'வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல'

ஆக்கம்: அருஸ் (வேல்ஸ்)
வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை.

மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

எனவே மீண்டும் அதை கைப்பற்றுவதனால் தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியல் செல்வாக்குகளை பெற்றுவிடலாம் என்பது ஆட்சி செய்த ஒவ்வொரு அரச தலைவர்களினதும் கருத்துக்கள். ~ஓப்பரேசன் லிபரேசன்| என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஒரு தடவை முயன்று தோற்றார். பின்னர் பிரேமதாசாவின் முயற்சி அராலித்துறையில் சாம்பலாகிப் போனது. இறுதியில் அதிக படைவலு, சுடுவலுவுடன் சந்திரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டார்.

விழாவும் பெரும் எடுப்பில் நிகழ்த்தப்பட்டது, நீலக்கொடிகள் பறந்தன சந்திரிக்காவின் அரசியல் செல்வாக்கு தென்னிலங்கையில் உயர்ந்தது. ஆனாலும் இந்த கானல் நீர் மறைந்து போக அதிக நாட்கள் எடுக்கவில்லை. 1996 ஜனவரியில் கொழும்பு மத்திய வங்கியுடன் ஆரம்பமாகி முல்லைத்தீவு என தொடர்ந்து கட்டுநாயக்காவில் வந்து நின்றது. 1995 இன் பின்னர் தென்னிலங்கையில் அதிகளவில் பறந்தவை வெள்ளைக் கொடிகளே. சந்திரிக்காவினது மட்டுமல்லாது பண்டாரநாயக்கவின் குடும்ப அரசியலே படுத்துக் கொண்டது.

தற்போது மகிந்தவின் முறை, ஆரம்பத்தில் அரசு ஆனையிறவை தான் தனது அரசியல் நலன்களுக்காக குறிவைத்தது. ஏனெனில் ஆனையிறவை கைப்பற்றுவது யாழ். குடாவை கைப்பற்றியது போன்றதொரு செல்வாக்கை தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடியது.

ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முகமாலை கிளாலி அச்சில் நிகழ்ந்த சமர் களத்தின் உக்கிரத்தை அரசுக்கு உணர்த்தியிருக்கும். எனவேதான் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இலகுவான இலக்குகள் மீது அரசு தனது இராணுவ நடவடிக்கைகளின் பார்வையை திருப்பியுள்ளது.

சம்பூர், மாவிலாறு, வாகரை என்பன விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அவர்களின் மிக இலகுவான இராணுவ கேந்திர நிலையங்கள். அங்கு மரபுவழி மோதல்களில் புலிகள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அந்த பிரதேசங்களின் பூகோள நிலையமைப்பு அப்படியானது. அதாவது மரபுவழி மோதல்களில் ஈடுபடும் போராளிகளுக்கான உறுதியான பின்தள வசதி, வழங்கல் தளம், வழங்கல் வழிகள், மருத்துவத் தளங்கள், அவற்றை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் என்பன அங்கு மட்டுப்படுத்தப்பட்டவை.

வாகரையைப் பொறுத்தவரை திருமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையேயான கடற்கரையோர பிரதேசம். இது மேற்குப்பகுதி சதுப்பு நிலக்காடுகளையும், கிழக்குப்பகுதி கடற்பிரதேசத்தையும், வடக்குப் புறமாக திருமலையும் தெற்குப்புறமாக மட்டக்களப்பையும் உள்ளடக்கியது. இந்த மேற்குப்புறத்தின் சதுப்புநில காடுகளுக்கும் வாகரைக்கும் இடையில் உப்பாறு ஊடறுத்து செல்வதால் வாகரையின் இரு நெடுக்குப்புறங்களும் பாதுகாப்பானவை அல்ல என்பதுடன் இலகுவாக முற்றுகைக்குள்ளும் சிக்கக்கூடியது.

மேலும் வாகரை மட்டுமல்லது கிழக்கின் எந்த பிரதேத்தினது பூகோள அமைப்புக்களும் அப்படியானவையே. அதாவது கிழக்கின் தளப்பிராந்தியங்களாக கருதப்படக்கூடிய பிரதேசங்கள் காடுகளும் பற்றைக்காடுகளும் வாவிகளும், களப்புக்களும், திறந்த வெளிகளும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. நாற்புறமும் எதிரிகளால் அல்லது மூன்று பக்கங்கள் எதிரிகளாலும் எஞ்சிய பகுதி கடலாலும் சூழப்பட்ட பகுதிகளாகும். அதற்கான முக்கிய காரணம் கிழக்கின் பெரும் பகுதிகளை சூழ உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும் சேர்ந்து வாழும் மூவின மக்களுமாகும்.

எதிரியின் தாக்குதல் வீச்சுக்குள் இந்த பிரதேசங்கள் இருப்பதுடன், பூகோள மற்றும் உளவியல் ஆதரவுகளும் தற்போது இங்கு எதிரிக்கு சாதகமானதே. எனேவே தான் கிழக்கில் புலிகள் மரபுவழிச் சமர்களில் இறங்குவதில்லை. பொதுவாக அழித்தொழிப்புச் சமரே அங்கு நிகழ்வதுண்டு. மேலும் புலிகளின் தளப்பிரதேசங்களும் நகரும் அல்லது இடம்மாறும் தளங்களாகவே அங்கு அமைத்துள்ளன.

எந்த ஒரு விடுதலைப் போரானாலும் சரி நாடுகளுக்கிடையிலான போரானாலும் சரி அவர்கள் போரிடும் எல்லா களங்களும் ஓரே சீராக இருப்பதில்லை. அதற்காக போராட்டங்களில் இருந்து பாதகமான களங்களை தவிர்க்கவும் முடியாது. எனவே களங்களின் தன்மைக்கு ஏற்ப தாக்குதல் சமர் (ழுககநளெiஎந), தற்காப்புச் சமர் (னுநகநளெiஎந) என்பன மாறுபடுகின்றது. பாதகமான களங்களில் களங்கள் அடிக்கடி கைமாறும், படையணிகள் இடம்மாறும் ஆனாலும் அவை வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை.

இந்த தத்துவம் உணர்ந்தவர்களுக்கு வாகரையில் இருந்து புலிகள் வெளியேறியதற்கான அர்த்தம் புரிந்திருக்கும். 1969 இல் அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஹென்றி கிஸின்கர் வியட்நாம் போர் தொடர்பாக கூறியதும் அதுவே 'இழப்புக்களில் இருந்து தம்மை காத்துக் கொள்ளும் போது கெரில்லாக்கள் வெற்றியீட்டுகிறார்கள் ஆனால் சமரில் வெற்றியீட்டாது போனால் மரபுவழி இராணுவம் தோல்வியை தழுவிவிடும்".

அப்படியானால் கிழக்கில் மரபுவழிச்சமர் சாத்தியமில்லையா என கேள்வி எழ வாய்ப்புள்ளது. மரபுவழிச் சமர்களோ அல்லது பெரும் எடுப்பிலான அழித்தொழிப்பு யுத்தமோ நிகழாமல் உலகில் நடைபெற்ற பெரும்பாலான போர்கள் முடிவுக்கு வந்ததில்லை.

தியான் பியான் பூ இல் வீழ்ந்த அகோர அடிதான் வியட்நாமில் இருந்து பிரான்சை வெளியேற்றியது. ரெற் படை நடவடிக்கை தான் அமெரிக்காவின் பிடியை வியட்நாமில் தளர்த்தியது. ஸ்ராலின்கிராட் சமரே சோவியத் மீதான ஜேர்மனின் ஆக்கிரமிப்பை துடைத்தெறிந்தது. இப்படி உதாரணங்கள் ஏராளம் ஆனால் இந்த எல்லா பாரிய சமர்களிலும் வெற்றிவாகை சூடியவர்களுக்கு பெரும் துணையாக இருந்தது அவர்களின் உறுதியான பின்தளம் தான்.

எனவே கிழக்கின் மீதான புலிகளின் பெரும் படை நடவடிக்கைகளுக்கு வடக்குடன் இணைந்த உறுதியான பின்தளம் தேவை என்பது உணரப்பட்ட கள யதார்த்தம். அதை உருவாக்க முடியாது என்றும் வாதிட முடியாது. புலியணிகள் மணலாற்றின் இராணுவ வேலியை உடைத்து திருமலையை ஊடறுக்கும் போது இது சாத்தியமாகும். ஆனால் இந்த படை நடவடிக்கைக்கு தேவையான மனித மற்றும் ஆயுத வலுக்கள் வடக்கில் இருந்தே நகர்த்தப்படும்.

அதற்கு முன்னேற்பாடாக வடக்கில் உள்ள சிங்கள இராணுவ வலு முற்றாக அழிக்கப்பட வேண்டும். வடக்கில் சிங்கள இராணுவ ஆதிக்கம் முடிவுக்கு வரும்போது புலிகளின் பெருமளவான பலம் எங்கு நோக்கி திருப்பப்படும் என உங்களுக்கு புரியும். மொத்தத்தில் வடக்கில் இருந்து புலியணிகள் கிழக்கு நோக்கி நகர்த்தப்படும் போது கிழக்கில் உள்ள படையணிகளுக்கு மரபுவழிச் சமராட அதிக சிரமங்கள் இருக்கப்போவதில்லை. அதுவரை வடக்கில் மரபுவழிச் சமர்களும் கிழக்கில் கெரில்லா யுத்த மூலோபாய தந்திரத்துடன் கூடிய பெரும் சமர்களும் தான் நடைபெறும்.

இனி வாகரைச் சமரை நோக்குவோம்.

வாகரை மீதான அரசின் அவசரமான ஆக்கிரமிப்பானது முழுக்க முழுக்க குறுகிய கால அரசியல் நோக்கம் கொண்டது. அதாவது ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ், கெல உறுமய போன்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிக்க முற்படும் போது அரசு ஒரு இராணுவ வெற்றியை அடைந்துவிட்டது போன்றதொரு தோற்றப்பட்டை ஏற்படுத்தினால் அரசுக்கான ஆதரவுகள் அதிகரிக்கலாம். இதை வேறுவிதமாகச் சொல்வதானால் 16 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் 20 ஆக அதிகரிக்காலம். இதுதான் மகிந்தவின் சிறுபிள்ளைக் கணக்கு.

ஆனால் அரசு எதிர்பார்த்தது போல வாகரைச்சமரும் இலகுவாக இருக்கவில்லை. அரசின் பல முன்னணி கொமாண்டோ படைகள் களமிறக்கப்பட்டதுடன், எறிகணை வீச்சுக்கள், பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானத்தாக்குதல்கள் என்பன மிக செறிவாக உபயோகிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த ஆக்கிரமிப்புக்கு அரசு செலுத்திய இராணுவ மற்றும் சர்வதேச இராஜதந்திர விலைகள் அதிகம். இங்கு சர்வதேச இராஜதந்திரம் என குறிப்பிடப்படுவது வாகரை ஆக்கிரமிப்பின் போது அரசினால் ஏற்படுத்தப்பட்ட மனித அவலங்களும், அதன் மீதான சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் பார்வைகளுமாகும்.

நான்கு மாதங்கள் நடைபெற்ற கடுமையான மோதல்களின் பின்னர். சிங்கள இராணுவத்தின் கஜபாகு விசேட படையணிகள் வாகரையின் மேற்குப்புறமுள்ள உப்பாறை கயிற்றை போட்டு கடந்து சென்று நான்காவது களத்தை திறந்த போது புலியணிகள் தந்திரமாக வெளியேறிவிட்டன. இது 14 வருடங்களுக்கு முன்பு புலிகள் பயன்படுத்திய உத்தியாகும். (தவளை நடவடிக்கையில் 1993 இல் பயன்படுத்தியது). அதாவது சிங்களப்படை தனது முற்று முழுதான படை பலத்துடன் 20 கி.மீ. தூரத்தை பிடிப்பதற்கு எடுத்த காலம் நான்கு மாதங்கள் என்பது தான் ஆச்சரியமான விடயம். வடக்கில் என்றால் இந்த நான்கு மாதச் சமர் தொடர்பாக ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை கிழக்கில் என்பதனால் தான் ஆச்சரியம்.

கிழக்கில் இராணுவத்தால் போர் நிறுத்த காலத்தில் பெரும் விலைகளை கொடுத்து கைப்பற்றப்பட்ட எல்லாப் பிரதேசங்களும் (மாவிலாறு, சம்பூர், வாகரை) 1996-1997 காலப்பகுதிகளில் இராணுவம் கைவிட்டுப் போன பகுதிகளே. அன்று 40-க்கும் அதிகமான முகாம்களை மூடி கிழக்கில் உள்ள படைகளை வடக்கு அனுப்பியிருந்தது சந்திரிக்கா அரசு. அரசால் கைவிடப்படும் கிழக்கின் பிரதேசங்களை எதிர்காலத்தில் மீட்பதற்கு இராணுவம் அதிக இழப்புக்களை சந்திக்க வேண்டி இருக்கும் என அப்போது பல இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அது தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

அன்று தாரை வார்க்கப்பட்ட வாகரையை கைப்பற்ற இன்று சிங்கள அரசு தனது முழு வலுவையும் பயன்படுத்தி உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன? அரசு கடும் பிரயத்தனம் எடுத்தது என எப்படி கணிக்கப்படுகின்றது?

- வாகரையை கைப்பற்ற முனைந்த இந்த நாட்களில் அரசு, வடக்கிலோ கிழக்கிலோ வேறு எந்த பாரிய படை நடவடிக்கையையும் ஆரம்பிக்கவில்லை.

- வாகரையில் பயன்படுத்திய சுடுவலு மிக, மிக அதிகம். அதாவது தனது கையிருப்பு தீர்ந்து போகுமளவிற்கு எறிகணைகளும், பல்குழல் ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன என்றால் களத்தின் உக்கிரத்தை அனுமானிக்கலாம். (எறிகணைகள் தீர்ந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து அவசரமாக தருவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது).

- முப்படையினருடன் பெரும் தொகையான சிறப்பு கொமோண்டோ படையினரும் களமிறக்கப்பட்டனர்.

- மூன்று முனைகளால் சூழந்து 20 கி.மீ. தூரத்தை கைப்பற்ற எடுத்த காலம் நான்கு மாதங்கள்.

- இராணுவ ஆக்கிரமிப்புக்கு உதவும் பொருட்டு அரசினால் அப்பாவி மக்களின் மீது ஏற்படுத்தப்பட்ட மனித அவலங்கள் மிக அதிகம்.

ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதல் வாகரையில் மூர்க்கமாக இருக்கவில்லை. முன்னேறும் படையினரை இடைமறித்து தாக்கியதோடு பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களிலேயே பெருமளவில் ஈடுபட்டனர். முன்னேறிய இராணுவ அணிகளை ஊடறுத்து பெருமெடுப்பிலான தாக்குதல்களோ (செய் அல்லது செத்துமடி போல) அல்லது மிக மூர்க்கமான எதிர்ச்சமர்களோ அங்கு நிகழவில்லை.

அதாவது படையினரின் முழுவீச்சான இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக கிழக்கில் உள்ள தமது முழுவளத்தையும் பயன்படுத்த புலிகள் முயலவில்லை. அதற்கான காரணங்களும் உண்டு. ஆனால் கிளிநொச்சியில் இருந்து ஓமந்தை வரையிலான ஏறத்தாழ 115 கி.மீ நீளமான ஏ-9 பாதையை கைப்பற்ற சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஜெயசுக்குறுச் சமரை போன்றதொரு சமரை வாகரையின் 20 கி.மீ நீளமான ஏ-15 பாதையை கைப்பற்ற சிங்களப் படைகள் மேற்கொண்டுள்ளன என்றால் போர் நிறுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கிழக்கில் புலிகள் பரிணாமங்களை புரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் கிழக்கில் தனது முழுப்படைப் பலத்தையும் பயன்படுத்தி இராணுவம் தாக்குதல்களை முன்னைய காலங்களில் மேற்கொண்டதில்லை. ஒரு மேஜர் அல்லது லெப். கேணல் தர அதிகாரிகளின் தலைமையில் சில நூறு படையினர் தான் நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு.

ஆனால் தற்போதைய கிழக்கின் சமர்கள் அப்படிப்பட்டவை அல்ல பல ஆயிரம் படையினர் தமது முப்படை வளத்துடன் ஒவ்வொரு பிரதேசத்தை மீட்பதற்கும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் சதுப்புநிலக் காடுகளையும், வெளிகளையும், களப்புக்களையும் உடைய 20 கி.மீ நீளமான வாகரைப் பிரதேசத்தை எத்தனை இராணுவ வீரர்களை கொண்டு அரசு பாதுகாக்கப் போகின்றது? சிங்கள இராணுவத்தின் கஜபாகு விசேட படையணிகள் உப்பாறைக் கடந்தது போல புலிகளின் விசேட அணிகள் கயிற்றைப் போட்டு கடந்து சென்று சிங்களப்படையை அழித்துவிட்டு வர எத்தனை காலமெடுக்கும்?

கிழக்கையும் வடக்கையும் ஒரே சமயத்தில் தக்க வைக்கமுடியாது என்ற களயதார்த்தம் உணர்ந்ததால் தான் முன்னைய அரசு வடக்கை கைப்பற்றுவதற்காக கிழக்கை கைவிட்டது. அதற்கு அன்றைய அரசு சொன்ன காரணம், முதலில் தலையை நசுக்கிவிட்டால் வாலை இலகுவாக நசுக்கிவிடலாம் என்பதாகும். ஆனால் பிரம்மா அடி முடி தேடிய கதையாக தலை எது வால் எது என்று அறியமுயாத அதிர்ச்சியுடன் காணாமல் போனது சந்திரிக்கா அரசு.

தற்போதைய மகிந்த அரசு வாலையாவது தக்க வைப்போம் என்ற நப்பாசையுடன் தான் செயற்படுகின்றது. கிழக்கை வடக்கில் இருந்து பிரிப்பதன் மூலம் போராட்டத்தின் வீச்சிற்கு ஒரு எல்லை போட முனைவதையே அரசின் அண்மைய இராணுவ அரசியல் நடவடிக்கைகள் எதிர்வு கூறுகின்றன.

ஆனால் விடுதலைப் புலிகளின் போரியல் நுட்பங்களுக்கும் கைப்பற்றும் பிரதேசங்களுக்கும் ஒரு பெறுமதியுண்டு. அவை எப்போதும் அரசின் உத்திகளை விட பலமடங்கு உயர்ந்தவையாகத் தான் வரலாற்றில் பதிவாகியதுண்டு.

அவர்களின் இலக்குகளும் திட்டங்களும் தெளிவானவை, மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள். எனவே அரசு விரிக்கும் வலைகளில் அவர்களின் திட்டங்கள் சிக்கப் போவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தமிழீழம் தனது இறுதிப்போருக்கு தயாராகின்றது அதற்கு முன்னால் வாகரை வெறும் சலசலப்புத்தான்.

வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமானால் ஒன்றை புரிந்து கொள்ளல் அவசியம். மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை.

Please Click here to login / register to post your comments.