அரசாங்க பிரசாரங்களும் தமிழர் செயலின்மைகளும்

ஆக்கம்: பீஷ்மர்
கடந்த சில மாதங்களின் அரசியல் போக்குகளை சற்று உன்னிப்பாக கவனிக்கும் போது, அரசாங்க மட்டத்திலிருந்து வெளிக்கிளம்பும் உபாயங்கள் அரசாங்கத்தை சிங்கள மக்களின் உண்மையான பாதுகாவலனாகவும் அவர்களது நியாயங்களுக்கான குரலாகவும் தன்னை காட்டிக் கொள்வது மாத்திரமல்லாமல் தமிழ்ப் பிரச்சினையை கையாளுகின்ற முறையில் தமிழ் மக்களின் உள்ளார்ந்த தன்மைகளை, உண்மையில் பலவீனங்களை பயன்படுத்தி அந்த எதிர்ப்புகளின் முனைப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.

இந்தப் போக்கு இரண்டு நிலைப்பட நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒன்று விடுதலைப் புலிகளை மிகப் பெரிய பயங்கரவாத சக்தியாக காட்டிக் கொள்வதாகும். இந்தக் கோஷத்தை பயன்படுத்தி இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்த்தெடுப்பதில் கவனஞ் செலுத்தப்படுகின்றது. ஆனால், கடந்த காலத்தில் குறிப்பாக, கடந்த ஒரு வருட காலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் என்று அடயாளப்படுத்தும் நடவடிக்கைகள் யாவை என்பது பற்றியோ இந்த நடவடிக்கைகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலே பயங்கரவாத நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்க்கத் தக்கனவா என்பது பற்றிய கேள்வியையோ எவருமே கேட்கவில்லை. அப்படியானதொரு வினா கிளப்பப்படுவதற்கான அரசியல் விவாதம் நடைபெறவுமில்லை.

இந்திய, பாகிஸ்தானிய அரசாங்கங்கள் எவ்வாறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகின்றனவோ அத்தகைய தாக்குதல்களுக்கு இலங்கை அரசும் முகம் கொடுப்பதாக இலங்கை அரசாங்கம் காட்டிக் கொள்கின்றது.

மாவிலாறுப் பிரச்சினையின் உண்மையான வரலாறு வேறு திசைகளையே சுட்டுகின்றது. அது மாத்திரமல்லாமல் இலங்கை அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி எதுவுமே வெளியாக பேசுவதில்லை. உதாரணமாக விமானக் குண்டுத் தாக்குதல்கள் எவ்வாறு தமிழ்ப் பொது மக்களை பாதிக்கின்றது என்பது பற்றிய உண்மைகளை அரசாங்கம் கணக்கிலெடுக்காமலே விட்டுவிட்டது.

ஆனால், அதேவேளையில் சிங்கள மக்களுக்கு சொல்லப்படும் `செய்தி'களை நோக்கினால் தாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு மாபெரும் போரினையே நடத்திக் கொண்டிருப்பதாகவும் உலக நாடுகள் சிலவும் சர்வதேசிய அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவும் தங்கள் தூய இலட்சியங்களை கொச்சைப்படுத்துகின்றன என்று கூறுகிறார்கள். இவையாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் சிங்கள மக்களிடையே படை வீரர்களின் நாட்டு அபிமான சேவைகளை எடுத்துக் கூறி படை வீரர்கள் போற்றப்படுவதற்கான பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றார்கள். இந்தப் போக்கினுள் 2 அம்சங்கள் நிற்கின்றன. படை வீரர்கள் இலங்கையை காப்பாற்றுவதற்கு செய்யும் மிகப் பாரிய போர். அடுத்தது சிங்கள மக்களுக்காக இந்த இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள் என்பதாகும். ஜனாதிபதி முதல் வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் வரை மிகுந்த உணர்வு பூர்வமாக (உணர்ச்சி பூர்வமாக) இவற்றை கூறுகின்றார்கள்.

இத்துடன் நின்று விடாது யுத்தம் வேண்டாம். யுத்தத்தை தவிர்த்து தமிழர்களின் பிரச்சினையை தீருங்கள் என்று கூறுகின்ற சிங்கள முற்போக்காளர்களையும் அவர்களுக்கு உதவும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சிங்கள விரோதிகளாகவே காட்டப்படுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், ஒரு தர்ம யுத்தம் நிகழ்வதாகவே சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறப்படுகின்றது. சிங்கள மக்களிடையே கொண்டு செல்லப்படும் இத்தகைய பிரசாரங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் தமிழர் உரிமைப் போராட்ட நிலைக் கருத்துகள் எவையும் முன் வைக்கப்படவில்லையென்பது ஒரு முக்கியமான உண்மையாகும்.

வடக்கு, கிழக்கு மாகாண பிரித்தெடுப்பு பிரச்சினை விடயத்தில் ஆனந்தசங்கரி தயக்கத்தோடு எடுத்துக் கூறிய கருத்தைத் தவிர, அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் தமிழ்ச் சக்திகள் எதுவுமே பேசவில்லை. இப்பொழுது வடக்கு, கிழக்கு பிரிவு ஏறத்தாழ ஒரு நிர்வாக யதார்த்தமாகி விட்டது.

இனித் தான் முக்கியமான வினா வருகின்றது. இவற்றுக்கு தமிழர் நிலையில் காட்டப் பெற்ற பதிற்குறிகள் யாவை?

விடுதலைப் புலிகள் என்ன செய்யப் போகிறார்களென்று விடுதலைப் புலிகள் பக்கம் நோக்கியதே தவிர வடக்கு, கிழக்கு இணைவு என்பது தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்று என்பதனை மற்ற எந்த தமிழ் அமைப்புகளும் வலுவாக கூறவில்லை. அரசியலமைப்புகள் மாத்திரமல்ல பொது அமைப்புகள் எதுவும் கூட இது பற்றி பேசவில்லை. வழக்கறிஞர்கள் குழுக்களோ பல்கலைக்கழக அரசியல் சங்கங்களோ எதுவுமே பேசவில்லை. இதனால், சிங்கள மக்களுக்குச் சொல்லப்படும் தகவல் என்னவென்றால் விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றையவர்களெவரும் அரசாங்கத்தை கண்டிப்பதில்லை என்றே சொல்லப்படுகின்றது.

பொது அமைப்புகள் பேசாதிருப்பதற்கான நியாயங்களுமுண்டு. இராணுவ அச்சுறுத்தல் அதற்கு மேலாக தங்களுக்கு ஏதாவது நடந்து விட்டால் தங்களுக்காக பேச எந்தவொரு சக்தியும் வராது என்கின்ற பயம் இருப்பது நியாயமே.

இன்னுமொரு வரலாற்றுச் சிக்கலுண்டு. 80 களில் முன்னிலையில் நின்ற தமிழ் இயக்கங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்வோம். நீங்கள் பேசாமலிருங்கள் என்கின்ற ஒரு மனோபாவத்தினை வளர்த்து விட்டன என்பதையும் மறைக்க முடியாது. உண்மையில் நமது மௌன அவலங்களை பார்த்து தமிழகத்தில் கிளம்பிய குரலே தலை மன்னாரிலிருந்து தனுஷ் கோடிக்கு படகுகளிலே சென்று உயிர்விட்ட அகதிகளின் நிர்க்கதியே இன்று சிறிதளவாவது சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயத்தில் புகலிடத் தமிழ் நிறுவனங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கான நடைமுறைகளை இராஜாங்க முறையில் கையாளுவதாக தெரியவில்லை. உண்மையில் 9/11 இலும் 7/7 இலும் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் நடைபெறும் பயங்கரவாதத்துக்கும் இலங்கையில் பயங்கரவாதமென கூறப்படுவனவற்றுக்கு தர ரீதியிலான அளவில் எவ்வித ஒப்புவமையும் கிடையாது என்பதை இன்னும் எந்த நிறுவனங்களும் எடுத்துப் பேசவில்லை. அது மாத்திரமல்லாமல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் இன்னும் விமர்சிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் குறைபாடுகள் பற்றிய உணர்வுத் தெளிவு தமிழர்களிடையே எந்தளவுக்குள்ளது என்கின்ற பிரச்சினையை கிளப்புகின்றது. இன்னொரு மட்டத்தில் அரசாங்கத்தின் செயல் உபாயங்கள் காரணமாக எய்தவனிருக்க அம்பை நோகும் ஒரு மனோபாவமும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது காணப்படும் பொருள் தட்டுப்பாடும் பயணக் கஷ்டமும் நல்ல உதாரணங்கள். அவற்றைப் பற்றிப் பேசும் பொழுதும் ஏதோவொரு தீர்வினைப் பயனை அனுபவிக்கின்ற தொனி கேட்கிறதே தவிர, அதன் பின்னால் உள்ள அரசியல் பேசாது போய் விடப்பட்டுள்ளது. அரசாங்கமும் தான் கப்பல்கள் மூலம் தொன் கணக்கில் அத்தியாவசிய உணவுகளை அனுப்புவதாக சிங்களத்திலும் தமிழிலும் கூறிக் கொண்டேயிருக்கின்றது. அரிசியும் பருப்பும் யாழ்ப்பாணத்தவர்களுக்கான பெரும் கொடை என்ற தொனியே மேலோங்கி நிற்கின்றது. மருந்துகளில்லை, வியாபார கஷ்டம், மற்றைய அசௌகரியம் போன்றவை எவையும் பேசப்படுவதில்லை.

இதற்கெல்லாம் பதில் உடனே புரட்சியென்பதல்ல. இந்த கஷ்டங்களின் அரசியல் பின்புலம் தெளிவாக்கப்படுவதாகும். அந்த அரசியல்மயவாக்கத்தில் உள்ளூர் அபிப்பிராய முதல்வர்களுக்கும் புகலிட தமிழ் நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

Please Click here to login / register to post your comments.