புஷ்ஷை அடியொற்றி யுத்தத்தை முன்னெடுத்தால் `படுகுழிதான்'

* தமிழ் மக்களோடு அதிகாரத்தை பங்கிட்டு அபிவிருத்தியில் அவர்களை பங்காளியாக்கினால் நாட்டுக்கு விடிவு தொலைவில் இல்லை

அண்மையில் ஜோர்தானில் இடம்பெற்ற எ11 உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பாக விளக்கமளித்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேணுவதில் தனது அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இலங்கை ஒரு மிகக் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடு (LDC) அல்ல என்ற வகையில் சலுகை அடிப்படையில் வெளிநாட்டு நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்பு கிடையாது என்பதையும், அதேநேரத்தில் மத்திய நிலை வருமான நாடு (MIC) எனும் மட்டத்தினை எட்டியிருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, பயனளிக்கவல்ல அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடனுதவிகள் தான் இலங்கை வேண்டி நிற்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ எடுத்தியம்பினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்

கொடிய பயங்கரவாதத்தினை நாம் விரைந்து அகற்றுவதற்கு உழைக்கும் போது சில அபிவிருத்தி அடைந்த நாடுகள் பயங்கரவாதத்தின் பால் சகிப்புத்தன்மை காட்டி, அலட்சியப் போக்கினைக் கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி குற்றஞ் சுமத்தினார். 9/11 தாக்குதலையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் (War on Terror) நடவடிக்கையினை முடுக்கிவிட்டதுடன் அந்த முயற்சிக்கு "தம்பக்கம் இல்லாதவர்கள் எதிரிபக்கம்" எனக் கருதப்படுவார்கள். எனும் மிரட்டல் ஒன்றினை விடுத்திருந்தாரல்லவா? அண்மையில் சர்வதேச மன்னிப்பு சபை லண்டனில் நடத்திய 2006 ஆண்டறிக்கை வெளியீட்டு வைபவத்தில் அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் ஐரீன் கான், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" மற்றும் ஈராக் மீதான யுத்தத்தின் மூலம் இழைக்கப்படும் மனித அவலங்கள் காரணமாக சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ள கொடியதொரு கலாசாரமானது, அதாவது அரச அடாவடித்தனங்கள் எதையும் தட்டிச் கேட்க முடியாத நிலைமை காரணமாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதோ, சாதாரண பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோ மிக கடினமான காரியமாயுள்ளதென கவலை தெரிவித்தார். அரசாங்கங்கள் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் கண்டால் ஒழிய, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் குழுக்களைக் கட்டுப்படுத்தி, அவ்வவ் அரசாங்கங்களும் தத்தம் பொறுப்புணர்ந்து செயற்பட்டால் ஒழிய மனித உரிமைகள் பேணப்படுவது கேள்விக்குறியாகவே இருக்குமென ஐரீன் கான் குறிப்பிட்டுள்ளார். 2006 இல் இலங்கை அடங்கலாக உலகின் பல பாகங்களில் மனித உரிமைகள் பாரிய அளவில் சாக்கடையில் தள்ளப்பட்டிருப்பது பற்றி சர்வதேச சமூகம் தூக்கம் கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

"எம் பக்கம் இல்லாதவர்கள் எதிரி பக்கம்" போக்கானது இலங்கையிலும் இடம்பிடித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி புஷ் மீது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவரான ஜிம்மி காட்டர் வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். காட்டர் பின்வருமாறு கூறுகிறார். "அமெரிக்கா மீது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறைவான தாக்கத்தினை நோக்குமிடத்து இன்றைய நிர்வாகம் அமெரிக்க வரலாறு காணாதளவு மோசமானதாக விளங்குகின்றது. அமெரிக்காவின் அடிப்படை விழுமியங்கள் பட்டவர்த்தனமாக பாழடிக்கப்பட்டுள்ளன. போதாதென்று பிரித்தானிய பிரதமர் ரொனி பிளயர் புஷ்ஷின் ஏவலாளியாக விளங்கி ஈராக் யுத்தத்தை கண்மூடித்தனமாக ஆதரித்தமை உலகில் மிகப்பெரிய சாபக்கேடானதும் கேவலமானதும் ஆகும்" காட்டர் இவ்வாறு கடிந்ததை சகித்துக்கொள்ள முடியாமல், "காட்டர் செல்லாக் காசாகிவிட்டார்" என "வெள்ளை மாளிகை" எள்ளி நகையாடத் தலைப்பட்டது.

ஆனால், "நேசன் அன்ட் ட்றூத் அவுட்" (Nation and Truth out)எனும் அமைப்பினர் ஜிம்மி காட்டர் கூறியுள்ளது மிகச் சரியானதென வெகுவாகப் பாராட்டியுள்ளனர். மேலும், தமது ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சி மீது உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் காட்டி வரும் அப்பட்டமான அலட்சியமானது அமெரிக்க மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, காட்டரால் ஜனாதிபதி புஷ் இவ்வாறு அம்பலப் படுத்தப்படுவது அமெரிக்கர்கட்கு செய்யும் பெரிய நன்மையாகும்" காட்டரின் விமர்சனமானது புஷ் அமெரிக்கா மீது கொண்டு வந்துள்ள இருளை அகற்றச் சென்றுள்ளது எனலாம். 21 ஆம் நூற்றாண்டின் ஜோர்ஜ் மன்னர் எனக் கருதப்படுபவராகிய புஷ்ஷின் பைத்தியத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவுக்கும் உலகத்திற்கும் தெம்பூட்டுவதற்கு காட்டர் கூறிவைத்துள்ள சிறப்பான கருத்துகள் அத்தியாவசியமானவை" எனவும் மேற்குறித்த அமைப்பினர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

எனவே, இலங்கை அரச தரப்பினர் காட்டர் தெரிவித்துள்ள கருத்துக்களின் தாற்பரியங்களை உள்வாங்கி, நாட்டைப் படுகுழியில் தள்ளும் கைங்கரியத்தைக் கைவிட வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது என்பதே அரசியல் விமர்சகர்களின் அறைகூவலாகும்.

அரசியல் தீர்வுக்கான சர்வதேச அழுத்தங்கள்

இணைத்தலைமை நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அரசியல் தீர்வு காண வேண்டுமென திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்து வருகின்றன. இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு எட்டவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாதென பல காலமாக பல்வேறு வட்டாரங்களிலிருந்து அறிவுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால், குறிப்பாக, அதன் வெளிநாட்டமைச்சர் அலெக்சாண்டர் டவுணர் விடுதலைப் புலிகள் மீது கடும் போக்கினைக் கடைப்பிடித்து, பின்னர் அரசாங்கத்தினால் முற்றாக தடை விதித்திருந்த போதும், மிக அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான மனித உரிமை மீறல் கலாசாரத்தினை கடிந்ததுடன், வன்முறைகளை நிறுத்தி பேச்சுவார்த்தையை நடத்துமாறு அழுத்தியுள்ளது. உக்கிரமான போர் சூழல் காரணமாக ஏற்கனவே மோசமடைந்திருந்த மனித உரிமை நிலைமைகள் மேலும் சீரழிந்துள்ளதாகவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் ஆளாக்கப்படும் அவலங்கள் பற்றியும் பலத்த விசனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நடத்திய விவாதத்தின் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும், நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் பேச்சுவார்த்தைகள் பயனளிக்கும் விதத்தில் அமைவதற்காக விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கி வைப்பதற்கும் முயல முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர் குழுவினர் அடுத்தமாதம் புதிய பிரதமராகப் பதவியேற்க விருப்பவராகிய கோடன் பிறவுணைச் சந்தித்து இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு உழைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுக்கு அதனை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லைப் போலும். அது அவ்வளவு பெரிய காய்நகர்த்தல் அல்ல. பிரவுண் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை என இளநாக்கடித்துள்ளார்.

வடக்கு, கிழக்கும் மனித உரிமை மீறல்களும்

சென்ற பெப்ரவரி மாதம் இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இங்கே ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காமல் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இலங்கையில் ஒரு நிரந்தரமான ஐ.நா. கண்காணிப்பு நிலையம் நிறுவப்பட வேண்டுமென தீவிரமாக ஆராயப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லுயி ஆபர் மற்றும் "ஹியூமன் றைற் வோச் (HRW), ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (அஏகீஇ), சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புகள் சார்ந்த பிரதிநிதிகள் அதனை கடுமையாக வலியுறுத்தினர். ஆனால், இலங்கை அரச பிரதிநிதிகள் ஒருவாறு அதனைத் தட்டிக்கழிப்பதில் வெற்றி கண்டனர். எனினும், தொடர்ந்து அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் மாதம் ஜெனீவா செல்லவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆணையாளர் ஆபரைச் சந்திக்க உத்தேசித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச பிரபல்ய பிரமுகர்களின் (IIGEP) கண்காணிப்புடன் நீதியரசர் உடலகம தலைமையிலான விசாரணைக்குழு (COI) செயற்படுகிறது என ஜனாதிபதி கூறுவார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியமளிப்பவர்கட்கும் வேண்டிய பாதுகாப்பு வழங்க முடியாதநிலையில் அது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்பது தெட்டத் தெளிவான விடயமாகும். இது முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டிய தொன்றாகும்.

வடக்கு, கிழக்கில் ஆயுதப்படையினர் சம்பந்தப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், அவை அநுராதபுரம் அல்லது கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டுமென இராணுவத்தினர் எண்ணங்கொண்டு மேல் நீதிமன்றத்தின் உத்தரவை நாடியிருந்தனர் என்றால், ஆயுத படையினரால் மனித உரிமைகள் எவ்வளவு தூரம் மலினம் செய்யப்படுகின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை. குறிப்பாக, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை ஒரு இடைக்கால உத்தரவையும் வேண்டியிருந்தனர். சட்டமா அதிபர் தரப்பில் அதற்கு சாதகமாக வாதிடப்பட்ட போதும் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. நீதி தேவதை இந்த நாட்டிலிருந்து முற்றாக மறைந்துவிடவில்லை என்பது ஓரளவேனும் தெம்பூட்டும் ஒளிக்கீற்றாயுள்ளது எனலாம். மறுபுறத்தில் ஆயுதப் படையினர் தமது தரப்பிலான சாட்சிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களிலேயே பாதுகாப்பு இல்லையெனச் சொன்னால் அவர்கள் அங்கே ஏன் நிலை கொண்டிருக்க வேண்டும் எனும் கேள்வி எழவே செய்கிறது.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமென எவ்வளவுக் கெவ்வளவு அரசாங்கம் முனைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு விடுதலைப் புலிகளும் தமது செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர் என்பதையே காணமுடிகிறது. நெடுந்தீவு மற்றும் கொழும்பு துறைமுக வாசலில் நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல்கள் போன்ற நடவடிக்கைகள் ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெற்ற வண்ணமேயுள்ளன. தமிழர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டின் அபிவிருத்தி முயற்சியில் அவர்களைப் பங்குதாரர்களாக்கினால் நாடு முன்னேற்றப்பாதையில் வீறு நடைபோடும் என்பதை மட்டும் ஆட்சியாளர் உணரத் தலைப்படுவார்களாயின் நாட்டின் விடிவு வெகுதூரத்தில் இல்லை எனலாம்.

Please Click here to login / register to post your comments.