‘தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ – பசமைத் தாயகம் பிரச்சாரம்

சென்னை, ஏப்ரல் 20: ‘தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை புசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று (20-04-2007) சென்னை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் மேற்கொண்டார்.

இப்பிரச்சாரத்திற்கு பசுமைத் தாயகம் துணைச் செயலாளர் ச.க.சங்கர் தலைமை வகித்தார். சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது, நுகர்வோர்கள் தங்கம் வாங்கும் முன்பு அது சுற்றுச் சூழலை பாதிக்காமல், காடுகளை அழிக்காமல், மனித உரிமைகளை நசுக்காமல் உருவானதா என கடைக்காரர்களிடம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நகைக்கடைக்காரர்கள் தாங்கள் விற்கும் தங்கம் இத்தகைய தீமைகள் இல்லாமல் உருவானது என உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர.அருள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இந்திய அளவில் அதிக தங்கம் விற்பனையாகும் பகுதி தென்னிந்தியாதான்! கடந்த 2006 ஏப்ரல் அட்சய திருதியை நாளில் மட்டும் இங்கு 70,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது!

இந்திய மக்களிடம் ஏற்கனவே உள்ள தங்கத்தின் அளவு சுமார் 14,000 டன் ஆகும். இது அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு நாடுகளிடம் கூட்டாக உள்ள தங்கத்தைவிட அதிகமான அளவாகும்.

இந்தியர்களின் தங்க நகை மோகத்தால் வரதட்சணை கொடுமை பெண் சிசுக்கொலை போன்ற பலக்கேடுகள் உள்நாட்டில் நேருகின்றன. உலகளவில் சுற்றுச்சூழல் மாசு. தொழிலாளர் உரிமை பறிப்பு, மனிதவுரிமைகள் பாதிப்பு எனப் பல கேடுகளுக்கு இது காரணமாகிறது.

ஒரு சாதாரண மோதிரத்துக்கு தேவையான தங்கத்தை எடுக்க சராசரியாக இருபது டன் மண்வெட்டி எடுக்கப்படுகிறது. ஏற்கனவே, தங்கம் கிடைத்த பகுதிகளில் தங்கம் தீர்ந்து போய்விட்டதால், புதிய இடங்களில் புதிய சுரங்கங்கள் தோண்டப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளும், மலைகளும் அழிக்கப்படுகின்றன. எனவே 1995-2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையே உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதியளவு பழங்குடியினர் வாழும் காட்டுப்பகுதிகளை அழித்தே எடுக்கப்படும் என மதிப்பிட்டுள்ளார்கள்.

தங்கத்தின் தேவைக்காக காடுகள் அழிக்கப்படுவதும், மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதும் மனித உரிமை சிக்கலாக உருவெடுத்துள்ளன. இந்தோனேசியா, கானா, பெரு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏராளமானோர் அப்புறப்படுத்தப்படு;டுள்ளனர்.

சுரங்கங்களில் எடுக்கப்படும் தாது மண் சயனைட் நச்சு கொண்டு கழுவப்பட்டே தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. ஒரு அரிசி அளவு சைனட் மனிதனைக் கொல்லக்கூடியது. இத்தகைய நச்சால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன. நீர்வாழ்வன அழிகின்றன.

தங்கத்தை தூய்மை செய்யும்போது சல்பர் ஆக்சைட்டு நச்சுக் காற்ற வெளியாகிறது. இது காற்று மாசுபாட்டிற்கு காரணமாகிறது.

தங்கச் சுரங்கங்களில் மனிதவுரிமை மீறல்கள், தொழிலாளர் உரிமை பறிப்பு, சுற்றுச்சூழல்கேடு என பல சிக்கல்கள் தீர்வு காணப்படாமல் நீடிக்கின்றன. உண்மையில் தங்கம் அதன் உற்பத்தி மதிப்பை விட நான்கு மடங்க அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த கொள்ளை இலாபத்தில் ஒரு சிறு பகுதியை செலவிட்டு, தங்கத்தால் ஏற்படும் தீமைகளை சரிசெய்ய தங்க உற்பத்தியாளர்கள் முன்வரவில்லை!

எனவே, நுகர்வோர் நினைத்தால் மட்டுமே தங்கத்தால் ஏற்படும் தீமைகளை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். இதற்காக No Dirty Gold எனும் இயக்கம் மேலை நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தங்கத்தை வாங்கும் முன்பு அங்த தங்கம் சுற்றுச்சூழலையும் மனித உரிமைகளையும் பாதிக்காத வகையில் உருவானதா என்ற கேள்வியை கடைக்காரர்களிடம் கேட்க இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. இதனால், பல முன்னணிக் கடைக்காரர்கள் இதே கோரிக்கையை தங்க உற்பத்தியாளர்களிடம் வைப்பதுடன் தங்களது கடைகளில் இத்தகைய ‘பாவ தங்கம்’ இல்லை எனவும் உறுதி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் நகைக்கடைகளும் இத்தகைய முன்னுதாரணத்தை பின்பற்ற முன்வரவேண்டும். தமிழக நுகர்வோர் அதனை வலியுறுத்த வேண்டும் என பசுமைத் தாயகம் கேட்டுக்கொள்கிறது.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இர.அருள்
மாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம்
94443 44331

SAY NO TO DIRTY GOLD

Please Click here to login / register to post your comments.