தீர்வுகள் பலவிதம் - அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆக்கம்: க.வே.பாலகுமாரன்
பெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும்.

இம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் (Boris Tadic) கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் (Fatmir sejdiu)கையளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். ((Martti ahtisaari) தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.நா மேற்பார்வையிலான தன்னாட்சியின் பின்னர் கொசோவோ சுதந்திரம் பெறுமெனத் தெரிகின்றது.

அரசொன்றின் அடிப்படைகளை அரசியல் யாப்பு, தேசிய கீதம், தேசிய இராணுவம், சர்வதேச அமைப்புக்களால் உறுப்புரிமை பெறும் உரிமை என்பன இவ் 58 பக்க அமைதிப் பாதை அறிக்கையில் உள்ளதாகத் தெரிகின்றது.

எதிர்பார்த்தது போல சேர்பியாவில் எதிர்ப்பும் கொசோவாவில் வரவேற்பும் உடனடியாகவே வெளிப்படுகின்றன. முன்னாள் புரட்சி புகழ் ருஷ்யாவோ தனக்கு நடந்ததை மறந்து கொசோவிற்கு சுதந்திரம் கொடுத்தால் அது தொடர் கதையாகுமென பழம் பல்லவி பாடுகின்றது. அல்பேனிய இசுலாமியரை பெரும்பான்மையாகவும் சேர்பியரை (1 இலட்சம்) சிறுபான்மையாகவும் கொண்டுள்ள கொசோவோவின் சனாதிபதி சேர்பியர் உரிமைக்கு உத்தரவாதம் தருகிறோம். பூரண சுதந்திரத்தை எதிர்பார்த்து இத்தீர்வினை வரவேற்கிறோம் என்றார்.

இருதரப்பு பேச்சுக்களின் பின் வரும் மார்ச்சில் இத்தீர்வு பாதுகாப்புச் சபையிடம் முன் வைக்கப்படும். அங்கு கொசோவோவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். (1990 களில் முன்னாள் யூகோசிலேவியாவினது குடியரசுகள் பிரிந்ததும் கொசோவோவில் கட்டவிழ்க்கப்பட்ட சேர்பியரின் கொடூரமும், பல்லாயிரம் அல்பேனியர் இறந்ததும் 1999 இல் நேட்டோவின் கடும் வான்வழித் தாக்குதல்கள் சேர்பியப் படைகளை வெளியேற்றியதும் அதன் பின் ஐ.நா.வின் முகதாவில் ருNஆஐமு - யுனிமிக் எனப்படும் விசேட ஐ.நா நிருவாகத்தில் கொசோவோ இருந்து வருவதும் பழைய கதை) எனவே இவ்வாறாக எல்லாவகைத் தீர்வுகளும் முன்வைக்கப்படும் இப்பின்னணியில் எம் தமிழீழ மக்களிடையே பிரதான கேள்வியொன்று இயல்பாகவே எழுகின்றது.

நீண்டகாலமாக விடுதலைக்குப் போராடி அதற்கான பல நிபந்தனைகளை நிறைவேற்றி முக்கிய கட்டமொன்றிற்கு அப்போராட்டம் நகரும் பொழுது- அல்லது கொடிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் உச்சமடையும் பொழுதும் உலகின் மனச்சான்று சற்று அசைந்து கொடுக்கும் பொழுதும் அப்பொழுதும் இலாப நட்டக் கணக்குப் பார்த்து உலகம் பலவகைகளில் தலையிடுகின்றது.

மேலோட்டமாகப் பார்க்குமிடத்து இரண்டிலொரு வழிமுறையை அது பின்பற்றுகின்றது. இத்தலையீடுகள் தாண்டி வெற்றிபெறும் தேசத்தினை அங்கீகரித்தல் (எரித்திரியா) அல்லது நேரடியாகவே தலையிட்டு தானே பொறுப்பெடுத்து தீர்வுத்திட்டங்களைத் தயாரித்து வழங்குகின்றது. (ஆச்சே, கொசோவோ, சூடான்) அல்லது இத்தகைய தீர்வுகள் காணப்படுமிடத்து அதற்கு ஆதரவை வழங்குகின்றது. (நேபாளம்). பொசுனியா தொட்டு கொசோவோ வரை அண்மைக்காலப் பட்டியல் நீள்கின்றது. தேவைப்படின் படையனுப்பி இரு தரப்பையும் கன்னை பிரித்துவிடவும் அது ஆயத்தமாகவேயுள்ளது.

இந்நிலையில்தான் எம் மக்களின் கேள்வியெழுகின்றது. வாகரையிலேற்பட்டது போன்ற குரூர நிகழ்வுகள் வேறெங்காவது ஏற்பட்டிருந்தால் என்ன செய்யப்பட்டிருக்கும்?. புவிசார் அரசியல், உலக மயமாக்கலின் முதலாளிய நலன்கள், கவனயீர்ப்பிற்கான வளங்கள் போன்றவை அதிக கவனத்திற்கும் குறைந்தளவு கவனத்திற்கும் காரணமாக இருப்பதை ஏற்றுக்கொண்டாலும்- இங்கு நடைபெறும் இனக் கொலைக்கு நிகரான அடக்குமுறைகள் அதற்கெதிரான விடுதலைப் போராட்டம் பெற்ற உயரிய வெற்றிகள், சர்வதேசத் தலையீடு- போர் நிறுத்தமும் அது செயலற்றுப் போகும் ஆபத்தும், உலகின் பிணக்கிடங்காக இத்தீவு மாறுகின்றமையும், பெரும் போரொன்று வெடிப்பதற்கான ஏது நிலைகள் தோன்றுவதும் வேண்டுவது என்ன? அறிக்கைகள் தயாரித்து ஐ.நாவிற்கும் ஏனையவற்றிற்கும் சமர்ப்பிப்பதோடு உலகின் பணிமுடிந்து விடுகிறதா? (ராதிகா குமாரசுவாமியின், அலன் றொக்கினதும் சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பற்றிய அறிக்கை ஏற்கனவே பாதுகாப்புச் சபையின் செயற்குழுவிற்கு கொடுத்தாகிவிட்டது. பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரனின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கை மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.)

இக்கட்டத்தில் சர்வதேசத்தின் பிரதிநிதி என்று வகைப்படுத்தும் வகையில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக (1999 ஆம் ஆண்டே தான் முதலில் இலங்கை வந்ததாக சூல்கெயிம் சொல்கிறார்) செயலாற்றி வரும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல் கெயிம் கூறுவதை கவனத்தில் கொள்ளமுடியும்.

சென்ற ஆண்டு இருபெரும் தொகுதிகளாக குமார் ரூபசிங்கா அவர்களால் தொகுக்கப்பெற்ற 'சிறிலங்காவில் அமைதிக்கான பேச்சுக்கள்: முயற்சிகள், தோல்விகள், பாடங்கள்" என்கிற தொகுப்பில் தனது செவ்வியில் சூல்கெயிம் பின்வருமாறு சொல்கின்றார். 'தற்போதைய நிலையில் (2006) நோர்வே அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாடுகளில் சிறிலங்கா முக்கியமானது. சூடானும் கூட. சூடானில் பல்வேறு பரிமாணங்களில் நாங்கள் ஈடுபடுகிறோம். இருந்தாலும் பிரபலமானது பாலத்தீனமே. மத்திய கிழக்கில் இன்னமும் பல பாத்திரங்களை நோர்வே வகிக்க வேண்டியிருந்தாலும் ஈராக்கில் மிகக்குறைந்தளவு ஈடுபாடே எமக்குண்டு. இவற்றைவிட பிலிப்பைன்சு, கொலம்பியா, குவாத்தமாலா, தையிற்றி (வுயாவைi) போன்ற இடங்களிலும் ஈடுபட்டுள்ளோம்" என தமது ஈடுபாடு பற்றிய தகவல்களைத்தரும் அவரிடம் இராணுவ பொருண்மிய வலுமிக்க நாடாக அல்லாத சிறிய நாடான நோர்வே எவ்விதம் அமைதி முயற்சிகளில் செல்வாக்குச் செலுத்த முடியுமெனக் கேட்டபொழுது 'நீங்கள் சொல்கின்ற எடுகோளில் உண்மையிருந்தாலும் அமைதி ஏற்படுத்தும் முயற்சி மலிவானதே.

வெளிவிவகாரக் கொள்கையிலே அதுவே மிக இலகுவானது. போரே நம்பமுடியாத பேரளவு செலவினைத்; தருவது. அபிவிருத்திக்கான செலவைவிட அமைதிக்கான செலவு குறைவானது. அதேவேளை பெரும் வல்லரசுகள் இம்முயற்சியில் ஈடுபடும் பொழுது சம்பந்தப்பட்ட இருதரப்பையும் மடக்கி அமைதிக்குள் அவர்களைத் தள்ளமுடியும்.

உதாரணமாக கடந்த 10 வருடத்தில் பொசுனியா தொடர்பாக அமெரிக்க ஒகியோவில் (ழுhழை) ஏற்படுத்த டேட்ரன் (னுயலவழn) உடன்பாட்டைக் குறிப்பிடலாம். பிரச்சினையில் ஈடுபட்ட முத்தரப்பான சேர்பியரையும், குரோசியரையும், முசுலிம்களையும் ஒகியோ மாநிலத்தின் டேட்ரனுக்கு வருமாறு அழைத்து அங்கு வைத்து ஒழுங்காக நடக்கா விட்டால் உங்களை உலகத்தில் உபயோகடி மற்றவராக்கி (மறுவார்த்தையில் கழிசடைகள்) விடுவோம். நீங்கள் போருக்குப் போகாமலிப்பதை உறுதிப்படுத்த எமது அனைத்து வலிமையைப் பயன்படுத்துவோம். தீர்வொன்றைக் காண நீங்கள் முயலாவிட்டால் உங்களை முற்றாக தனிமைப்படுத்தத் தேவையான பொருண்மிய, இராசதந்திர அழுத்தங்களையிடுவோம் என அமெரிக்கா கூறியது பயனளித்தது. ஒப்பந்தம் உருவானது. அது முழுமையானதாக வில்லாவிட்டாலும் அது இற்றைவரை போரை வராமல் தடுத்துள்ளது.

இந்தியா, சீனா, யப்பான் போன்ற வலிமை மிக்க நாடுகள் இவ்வகையில் அழுத்தம் கொடுக்கக்கூடியவை. ஆகவே சிறிய நாடுகளான எங்களைப் போன்றவர்களால் அது முடியாதுதான். சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அமைதியைக் காண தாமாக முயலாவிட்டால் நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது." இவ்வாறு கூறிய சூல்கெயிம் அதேவேளை இன்னொன்றையும் தம்மை நியாயப்படுத்தச் சொல்கின்றார். 'ஈராக்கில் என்ன நடக்கின்றது? அமெரிக்கா போன்ற வலுமிக்க நாடுகள் அங்கு தலையிட்டாலும், அத்தலையீடுகளுக்கும் வரையறையிருப்பதைக் காணமுடிகின்றது." இவ்விடத்திலேதான் எம் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றனர். பொசுனியா கோசோவோவினால் தீர்வுகொண்டு வரப்பட்டது ஒருவிதமென்றால் சூடான், நேபாளம், ஆச்சே மாநிலம் போன்றவற்றில் தீர்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவை சொல்லும் செய்திகள் பலப்பல. முதலில் சூடானைப் பார்க்கலாம். 21 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற கொடிய போரினால் பட்டினியால், இடப்பெயர்வால் 15 இலட்சம் மக்களைப் பறிகொடுத்த சூடானில் உலகம் தலையிட்டது மனிதாபிமானத்திற்காக மட்டுமல்ல. அங்குள்ள அனைத்து எண்ணெய்க் கனிய வளங்கள், இஸ்லாமிய அடிப்படைவாத பரவல் தடுப்பு, தெற்கு கிறித்தவர் மீதான பரிவு எனப் பல்வேறு காரணங்களாலும், ளுPடுயு அமைப்பு கணிசமான தென்சூடான் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையை கணக்கிலெடுத்தும் தலையீடு நிகழ்ந்தது.

அமெரிக்கா, பிரித்தானியா ஆதரவோடு மிகுதியாக நோர்வே தலையிட்டு 9 சனவரி 2005 இல் அமைதி உடன்பாட்டினைக் கொண்டுவந்தது. ஒஸ்லோவில் ஏப்ரல் 2005 இல் நடைபெற்ற உதவி மாநாட்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைக்கு முதலில் வழங்கச் சம்மதித்த அதே தொகை) உதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இத்தீர்வின்படி சூடானிய மக்கள் விடுதலை அமைப்புத் தேசிய கூட்டு அரசாங்கமொன்றில் அங்கம் வகித்து தனது பகுதியை தானே நிருவகித்து தேசிய வளங்களை முறையாகப் பங்கிட்டு ஒரு இடைக்கால அரசை ஆறாண்டு நடத்திய பின் தென்சூடான் பிரிந்து செல்வதா? அதாவது தனியரசை அமைப்பதா? இல்லையா? என்பதை தென்சூடானிய மக்கள் (கவனிக்கவும் சூடான் முழுவதுமல்ல) வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பர்.

அம்மக்களின் முடிவு எப்படியிருக்குமென்று இப்போதே தெரியும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள சில தகவல்கள் கிடைக்கின்றன. 1956 ஆம் ஆண்டிலிருந்தே சூடானிய சிக்கல் தொடங்கிய போதும் 1983 இன் பின்னரே அது கூர்மையடைந்தமை- 2002 ஆம் ஆண்டளவிலேயே இங்கும் முறையான பேச்சுக்கள் தொடங்கியமை, அமெரிக்கா, பிரித்தானிய ஆதரவோடு நோர்வே பெரும் பங்காற்றியமை, நோர்வேப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அப்போதைய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரான கில்டர் பிறாபிரர்ட் யோன்சன் இருதரப்பிற்குமிடையே நல்லுறவைப் பேணி நம்பிக்கையை கட்டியெழுப்பியமை, இவற்றிற்கப்பால் அமைதி முயற்சியின் வேகமும் சூடும் குறைந்துவிடாமல் 2002 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா பார்த்துக் கொண்டமை.

அதேவேளை இந்த அளவிற்கு அதி முக்கியம் பெறாத போதும் இந்தோனேசிய ஆச்சே மாநிலச் சிக்கலுக்கு வைக்கப்பட்ட தீர்வு இன்னொரு வகை. ஒரு வகையில் பார்க்கப்போனால் ஆச்சே வரலாறும் எம்முடையது போன்றதே.

பல நூற்றாண்டிற்கு முன்னதாகவே தனி நாடாகவேயிருந்த ஆச்சே பிரித்தானியர் பின் டச்சுக்காரர் ஆதிக்கத்தில் தனது இறைமையை இழந்தது. 1900 டச்சுக்காரர் பற்பல இராச்சியங்களை ஒன்றாக்கி இந்தோனேசியாவை உருவாக்கிய போது ஆச்சேயும் அதற்குட்பட்டது. சுதந்திரத்திற்காக டச்சுக்காரருக்கெதிராக 1873-1942 ஆச்சே பெரும் விடுதலைப் போரை நடத்தியது. 1949 டச்சுக்காரர் விட்டகன்ற போது இந்தோனேசிய சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய ஆச்சே முற்றிலுமாக புறக்கணிக்கப்படவே சுதந்திர ஆச்சே விடுதலை அமைப்புத் தோன்றியது. (புயுஆ) அதிக அதிகாரம், விசேட தகுதிநிலை கோரிய ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் (1976 இல் ஆச்சேயை சுதந்திர நாடாகவும் அது அறிவித்தது) பேச்சுக்கள் நீண்ட காலமாக நடந்தன.

எனினும் 2004 சுனாமி கதையையே மாற்றியது. விடுதலைப் போராளிகள் உயிர்தப்பினாலும் கொல்லப்பட்ட ஏறத்தாழ 175,000 மக்களில் இவர்களின் குடும்பங்களும் உள்ளடங்கின. இருதரப்பும் விட்டுக்கொடுத்து இணக்கப்பாட்டிற்கு வந்ததன் விளைவாக ஓகஸ்ட் 2005 இல் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்தாகி இப்பொழுது நடைமுறையிலிடப்பட்டுள்ளது. இங்கும் பின்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்ட்டி அதிசாரியே பெரும் பங்காற்றினார்.

புயுஆ போராளிகளுக்கு அவுத்திரேலிய பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பரி உதவியதாக தெரிகின்றது. முன்னாள் இராணுவத் தளபதியும் இன்னாள் இந்தோனேசிய சனாதிபதியுமான சுசிலோ பம்பா (ளுரளடைழ டீயஅடியபெ லுரனாழழெலழ) உடன்பாட்டினை மதித்து செயற்பட உறுதி தந்தார். போராளிகள் ஆயுதங்களைத் தொகுதி, தொகுதியாக ஒப்படைக்கவும் இந்தோனேசியப் படைகள் பொருத்தமான தொகுதிகளாக வெளியேறவும் சம்மதமானது. இதனை மேற்பார்வை செய்ய ஆசியானும், ஐரோப்பிய ஒன்றியமும் அப்போது முன்வந்தன. இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் ஒற்றையாட்சி யாப்பிற்குள்ளே தீர்வுகாணப்படவெண்டுமென உள்ளதுதான். இருந்தபோதும் உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தவிர்ந்த பொது நிருவாகம் ஆச்சேயின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது. வரி விதிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்ள, சர்வதேச உதவிகள், முதலீடுகளை நேரடியாக பெறத்தக்க வகையிலும் ஆச்சேக்கு அதிகாரமுள்ளது. ஆச்சே நிருவாகத்தின் கலந்துரையாடலின் பின்னரே இந்தோனேசிய சட்டவாக்கம் செயற்பட வேண்டும் என்றுமுள்ளது. முக்கியமானது ஆச்சேயின் பழைய எல்லைகள் (அதாவது 1956 யூலை 1 ஆம் திகதிய) ஏற்கப்பட்டதே.

ஆகவே, ஆச்சே இன்னொரு வகை. நேபாளமோ பிறிதொரு வகை. இங்குள்ளது போல ஆழமான இனச்சிக்கல் அங்கில்லாத போதும் ஆழமான வர்க்க முரண்பாட்டின் மோதல் களமே நேபாளம். முடியாட்சி, பார்ப்பனிய உயர்சாதியின் மேலாதிக்கம், ஏழை நேப்பாளியரின் இல்லாமை, அதன் விளைவு மாவோவின் போராட்ட வழிமுறையைப் பின்பற்றி பாரிய தாக்குதல்களை பல்வேறு (சருவதேச அமைப்புக்கள் மீதும்) வகைகளில் தொடுத்தது. நேபாள மாவோயிய பொதுவுடமைக்கட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்கியது. அதனை நிருவகித்தது.

தொடக்கத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து செயற்பட்டன. 2001, 2003 என இவ்வாண்டுகளில் அமைதி முயற்சிகள் மேற்கொண்ட போதும் 2006 ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுக்கள் பலனளித்தன. அதனால் சென்ற வருடம் நவம்பர் 16 இல் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இதன்படி இடைக்கால யாப்பு இடைக்கால நாடாளுமன்றம் உருவானது.

தனது சமாந்தர நிருவாகக் கட்டமைப்புக்களைக் கலைத்து இடைக்கால நாடாளுமன்றில் பங்கேற்க போராளிகள் சம்மதித்தனர். சென்ற நவம்பர் மாதத்திலே ஒவ்வொன்றும் 5,000 போர் வீரரைக் கொண்ட ஏழு டிவிசன்களையும் பல இராணுவ பாசறைகளில் தங்கவைக்கவும் ஏற்பாடானது. இவ்வாறாக முடியாட்சி மக்களாட்சியாக மாறி எவர் தலையீடுமின்றி உள்ளுர் மக்கள் உதவியோடு செய்யப்பட்ட உடன்பாட்டினை வேறு வழியின்றி இந்தியா உட்பட அனைத்துத் தரப்பும் ஆதரிப்பது மட்டுமன்றி உதவவும் முன்வந்துள்ளன. இந்தியா ஆயுதங்களை வைக்க பெட்டகங்களை வழங்கியது.

இப்பெட்டகங்கள் பூட்டப்பட்டு அதன் ஒரேயொரு சாவி போராளித் தலைமையிடமேயிருக்கும். இந்தியாவோடு இப்போது நல்லுறவினைப் பேண ஊPN-ஆ முன் வருகின்றது. வழமைபோல உதவ முன்வந்த ஐ.நா ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை நேரடியாக கண்காணிக்கவும் அதற்குரிய மின்னியல் கருவிகளை வழங்க வீடியோ கண்காணிப்பினை மேற்கொள்ளவும் துணை நிற்கின்றது. இவ்வாறாக சமகால உலகில் தீர்வுகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதமல்லவா?

இப்போது மீண்டும் கேள்விக்கு வருகிறோம். சில வருடங்களுக்கு முன் இங்கு அமைதி முயற்சிகள் ஆரம்பமான பொழுது இம் முயற்சி தமக்கொரு முன்னோடியாக அமையுமென எதிர்பார்த்து (?) நேப்பாள பிரதிநிதிகள் இது பற்றி அறிய கொழும்புக்கு வந்தார்கள். ஆனால் நடந்தது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதை. அமைதி முயற்சி பற்றி அடிக்கடி எழுதும் குமார் ரூபசிங்க அமைதியிழந்து எழுதுகிறார்.

'இப்பொழுது சிறிலங்கா நேப்பாளம் செல்லவேண்டிய முறை. வடக்கில் மக்கள் தொடர்ந்து பரிதவிக்கின்றார்கள். தெற்கிலோ அரசியல் மாற்றம் கோரிய மக்கள் இயக்கம் எதுவுமில்லை. ஆனால் நேபாளத்தில் மக்களே மாற்றத்தினை ஏற்படுத்தினர். ஆனால் இங்கு? இத்தனை மூன்றாம் தரப்பு இணக்கப்பாட்டாளர்கள் முயன்றும், இடைத் தொடர்பாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றும் இன்னமும் தீர்வினை தொடக்கூட முடியவில்லை. இங்கே இணக்கப்பாடு எட்ட பகைமைச் சிக்கலை மாற்றடையச் செய்ய எடுத்த முயற்சி தோற்றுவிட்டது." (நன்றி டெய்லி மிரர்-குமார் ரூபசிங்க- நேப்பாளம் நவம்பர். 2006) இவ்விடத்திலே மறுபடியும் சூல்கெய்ம் சொல்வது நினைவிற்கு வருகின்றது.

'நோர்வே அனுசரணையாளர் பணியை விட்டகன்றால் அந்த இடத்திற்கு வர உலகில் எந்த நாடும் தயாரில்லை. ஏனென்றால் நோர்வே இங்கே எவ்விதம் நடத்தப்பட்டதென்பதை அவர்கள் நன்கறிவர்" நன்றி: தமிழநாதம்

Please Click here to login / register to post your comments.