முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!

ஆக்கம்: வே.தங்கவேலு

பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா?

இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும்.

மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இலங்கை சிக்கல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு எழுதிய கடிதத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து கவலை தெரிவித்து இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழக முதல்வரின் மடலுக்கு கடந்த சனவரி 3 ஆம் திகதி; பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.

  “இலங்கையில் ஏற்பட்டு உள்ள சிக்கல் குறித்து தாங்கள் எழுதியுள்ள கடிதத்தை என் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை, குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மத்திய அரசுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்.

  தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து இலங்கையில் சந்தித்து வரும் துயரச் சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமைதியான பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்கிற மத்திய அரசின் நிலை தொடர்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

  வன்முறையால் அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதுகாப்பற்ற நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் முன் வரவேண்டுமென மத்திய அரசு வலியுறுத்த விரும்புகிறது.”

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கும் இதே கருத்துப்பட பதில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா கடந்த பெப்ரவரி மாதக் கடைசியில் வராக (Varaha) என்ற பாரிய கடலோரக் கண்காணிப்புப் போர்க் கப்பலை (Indian Coast Guard vessel) ஸ்ரீலங்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.

சிறிலங்கா கடற்படையின் 3 ஆவது பெரிய கப்பலாக இந்த வராக போர்க்கப்பல் விளங்கும். இதற்கு முன்னரும் (2000) இந்தியா இதே போன்ற சயூரா வகை கடல் கண்காணிப்புக் கப்பலை வழங்கி இருந்தது நினைவிருக்கலாம்.

இப்படி இந்தியா ஒரு பாரிய போர்க் கப்பலை ஸ்ரீலங்காவிற்கு வழங்கி இருப்பது ஒரு புறம் முயல்களோடு (தமிழர்கள்) ஓடிக்கொண்டு மறுபுறம் நாய்களோடு (சிங்களவர்கள்) சேர்ந்து வேட்டையாடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது இவ்வாறிருக்க முதல்வர் கருணாநிதி அண்மையில் வி.புலிகளைச் சாடியும் வி.புலி ஆதரவாளர்களை எச்சரித்தும் இந்திய நலனே தனது நலனென்றும் விடுத்துள்ள அறிக்கை அவர் இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான - உளப்பூர்வமான - அக்கறை கொண்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சென்றகிழமை கோவை பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தி இருந்தது.

பாரதியார் அக்கிரகாரத்தில் பிறந்தாலும் தன்னைக் கடைசிவரை ஒரு பச்சைத் தமிழனாகவே நினைத்துக் கொண்டவர். தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் மாளாத காதல் கொண்டவர். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞர். தமிழ்த் தேசியத்துக்கு பள்ளியெழுச்சி; பாடிய முதல் பாவலன்.

“பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி இவ்வெளிய தமிச்சாத்p தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தி கேட்டு “விதியே விதியே என் தமிச்சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ?” என நொந்து பாடியவர். இவற்றையெல்லாம் முதல்வர் கருணாநிதி அறியாதவர் அல்ல. நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

அண்மைக் காலமாக தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் குரல் கொடுத்து வருவதைக் கண்டு பூரித்துப் போன தமிழர்கள் இருக்கிறார்கள்.

சென்று ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் க. வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த தமிழீழ பாதுகாப்புக் கூட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் பாமக கட்சித் தலைவர்கள், தெரிவித்த கருத்தே தனது கருத்து என்று சொல்லியிருந்தார்.

இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்று சேருவதை வறவேற்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களை சென்னையில் சந்தித்த பின்னர் தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதி கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு கூறியிருந்தார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன். இலங்கையில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இடமளிக்கப்படக் கூடாதென்பதை தமிழகம் வலியுறுத்தும் எனவும் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்பவேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ, விடுதலைப் புலிகளுக்கோ திமுக அரசோ நானோ ஒரு போதும் எதிரிகளல்ல. இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதைக் காண ஆசைப்படுகின்றேன். அந்த மண்ணில் சமாதானம் விரைவில் மலர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.”

சொல்வதோடு நில்லாமல் தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்க நடுவண் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் சிங்கள இனவாதப் படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் நேரில் கண்டுபேச முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மிக விரைவில் தமிழர்களுக்கு ஒரு நியாமான தீர்வு கிடைக்கும் என்று கூடச் சொன்னார்.

இந்தப் பின்னணியில் முதல்வர் கருணாநிதி திமுக முரசொலி ஏட்டில் உடன்பிறப்புக்களுக்கு எழுதிய மடலில் காணப்பட்ட சில கருத்துக்கள் தமிழீழ மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல “இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன்” என்று உறுதி மொழியைiயும் அய்யத்துள்ளாக்கியுள்ளது.

  “தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

  தடைபட்ட வி.புலிகளுக்கு எந்த அமைப்பாவது அல்லது கட்சிகளாவது ஆதரவு நல்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

  நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என அந்த மடலில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிக் காட்டமாக எழுதியதைப் படித்தவர்கள் எழுதியது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவாக இருக்குமோ என ஒரு கணம் நினைத்திருப்பார்கள். .

கொழும்பில் மருதானையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள் ஏராளம் இருக்கின்றன. இங்கு அலுமினியத் துண்டுகள், உருளைகள் (ball-bearings) மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகின்றன. இவை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ அல்லது கடத்திக் கொண்டுவரப்பட்டவை ஆகும். எனவே அவற்றைத் தமிழ்நாட்டில் இருந்து கடத்த வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு இல்லை.

விடுதலைப் புலிகளைப் பற்றி இட்டுக்கட்டி இல்லாததும் பொல்லாததும் சொல்வதையும் எழுதுவதையும் பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் ஒரு தெய்வீகக் கோட்பாடகவே வைத்திருக்கிறன்றன. அப்படி எழுதாவிட்டால் அவர்களுக்குப் பத்தியப்படாது. பொழுதும் விடியாது. குறிப்பாக சுப்பிரமணியம் சுவாமி, ஜெயலலிதா ‘துக்ளக் சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து இராம் போன்றோர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எப்போதும் பகைமை பாராட்டி வருகிறார்கள்.

சில ஆயுதங்களோடு வி.புலிகளின் படகு இந்திய கடல் எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டது வி.புலிகளது எதிர்ப்பாளர்களுக்கு அவல் சாப்பிட்டது போல் ஆகிவிட்டது. ஜெயலலிதா வி.புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விட்டார்கள் என்று அறிக்கை விட்டார். அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமியைக் கேட்கவா வேண்டும்? அவரும் அறிக்கை விட்டு தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுவிட்டார். இந்து இராம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகத் தலையங்கம் தீட்டினார்.

துரும்பைத் தூணாக்கிக் காட்டும் தமிழினத்தின் பரம்பரை எதிரிகளான ஜெயலலிதா, அரசியல் கோமாளி சுப்பிரமணியம் சுவாமி, இந்து இராம் ஆகியோரது அறிக்கைகள், தலையங்கள், செய்திகளைப் படித்து அவற்றின் அடிப்படையில் முதல்வர் கருணாநிதி மடல் தீட்டியுள்ளார். தமிழ்ப் பகைவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அப்படித்தான் எழுதுவார்கள். என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.

பிடிபட்ட படகு தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை என இந்திய அதிகாரிகளே சொல்லிவிட்டார்கள். அந்தப் படகு இரணதீவில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் சென்று கொண்டிருந்த படகாகும். ஸ்ரீPலங்கா கடற்படையைத் தவிர்க்கு முகமாக இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு சென்று விட்டது. இப்படி நான் சொல்லவில்லை. சென்னை காவல்துறை அதிகாரி (டிஐஜி) முகர்ஜி சொல்லி இருக்கிறார். அலுமினியத் துண்டுகள் ஆயுதங்கள் அல்ல. உருளைகளும் ஆயுதங்கள் அல்ல. இவை விற்பனைக்காக கடத்தல்காரர்களால் காலம் காலமாகக் கடத்தப்படுபவை.

இப்போது வி.புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற திரைக்குப் பின்னால் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கெடுபிடிகளைக் கட்டவிழ்;த்து விட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் வீடுகளும் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.

தமிழீழப் போராட்டம் குருதி சிந்திப் போராடும் போராட்டம். அது கிரிக்கெட் பந்து விளையாட்டல்ல. சேர, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்துக்குப் பின்னர் இப்போதுதான் தமிழர்களுக்கு எனச் சொந்தத் தரைப்படை, கடற்படை வான்படை இருக்கிறது. சோழரின் புலிக்கொடி காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் கப்பல்கள் இப்போதுதான் மீண்டும் வங்கக் கடலில் பவனி வருகின்றன.

பாரதியார் “நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தான் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரதத்திலே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்” எனப் பாடியது போல புறநானூற்றில் வீரம் என்றால் ஆகா என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அண்டை நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை “வன்முறை. அதனை ஆதரிக்க முடியாது” என்கிறார்.

அது மட்டுமல்ல தமிழினத்தின் எட்டப்பர்களில் ஒருவரான ஆனந்தசங்கரியை வீட்டுக்கு வரவழைத்து தமிழக முதல்வர் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். ஆனந்தசங்கரி தனி மனிதர். தொண்டரில்லாத கடிதத் தலைப்புக் கட்சியின் தலைவர். சிங்களத் தலைவர்களின் செல்லப்பிள்ளை. இப்படிப்பட்ட ஒருவரை முதல்வர் எப்படிச் சந்தித்துப் பேசலாம்? இதன் மூலம் அவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விளைகிறார்?

தமிழீழ மீனவர்கள் இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது படகுகள் உடைக்கப்படுகின்றன. வலைகள் அழிக்கப்படுகின்றன. அம்மா காலத்தில் அம்மாவும் அய்யா காலத்தில் அய்யாவும் தில்லிக்கு நூற்றக்கணக்கான கடிதம் எழுதினார்கள். பலன்தான் இல்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன.

கன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தெருவில் தமிழ்ப் பேசினால் கன்னட வெறியர்கள் அவர்களை உதைக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இதைக் கேட்டு எங்கள் நெஞ்சம் பதறுகிறது!

முதல்வர் கருணாநிதியோ உரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார்.

வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. இந்திய தேசியத்தில் முதல்வர் கருணாநிதி குளிர் காய்கிறார்!

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முதல்வர் கருணாநிதி தமிழீழத் தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!

Please Click here to login / register to post your comments.