ஜனாதிபதியின் சீனப்பயணமும் மேற்குலகின் காய்நகர்த்தலும்

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்
இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சி, நிர்ணயிக்கப்பட்ட 6 வருடங்களை பூர்த்தி செய்ததாக அண்மைக்காலமாக வரலாறு இல்லையெனினும், போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்த காலம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து இன்னமும் நீண்டு கொண்டு செல்கிறது.

இடையில், ஆட்சிப்பீடமேறிய ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் 4000 இற்கும் மேற்பட்ட பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். இந்த 4000இற்குள் செஞ்சோலைச் சிறார்களும், மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களும், அல்லைப்பிட்டி, வங்காலை, சம்பூர், வாகரை மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்களில் ஈடுபடும் சகல நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் சர்வதேசம், ஈழப்பிரச்சினை குறித்து எவ்வகையான தீர்ப்பினை முன்வைக்கப்போகிறதென்பதனை 'தீர்வுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்" என்கிற கட்டுரையொன்றில் க.வே.பாலகுமாரன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ரஷ்யாவைச் சூழவுள்ள நாடுகளில் இராணுவதள வலைப்பின்னல்களை அமைக்க, கொசோவாவின் சுயநிர்ணய உரிமையை மனதார ஏற்றுக்கொள்கிறது இந்த மேற்குலகம். ரஷ்ய பெருநிலப் பரப்பில் மாட்டிக்கொண்ட செச்னியாவின் சுயநிர்ணயத்தை சர்வதேசம் ஏற்க வேண்டிய அவசியமில்லை.

அவுஸ்திரேலியாவின் பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு கிழக்குத் தீமோரின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றவர்கள் சுனாமியால் அதிகம் பாதிப்புற்ற பண்டா ஆச்சேக்கு சுயாட்சி அமைப்பொன்றை வழங்கினார்கள்.

யூகோஸ்லாவியக் குடியரசு பிளவுற்று உருவான கொசோவாவில் சிறுபான்மையாக வாழும் சேர்பியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தடுமாறிக் கொண்டிருக்கிறது சர்வதேசம்.

தனியரசுகள் தோற்றம் பெறுவதையும், சுயாட்சிகள் உருவாவதையும் விரும்பும் சர்வதேச நாடுகள், இவ்விரண்டையும் குறித்த எதுவித சிந்தனையுமற்ற நிலைப்பாட்டினை இலங்கையில் கடைப்பிடிக்கின்றன.

சீனாவைச் சுற்றி வகுக்கப்படும் வியூகத்தில், ஆசியாவின் கடல்வழித் தலைவாசலில் அமைந்துள்ள சிறியநாடு இலங்கையாகும். இவ்வியூகத்தில் பரந்துள்ள நாடுகளில், அணு ஆயுத நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, புதிதாக வடகொரியா போன்றவை நிலை பெற்றிருந்தாலும், இவை சீனாவுடன் பாரிய பிராந்திய கூட்டினை ஏற்படுத்தும் வரை, மேற்குலகின் கரிசனை, 'அவதானித்தல்" என்கிற போக்கிலே அமையும்.

இருப்பினும் மேற்குலக, இந்திய அழுத்தம் அதிகரிப்பதால் சீனாவின் பக்கம் சாய்வதை ஜனாதிபதி மஹிந்த தனது இறுதித் தெரிவாகக் கொண்டுள்ளார். ஆகவே, மேற்குலகின் இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் இனித்தான் வேகங்கொண்டு கிளம்பப் போகின்றன.

இதுவரை நில ஒருமைப்பாட்டையும், அரச இறையாண்மையையும் தக்கவைக்க, ஆயிரக்கணக்கான கொலைகளை அனுமதித்த சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று இல்லையென்பதே முற்றிலுமான உண்மை.

இணைத் தலைமையானது, ஏனைய நாடுகளில் தொழிற்படுவது போன்று தனது இராணுவ பலத்தினைப் பிரயோகித்து இரு தரப்பையும் தீர்வுத்தளத்தினை நோக்கி நகர்த்த இதுவரை முயற்சிக்கவில்லை. இவ்வகையான முயற்சியினை முன்பு இந்தியா மேற்கொண்டும் அது வெற்றி பெறவில்லை.

கொசோவாப் பிரச்சினையில் சேர்பியா மீது குண்டு பொழிந்ததுபோல் இலங்கையில் செயற்பட முடியாது. ஏனெனில், சர்வதேச அணிகளைப் பொறுத்தவரை இலங்கைக்கு மூன்று விதமான தெரிவுகள் உண்டு. இணைத் தலைமையின் பலவீனம் சீனாவென்பது இலங்கைக்குப் புரியும். மூவரையும் வெட்டி ஓடும் இலங்கை, இறுதியில் ஒரு அணியின் பொறிக்குள் விழுமென்று புலிகளிற்குத் தெரியும்.

ஆதலால், இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமொன்றினை விரைவில் முன்வைக்குமாறு அழுத்தம் கொடுப்பதே இணைத் தலைமை நாடுகளின் முதன்மையான நகர்வாக உள்ளது.

2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவால் உருவாக்கப்பட்ட உத்தேச தீர்வுத்திட்ட வரைபினை மேலும் மெருகேற்றி சர்வகட்சிக் கருத்தாக முன்வைக்கலாமென இந்திய அணி விரும்புகிறது.

இலங்கை மீதான சர்வதேச அணுகுமுறைகள் எவ்வாறு அமைந்தாலும், தீர்வுத்திட்டத்தினை காட்சிப் பொருளாக்குவதற்கு முன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் பலவற்றை கைப்பற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் மாற்றமேற்படாது.

பலமிக்க அரசியல், இராணுவ நிலையிலிருந்து, மஹிந்த சிந்தனையின் ஒற்றையாட்சிக்குட்பட்ட நிர்வாகப் பரவலாக்கத் தீர்வொன்றினை தமிழ் மக்கள் மீது சுமத்தவே அரசு முயற்சிக்கின்றது.

தற்போது அரசின் மீதான நெருக்குதல் அதிகரிப்பதைக் காணலாம். ஆயினும் அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க, இன்றைய சூழ்நிலையில் சர்வதேசம் விரும்பாது. இணைத் தலைமை நாடுகள் அவ்வகையான தடை உத்தியைப் பிரயோகித்தால் இந்திய, சீன அணிகள் அதற்கு எதிர்மாறான நிலை எடுக்கும் வாய்ப்புண்டு. இந்தியா, சீனா, இணைத்தலைமை நாடுகள் என்கிற மூன்று பிரிவுகளுள், ஒரு அணியுடன் ஜனாதிபதி மஹிந்த அரசு இணையும் பொழுதே, ஏனையவற்றின் இலங்கை குறித்த பிராந்திய நிலைப்பாடு தெளிவாகும்.

ஜனாதிபதி மஹிந்தவின் சீனப்பயணமே இதற்கான பதிலை முன்வைக்கிறது. புலிகளைப் போரில் வெல்ல முடியாதென பல தடவை அமெரிக்கா எடுத்துரைத்தாலும், அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றமேற்பட வாய்ப்பில்லை. வடக்கு கிழக்கில் ஏற்படும் போர் அழிவுகள் தெற்கிலும் பரவலாகுமென்பதே சர்வதேசத்தின் கவலை.

பிரச்சினைக்கான தீர்வு அவர்களின் நிகழ்ச்சி நிரலில் தற்போது இல்லாவிடினும் இறுதிப் போரின் வீரியத்தைப் பொறுத்து, எவ்வகையான தீர்வொன்றினைத் திணிக்கலாமென்கிற திட்டம் அவர்களிடம் கைவசமிருக்கும். அப்போது சூடான் நிலைமை உருவெடுத்தால் தமது பாணியிலும், எரித்திய விடுதலையின் இறுதிக் கட்டச் சூழல் போன்றநிலை உருவானால் வேறுவிதமாகவும் இதனை கையாள முயற்சிப்பார்கள். இராணுவம் பலவீனமடைந்தால் ஐ.நா. அமைதிப்படைகளை உள்நுழையவிடும் நகர்வினை சர்வதேசம் மேற்கொள்வதே அதற்கான ஒரே தெரிவாக அமையும். நாடு பிளவுபடக் கூடாதென்கிற அடிப்படைக் கோட்பாட்டை முன்வைத்தே, இவர்களின் நகர்வுகள் அசைகின்றன.

நாட்டிற்கு நாடு தீர்விற்கான அணுகுமுறைகள் வேறுபட்டாலும், இலங்கையைப் பொறுத்தவரை, பிராந்திய நலனிற்குரிய செறிவான மையப்புள்ளிகள் வடக்கு கிழக்கில் அமைந்திருப்பதே சிக்கலான நிலைமையை அவர்களுக்கு உருவாக்கியுள்ளது. இறுதி யுத்தம் மூளும் வரை, எவ்வகையான தீர்வினையும் இவர்கள் அழுத்தமாக முன்வைக்க மாட்டார்கள். இவர்கள் பிரச்சினைத் தீர்விற்கான அணுகுமுறைப் பாதையை இருவிதமாகக் கையாளலாம்.

1) பிரச்சினையை இயல்பான அதன் போக்கில் நகர விடுவது.

2) அழுத்தங்களைத் திணித்து, பிரச்சினைக்குரிய இரு தரப்பினரது வலுவைக் குறைப்பதனூடாக தமது ஆளுமையை அதிகரிப்பது.

முதலாவது அணுகுமுறையானது அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்களை அதன் போக்கில் நகர அனுமதிப்பதனூடாக இயல்பான அசைவியக்கத்தினை ஏற்றுக்கொள்வது. சம்பூர், வாகரை கைப்பற்றப்பட்டமை குறித்து மௌனம் காக்கும் சர்வதேச நிலைப்பாட்டிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது அணுகுமுறையில் குறிப்பிடப்பட்ட அழுத்தங்களைத் திணிக்கும் நகர்வுகள், புலிகளைப் பொறுத்தவரை வலுவிழந்துள்ளது. தடைவிதித்த பிரித்தானிய அரசு, புலிகளுடன் பேசத் தயாரெனக் கூறுமளவிற்கு அழுத்த அணுகுமுறைகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்குவதாய், மாற்றீட்டுச் சிந்தனைகளை சர்வதேசத்திடம் தோற்றுவித்துள்ளது.

தமது கட்டுக்குள் அடங்க மறுக்கும் இலங்கை அரசு, சீனாவின் பக்கம் சாய்வதால் அதிருப்தியடையும் மேற்குலகம், எரித்திரியா போன்று இலங்கை இராணுவம் புலிகளின் பிடிக்குள் அகப்பட்டால் பேரம் பேசும் நிலையொன்று உருவாகலாமென எண்ணுகிறது. அந்நிலையில் நடுநிலை மத்தியஸ்தர் பாத்திரத்தினை வகிக்க மேற்குலகம் முயலும். யுத்தம் தொடர்ந்தாலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இரு தரப்பும் கிழிக்காமல் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டினை நோர்வே ஊடாக செயல்படுத்த வேண்டிய அவசியமும் சர்வதேசத்திற்கு உண்டு.

இலங்கை இனப்பிரச்சினையிலிருந்து இவர்களை அந்நியமாக்காமல் இருக்கும் ஒரே பிடிமானம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த காகிதம்தான். இக் காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரண சாசனம் வரையப்பட்டுள்ளது.

எதிர்கால வரலாற்றில் இனியொரு புரிந்துணர்வினையோ அல்லது ஒப்பந்தக் காகிதங்களையோ தமிழர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொஸ்னியாவில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த சேர்பிய அரசினை அக்குற்றச் சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்.

இதுதான் சர்வ வியாபக சமூகத்தின் சட்டவரையறைக்குட்பட்ட தீர்ப்பு. பூட்டிய வீட்டினுள்ளே இருந்து கொண்டு கதவைத் தட்டுகிறார்கள். வெளியிலிருந்து கதவைத் திறப்பதற்கு எவருமில்லை. நன்றி: தமிழ்நாதம்

Please Click here to login / register to post your comments.