'அரசியலமைப்பு மாற்றத்தில் இலங்கை அக்கறை காட்டாது விடும் சாத்தியம்'

இராணுவத் தீர்வொன்று சாத்தியமென இலங்கையின் ஆட்சியாளர்கள் கருதும் பட்சத்தில் அரசியலமைப்பை மாற்றுவது குறித்த விடயம் குறித்து அவர்கள் அதிகம் அக்கறைகாட்டமாட்டார்கள் என அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான முன்னாள் இராஜதந்திரி டெரெசிட்டாசி ஸகாவ்டர் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினால் இம்முறை வெற்றிபெற முடியும் என்ற உணர்வு காணப்படுவதை வாஷிங்டனில் உள்ள இலங்கையர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது தான் உணர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து போதிய அக்கறையை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக எவரையும் குறை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆய்வுகளிற்கான நிலையத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகரிப்பதன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தந்திரோபாயத்தையே இலங்கை அரசாங்கம் தற்போது கையாள்கின்றது. இது சிறந்த உபாயம் போல் தோன்றுகின்றது என்றும் ஸ்காவ்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க உறவுகள் பற்றி நூலொன்றை எழுதவுள்ளதாகவும் கடந்த 16 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பெருமளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க, இந்திய அரசாங்கங்கள் அளவுக்கதிகமான யதார்த்த பூர்வமற்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Please Click here to login / register to post your comments.