புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள்

ஆக்கம்: பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி
01. நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள்.

- சம்பூரிலிருந்து புலிகள் பின்வாங்கியது குறித்து அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்.

02. களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும்.

- பனிச்சங்கேணி, முகமாலை முறியடிப்புச் சமர்களை முன்வைத்து ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ்.

03. மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள் புலிகள். வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமானால் ஒன்றை புரிந்து கொள்ளல் அவசியம். மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை.

- வாகரைச் சமரை முன்வைத்து படைத்துறை ஆய்வாளர் அருஸ்.

கடந்த வாரம் நான் எழுதியிருந்த 'புலிகளின் ஏகபிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும்" என்ற கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் நான் எதிர்பார்த்த கோணத்திலிருந்து மாறுபட்டிருந்தன அவை. ஏனெனில் நான் அந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியபோதிருந்த மனநிலை அதை முடித்திருந்த போது எனக்கிருக்கவில்லை.

கொஞ்சக்காலமாகவே தனிப்பட்ட ரீதியில் மன உளைச்சலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து மீள்வதும் வீழ்வதுமாக அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர்கள் அரச புலனாய்வுத்துறையினர் என்று நான் சந்தேகிக்கின்ற போதிலும் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஒரு உளவளத்துணை நிலைய நிர்வாகத்தினரும், அதன் இயக்குனர்களில் ஒருவரான ஒரு உளவியற்துறை பேராசிரியரும் அவரது உறவினர்களும் அடங்குவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால்; நிஜம் என்னவோ அதுதான்.

தமது பதவி, நிலையத்தின் நோக்கம் என்பவற்றையெல்லாம் மறந்து ஒரு இனத்தின் பண்பாட்டுச் சீரழிவுக்குத் துணைபோகும் அவர்களின் அரசியலை அடையாளங்காண முடியவில்லை. இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை தெரியாமல் செயகிறார்களா என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

'விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்" என்ற அமில்கர் கப்ராலின் தத்துவத்தை முன்வைத்து உளவியல், பெண்ணியம், மனித உரிமை என்ற தளங்களில் விரிவாகப் பேச வேண்டிய விடயங்கள் அவை. இது குறித்து பிறிதொரு கட்டத்தில் விரிவாகவும் ஆழமாகவும் பேசுவோம். இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.

மேற்குறிப்பிட்ட மன உளைச்சலின் காரணமாக அந்தக் கட்டுரையில் சொல்ல வந்த விடயத்தை சரியான முறையில் சொல்லவில்லையோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன். எனவே எதிர்வினைகளில் நான் எதிர்பார்த்தது அது குறித்துத்தான். ஆனால் மாறாக எதிர்வினைகள் வேறு இரு வடிவங்களில் இருந்தன.

01. வழமை போன்று புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்க மறுக்கும் தேசவிரோதக் குரல்கள்.

02. தமிழ்த் தேசியத்தை ஆதரித்தும் நேசித்தும், ஆனால் சமாதான காலத்தில் நம்பிக்கையிழந்துபோன குரல்கள்.

முதலாவது வகையினரின் அரசியல் வெளிப்படையானது. அது குறித்து இங்கு பேசுவது பொருத்தமற்றது என்பதுடன் அது தேவையில்லை என்றும் நினைக்கிறேன். ஆனால் என்னால் இரண்டாவது வகையினரின் குரல்களைத்தான் ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது நம்பிக்கையீனம் ஒருவித எரிச்சலையும் தோற்றுவிக்கிறது.

இந்த நம்பிக்கையீனங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக சிலவற்றைப் பேசலாம் என நினைக்கிறேன். குறிப்பாகப் புலிகளின் படைத்துறை ஆளுமை குறித்த புரிதல்கள் பற்றிப் பார்ப்போம்.

எனது முன்னைய கட்டுரையில் 'சில சூழ்ச்சிகளின் அடிப்படையில் இன்று வலுச்சமநிலை தளம்பி சிங்களத்தின் கை மேலோங்கியுள்ளது. இருந்தபோதிலும் மேற்குறித்த படிநிலை வளர்ச்சியின் படி புலிகள் எந்தநேரத்திலும் வலுச்சமநிலையைத் தம்பக்கம் திருப்பக்கூடிய நிலையிலேயே இன்னும் இருக்கிறார்கள். ஆகையால்தான் உடன்படிக்கையை இன்னும் தொடர்கிறார்கள், மதிக்கிறார்கள்" என்று நான் குறிப்பிட்டிருந்ததை நம்புவதற்கு பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை.

இங்கு குறிப்பான ஒரு விடயம் என்னவெனில் கள நிலவரங்களின் யதார்த்தத்திற்கு அப்பால் அதீதமான நம்பிக்கைகளையூட்டுவது எந்தளவிற்குப் பாதகமானதோ அதே அளவு பாதகம் நம்பிக்கையீனங்களை வளர்ப்பதும்தான். இது தெரியாதவன் அல்ல நான். ஏற்கனவே முகமாலை மோதல்களை எமது ஊடகங்கள் அணுகிய விதம் குறித்தும் அதீத நம்பிக்கைகளை வளர்த்தது குறித்தும் எனது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். (பார்க்க: யாழ் குடா முற்றுகையும் தமிழ்ஊடகங்கிள் அரசியலும்-)

எனவே புலிகளின் படைத்துறை ஆளுமை குறித்து எனக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே படைவலுச் சமநிலையை தம்பக்கம் திருப்பும் ஆற்றலை புலிகள் கொண்டுள்ளார்கள் என்ற எனது கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

புலிகள் தோற்றுவிட்டார்கள், பலமிழந்து விட்டார்கள் என்ற ரீதியில் பிரச்சினையை அணுக முற்படுவதும் மதி;ப்பிடுவதும் முதல் தவறு. புலிகள் பலத்துடன் இருக்கிறார்களா இல்லையா என்ற உண்மை நிலைப்பாட்டிற்கும் அப்பால் எதிரிகளுக்கு புலிகளை பலமிழந்தவர்களாகக் காட்டுவதில் சில அரசியல் வெற்றிகள் இருக்கின்றன. அதே போன்று மேற்குலகத்திற்கும் சில சாதகங்கள் இருக்கின்றன. எனவே அதைச்சுற்றியதான பொய்ப் பரப்புரைகளும் புனைவுகளும் எழுவது இயல்பானது. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று எம்மில் பலர் அடைந்திருக்கும் நம்பிக்கையீனங்கள் கூட சிங்களம் எதிர்பார்க்கிற வெற்றிகளில் ஒன்றுதான். போர் என்பது ஆயுதத்தினால் மட்டும் நடத்தப்படுவதல்ல. அது பலவகைப்பட்டது. உளவியற்போர் (pளலஉழடழபiஉயட றயச) அதில் முக்கியமான ஒன்று. சமாதான காலத்தில் மிக உக்கிரமாக நிகழும் இந்தப் போரில் எம்மில் பலர் பலியாகிவிட்டார்கள் என்பதன் சாட்சிதான் அந்த நம்பிக்கையீனங்கள். இதில் நாம் இனியாவது முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதைத்தான் எனக்கு வந்த எதிர்வினைகள் அடையாளங்காட்டுகின்றன.

சமாதான காலத்தில் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் செயற்பாடுகளை முடக்கிவிட்டு அதைத் தமக்குச் சாதகமாக்கி சில சூழ்ச்சிகள் முலம் வலுச்சமநிலையைத் தம்பக்கம் திருப்பி வைத்திருக்கும் எதிரிகளின் படையாளுமையையும்; அந்தச் சூழ்ச்சிக்குள்ளான விடுதலை அமைப்பின் படையாளுமையையும் ஓரே தட்டில் வைத்து மதிப்பிடுவது சரியானதாகவோ உண்மையானதகவோ ஒருபோதும் இருக்க முடியாது.

புலிகள் என்றில்லை ஒரு விடுதலை அமைப்பின் படைவலுவை ஒரு யுத்த காலத்தில்தான் சரியாக மதிப்பிட முடியும். நீண்ட காலம் சமாதானம் நிலவி - அதிலிருந்து வெளியேறாமலே சில படை நடவடிக்கைகளை நடத்திவிட்டு கொக்கரிக்கும் ஒரு படைத்தரப்பை முன்னிறுத்தி - அந்த சமாதானம் சாகும் தருவாயில் இந்த மதிப்பீட்டை நிகழ்த்துவது போன்ற அபத்தம் உலகத்தில் வேறில்லை.

அண்மைக்காலமாக புலிகளினுடைய முக்கிய கவனம் எல்லாம் சமாதான காலத்தில் தமக்கெதிராகப் பின்னப்பட்டுள்ள சூழ்ச்சிகளிலிருந்து வெளியேறுவது குறித்துத்தான் குவிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் மெதுமெதுவாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார்கள். புலிகள் அடையும் இராணுவ வெற்றிகள் தொடர்ந்து தக்கவகை;கப்பட வேண்டியதும் அதை அரசியல் வெற்றியாக மாற்றுவதும் என்று புலிகளின் படை நகர்த்தல்களுக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஆனால் சிங்கள இராணுவத்தின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட பலவீனமான அடித்தளத்திலிருந்து மேலெழுபவை.

முழுமையான யுத்த காலத்தில்தான் ஒரு விடுதலை அமைப்பின் இராணுவ வெற்றிகளுக்கு முழுமையான விளைவுகள் கிடைக்கும்.

நான் முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், சர்வதேச தடைகளும் அழுத்தங்களும் தொடரும் ஒரு சூழலில் - புரிந்துணர்வு ஒப்பந்தம் முழுமையாக முறிவடையாத ஒரு நிலையில் - நில மீட்பென்பதும் இராணுவ வெற்றி என்பதும் குறிப்பான விளைவுகளை எமக்குத் தந்துவிடாது. மறுவளமாகப் பார்த்தால் ஒருவகையில் அது வேறு சில அழுத்தங்களுக்குத்தான் வழிவகுக்கும். எனவே யுத்த காலம்தான் எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான சரியான காலமும் களமும்.

இனி சமாதான காலத்தில் நடந்த சில படை நடவடிக்கைகள் குறித்துப் பார்ப்பது புலிகளின் உண்மையான படையாளுமையையும் ராஜதந்திர நகர்வுகளையும் மதிப்பிடுவதற்கு உதவும் என்று நம்புகிறேன். அதற்கு சிறந்த வழி அந்த படை நடவடிக்கைகளையொட்டி தமிழீழத்தின் முக்கியமான ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை மீளாய்வு செய்வதுதான். அவைதான் நான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான 3 ஆய்வாளர்களின் கருத்துக்;கள்.

இங்கு முன்பே ஒன்றைப்பதிவு செய்வது நல்லதென்று நினைக்கிறேன். முதூர், சம்பூர், வாகரை உட்பட சில இடங்கள் பறிபோனது குறித்து எமது தரப்பிலும் அதெல்லாம் பெரிய விடயங்கள் இல்லை என்ற ரீதியில் சில ஊடக ஆய்வுகளும் விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அபத்தத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் என்ன பதில் எழுதுவதென்று எனக்குத்தெரியவில்லை. இந்த போலித்தனமான பொறுப்பற்ற ஊடகத் தார்ப்பரியம்தான் எமது மக்களையே ஒருவித நம்பிக்கையீனங்களிற்கும் விரக்திக்கும் இட்டுச்சென்றிருக்கிறது. புலிகள் பற்றிய போலி மதிப்பீட்டிற்கும் வழி சமைத்திருக்கிறது.

எந்தவித சந்தேகங்களும் தேவையில்லை, அந்த இடங்கள் பறிபோனது எமக்குப் பாரிய பின்னடைவுகள்தான். இதை மறுப்பதோ மறைப்பதோ எமக்கு எந்தவிதமான லாபத்தையும் தரப்போவதில்லை. மாறாக இந்த கட்டுரையின் மையக்கருத்ததாக நான் பேச விழையும் புலிகளின் படையாளுமை குறித்த எமது மக்களின் நம்பிக்கையீனங்களிற்குத்தான் வழிவகுக்கும். நாம் ஏன் மறைக்க வேண்டும். அந்த இடங்கள் சில சூழ்ச்சிகள் முலம் தான் கைப்பற்றப்பட்டன. முழுமையான இராணுவ சாதனையாக அவற்றை ஒருபோதும் கருத முடியாது.

சமாதானப் பொறியில் சிக்கியுள்ள தமிழர் தரப்பு இடங்களை விட்டுக்கொடுக்கவும் கூடாது - அத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கைய மதிக்கவும் வேண்டும் - படை நடவடிக்கையை எதிர்கொள்ளவும் வேண்டும்- இத்தகைய புறச்சூழலில் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் இராணுவ நகர்வுகள் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை என்பது நிதர்சனம். எனவே மேற்குறிப்பிட்ட புறச்சூழலுக்கமைய குறிப்பிட்ட வளங்களுடன் பறிபோன இடங்களைத் தக்கவைக்கப் புலிகள் முயன்றார்கள். முடியாதபோது தந்திரமாகப் பின் வாங்கினார்கள்.

அது தோல்வியல்ல. பின்னடைவு. ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் அகராதியில் 'தோல்வி" என்ற சொல்லாடல் ஒருபோதும் இருக்கமுடியாது. இது புலிகளுக்கு மட்டுமல்ல எலிகளுக்கும் பொருந்தும். இது புரியாமல் சிங்களத்தின் கைப்பாவையாகி சிலர் அதிமேதாவித்தனமாக அலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

'நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள்" என்ற இதயச்சந்திரன் அவர்களின் கருத்து இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இங்கேதான் ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பின் 'தோல்வி" என்ற சொல்லாடல் பின்னடைவாக மாறி அரசியல் வெற்றியாக வெளிப்படும் அபூர்வம் நிகழ்கிறது. மூதூர், சம்பூர், வாகரை என்று அந்தப் பொறியை மேற்குலகத்திற்கெதிராக வைத்தபடியே புலிகள் பின்வாங்கிச் சென்றுள்ளார்கள்.

இதயச்சந்திரனின் இந்தக் கருத்தியலில், தோல்விக்குக் காரணம் கற்பித்தலும் அதீத நம்பிக்கையூட்டலும் போன்ற தோற்றப்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் புலிகள் ஒரு பின்வாங்கலைக்கூட ஒரு அரசியல் வெற்றியாக்கி, சமாதானத்தளைகளிலிருந்து வெளியேறும் படிமுறைகளை அடையாளங்காண முடியும்;.

இதேபோன்றுதான் ஜெயராஜ் அவர்கள் பனிச்சங்கேணி முகமாலை முறியடிப்புச் சமர்களை முன்வைத்துப் பேசும் கருத்துக்களும்.

'களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும்." என்ற அவரது கருத்து ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் (பின்னடைவையையும்) தோல்வியையும் ஒரு அரச படையின் தோல்வியையும் சுலபமாக எடைபோடுகிறது.

இதன் தொடர்ச்சியாகத்தான் படைத்துறை ஆய்வாளர் அருஸ் குறிப்பிடும் 'மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை" என்ற கருத்துருவாக்கம்.

உண்மையற்ற நிலையற்ற ஒரு வெற்றியை விற்க வேண்டிய தேவை தென்னிலங்கை அரசியற்களத்தில் மகிந்தவிற்கு இருந்தது. இருக்கிறது. தோல்வியைக்கூட வெற்றியாக பீற்றிக் கொள்ளவேண்டிய நிலையில் ஒரு அரசியல்வாதி இருக்கிறான். ஆனால் அருஸ் குறிப்பிடுவது போல் ஒரு விடுதலைப் போராட்ட தலைமைக்கு இத்தகைய நிர்ப்பந்தங்கள் எதுவுமில்லை. மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்து நிலையான வெற்றியை நோக்கி தம்மைத் தயார்ப்படுத்துகிறது புலித்தலைமை. இதுதான் உண்மை.

கிளாலி - முகமாலைச் சமர்களை முன்வைத்து புலிகளின் படைவலிமையைக் குறைத்து மதிப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அது ஒரு முழுமையான படை நடவடிக்கை அல்ல. குறைந்தளவிலேனும் புரிந்துணர்வு உடன்படிக்கையை மதித்து நடந்த தற்காப்பு நடவடிக்கை.

முழுமையான தாக்குதல் நடவடிக்கையாக இருந்திருந்தால் புலிகளின் களமுனைகள் வேறுபட்ட தளங்களில் திறக்கப்பட்டிருக்கும். குறிப்பாக பல்குழல் எறிகணைத் தளங்கள் மீதான கரும்புலிதாக்குதல்கள். பல்குழல் எறிகணைச்செலுத்திகள் செயலிழக்கும்போது தெரியும் சிங்களப் படையின் அலங்கோலங்கள்.

சிங்களப் படைகளின் படைவலிமை அவற்றின் ஆன்ம பலத்திலோ மனோ பலத்திலோ தங்கியிருக்கவில்லை. நவீன போர் தளபாடங்களான பல்குழல் எறிகணைச் செலுத்திகளிலும், கிபிர் யுத்த விமானங்களிலும் தங்கியுள்ளன. இந்த இராணுவத் தளபாடங்களைப் புலிகள் கையகப்படுத்தும்போதோ அழித்தொழிக்கும்போதோ சிங்களத்தின் படைவலு மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்களத்தின் ஆன்ம பலமும் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும்.

இங்கேதான் நான்காம் கட்ட ஈழப்போர் தமிழர் தலைவிதியைத் தீர்மானிக்கும் 'இறுதிப்போர்" என்ற கருத்துருவாக்கம் ஒரு அர்த்தத்தை பெறுகிறது. ஏனெனில் வடக்குக் கிழக்கின் புவியியல் அமைவின்படி பல்குழல் எறிகணைச்செலுத்திகள், கிபிர் யுத்த விமானங்கள் தவிர்ந்து இனி எந்த நவீன இராணுவத் தளபாடங்களும் புலிகளை வெல்ல பயன்படுத்தபட முடியாதவை. இன்று சிங்களம் பிரயோகிக்கும் உச்ச இராணுவ வலிமையே இவ்வளவுதான்.

இதை புலிகள் கையகப்படுத்தும்போதோ, வெல்லும்போதோ யாராலும் வெல்லப்படமுடியாத இராணுவ மேலாண்மையைப் புலிகள் அடைவார்கள்.

இதை சற்று தர்க்கரீதியாக ஆராய்வோம்.

இன்று கிழக்கின் பல பகுதிகளை சிங்களம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. புலிகள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மகிந்த அரசு செய்துகொண்டிருக்கிற பாரிய தவறு இது என்பதை வரலாறு எழுதிச்செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதே தவறை தொண்ணூறுகளின் நடுப்பகுதிகளில் சந்திரிகா அம்மையார் செய்தார். 120 மி. மீ ஆட்லறி எறிகணைச் செலுத்திகளைக் கொண்டு யாழ். குடாவை முற்றுகைக்குள்ளாக்கி கரந்தடிப்படையாக இருந்த புலிகளைப் பின்னடையச் செய்தார்.

மரபுவழி இராணுவத்தின் தேவையை மட்டுமல்ல 120 மி.மீ ஆட்லறி எறிகணைச் செலுத்திகளினது தேவையையும் வலிமையையும் உணர்ந்து புலிகள் பின்வாங்கினார்கள். அந்தத் பின்னடைவைக்கூட ஒரு வரலாற்று இடப்பெயர்வின்முலம் அரசியல் வெற்றியாக மாற்றினார்கள். சிங்களத்தின் வெற்றிச் செய்தியை விட புலிகளுடன் ஒட்டுமொத்த மக்களும் வெளியேறியது குறித்தான நிகழ்வு அன்று உலக அரங்கில் தமிழர் தாயகம் தொடர்பான ஒரு முக்கிய செய்தியை பதிவு செய்தது.

இதுதான் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் தோல்வியில்;கூட அந்த அமைப்பு சார்ந்தும் அதன் நோக்கம் சார்ந்தும் எழுதப்படும் பன்முக அரசியல் பரிமாணம். 'ஓயாத அலைகள் - 03" அடித்த போது சிங்களம் சிதறி ஓடியபோது எந்த அரசியலும் எழுதப்பட்டதாக எமக்குத் தெரியவில்லை.

யாழ். குடாவிலிருந்து பின்வாங்கி மரபுவழி இராணுவத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் 120 மி.மீ ஆட்லறி எறிகணைச் செலுத்திகளையும் கையகப்படுத்தினார்கள் புலிகள். விளைவு சிங்களம் புறமுதுகிட வேண்டிய நிலை ஏற்பட்டது. படைவலுச் சமநிலை தோன்றியது.

இப்போது வராலாறு திரும்புகிறது. இது மகிந்தரின் காலம். புலிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றி அவர்களை வன்னியில் ஒருங்கிணைக்கிறார். மீண்டும் புலிகள் செறிவான மரபுவழி இராணுவத்தின் தேவையை மட்டுமல்ல பல்குழல் எறிகணைச் செலுத்திகளினது தேவையையும் வலிமையையும் உணர்ந்து கிழக்கிலிருந்து பின்வாங்குகிறார்கள். அந்தப் பின்னடைவைக்கூட சமாதான நாடகம் போடும் சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து மேற்குலத்திற்கு ஒரு பொறியை வைத்து அரசியல் வெற்றியாக மாற்றுகிறார்கள்.

புலிகளின் படையணிகள் படிப்படியாக பல்குழல் எறிகணைச் செலுத்திகள், கிபிர் யுத்தவிமானங்கள் மத்தியில் போராடும் தந்திரத்தையும் வலிமையையும் பெற்றுக் கொண்டிருக்கிறன. யாழ். குடாவிலும் மன்னாரிலும் மணலாற்றிலும் இருக்கும் பல்குழல் எறிகணைச் செலுத்திகள் மீது புலிகளின் கவனம் குவிந்து விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. நாளை அவை புலிகளின் பாசறைக்குக் கைமாறும்போது நிலைமை தலைகீழாகும் என்பதை நான் சொல்லிப்புரியும் அளவிற்கு நீங்கள் முட்டாள்கள் அல்ல.

எனவே நம்பிக்கையீனங்களை விட்டொழியுங்கள். நீண்ட வரலாற்றையுடைய, பாரம்பரியம் மிக்க, பல நெருக்கடிகளிலும் சளைக்காது நின்று போராடும் ஒரு விடுதலை அமைப்பிற்கென்று சில திட்டங்களும் தந்திரோபாயங்களும் நிச்சயமாக இருக்கும். அது எந்த ஆய்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்குள்ளும் சிக்க முடியாதவை.

ஆகவே புலிகள் குறித்து முன்பு நான் எழுதிய சில வரிகளைத்தான் திரும்பவும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

'உலக இராணுவ மேதைகளினதும் படை வரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்கும் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டு நிற்கிறது புலிகளின் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயொழிய உற்றுப் பார்க்க முடியவில்லை. காற்றைப் போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்களின் போர்த்திறனும் வீரமும். 'இப்படித்தான் இருப்பார்கள்" என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறாhகள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது".

எனவே நாம் தலைநிமிர்விற்குத் தயாராவோம். நன்றி: தமிழ்நாதம்

Please Click here to login / register to post your comments.