தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்!

ஆக்கம்: சபேசன்

அண்மைக்காலமாகச் சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, நிதி உதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன.

அவுஸ்திரேலிய அரசு, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுயசேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்காக 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.

இதேபோல் பிரித்தானிய அரசும், இடம் பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை வழங்க உள்ளது. வழமைபோல், இந்த நாடுகள் இலங்கைத்தீவில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல்களுக்குக் கவலை தெரிவித்திருப்பதுடன், சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் அமெரிக்க அரசும் கலந்து கொண்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் இத்தகைய செயற்பாடுகள், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களிடையே ஒருவித நம்பிக்கையையும் எதிர்பார்;ப்பையும் ஏற்படுத்தியிருப்பதோடு, மேற்குலகின் நிலைப்பாட்டில் (மன) மாற்றம்(?) ஏற்பட்டிருக்கின்றது என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளன. இ;வ்வகையான எண்ணம் எம்மவரிடையே உருவாகுவது இயல்பான ஒன்றுதான்! ஆனால் மேற்குலகின் தற்போதைய செயற்பாடுகள் அவற்றின் (மன) மாற்றத்தின்(?) ஊடாக உருவாகவில்லை என்பதையும், மேற்குலகின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள், உரைகள், போன்றவற்றை அவதானிக்கின்ற தமிழ் மக்கள், ஏமாந்து போய் திசை திரும்பிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி, சில கருத்துக்களை தர்க்கிக்க முனைவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ் மக்களின் அவசர மனிதாபிமான உதவிகளுக்காக இந்த மேற்குலக நாடுகள் வழங்கவுள்ள நிதியுதவியை வரவேற்கின்ற அதே வேளையில், சில முக்கியமான விடயங்களையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த சமாதானக்காலத்தில் மேற்குலகின் பலவிதமான அனுசரணைகளுடன் தமிழீழப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் பலவற்றை குண்டுகள் போட்டு அழித்தது சிறிலங்கா அரசுதான் என்பதை இந்த மேற்குலக நாடுகள் மறந்து விடக்கூடாது! இங்கே தமிழர்களுக்கு உதவி செய்கின்றோம் என்று நிதி வழங்குகின்ற மேற்குலகம், மறுபக்கத்த்pல் சிறிலங்கா அரசிற்கு ஆயுதங்களையும் இராணுவ உதவிகளையும் வழங்கிக் கொண்டிருப்பது அடிப்படையில் முரண்பாடான விடயமாகும்.

மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால் சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை முடக்கப் போவதாக இந்த உலக நாடுகள் சொல்லி வருகின்ற கருத்தாகும். இப்படியான கருத்துருவாக்கங்களையும், நிதி முடக்கங்களையும் நாம் ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். நேரடியாக நிதி முடக்கம் என்று அறிவித்து விட்டு, மறைமுகமாக வேறு வழிகளில் மேற்குலகம் சிறிலங்காவிற்கு நிதியுதவிகளைத் தொடர்ந்தும் வழங்கி வரப்போகின்றது என்பதில் ஐயமில்லை. இப்படியான செயற்பாடுகளை மேற்குலகம் வேறு தளங்களில் செய்தும் வந்திருக்கின்றது. இன்று சிறிலங்காவிற்கான நிதி உதவிகளில் அறுபது சத வீதமானவற்றை ஜப்பானே வழங்கி வருகின்றது.

கடந்த 2003 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு கிடைத்த வெளிநாட்டு நிதியுதவிகளில் 63 சதவீதம் ஜப்பானால் வழங்கப்பட்டதாகும். இன்று பிரித்தானியாவும் ஜேர்மனியும் நிதிமுடக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ஜப்பான் இந்த நிதி முடக்கத்திற்குத் தயாரில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 'சிறிலங்காவிற்கு ஜப்பான் வழங்கவுள்ள நிதித் திட்டத்தில் மாற்றம் எதுவும் இருக்காது' - என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜப்பானின் நிதியுதவித் திட்டங்களுக்கு அனுசரணையாக இங்கே மேற்குலகம்தான் செயற்படுகின்றது என்பதோடு மட்டுமல்லாது சிறிலங்காவிற்கு வேறு வழிகளில் நிதியுதவி செய்வதும் மேற்குலகம்தான்.!

நிதியுதவியை மட்டுமல்ல, இராணுவ மற்றும் ஆயுத உதவிகளையும் சிறிலங்காவிற்கு மேற்குலகம் வழங்கக் கூடாது! மேற்குலகம் என்று சிறிலங்காவிற்கான இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்துகின்றதோ அன்றுதான் இலங்கைத்தீவில் உண்மையான சமாதானம் உருவாகுவதற்கான வழி பிறக்கும்.!

பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற 'இலேசான திருப்பத்திற்கான' காரணிகளை நாம் சில வாரங்களுக்கு முன்னர் தர்க்கித்திருந்தோம். அதன்போது 'பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கின்ற தேர்தல் அங்குள்ள தமிழர்களின் கணிசமான வாக்குகள், பயங்கரவாதத்திற்கு எதிரான போர்(?) காரணமாக பிரித்தானியா அந்நியப்படுத்தப்படுதல், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், பிரித்தானியாவின் பிராந்திய மற்றும் பொருளாதார நலன்கள்' - ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி சில கருத்துக்களை முன்வைத்திருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் அப்பால், பிரித்தானியாவின் அடிப்படைக் கோட்பாட்டில் இன்னும் சரியான மாற்றம் வரவில்லை என்பதையும், ஆகையால் பிரித்தானியாவின் 'இலேசான திருப்பத்தைக்' கண்டு நாம் ஏமாந்து போய் விடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இப்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம்(?) ஏற்பட்டிருப்பதாகவும் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட் (JEFFREY LUNSTEAD) தெரிவித்துள்ள கருத்துக்கள் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டைக் காட்டுவதாகவும் செய்திகளும், ஆய்வுக்கட்டுரைகளும் தெரிவித்து வருகின்றன. இந்தக் கருத்துகள் யாவும் தப்பானவை என்பதோடு, தமிழீழ மக்களின் இன்றைய அழிவுகளுக்கான மூலகாரணம் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடுதான் என்பதையும் சுட்டிக்காட்டித் தர்க்கிக்க விழைகின்றோம். நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு மேற்குலகின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை அவதானிக்கின்ற எமது மக்கள், ஏமாந்துபோய் திசை திரும்பி விடக்கூடாது என்ற எமது தர்க்கத்தின் வேறு கூறுகளை நாம் இப்போது தர விழைகின்றோம்.

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் கருத்துக்கள் உண்மையில் ஒரு துணை ஆய்வுக் கட்டுரையில் வெளிவந்தவையாகும். THE UNITED STATES? - ROLE IN SRILANKA?S PEACE PROCESS ? 2002 -2006 என்ற இந்த ஆய்வு 41 பக்கங்களைக் கொண்டதாகும். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகச் சில கருத்துக்கள் இருப்பதுபோல் தோன்றினாலும் இந்த ஆய்வை ஆழமாகப் பார்க்கின்றபோது, அமெரிக்கா சிறிலங்கா அரசின் பேரினவாதக் கொள்கைகளுக்கு ஆதரவாக, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக எவ்வாறு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது என்பது புரியும். சுருக்கமாகச் சில விடயங்களை மட்டும் கவனிப்போம்.

ஜெவ்ரி லன்ஸ்ரெட் தனது ஆய்வில் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். கடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்வரை சிறிலங்காவிற்கு எந்தவிதமான இராணுவ நிதி உதவியையும் தாம் செய்யவில்லை என்று ஜெவ்ரி குறிப்பிடுகின்றார். (Foreign Military Financing Funding for SRILANKA in 2002 and 2003 was zero) ஆனால் 2004 ஆம் ஆண்டு அமெரிக்கா 2.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை சிறிலங்காவிற்கு இராணுவ உதவிக்காக அளித்ததாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த உதவி வித்தியாசமான விகிதங்களில் கூடிக் குறைந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முதல் சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் உயர் இராணுவ அதிகாரிகள் விஜயம் செய்தது அபூர்வமாக இருந்தது என்றும், ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தின் போது, உதாரணமாக 2004 ஆம் அண்டு பன்னிரண்டு தடவைகள் மிக உயர் இராணுவ அதிகாரிகள் சிறிலங்காவிற்கு விஜயம் செய்தார்கள் என்றும் ஜெவ்ரி குறிப்பிடுகின்றார். இதேபோல் சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகளுக்கு, சமாதானக் காலத்தின் போது அமெரிக்கா வழங்கிய பயிற்சிகளையும், இராணுவக் கல்வி வகுப்புகளையும் பற்றி அவர் குறிப்பிடுகின்றார்.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

போர்க்காலத்தில் சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளைச் செய்யாத அமெரிக்கா சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் மட்டும் ஏன் செய்தது?

ஏனென்றால், சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் இராணுவச் சமபல நிலையில் இருந்தார்கள். இந்தச் சமநிலையைக் குலைத்து தமிழ் மக்கள் தரப்பினைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டிருக்கின்றது. இது அமெரிக்கா தமிழீழ மக்களுக்கு இழைத்த அநீதியாகும்.

தெரிந்தே இவ்வாறு இராணுவ உதவிகளும் செய்யப்பட்டிருந்தால் வெளியே தெரியாமல் எத்தகைய இராணுவ உதவிகளை அமெரிக்கா சிறிலங்காவிற்கு வழங்கியிருக்கக்கூடும் என்று நாம் எண்ணிப் பார்க்கின்றோம். அத்தோடு இன்று இடம் பெயர்ந்து இன்னல்படுகின்ற மூன்று இலட்சம் தமிழ் மக்களையும், கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ள எமது உறவுகளையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தந்துள்ள இன்னுமொரு தகவலையும் நாம் இப்போது கவனிப்போம்.

'அமெரிக்கா, சிறிலங்கா அரசிற்கு தருகின்ற இராணுவ உதவிகள் என்பதானது ஓர் இராணுவத் தீர்வை ஊக்குவிப்பதற்காகக் கொடுக்கப் படவில்லை என்பதை, சிறிலங்கா அரசிற்கு தெளிவாக புரிய வைக்க நாம் (US) முயன்றோம்.!'

(US tried to make clear to that Govt of Srilanka the US Support, including military support was not an encouragement to seek a military solution)

இதனைப் படித்துவிட்டு சிரிப்பதா, அழுவதா அல்லது கோபம் கொள்ளுவதா என்று எமக்கு தெரியவில்லை. சிறிலங்கா அரசு என்பது ஏற்கனவே இனவாதக் கொலைகார அரசு என்று உலகறிந்த விடயமாக இருக்கின்ற வேளையில், அதற்கு மேலும் ஆயுத உதவிகளை - அதுவும் சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் - வழங்குவது என்பது என்ன நியாயம்? இது சமாதானத்திற்கு உதவுமா அல்லது சண்டைக்கு உதவுமா?

இது எப்படி இருக்கின்றது என்றால், ஏற்கனவே சின்னக் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு கொலை செய்து வருகின்ற கொலைகாரன் ஒருவனுக்கு பெரிய பட்டாக்கத்தியைக் கொடுத்துவிட்டு இதை வைத்துக் கொண்டு நீ கொலை செய்யக்கூடாது என்று சொல்வது போலிருக்கின்றது.

இவ்வளவற்றையும் செய்துவிட்டு 'இப்போது சிறிலங்;கா மனித உரிமைகளை மீறுகின்றது' என்று இவர்கள் கூறுவது படுமுட்டாள்தனமானது அல்லது படு போக்கிரித்தனமானது!

இங்கே இன்னுமொரு விசித்திரமான முரண்பாட்டையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

'இலங்கைப் பிரச்சனையில், ஒரு பயங்கரவாத இயக்கம் தன்னுடைய இலட்சியத்தைப் பயங்கரவாதம் மூலமாக அடையக் கூடாது என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும்' என்று ஜெவ்ரி கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையிலேயே பயங்கரவாத இயக்கமாக இன்று கருதப்படவில்லை. எங்கோ தொலைவில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்ற நீங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கருதிக்கொண்டு உங்களுடைய கறுப்புக் கண்ணாடி ஊடாக அதனைப் பார்த்தால் அது யாருடைய பிழை?

தவிரவும், அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தின் போது இதே அமெரிக்கா, பிரித்தானியாவிடம் சமாதானமாகப் பேசித் தீர்த்து, தங்களுடைய சுதந்திரத்தைப் பெற்றிருக்கலாமே? ஏன் அமெரிக்கா பிரித்தானியாவை எதிர்த்துப் போரிட்டது? ஏன் அமெரிக்கா வன்முறையை கையாண்டது? அன்றைய காலத்துப் பிரித்தானியாவின் பார்வையில் அமெரிக்காவின் ஜோர்ஜ் வொசிங்டன் பயங்கரவாதியல்லவா?- பின்னாளில் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டெலா போல! இன்னாளில் எமது வேலுப்பிள்ளை பிரபாகரன் போல!.

தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் ஜெவ்ரி லன்ஸ்ரெட், ஓர் ஏக்கப் பெருமூச்சையும் வெளியிடுகின்றார். 'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் 2003 ஆம் ஆண்டளவில் நேரடியான தொடர்பு உருவாகியிருக்குமேயானால் ஒரு நிரந்தரமான பலன் ஏற்பட்டு, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குகின்ற நிலைமை உருவாகியிருக்கும்! அத்தோடு அமெரிக்காவின் தெளிவான செய்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தெரிவித்திருக்க முடியும்| - என்று இப்போது ஜெவ்ரி கூறுகின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இவர்கள் நேரடியாக சந்தித்துத்தான் தமது கொள்கைளைத் தெளிவாக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிட்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட வேண்டும் என்கின்ற அமெரிக்காவின் கருத்தைத் தெளிவுபடுத்துவதற்காக அமெரிக்கா மேலும் மேலும் சிரமப்படத் தேவையில்லை. அது அமெரிக்காவின் நடத்தைகளால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது.

அமெரிக்காவின் தலைமையில் வாசிங்டனில் உதவி வழங்கும் நாடுகளின் சர்வதேச மகாநாடு ஒன்று 2003 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது இந்த உதவி வழங்கும் மகாநாட்டில் கலந்து கொள்ளத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழீழ மக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள். இதனைக் கண்டித்துத் தமிழீழ தேசியத் தலைமை வெளியிட்ட அறிக்கையில், 'சமாதானப் பாதையிலும் புனர்நிர்மாணக் குறிக்கோளிலும் எமக்குள்ள நம்பிக்கையை இது பாதிக்கும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எமக்குக் கவலையையும், ஏமாற்றத்தையும் தருகின்றது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து வந்த காலப்பகுதியில், நிலைமை மேலும் சிக்கலாகியபோது தேசியத்தலைவர் சில விடயங்களைத் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூறியுள்ளார். 'சர்வதேசத் தலையீடு சிறிலங்கா அரசிற்கு அனுகூலமாகவும், விடுதலைப் புலிகளுக்குப் பாதகமாகவும் அமைந்து வருகின்றது. நாசகாரச் சூழ்ச்சிகள் நிலவுகின்ற அரசுகளின் சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில், சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்தச் சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்து விடாமல் சுதந்திரமாகச் செயற்படவே நாம் விரும்புகின்றோம். அதன்படி டோக்கியோ மகாநாட்டில் பங்கு கொள்வதில்லை என்றும், பேச்சு வார்த்தைகளை இடைநிறுத்துவது என்றும் சிறிலங்கா அரசுக்கு அறிவிக்கும்படி' தேசியத் தலைவர் கூறியுள்ளார். தேசியத் தலைவரின் வேண்டுகோளின்படி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இதனை தெளிவுபடுத்திக் கடிதமும் எழுதினார்.

ஆகவே தமிழீழ தேசியத் தலைவருக்கு அமெரிக்கா சொல்ல வந்துள்ள செய்தியும், அதன் உள்ளர்த்தமும் தெளிவாகவே புரிந்துதானிருந்தது. ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் நாடகப் பெருமூச்சுக்கள் தமிழீழத் தேசியத் தலைமையிடம் பலிக்காது!

ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் இந்த ஆய்வு இன்னுமொரு உண்மையையும் வெளிக்கொண்டு வருகின்றது. 'அமெரிக்காவிற்குத் திருகோணமலை குறித்து ஆர்வமில்லை' என்ற கருத்தை விளக்குவதற்கு ஜெவ்ரி ஆழ்ந்த சிரத்தை எடுத்துள்ளார். இது உண்மையில் இந்தியாவிற்கான செய்தியேயாகும். ஆனால் அமெரிக்காவிற்கு திருகோணமலையில் இருக்கின்ற ஆர்வத்தையும், அமெரிக்காவின் கபட நாடகத்தையும் தற்போதைய நிலவரங்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

இன்று கிழக்கு மாகாணத்துத் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகின்றார்கள். தமிழர்களை இடம்பெயர வைக்க வேண்டும் என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ள சிறிலங்கா அரசு தொடந்தும் தமிழர்கள் மீது, அவர்களது வாழ்விடங்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. திருகோணமலையில் தமக்கு ஆர்வமில்லை என்று சொல்லுகின்ற அமெரிக்கா, சிறிலங்கா அரசின் இந்தச் செயலுக்கு ஆதரவான முறையில் நடந்து கொள்வது இப்பகுதிகளைத் தமிழர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே என்பதை நாம் உணரவேண்டும்.

எது எப்படியிருப்பினும், இந்தியாவிற்கான சார்பு நிலையில்தான் தமிழர்கள் இருக்க கூடியவர்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து வைத்துள்ளது. திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, சிங்களவர்கள் கையில் இருந்தால் அது தனக்குச் சாதகமானது என்றும், தேவைப்பட்டால் அதனை இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்கா எண்ணி வருகின்றது. இந்த அடிப்படையில்தான் தமிழர்கள் அங்கே அழிக்கப்பட்டுக் கலைக்கப்படுவதையும், சிங்கள பௌத்தக் கோயில்கள் கட்டப்படுவதையும் அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவற்றையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்க்pன்ற இந்தியாவோ பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு போய்விட்டது என்பதுபோல் மௌனமாக இருந்து வருகின்றது.

இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா விடயங்களை நன்கு புரிந்து திட்டமிட்டுத்தான் தங்களது செய்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் கூற்று நம்பக்கூடிய கூற்று அல்ல.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் சமாதானத்திற்கு எதிரான இராணுவ முன்னெடுப்புக்களையும் மேற்குலகம் நினைத்தால் எளிதில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். சிறிலங்கா அரசின் மீது செயல்வடிவில் அழுத்தங்களைக் கொடுத்தாலே சிறிலங்கா இறங்கி வரும் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய வகையில் இரண்டு தரப்பினரும் வலுச்சமநிலையில் இருந்த சூழலை மாற்ற முயன்று, இன்று இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது அமெரிக்காதான்! இதற்குப் பிறகும் சும்மா புலிகளைக் குற்றம் சொல்வதில் பலனில்லை.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் சதிவலைகளை எல்லாம் மீறிப் புதிய பரிமாணமாக, வான் புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்று வருவதும், இதனால் சிங்கள அரசு நிலைகுலைந்து போயிருப்பதும், சம்பந்தப்பட்டவர்களுடைய பொருளாதார நலன்கள் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதுவும்தான் இன்று இத்தகைய கருத்தோட்டங்களாக வெளிவருகின்றன. ஆகவே மேற்குலகின் இந்தக் கருத்தோட்டங்கள் குறித்துப் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதேவேளை, அமெரிக்காவையும் மற்றைய மேற்குலக நாடுகளையும் எவ்ளவு நுட்பமாகச் சிறிலங்கா அரசு ஏமாற்றி முட்டாள்களாக்கியுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியா ஏதாவது அழுத்தம் கொடுக்க முனைந்தால் சிறிலங்கா பாகிஸ்தானை அணுகும். அமெரிக்கா ஏதாவது கூறமுனைந்தால் சிறிலங்கா சீனாவிற்கோ, அல்லது மத்திய கிழக்கு அரபுநாடுகளுக்கோ போகும். இவ்வாறாகச் சிறிலங்கா அரசு சமாதானத் தீர்வில் பின்னோக்கிப் போய்விட்டது.

ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் ஆய்வு மறைமுகமாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றது என்றுதான் எமக்கு தோன்றுகின்றது. அதாவது இவ்வளவு படுமோசமான மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், இலட்சக்கணக்கான மக்களின் இடம் பெயர்வு மற்றும் சமாதானப் பேச்சுக்க ளின் தோல்வி - இவையாவற்றிற்கும் சிpறிலங்கா அரசு பொறுப்பில்லை. தன்னுடைய அமெரிக்க அரசுதான் இவ்வளவு அழிவுகளுக்கும்; பொறுப்பு என்பதையே, ஜெவ்ரி லன்ஸ்ரெட்டின் ஆய்வு மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது என்று நாம் நம்புகின்றோம்.

இன்று முக்கிய பிரச்சனையாக விளங்குவது அமெரிக்காவும், மற்றைய மேற்குலக நாடுகளும்தான். இந்த நாடுகள் நியாயமான, நேர்மையான, சரியான முடிவை எடுத்தால் பிரச்சனை சுலபமாக விரைவில் தீரும். இந்த நாடுகள் தங்களுடைய சிறு சிறு நலன்களுக்காக, இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் பலியாக்குகின்ற இனவெறி அரசுக்குத் துணையாக நின்று கொண்டு, தங்களுடைய பிழைகளுக்கான காரணங்களையும், நியாயங்களையும் சொல்லிக் கொண்டிருப்பது பிரச்சனைக்குத் தீர்வு தராது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசை நம்பி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவில்லை. உலக நாடுகளை நம்பித்தான் விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார்கள். சர்வதேசம் நியாயமாக, நேர்மையாக நடக்காததால்தான் இன்று எமது தமிழ் மக்கள் அழிகின்றார்கள்.

சுமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழ மக்கள் பிரிந்து சென்று வாழ்வதே நீதியான, யதார்த்தமான செயலாகும். இதற்கு இனியாவது சர்வதேசம் உதவ முன்வரவேண்;டும். இல்லாவிட்டால் வான்புலிகளின் பரிமாணத்தையும் விடப் பெரிய பரிமாணங்களை சிறிலங்கா அரசு எதிர்கொள்ளவேண்டி வரும். அதற்கு முன்னராக, மேற்குலகம் தனது தவறுகளைத் திருத்தி சரியான நேர்மையான விதத்தில் இலங்கைப் பிரச்சனையைக் கையாள வேண்டும்.

எமது வாசகர்கள் இக்கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Please Click here to login / register to post your comments.