மகிந்தரின் கிழக்குப் போர் விரைவில் முட்டுச் சந்திக்கு வரும்?

ஆக்கம்: சங்கரன் சிவலிங்கம் (கனடா)
தமிழ் மக்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல, சர்வதேச நியமங்கள், விழுமியங்களையும் புறக்கணித்துவிட்டு ஷ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது மிலேச்சத்தனமான யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத்தினால் மட்டக்களப்பின் படுவான்கரை பகுதி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. வயல் அறுவடைக் காலத்தின்போது மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். சுமார் 170,000 பேர் வரை அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான விதிகளுக்கேற்ப இடம்பெயர்ந்தவர்களின் நலன்கள் எதுவும் கவனிக்கப்படவில்லை. மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத கூடாரங்களில் வாழுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு கூடாரங்களுக்கே வந்து இளைஞர்களை கைது செய்வதும் கடத்துவதும் தொடர்கின்றது.

மறுபக்கத்தில் படையினர் கைப்பற்றிய பிரதேசங்களிலுள்ள மக்களின் உடைமைகள் படையினராலும், எல்லைப்புற சிங்கள கிராமவாசிகளினாலும் கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. படையினரின் வாகனங்களிலேயே எடுத்துச் செல்லப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். இக்கொள்ளையடிப்புகளுக்கு மக்களின் உடைமைகள் மாத்திரமல்ல, கோவில் உடைமைகளும் இரையாக்கப்பட்டுள்ளன. பல ஆலயங்களில் கோவில் விக்கிரகங்கள் உட்பட பல உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவில் முகாமையாளர்கள் கூறியுள்ளனர். ஒரேநேரத்தில் மக்களின் பொருளாதார அடித்தளங்களை மட்டுமல்ல கலாசார அடித்தளங்களையும் அழிக்கும் கொடூரம் நடந்து கொண்டிருக்கின்றது.

அதேவேளை, நடைபெறும் நிகழ்வுகள் திட்டமிட்டு வெளியுலகம் அறியாதவாறு தடுக்கப்படுகின்றன. உள்ளூர் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் செய்யவிடாது அச்சுறுத்தப்படுகின்றனர். வணக்கத்துக்குரிய மட்டக்களப்பு- திருகோணமலை ஆயர் கூட வெளியுலகத்துக்கு செய்திகளை தெரிவிக்கவிடாது தடுக்கப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் வாயைத் திறக்கவே அஞ்சுகின்றனர். போதாக்குறைக்கு தமிழ்த் தினசரி பத்திரிகைகளில் தினக்குரலும், சுடரொளியும் மட்டக்களப்பில் தமிழ்க் குழு ஒன்றினால் தடை செய்யப்பட்டுள்ளன. வீரகேசரி ஞாயிறு இதழ் அனுமதிக்கப்படுவதில்லை. பத்திரிகைகளைத் தடுக்கும் தமிழ் குழுவிற்கு மக்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கவோ, கோவில் உடைமைகள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கவோ முடியவில்லை என்பதுதான் மட்டக்களப்பு மக்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சோகம்.

கிழக்கின் உண்மையான யதார்த்தத்தை முஸ்லிம் மக்களும், மட்டக்களப்பு மத்திய தர வர்க்கத்தின் ஒரு பிரிவினரும் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தரிசிக்கத் தொடங்கியுள்ளனர். வட- கிழக்கு இணைந்து செயற்படாமல் கிழக்கில் பேரினவாத ஆதிக்கத்தை தடுக்க முடியாது என்பதே அந்த யதார்த்தமாகும். இந்த யதார்த்தம் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களுக்கும் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது. இதனால்தான் வட, கிழக்கின் பிரிப்பிற்கோ அரசுடன் இணைந்து நிற்கும் குழுவினரின் நடவடிக்கைகளுக்கோ அவர்கள் சிறிதளவாவது ஆதரவு காட்டவில்லை. மாறாக, தமிழ்த் தேசியத்தின் பால் தமக்குள்ள பிரிக்க முடியாத பற்றுறுதியை தொடர்ந்தும் வெளிக்காட்டி வந்தனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதற்கு நல்ல உதாரணமாகும். அத்தேர்தலில் திருகோணமலையிலும் அம்பாறையிலும் சகல தமிழ் உள்ளூராட்சிச் சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே வெற்றி பெற்றிருந்தனர். ஒரு ஆசனத்தைக் கூட ஏனையவர்களால் வெற்றி பெற முடியவில்லை. யாழ். மாவட்டத்தில் கூட இவ்வாறான தெளிவான வெற்றி கிடைத்திருக்குமென கூறிவிட முடியாது.

தேசிய இனப்பிரச்சினை என்பது அடிப்படையில் நிலம் பற்றிய பிரச்சினைதான். நிலத்துடன் கூடிய இருப்பிற்கான அச்சுறுத்தலே தேசிய இனம் சந்திக்கின்ற பிரதான ஒடுக்குமுறையாகும். ஏனைய ஒடுக்குமுறைகள் எல்லாம் உப ஒடுக்குமுறைகளே. தமிழர் தாயகத்தில் நிலத்துடன் கூடிய இருப்பினை அதிகளவில் நேரடியாகச் சந்திக்கின்றவர்கள் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களும், அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுமே ஆவர். இதனால்தான் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுடன் சிறிதளவு கூட பிரிக்க முடியாத வகையில் இணைந்திருக்கின்றனர். அவர்களின் யதார்த்த நிலை விரும்பினாலோ விரும்பாவிட்டலோ போராட வேண்டும் என்பதுதான். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நெருக்கடி அறவே இல்லை எனக் கூறிவிட முடியாது. அதன் எல்லைப் புறங்களில் இந்த நெருக்கடிகள் இருக்கின்றன. ஆனால், அதன் தாக்கத்தினை முழு மட்டக்களப்பு சமூகமும் உணரும் நிலை இன்னமும் உருவாகவில்லை. மொத்தத்தில் முழுக் கிழக்கு மாகாணமும் தேசிய இன ஒடுக்குமுறையிலேயே சிக்குண்டு இருக்கின்றது. உண்மையில் தேசிய இனப்பிரச்சினையின் மையமான நெருக்கடி கிழக்கிலேயே இருக்கின்றது. இதனால்தான் கிழக்கினை வெற்றி கொள்ள பேரினவாதம் துடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நில நெருக்கடி சற்றுக் குறைந்த வலிமையான தளப் பிரதேசங்களை கொண்டிருக்கின்ற வடக்குடன் இணைந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முகங்கொடுக்கின்றபோதே கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் என்றாலும் சரி, முஸ்லிம் மக்கள் என்றாலும் சரி தமது இருப்பினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். படையினரின் தற்போதைய ஆக்கிரமிப்பும், அதற்குப் பின்னாலிருக்கின்ற பேரினவாத செயல்திட்டங்களும் வெளிப்படுத்துகின்ற அபாயமான செய்திகளும் இவையேயாகும்.

தமிழர் தாயகத்தில் அகரீதியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. நீண்டகால காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கள் என்ற வகையில் சமமற்ற பிரதேசங்கள் என்ற நிலை இருக்கவே செய்கின்றது. அப்பிரச்சினைகளை தேசிய அபிலாஷைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அணுகுவதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். எனினும், பிரச்சினைகளுக்கான ஒட்டுமொத்தத் தீர்வு அதிகாரங்கள் தமிழ் மக்களின் கைகளுக்கு வந்ததன் பின்னர்தான் சாத்தியமாகும் என்பதை நாம் மறுக்கக் கூடாது. தேசிய அபிலாஷைகளை மீறி இதற்கு முக்கியத்துவம் கொடுப்போமாயின் பேரினவாதம் எல்லோரையும் காவு கொண்டு விடும் என்பதே நடைமுறை யதார்த்தமாகும். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளும் இதற்கு ஒருபோதும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற இடைவெளிகளினூடாக நுழைந்து தமிழ் பேசும் மக்களின் முழு இருப்பையுமே சிதைப்பதற்கு பேரினவாதம் தயாராக இருக்கின்றது என்பதை நாம் மறக்கக்கூடாது.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களின் தாயகமும் அதுவேயாகும். தமிழரசுக் கட்சிக்காலத்திலிருந்து இவ்வுண்மையை எவரும் மறுக்கவில்லை. வட, கிழக்கின் அதிகாரங்கள் நியாயமான வகையில் முஸ்லிம் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படல் வேண்டும் என்பதும் மறுக்கப்படவில்லை. ஆனால், முஸ்லிம் சமூகமும் அதன் அரசியலும் வட, கிழக்கு வேண்டி நிற்கின்ற அரசியலுக்கு வெளியாகவும், எதிராகவும் நின்றபோதே பல வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெற்றன. தற்போது யதார்த்தநிலை தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளமையினால் இரு சமூகங்களினதும் எதிர்கால நன்மை கருதி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான மார்க்கங்களை நாம் கண்டாக வேண்டும். இது விடயத்தில் நம்பிக்கைகளை உருவாக்குகின்ற பொறுப்பும் அதனைப் பகிர்ந்து கொள்கின்ற பொறுப்பும் இரு சமூகங்களுக்கும் இருக்கின்றன.

இனி கிழக்கு நடவடிக்கைககள் தொடர்பான பேரினவாதத்தின் இலக்குகளைப் பார்ப்போம். பேரினவாதத்தின் பிரதான இலக்கு கிழக்கினை முழுமையாக சிங்கள மயப்படுத்துவதுதான். அச்சிங்கள மயமாக்கலுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் அதன் அடிப்படையிலான புலிகளின் ஆதிக்கமுமே ஆகும். இந்நிலையினை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்பதில் பேரினவாதம் மிகவும் குறியாக இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தினை நசுக்குவதற்கு முதலில் முஸ்லிம் மக்களினையும் பின்னர் கருணா குழுவையும் எதிராகத் திருப்பியது. தற்போது முழுமையாக சிதைக்கும் வகையில் நேரடி ஆக்கிரமிப்பிலும் அழித்தொழிப்பிலும் இறங்கியுள்ளது. விடுதலைப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் சிங்கள குடியேற்றங்களினூடாக தமிழ் மக்களின் கூட்டிருப்பினை ஆட்டம் காணச் செய்தது. இக்குடியேற்றங்கள் இல்லாவிட்டால் கிழக்கிலும் படையினரால் கால் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தை வில் போல வளைத்துள்ள இக்குடியேற்றங்களே படையினரின் காலூன்றல்களுக்கான பின்தள வளங்களை உருவாக்கியுள்ளது. கந்தளாய், சேருவில, மொறவேவ, பதவியா குடியேற்றங்கள் இல்லாவிட்டால் சம்பூர் பறிபோயிருக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்காது. சம்பூர் பறிபோகவில்லை என்றால் வாகரையும் காப்பற்றப்பட்டிருக்கும் படுவான்கரையும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

தற்போது படையினர் படுவான்கரையின் தென்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். 4-5 என அழைக்கப்படுகின்ற செங்கலடி- பதுளை பாதையினை முழுமையாக கைப்பற்றியுள்ளோம் எனக் கூறியுள்ளனர். இப்பாதைக்கு வட பகுதியிலேயே புலிகளின் தலைமையகம் அமைந்திருக்கின்ற கரடியனாறும் தொப்பிகலை காட்டுப் பிரதேசமும் உள்ளது. இப்பிரதேசங்களை முழுமையாகக் கைப்பற்றிப் பாதுகாக்க முடியுமெனக் கூற முடியாது. முன்னரும் படுவான்கரைப் பிரதேசத்தினைக் கைப்பற்றி சில மாதங்களே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். மிகச் சொற்ப காலங்களிலேயே அதனைக் கைவிட வேண்டி ஏற்பட்டது. வேண்டுமானால் A5 பாதையை மட்டும் சில குறிப்பிட்ட காலம் நீளப் படையினரை நிறுத்தி பாதுகாப்பில் வைத்திருக்க முடியும். ஏனைய பகுதிகளில் புலிகளின் நடமாட்டப் பகுதியாகவே இருக்கும். புலிகள் கெரில்லாத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணமேயிருப்பர். வேறு சில முக்கிய பகுதிகளில் புலிகள் தாக்குதல்களைத் தொடர்ந்தால் படையினரை வாபஸ் பெற வேண்டிய நிலையே ஏற்படும்.

சர்வதேச அரசியல் காரணமாக புலிகள் இன்னமும் தாக்குதல் யுத்தத்தினை ஆரம்பிக்கவில்லை. தற்காப்பு யுத்தத்தினையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். சர்வதேசத் தலையீடுகள் தொடர்ந்தும் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் அவர்கள் தற்காப்பு யுத்தத்தினையே நடத்திக் கொண்டிருப்பர். அவர்களும் தாக்குதல் யுத்தத்தினை ஆரம்பித்தால் பெரும் போர் வெடிக்கும். இப்பெரும் போரினை சர்வதேச சக்திகளோ, இந்தியாவோ விரும்பாததினால் அவர்களின் நகருகைகளுக்கு புலிகள் சந்தர்ப்பத்தி னைக் கொடுத்திருக்கின்றனர். பெரும் போர் சர்வதேச சக்திகளின் நலன்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்கும் ஆபத்தானது. தற்போது வட, கிழக்கு மீனவர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்களும் கடலுக்கு போக முடியாத நிலையில் உள்ளனர். இது தமிழ்நாட்டில் வேண்டத்தாகத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்தியா நீண்ட காலத்துக்கு போர் நடப்பதை விரும்பப்போவதில்லை. புலிகள் விமானத் தாக்குதல் மூலம் பெரும் போருக்கு தாம் தயாரென வெளிக்காட்டியுள்ளமையினால் சர்வதேச சக்திகள் பாரிய அழுத்தங்களை அரசுக்கு கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை நிறுவனங்கள் முடுக்கி விடப்பட்டதுமல்லாமல் மகிந்தர் மூலம் தீர்வைக் காண முடியாதபோது அரசைக் கவிழ்க்கும் முயற்சியிலும் ஈடுபடத் தயாராக இருப்பதுபோலத் தெரிகின்றது. ரணிலின் அண்மை முயற்சிகள் அதை நோக்கியே செல்கின்றன.

சமாதான செயற்பாடுகளைப் பொறுத்தவரை யுத்த நிறுத்த உடன்படிக்கையும் அரசியல் தீர்வுமே அதன் அடிப்படைத் தளங்களாகும். உடன்படிக்கையை மீறி புலிகளின் பிரதேசங்களை படையினர் கைப்பற்றியுள்ளமையினால் உடன்படிக்கை விதிகளைப் பேண மகிந்தரால் முடியாது. அதேவேளை, நீதிமன்றத்தினைக் கொண்டு வட, கிழக்கினை பிரித்ததினால் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியாதவராகவும் மகிந்தர் உள்ளார். இதனால் மகிந்தருக்குள்ள ஒரே தெரிவு யுத்தத்தினை தொடர்வதுதான். ஆனால், யுத்தம் தொடர்வதை சர்வதேச சக்திகள் விரும்பப்போவதில்லை. இந்நிலையில் மகிந்தர் ஒரு முட்டுச்சந்தியில் நின்று கொண்டிருக்கின்றார். அவருடைய செழிப்புக்காலம் தற்போது தேயத் தொடங்கியுள்ளது.

மங்கள சமரவீர- ஸ்ரீபதி சூரியாராச்சி வெளித்தோற்றத்தைத் தொடர்ந்து அவரது அரசியல் ரீதியான செழிப்புக்காலம் தேயத் தொடங்கியது. புலிகளின் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அவரது இராணுவ ரீதியான செழிப்புக் காலமும் தேயத் தொடங்கியுள்ளது. புலிகளின் விமானத் தாக்குதல் ஒருவகையில் சர்வதேச சக்திகளுக்கு வழங்கப்பட்ட சைகையே. தங்களுடைய நடவடிக்கைகளுக்கு அவகாசம் தருவதற்காகவே தாக்குதல் யுத்தத்தை நாம் நடாத்தவில்லை.

இதனைப் பலவீனமாகக் கருதி பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் தாங்களும் நுழைந்து கொள்ள வேண்டாம் என்பதே அச்சைகையாகும். சர்வதேச சக்திகளும் அச்சைகையினை புரிந்து கொண்டுள்ளனர் போலவே தெரிகின்றது. இதனால் தான் விமானத் தாக்குதல் தொடர்பாக புலிகளைக் கண்டிக்காமல் அரசுக்கு அதிகளவான அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றனர். அழுத்தங்கள் சரிவராத நிலையில் ரணிலின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு அவர்களும் உதவி செய்யக் கூடும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மாகாணத்தை முழுமையாக கைப்பற்றிய பின் மாகாண சபைத் தேர்தலை நடாத்தி தனக்கேற்ற வகையில் அதற்கு ஓர் அரசியல் தலைமையைக் கொடுப்பது அரசின் ஆரம்ப இலக்காக இருந்தது.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் வாழும் மூன்று சமூகங்களும் ஒருவருடைய அதிகாரத்தின் கீழ் இன்னொருவர் வாழுவதற்கு தயாராக இல்லை. மூன்று மாகாண சபைகள் உருவாக்கப்பட்டால்தான் இவர்களுடைய அபிலாஷைகளை தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், பேரினவாதம் அதற்கு தயாராக இல்லை. அரசியல் தலைமை கொடுப்பது கட்டுப்பாடுகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டிய செயல் என்பதால் படையினரும் அதனை விரும்பவில்லை. படையினர் தங்களுடைய நேரடி நிர்வாகத்தில் கிழக்கு மாகாணத்தை வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

எனவே, கிழக்கு மாகாணத்தின் நிர்வாகம் மேலும் மேலும் இராணுவ மயமாகுவதற்கான வாய்ப்புகளே உண்டு. திருகோணமலை மாவட்டம் ஏற்கனவே இராணுவ நிர்வாகத்துள் வந்துவிட்டது. ஏனைய மாவட்டங்களும் விரைவில் இராணுவ நிர்வாகத்தினுள் முழுமையாக கொண்டு வரப்படலாம். அவ்வாறு வந்துவிட்டால் அரசாங்கம் பதவிகள், உதவி அரசாங்க அதிபர் பதவிகள் என்பவற்றையும் இராணுவத்தோடு தொடர்புபட்டவர்களே நிரப்பிக் கொள்வர். இது ஒருவகையில் பாகிஸ்தானின் நிலையை ஒத்ததாக அமையும். எனினும், இவ்விராணுவ நிர்வாகம் அம்மாகாணத்தின் அமைதிக்கு நீண்ட காலத்துக்கு உதவப்போவதில்லை.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு இது ஒரு சகிக்க முடியாத நெருக்கடி கட்டம் தான். ஆனால், சகலவற்றுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றே வரலாறு அவர்களை நிர்ப்பந்திருக்கின்றது. வடக்குத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் வாழ் தமிழர்கள் அனைவரும் எப்போதும் அவர்களுக்குத் துணையாக நிற்பதற்கு தயாராக இருப்பதனால் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நீண்ட காலத்துக்கு எவற்றுக்கும் அஞ்சத் தேவையில்லை. மகிந்தரின் போர் முயற்சிகள் பல்வேறு பக்க விளைவுகளினால் விரைவில் முட்டுச்சந்திக்கு வரும்.அதுவரை பொறுத்திருப்போம்.

Please Click here to login / register to post your comments.