவானூர்திகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதை ஈடுசெய்யும் முகமாக தற்காலிக அடிப்படையில் இரு ஆஐ-17 உலங்குவானூர்திகளை இந்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதுடன், 2006 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கை அரசினால் இரு ஆஐ-17 உலங்குவானூர்திகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் இவை அவசர தேவைகளுக்கே பயனுள்ளது என்பதுடன் வடபோர் முனையில் உலங்குவானூர்திகளின் பயன்பாடும் மட்டுப்படுத்தப்பட்டவை.

படையினரின் வான்வழி வழங்கலிற்கு ஏற்பட்டுள்ள மற்றும் ஒரு அச்சுறுத்தல் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியாகும். பூநகரியில் உள்ள விடுதலைப் புலிகளின் 130 மி.மீ பீரங்கியின் தூரவீச்சுக்குள் பலாலி வான்படைத்தளம் உட்படுவதனால் கடும்சமர் ஏற்படும் காலங்களில் வான்படையினர் அதனை பயன்படுத்துவது மிகவும் சிரமமானது.

எனவே இறுக்கம் அடைந்துள்ள வடபோர் முனையில் உள்ள பெரும் தொகை படையினருக்கான விநியோகத்திற்கு முக்கிய பங்காற்ற கூடியது என தற்போது கருதப்படுவது கடற்படையே. வடபோர் முனையில் நடைபெறும் தற்காப்புச் சமருக்கு தேவையான உயிர்நாடியான விநியோகத்தின் பெரும் பகுதி கடல் விநியோகத்தில்தான் தங்கியுள்ளது.

புல்மோட்டை தொடக்கம் நாகர்கோவில் வரையிலான கடற்பகுதிகள் ஆபத்து நிறைந்ததாக நாளுக்குநாள் மாறிவரும் வேளை கடந்த வாரம் நெடுந்தீவில் மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கை மேற்குப்புற கடல் விநியோகத்திற்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தி உள்ளன.

மன்னாருக்கும் காரைநகருக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்கள் படையினரின் குடாநாட்டு நெருக்கடிகளுக்கு ஒரளவு உதவி வருவதுண்டு. கடந்த வருடம் முகமாலையிலும், வடபோர்முனை கடலிலும் மோதல்கள் உக்கிரமடைந்த போது காயமடைந்த படையினர் காரைநகரில் இருந்து மன்னார் ஊடாகவே நகர்த்தப்பட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் பீரங்கிகளின் தூரவீச்சுக்குள் பலாலி கூட்டுப்படைத்தளமும், அதன் ஓடுபாதையும் உட்பட்டிருப்பதால் முக்கிய தளப்பகுதியையும், இராணுவ மருத்துவமனையையும் காரைநகருக்கு மாற்றும் திட்டமும் முன்னர் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளின் படையணி ஏறத்தாழ 16 கடல்மைல்களை கடந்து சென்று நெடுந்தீவில் தாக்குதலை மேற்கொண்டது படையினரின் இந்த உத்திகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குப்புற விநியோக மார்க்கங்களை அல்லது அங்குள்ள படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பெருமளவான படையினர் தேவை என்ற நிலை தற்போது எழுந்துள்ளது.

எனவேதான் நெடுந்தீவு கடற்படை கண்காணிப்புத் தளத்தின் மீதான தாக்குதலை யாழ். குடாநாட்டை மீட்பதற்கான சமரின் ஒரு படி என பல ஆய்வாளர்கள் கணிக்க தலைப்பட்டுள்ளனர். அதாவது பெரும் சமர்கள் அல்லாது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில தாக்குதல்கள், அதற்கு பயன்படுத்தப்பட்ட படையணிகள் என்பன களத்தின் நிலைமைகளை முற்றாக மாற்றி அமைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்பாதுகாப்புச் சமருக்காக வெளிநாடுகளிடம் இராணுவ உதவிகளை கோரவேண்டிய நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களை மீறிச் செய்யப்படும் எந்த ஆயுத உதவிகளும் அங்குள்ள அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியன.

எனினும் அழிவைத்தரும் ஆயுதங்கள் அற்ற ஆயுதங்களின் விநியோகம் என்ற கருத்தின் அடிப்படையில் அது நவீன ராடார்கள், கடற்படைக் கப்பல்கள், எம்.ஐ-17 வகை உலங்குவானூர்திகள் போன்றவற்றை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் அழிவைத்தரும் ஆயுதங்கள் அற்ற ஆயுதங்கள் என்ற உதவிகள் கூட போரிடும் இரு தரப்புக்களினதும் இராணுவச் சமநிலைகளில் அல்லது படைபலத்தில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

உதாரணமாக பொஸ்னிய சேர்பிய போரில் பொஸ்னிய சேர்பியர்களுக்கு இடையிலான 4,951 விகித படைச்சமவலு கூட அரசியல் தீர்வு முயற்சிகளை சீர்குலைத்துவிடும் என நம்பப்பட்டது. எனவே சேர்பிய அரசின் படைவலுவை குறைப்பதையும் பொஸ்னியர்களின் படைவலுவை மேலோங்க செய்வதையும் மையமாகக் கொண்டே நேட்டோ படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முயற்சியில் பொஸ்னிய படைகளின் பலத்தை அதிகரிப்பதற்காக அழிவைத்தரும் ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய வழிகளிலான உதவிகள் என்ற அடிப்படையில் புலனாய்வுத் தகவல்களை வழங்குதல், பயிற்சி அளித்தல், போக்குவரத்து உலங்குவானூர்திகளை வழங்குதல் போன்றவற்றை நேட்டோ படைகள் வழங்கியிருந்தன. இது இராணுவச் சமநிலையில் கணிசமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

எனவே தற்போது இந்தியா வழங்க முன்வந்துள்ள உதவிகளும், ஏனைய நாடுகளிடம் அரசினால் கோரப்படும் உதவிகளும் வடபோர்முனையை கருத்திற்கொண்டு எடுக்கப்படும் முயற்சிகளே ஆகும்.

Please Click here to login / register to post your comments.